Published:Updated:

அனைத்தும் அருளும் அம்பிகை கொலுவிருக்கும் தலங்கள்!

சைலபதி

அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கும் தலம் திருவானைக்கா. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அம்பிகை
அம்பிகை

ஆடி மாதம் அம்பாளை வழிபட உகந்த மாதம். ஆடியில்தான் அம்மனின் அருள் மாரியாகப் பொழிகிறது. வெப்பம் குறைந்து பூமி குளிர்ச்சியாகிறது. ஆடியில் நதிகள் எல்லாம் புதுப்புனலோடு எழில்கொண்டு பாய்கின்றன. விவசாயிகள் மீண்டும் விதைப்பைத் தொடங்குவதும் இந்த மாதத்தில்தான். இத்தகைய சிறப்புகள்மிக்க ஆடியில் அன்னை அம்பிகையை வழிபடுவது மேலும் சிறப்பினை வழங்கும்.

அருள்தரும் இந்த ஆடி மாதத்தில் அம்பிகை கொலுவிருக்கும் தலங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறியலாம். https://bit.ly/2ThPcPd

* திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலில் அமர்ந்து அருள்கிறாள் காந்திமதி அம்மன். காந்திமதி அம்மனுக்குத் தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளாபூஜை நடக்கும்வரையில் அம்பிகை வெண்ணிறப் புடவையோடே காட்சிகொடுக்கிறாள். உலகின் ஊழிகாலத்தில் அனைத்தும் அன்னைக்குள்ளாகவே அடங்கும் என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது என்கின்றனர்.

அனைத்தும் அருளும் அம்பிகை கொலுவிருக்கும் தலங்கள்!

* மதுரை மீனாட்சி அம்மன், ஒருநாளில் மூன்று விதமான திவ்யமங்கள ரூபங்களில் காட்சிகொடுக்கிறாள். காலையில் சின்ன பெண் போன்ற அலங்காரம், உச்சி காலத்தில் மடிசார் புடவை அலங்காரம், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டாலான புடவை என்று மூன்று அலங்காரங்களுடன் அன்னையைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்கின்றனர் பக்தர்கள். குழந்தைவரம் வேண்டுகிறவர்கள் அன்னை மீனாட்சியைக் காலை வேளையில் பாலசுந்தரியாகக் காட்சிகொடுக்கும் கோலத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அவ்வாறு செய்தால் விரைவில் மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது ஐதிகம்.

* அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கும் தலம் திருவானைக்கா. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்கு அம்பாளுக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. அகிலாண்டேஸ்வரி ஒருநாளில், காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திருக்காட்சியளிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்மையை தரிசித்து வழிபட கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

* சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை கற்பகவல்லியாக அருள்பாலிக்கிறாள். வைகாசி பௌர்ணமி அன்று அன்னையை ஞானேஸ்வரியாக வழிபடுகிறார்கள். அன்று அம்பிகை இடையில் ஒரு வாள் தரித்திருப்பாள். அதை 'ஞான வாள்' என்கின்றனர். அஞ்ஞானத்தை அறுத்து மெய்ஞ்ஞான வழியில் நடத்தும் வாள் என்பது அதன் தாத்பர்யம்.

அனைத்தும் அருளும் அம்பிகை கொலுவிருக்கும் தலங்கள்!

* திருநீலக்குடியில் மனோக்ஞ நாதசுவாமி ஆலயத்தில் அம்பாள், யோக சக்தி, போக சக்தி என்னும் இரு சக்திகளாகத் திருக்கோலம் கொண்டு அருள்புரிகிறாள். போக சக்தி - அநூபமஸ்தனி என்ற திருப்பெயருடனும், யோக சக்தி - பக்தாபீஷ்டதாயினி என்னும் திருப்பெயருடனும் அருள்கிறாள் அன்னை. இரு சந்நிதிகளுக்கும் தனித் தனி விமானம் இல்லாமல் ஒற்றைக் கலசம் கொண்ட ஒரே விமானம் அமைந்துள்ளது.

> அம்பிகை கொலுவிருக்கும் அனைத்துத் தலங்கள், அவற்றின் சிறப்புகள் குறித்து 'அம்பாளும் அற்புதங்களும்!' https://www.vikatan.com/spiritual/temples/amman-temples-in-tamil-nadu எனும் கவர் ஸ்டோரியில் முழுமையாக வாசிக்கலாம்.

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/