Published:Updated:

விசேஷ வழிபாட்டு தினங்களில் திதி கொடுக்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆன்மிக கேள்வி பதில்
ஆன்மிக கேள்வி பதில் ( ஆன்மிக கேள்வி பதில் )

ஆன்மிக கேள்வி பதில்

பிரீமியம் ஸ்டோரி

? விசேஷ காலங்களில் ஆலயத்துக்கு நேரில் சென்றுதான் வழிபட வேண்டுமா. ஆலயம் செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

-எம்.ராமநாதன், விழுப்புரம்

! ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தொழும் போது இனம்புரியாத மகிழ்ச்சியும் பரவசமும் உண்டாகும். ஆம் நாம் நம்மை மறந்து இறையிடம் லயிக்கும் இடம் ஆலயம்; நம் ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். அங்கே செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் உயிர்களின் நன்மைக்காக செய்யப் படுகின்றன.

கோயிலுக்கு யார் போகிறார்கள், போக வில்லை என்பதெல்லாம் கணக்கில்லை. அன்றாட பூஜைகள் நடக்கும்போது அது சகல ஜீவன்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்கவே ஆலயங்கள் இயங்குகின்றன.

சூழல்கள் நமக்குச் சாதகமாக இருக்கும் வேளைகளில் நாம் ஆலயங்களுக்கு சென்று வருவோம். இயற்கைப் பேரிடர், சில சடங்குகள், கடுமையான நோய் பரவும் காலம், போர்ச் சூழல் போன்ற வேளைகளில் நாம் கோயிலுக்குச் செல்ல முடிவதில்லை. சில தருணங்களில் சில காரணங்களால் விழாக் காலங்களில்கூட ஆலயங்களுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகலாம்.

சில நாள்களுக்கு முன்புவரையிலும்கூட பெருந்தொற்று பாதிப்பு - கட்டுப்பாடு காரணமாக கோயில்களுக்குப் பக்தர்கள் செல்ல முடியாத சூழல் இருந்ததை அறிவோம். எனினும் ஆலயத்துக்குள்ளேயே பூஜைகள் நடைபெற்று வந்தன. அரசின் கட்டுப்பாடுகள் நம்முடைய நன்மைக்காகவே என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டங்கள் எல்லாம் மதிக்கப்படவே என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஆலயத்துக்குச் சென்று வழிபட முடியாத காலங்களில் வீடுகளிலேயே நாம் விதவிதமாக பூஜைகள் செய்து வழிபடலாம். அந்த உரிமையை நமது தர்மம் சில வரையறைக்கு உட்பட்டு அனுமதித்து உள்ளது. அன்று என்ன விழாவோ அந்த நாளுக்குரிய ஆராதனைகளை வீட்டிலேயே செய்து வழிபடலாம்.

உதாரணமாக சிவராத்திரி விழா என்றால் நான்கு காலமும் பூஜை செய்யலாம். ஈசனின் படத்துக்கு அந்தந்த காலத்துக்குரிய புஷ்பங்கள், தீப, தூபங்கள் சமர்ப்பித்து வணங்கலாம். அந்தந்த வேளைக்குரிய பதிகங்களைப் பாடி, நைவேத்தியங்கள் சமர்ப்பித்துச் சிவராத்திரியைக் கொண்டாடலாம். மனம் அமைதி மற்றும் மகிழ்வடையவே பூஜைகள் உருவாக்கப்பட்டன. அவற்றை உங்கள் வீட்டிலும் செய்து பலன் அடையலாம்.

கேள்வி பதில்
கேள்வி பதில்

? என் இஷ்ட தெய்வம் அம்பாள். ஸ்ரீவித்யா வடிவில் அன்னையை வழிபட்டால் சகல சுபிட்சங்களும் கைகூடும் என்று பெரியவர் ஒருவர்தெரிவித்தார். எனக்கு ஸ்ரீவித்யா தேவி வழிபாடு குறித்து வழிகாட்டுங் களேன்.

-கே.மனோகரன், கோவில்பட்டி

! தச மஹா வித்யைகளில் மூன்றாவதாகப் போற்றப்படுபவள் ஸ்ரீவித்யா தேவி. பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், கணபதி, முருகன், அகத்தியர், இந்திரன், மன்மதன், சந்திரன், குபேரன், அத்ரி மஹரிஷி, துர்வாஸர், லோபாமுத்ரை, நந்தீச்வரர், வருணன், புதன், யமன், தத்தாத்ரேயர், பரசுராமர், பலதேவர், வாயு, பிரஹஸ்பதி, ரதி தேவி, ஆதிசேஷன் ஆகியோர், உலக மாதாவை ‘ஸ்ரீவித்யா தேவி’யாக உபாசித்ததாக தந்திரங் கள் கூறுகின்றன.

ஸ்ரீலலிதா பரமேஸ்வரியே ஸ்ரீவித்யா. இவளே ஸ்ரீமாதா. இவள் வாஸம் செய்யும் பட்டினம் `ஸ்ரீபுரம்’. இது மகாமேருவின் சிகரத்தில் உள்ளது. இவளின் மகா மந்திரம் ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. இவளின் யந்திரம் ‘ஸ்ரீசக்ரம்’. இவளது சிம்மாஸனம் ‘ஸ்ரீசிம்மாஸனம்’ என அறியப்படுகிறது.

செக்கச் சிவந்தத் திருமேனி, சம்பகம், அசோகம் முதலான பூக்களைச் சூடிய கூந்தல், பத்மராகக் கற்களால் ஜொலிக்கும் கிரீடம், பிறைச்சந்திரன் போன்ற நெற்றி, கருப்பு நிறக் கஸ்தூரிப் பொட்டு, அழகிய புருவங்கள், மீன் போன்ற கண்கள், சம்பகப் பூப்போன்ற நீண்ட மூக்கு, நட்சத்திரம் போல் ஜொலிக்கும் மூக்குத்தி, கடம்பப் பூங்கொத்து அலங்கரிக்கும் காதுகளில் சந்திர-சூரியரே தோடுகளாகத் திகழ, பத்மராகத்தாலான கண்ணாடி போன்ற கன்னங்கள், பவளத்தைப் பழிக்கும் உதடுகள் என்று இந்த அன்னையின் அழகை விவரிக்கிறது, லலிதா சகஸ்ரநாமம்.

இந்த தேவியை வழிபடும் ஸ்ரீசக்ரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவ மயமான நான்கு சக்கரங்கள், சக்திமயமான ஐந்து சக்கரங்கள் ஆகிய 9 சக்கரங்களை உடைய அமைப்பே ஸ்ரீசக்ரம். இதில் ஸ்ரீகாமேஸ்வரருடன் இணைந்து இவ்வுலகங்களை பரிபாலனம் செய்து வருகிறாள் தேவி. அவளை நவாவரண பூஜை எனப்படும் ஸ்ரீசக்ர பூஜையினால் மகிழ்விக்கச் செய்தால், உலகம் நன்மை யைச் சந்திக்கும்.

இந்த அன்னையை வழிபடுவதன் மூலம் உலகில் உள்ள உயர்ந்த பலன்களை அடையலாம் என்கின்றன சாஸ்திரங்கள். நமக்குள் உள்ள வீண் பயம் அகலும். இந்த தேவி தர்ம ஸ்வரூபிணீ. எனவே தர்ம வழியில் சென்று, நம்மால் இயன்ற அளவு இந்த தேவியை ஆராதித்து வந்தால், இவ்வுலகத்திற்கு வேண்டிய நலன்களையும், பிறவா முக்தி ஆனந்தத்தையும் நமக்கு அருள்வாள். இந்த அன்னையை கீழ்காணும் மந்திர ஸ்லோகங்கள் கூறி தினமும் வழிபடலாம்.

ஸ்ரீவித்யா காயத்ரி :

ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே ஸர்வ சக்த்யை ச தீமஹி
தன்னோ வித்யா ப்ரசோதயாத்


மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீவித்யாயை நம:

வித்யா காயத்ரி
வித்யா காயத்ரி

? விசேஷ வழிபாட்டு தினங்களில் முன்னோர் சிராத்தம் வந்தால், அன்று திதி கொடுக்கலாமா?

- எஸ்.நாகாராஜன், சென்னை-45

! முன்னோர் மறைந்த மாதமும் திதியும் வரும் நாளில், வருடம் தோறும் சிராத்தம் செய்ய வேண்டும். ஒருவரின் பிறந்தநாளை, அவரது நட்சத்திரத்தின் அடிப் படையில் கொண்டாடுவதும், இறுதி நாளை அன்றைக்கு இருக்கும் திதியின் அடிப் படையில் வருடம்தோறும் அனுஷ்டிப்பதும் வழக்கம்.

சிராத்தம் செய்வதைத் தான் `திவஸம்’ என்றும் `திதி கொடுத்தல்’ என்றும் குறிப்பிடுகிறோம்.

முன்னோருக்குக் குறிப் பிட்ட திதிநாள் அன்றுதான் சிராத்தம் செய்யவேண்டும். கர்மா செய்பவருக்கு, ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் அதைச் செய்யமுடியாமல் போனால் மட்டுமே, வேறு நாள் பார்க்கவேண்டும். மற்றபடி குறிப்பிட்ட திதியன்று திவஸம் செய்வதே சிறந்தது.

இறந்தவருக்கு நாம் இங்கு செய்யும் கிரியைகள், அவர் எங்கு எந்த உருவில் இருந்தாலும் அவரைச் சென்றடையும். நாம் நம் கைப்பேசியில் அனுப்பும் குறுஞ்செய்தி, வேறு ஒருவரின் கைப்பேசிக்குச் செல்வதைப் போல், நமது சநாதன தர்மத்தில் செய்யக்கூடிய ஒவ்வொரு கிரியையும் அதற்குரிய பலனைத் தரவே செய்யும்.

இவை அனைத்தும் காலம் காலமாக நம் முன்னோர்களால் கடைப் பிடிக்கப்பட்டு வருபவையாகும். எனவே, ஒருவர் மறைந்த திதியில்தான் அவருக்குச் சிராத்தம் செய்ய வேண்டும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே...

ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு