மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?

பிரணவத்தின் தத்துவம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
பிரணவத்தின் தத்துவம் என்ன?

கேள்வி - பதில்

? மந்திரங்களைச் சொல்வதற்கு முன்பு ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தைச் சொல்வது ஏன்? பிரணவ மந்திரத்தின் தத்துவம் என்ன?

- கே.நித்யா, சென்னை-80

‘ஓம்’ என்பது அனைத்து மந்திரங்களுக்கும் சிரசாக விளங்குவது. தத்துவம் என்பதே உணர்ந்து அறிவதுதான். அனைத்து தெய்வங்களின் சக்திகளும் இந்தப் பிரணவ மந்திரத்தினுள் அடக்கம். அனைத்து வேதங்களும் மந்திரங்களும் இதனுள் அடக்கம். பிறகு, மற்ற மந்திரங்களை எதற்காகக் கடவுள் அருளினார் என்ற சந்தேகம் பலருக்கும் எழக்கூடும். காரணம், எப்படி ஒரு விதையின் மூலம் ஒரு விருட்சம் உருவாகி, அதில் தோன்றும் கனிகளிலிருந்து கிடைக்கும் விதைகளிலிருந்து எண்ணற்ற விருட்சங்கள் உருவாகின்றதோ... அதேபோல் ‘ஓம்’ என்னும் சொல்லானது, வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள் என்று அனைத்துமாக விளங்குகிறது.

மரத்தின் வேரில் தண்ணீர்விட்டு மரத்தின் மூலமாகப் பலன்களைப் பெறுவதுபோல், ஒவ்வொரு மந்திரத்தின் முன்பாகவும் நாம் சொல்லும் பிரணவ மந்திரத்தின் சேர்க்கை அந்த மந்திரத்துக்குச் சக்தி கொடுப்பதாக விளங்குகிறது.

எனவே, தாங்கள் எந்த மந்திரத்தைச் சொல்வதாக இருந்தாலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தைச் சேர்த்துச் சொல்லவேண்டியது அவசியம். அதன் ஆற்றலை நம்முடைய அனுபவத்தினால்தான் உணர முடியும்.

கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?

எல்லாம் வல்ல எம்பெருமான் சிவனார், பிரணவத்தின் உயர்வை உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம்கொண்டார். அதன்படி தன் மகனிடம் பிரணவத்தின் பொருளைக் கேட்டு உணர்வதாக ஓர் அருளாடல் நிகழ்த்தினார். அதன்மூலம் உலக மக்கள் அனைவரும் பிரணவத்தின் உயர்வையும் அதன் ஆற்றலையும் உணரச்செய்தார்.

எனவே, அனைத்து மந்திரங்களுக்கும் விதையாக விளங்கும் பிரணவமானது அனைத்து மந்திரங்களுக்கும் பிரதானமானதாகக் கருதிப் பயன்படுத்த வேண்டும்.

? ஒருவர் நல்ல நெறியைப் பின்பற்றுவதற்கு பிரதானமான ஒழுக்கம் என்பது மனத்தைப் பொறுத்தே அமைகிறது. எனில், நாம் எதற்காக மதச் சின்னங்களைத் தரித்துக்கொள்ள வேண்டும்? சமய ஆசாரப்படி ஆடைகள் அணிந்துகொள்ள வேண்டியதன் அவசியம்தான் என்ன?

- இரா.ரகோத்தமன், திருச்சி-1

நாம் ஒருவருக்கு செல்பேசியில் தொடர்பு கொள்ளவேண்டுமானால், அதனுள் ‘சிம்’ கார்டு இருக்க வேண்டியதுதான் அவசியமே தவிர, செல்பேசி எதற்கு என்று நாம் கேட்பதில்லை.

ஓர் உயிரானது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும், தன் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளவும், அதைக் காப்பாற்றிக் கொள்ளவும் உடலானது அவசியமாகிறது. அதேபோல் நமக்கு ஆசாரமும் முக்கியம்தான். மனதில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்றால், நாம் செய்யக்கூடிய செயல்களை நல்ல முறையில் செய்ய வேண்டும். கட்டுப்பாடுகள் நம்மை நல்ல வழியில் பயணிக்கச் செய்யும்.

ஒரு வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றாலே, எத்தனையோ விதிமுறைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க நாம் நம்முடைய சரீரத்தையும் அதன் உள்ளிருந்து இயக்கும் ஆத்மாவையும் பாதுகாக்க சாஸ்திரங்களை மதிப்பது அத்தியாவசியமாகும்.

அதில் எந்தக் குறைபாடுகளும் ஏற்பட்டுவிடக் கூடாது. நம்முடைய ரிஷிகள் தங்களின் ஆழ்ந்த தபோ பலத்தினால் நமக்கு அளித்துள்ள சாஸ்திரக் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். மனிதன் தனியாக வாழ முடியாது. கூட்டாக அனைவருடனும் இணைந்து வாழ கட்டுப்பாடுகள் அவசியமானதே. மதச் சின்னங்கள் வெறும் அடையாளம் மட்டுமல்ல, அவற்றின் மூலம் நம் உள்ளும் புறமும் மாறுதல்கள் ஏற்படுகின்றன.

அவற்றை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து நற்கதி அடைந்தனர். எனவே, நாமும் முழு நம்பிக்கையுடன் எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்குக் கடைப்பிடித்தல் அவசியம்.

அவரவர் மனப்போக்கின்படி செல்ல அனுமதித்தால், முடிவில் குழப்பமே மிஞ்சும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதே சரியென்று நினைத்துச் செயல்பட்டால், சமுதாயம் சிதைந்துவிடும்.

எனவே நம் நன்மையின் பொருட்டும், சமுதாயத்தின் நன்மையின் பொருட்டும் நம் ஆசாரங்களை விட்டுவிடாமல், நடைமுறைக்குக் கொண்டுவருவதே நமக்கு நன்மை பயப்பதாக இருக்கும்.

? ஆலயங்களில் இறைவனை தரிசிக்கச் செல்லும்போது திருவடி தொடங்கி திருமுடி வரை தரிசிக்கும்படிச் செல்வது ஏன்? திருவடிகளின் மகத்துவம்தான் என்ன?

- எஸ்.வசந்தா, சென்னை-116

நம்முடைய ஸநாதன தர்மத்தில் திருவடிகளுக்கு உயர்ந்த நிலை அளிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தன் வழிபாட்டினைத் தொடங்குவதற்கு முன்னர், தனக்கு உபதேசம் செய்த குருவின் திருவடிக் கமலங்களை நினைத்து வழிபட்ட பின்னரே தொடங்க வேண்டும்.

‘ஸத்குரு சரணாரவிந்தாப்யாம் நம:’ என்று குருவின் பாத கமலங்களைத் தன் தலையில் வைத்து வழிபடுவதாக பாவிப்பது மிகவும் முக்கியமானதாகக் கூறப்பட்டுள்ளது. நம்முடைய யோக சாஸ்திரங்களில், ‘பாதங்களில் உள்ள கட்டை விரல்களிலிருந்து இரண்டு நாடிகள் சென்று, பின்னர் ஒன்றாகி துவாசந்தம் பெருவெளி வரை வியாபித்து இருப்பதாக பாவனை செய்ய வேண்டும்’ என்று விளக்கப்பட்டுள்ளது.

கேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன?
படம்: மதன் சுந்தர்

சைவ ஆகமங்களில் ‘பூத சுத்தி’ என்னும் கிரியையில் மிகச் சிறப்பாக, ‘பாதாங்குஷ்ட த்வயாத் ஆரப்ய...’ என்று நுட்பமாக விளக்கி, பாதங்களின் மேன்மை உணர்த்தப்பட்டுள்ளது. நம் உடலில் உள்ள அனைத்து அங்கங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் நம் பாதங்களில் அமைந்துள்ளது.

உலகுக்கெல்லாம் ஒளியாக விளங்கும் இறைவனின் இருப்பிடமான ஆலயத்தில் கோபுரமாக இருந்தாலும், தெய்வத் திருமேனிகளாக இருந்தாலும் இறைவனின் திருவடிகளில் இருந்து திருமுடிவரை தரிசிக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது.

இறைவனின் பாதக்கமலங்களைப் பற்றினால், அவர் நம்மை ஆட்கொள்வார் என்பதே அந்தக் காரணம்.

சிவாகமங்கள், பாதங்களை பிரதிஷ்டா கலை என்ற நிலையில் நினைத்து, அதன் மேல் நிவ்ருத்தி கலை, வித்யா கலை, சாந்தி கலை... அதையும் கடந்து சாந்யதீத கலையில் (முடி) ஆகியவற்றைக் கடந்து எங்கெங்கும் வியாபித்து இருக்கும் பரம்பொருளை அடைய வேண்டும் என்று வழிகாட்டி இருக்கிறது.

நாம் ஓர் இடத்துக்குச் செல்ல வழித்தடங்கள் உதவுவதைப் போல், நாமும் நம் இறைவழிபாட்டை ஆகமங்கள் கூறும் முறையில் கடைப்பிடித்தால் இறையருளைப் பூரணமாகப் பெறலாம் என்பது உறுதி.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார்,

சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002