வாசகர்களின் ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு வாசகர்களே பதில்களையும் உரிய விளக்கங்களையும் பகிர்ந்து உதவும் பகுதி இது!

சூரிய வம்சம், அந்தப் பரம்பரை மன்னர்களின் வரலாறு, ஆட்சிமுறை, அவர்களின் காலம், மக்களின் நிலை... இவை பற்றிய தகவல்களைச் சொல்லும் விதம் பாகவதம் தவிர வேறு ஏதேனும் நூல்கள் தமிழில் உள்ளனவா, எங்கு கிடைக்கும்? அதேபோல் சந்திர வம்ச அரச பரம்பரை குறித்த தகவல்களும் வேண்டும். அதுபற்றி மகாபாரதம் தவிர வேறு நூல்கள் உள்ளனவா என்ற விவரம் தேவை.
- கே.அருணாசலம், பாவூர்சத்திரம்
திருவிடந்தை வராஹர் ஆலயம் பிரசித்திபெற்றது. அதேபோல் தமிழகத்தில் வராஹர் அருளும் தனிக்கோயில்கள் வேறு எந்தெந்த ஊர்களில் உள்ளன. விவரம் அறிந்தவர்கள் பகிருங்களேன்.
-ஆர்.அரசி, சென்னை-44
தாராசுரம் அருள்மிகு ஐராவதீஸ்வரம் திருக்கோயிலில் பெரியபுராணம் குறித்த நாயன்மார்கள் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உண்டு. இதேபோல் வேறு ஏதேனும் தலங்களில் நாயன்மார்களின் சிறப்பைக் கூறும் சிற்பங்கள் அல்லது ஓவியங்கள் உண்டா?
- ஏ.சங்கரன், தூத்துக்குடி
ஶ்ரீராமபுஜங்கா அஷ்டகம் என்றொரு துதிப்பாடல் உண்டு. `பஜே விசேஷ ஸுந்தரம்’ எனத் தொடங்கும். பாடலின் எட்டுத் துதிகளும் ராமனின் மகிமைகளை விளக்கி, அவரைப் பூஜிக்கிறேன் என்ற பொருளில் முடியும். இந்தத் துதிப்பாடல் தமிழ் விளக்கத்துடன் முழுமையாக எனக்குத் தேவை. எவரிடமேனும் இருந்தால் நகலெடுத்து அனுப்பிவையுங்களேன்.
- சி.ரூபாவதி, திருநெல்வேலி-3
கொடுங்கலூர் பகவதியம்மன் போன்று கேரளத்தில் புகழ்பெற்ற வேறு பகவதி திருத்தலங்கள் எவை, அவற்றின் புராணப் பெருமைகள் என்ன? பகவதி வழிபாடு குறித்தும் தலங்கள் குறித்தும் விவரிக்கும் தனிப் புத்தகங்கள் ஏதேனும் உண்டா? விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.
- எ.மகேஷ், சென்னை-5

சங்கின் மகிமைகள்!
சக்தி விகடன் 12.7.22 தேதியிட்ட இதழில், `வலம்புரிச் சங்கு வழிபாட்டு நியதிகள் குறித்த புத்தகம் ஏதேனும் உள்ளதா’ என்று வள்ளியூர் வாசகர் எம்.முருகேசன் கேட்டிருந்தார். அவருக்கு உதவும் வகையில் `வளமும் நலமும் அருளும் வலம்புரி, இடம்புரி சங்கு பூஜைகளும் பயன்களும்’ என்ற தலைப்பில், தாம் எழுதிய சிறு புத்தகம் ஒன்றை திருச்சி வாசகரும் ஆன்மிக எழுத்தாளருமான மு.இலக்குமணப் பெருமாள் அனுப்பியுள்ளார். அந்தப் புத்தகம் வாசகர் முருகேசனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. எல்லோருக்கும் பயன் தரும் வகையில், அந்தப் புத்தகத்தில் சில தகவல்கள் இங்கே...
குருவிடம் மந்திர தீட்சை பெற்று அவரிடமிருந்து சங்குகளைப் பெற்றுப் பட்டுத்துணியில் பத்திரமாகச் சுற்றி வீட்டுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அன்று இரவு செம்பு அல்லது பித்தளைப் பாத்திரத்தில் சங்கினை வைத்து சங்கு மூழ்கும் அளவுக்கு கல் உப்பைக் கொட்டி வைக்கவும். இப்படி 24 மணி நேரம் வைக்கவேண்டும்.
பின்னர் சங்கை தூய நீரில் கழுவி பட்டுத்துணியால் துடைத்து, வெள்ளித் தட்டு அல்லது செம்புத் தட்டில் பச்சரிசி பரப்பி அதன்மீது வைக்கவேண்டும். சங்கின் தலைபாகம் வடக்காகவும் வால் பாகம் தெற்காகவும் இருக்கும்படி வைக்கலாம்.
தலைப்பாகம், உடல் பாகம், வால் பாகம் என மூன்று இடங்களில் சந்தனக் குங்குமப் பொட்டு வைத்து துளசி மற்றும் மலர்கள் சாற்றவும்.
கைப்படாத சுத்தமான தீர்த்தத்தை உத்தரணி கரண்டி கொண்டு சங்கில் நிரப்பலாம். அந்தத் தீர்த்ததில் துளசி மிளகு அளவுக்குப் பச்சைக் கற்பூரம் போட்டு வைக்கலாம்.
வீட்டில் சங்கு பூஜை செய்வதாக இருந்தால், தினசரி பூஜையை முடித்துவிட்டு பின்னர் சங்கு பூஜை செய்யலாம். முறைப்படி சங்கு பூஜை செய்வதன் மூலம் வீட்டில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு விரைவில் கல்யாணம் கூடிவரும். தடைகள் யாவும் நீங்கும்.
சங்கு வீட்டில் இருக்கும்போது, கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது. ஒருவேளை கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டாலும் விரைவில் அது அடைபடும். வீட்டில் ஆக்கபூர்வமான சக்தி நிறைந்திருக்கும். தீய சக்திகள் நம் இல்லத்தை அணுகாது.

ஆலயங்கள் அற்புதங்கள்!
`ஆலயங்களில் திகழும் அற்புதங்கள் வித்தியாசமான அமைப்புகள் குறித்த தகவல்கள் எவரிடமேனும் இருந்தால் பகிருங்களேன்’ என்று சக்தி விகடன் 12.7.22 தேதியிட்ட இதழில், தூத்துக்குடி வாசகர் கி.சுந்தரம் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரங்களை திருநெல்வேலி சாந்தி நகர் வாசகர் இராம.கண்ணன் பகிர்ந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் - ராதாபுரம் வட்டம், இருக்கன்துறை என்ற இடத்தில் சிவாலயம் ஒன்றுள்ளது. இங்கு சிவலிங்கத்துக்குப் பதிலாக நான்கு சிறிய பீடங்கள் உள்ளன. அவை ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களைக் குறிப்பன என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுவர்.
குமரிமாவட்டம் - கல்குளம் வட்டம், கேரளபுரம் எனும் ஊரில் சிவாலயத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆறுமாதம் கறுப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் நிறம் மாறுவது அற்புதமாகும். மட்டுமன்றி இந்தக் கோயில் கிணற்றின் நீரும் அவ்வாறு ஆறுமாதம் கறுப்பு; ஆறு மாதம் வெண்மை என்று நிறம் மாறுவது அதிசயம்தான்.
திருச்செந்தூர் முருகன் கோயில் இலைவிபூதிப் பிரசாதத்தின் மகிமையை நாம் அறிவோம். குமரி மாவட்டம் - நாகர்கோவில் நாகராஜ கோயிலில் கருவறையில் கிடைக்கும் மண் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதேபோல் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் ஆலயத்தில் புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.