ஸ்ரீராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம் ஸீதாபதிம்
ரகுகுலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தலாய தாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.
உலகையே அடைய ஆசைப்பட்டாலும் அந்த ஆசை கைகூடும். எப்படி? காலம் பார்த்து, இடம் பார்த்து செயல்பட்டால் நம் எண்ணம் பலிக்கும். காலம், பகல் - இரவு என மாறிமாறி வரும். இடம் மாறவே மாறாது. அந்த வகையில் பகவான் தேர்ந்தெடுத்த இடம்தான் அயோத்தி.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSராவணனின் கொடுமையைத் தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டபோது, `யாம் அயோத்தியில் அவதரிப்போம்’ என்று தேவர்களுக்கு வாக்களித்தாராம்.
வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்
இளைஞர்கள் என அடிபரவ ஏகிநாம்
வளைமதில் ‘அயோத்தி’யில் வருதும் என்றனன்
- என்கிறது கம்ப ராமாயணம். `சங்கு, சக்கரம், ஆதிசேஷன் ஆகிய மூன்றும் இளைஞர்(தம்பி)களாக எம்மைப் பின்தொடர, யாம் அயோத்தியில் வந்து அவதரிப்போம்’ என்று பகவான் சொன்ன தாக விளக்குகிறது மேற்காணும் பாடல்.

ஞானிகளும் உத்தமக் கவிஞர்களும் அயோத்தியைப்பற்றி விரிவாகவே கூறியிருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
`காலம் இல்லாதது அகாலம். நீதி இல்லாதது அநீதி. தர்மம் இல்லாதது அதர்மம். அதுபோல யுத்தம் இல்லாதது, ‘அயோத்தி’. `யாரும் எதற்காகவும் யாரோடும் யுத்தம் செய்யாத அன்புமயமான பூமி அயோத்தி’ என்று விளக்குவார் வாரியார் சுவாமிகள். கம்பரும் அயோத்தியின் அமைதியை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
`நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்’ என்கிறார் கம்பர்.
`உறங்குதல்’ என்ற சொல்லுக்கு, ‘தங்குதல்’ என்ற பொருளும் உண்டு. அதன்படி பார்த்தால் அயோத்தியின் அமைதி புரியும். சங்குகள் நீரிலே தங்கியிருக்கின்றனவாம். தண்ணீரில் இறங்கிக் கலக்கவேண்டிய எருமைகள் நிழலில் அமைதியாகத் தங்கியிருப்பதால், சங்குகள் நீரில் அமைதியாக இருக்கின்றனவாம். அடுத்து பறந்து திரிய வேண்டிய வண்டுகளைச் சொல்கிறார்.
தேனுக்காக ஒவ்வொரு மலரையும் தேடித் திரியும் வண்டுகள், மலர் மாலைகளில் தங்கி விட்டனவாம். ஓர் இடத்திலேயே தேவையான தேன் முழுவதும் கிடைத்த பிறகு, ஒவ்வொரு மலராகத் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை. எனவே, வண்டுகள் மலர் மாலையில் தங்கியிருந்தனவாம்.
அடுத்து, திருமகளைச் சொல்கிறார் கம்பர். அவள் தாமரையில் தங்கியிருக்கிறாளாம். அவளை யாருமே தங்கள் இல்லத்துக்கு வரும்படி அழைக்கவில்லை. ஏனெனில், அனைவரிடமும் அனைத்தும் இருக்கின்றன. பிறகு ஏன், அவர்கள் திருமகளை அழைக்கப்போகிறார்கள்! அதனால், திருமகள் தாமரையிலேயே தங்கிவிட்டாளாம்.
இவ்வாறு அயோத்தியின் வளத்தை வர்ணித்து, அந்த நகரின் அமைதியைச் சிறப்பிக்கும் கம்பர், இந்தப் பாடலின் மூலம் `அயோத்தி நீர்வளம் நிறைந்தது; நிலவளம் நிறைந்தது; அங்கிருப்பவர்கள் திருப்தி பெற்றவர்கள்' என்ற கருத்துகளையும் பதிவு செய்கிறார். இவ்வளவு அற்புதமான நகரத்தில் தெய்வம் அவதரிக்க விரும்பியதில் ஆச்சர்யம் இல்லைதான்!
நாமும் அயோத்தியின் மகிமைகளை, அந்த நகரின் புண்ணிய இடங்களை, சுற்றிலும் அமைந் துள்ள தலங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம்...
ராமனின் அவதார பூமியான அயோத்தி, முக்தி தரும் நகரங்கள் ஏழில் ஒன்று என்கின்றன ஞானநூல்கள். இந்த நகரம் வைகுந்தத்தின் ஒரு பகுதி என்ற நம்பிக்கை உண்டு.
சூர்யவம்சத்தின் மனு என்பவரே இந்த நகரத்தை `சரயு' நதியின் தென்கரையில் உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அயோத்திக்கு, ‘மண்ணுலகின் சொர்க்கம்’ என்ற சிறப்பும் உண்டு.
ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த அகஸ்தியரின் ஆசிரமம், வசிஷ்டர் ஸ்தானம், தர்ம ஸ்தானம், அசுவமேத யாகம் நடந்த குண்டம், அனுமந்த குண்டம், நாராயண குண்டம் போன்ற அயோத்தியின் சிறப்புமிகு இடங்கள் குறித்து புராணங்கள் போற்றுகின்றன.
சீதாகூபம், உத்தியானவனம், ராமர் ஜடாமுடி தரித்து கானகம் சென்ற இடம், பட்டாபிஷேகம் முடிந்த பிறகு இரண்டாவது முறையாக சீதை, லட்சுமணன் துணையுடன் வனத்துக்குச் சென்ற இடம், ராமர் சிறு குழந்தையாக விளையாடிய இடம், கோசலை ராமனை மடியில் அமர்த்தி உணவு ஊட்டிய இடம், கைகேயி தசரதனிடம் வரங்கள் பெற்ற இடம், சீதாதேவி வாழ்ந்த அந்தப்புரம்... இப்படி, ராமாயணத்துடன் தொடர்பு டைய இடங்களையும் புனிதமாகப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.
சீதா அயோத்தியில் தங்கியிருந்த அந்தப்புரம் தனியாக ஒரு மண்டபத்தில் உள்ளது. அங்கே ஒரு துளசி மாடம் உள்ளது. அங்குதான் சீதாதேவி தினமும் துளசி பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் ஒரு மரத்தின் அடியில், சீதாதேவி அமர்ந்திருந்த கருங்கல் ஆசனம் காணப்படுகிறது. அந்த இடத்தில் மலர்களைத் தூவி வழிபடுகிறார்கள்.
ராமர் அரசாண்ட இடம் பட்டாபிஷேக மண்டபம் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தில் ராமர் சந்நிதி அமைந்துள்ளது. பகல் பன்னிரண்டு மணியளவில் பூஜைகள் நடைபெறுகின்றன. முன்னதாக நீண்டநேரம் பஜனை ஆராதனை நடைபெறுகிறது. இங்குள்ள ராம பட்டாபிஷேகம் குறித்த சித்திரம் மிக அழகு!
அயோத்தியில் பட்டாபிஷேக படம் வாங்குவது மிகவும் விசேஷம். மேலும், செம்பிலும் பித்தளையிலும் உருவாக்கப்பட்ட பட்டாபிஷேக விக்கிரகங்களும் கிடைக்கின்றன.
அயோத்தியில் ராமரை வழிபடுவதையும் ராமநவமி அன்று சரயு நதியில் நீராடி, பஜனை செய்வதையும் வைஷ்ணவர்கள் தங்கள் முக்கிய கடமைகளாகக் கொண்டுள்ளார்கள். அவ்வப்போது ராமாயண உபந்நியாசமும், ராமாயணம் தெருக்கூத்துகளும் நடைபெறுகின்றன.
அயோத்திக்குச் செல்வோர் அவசியம் தரிசிக்கவேண்டிய இடம் கனகமந்திர். சந்நிதியில் ராமர், சீதாபிராட்டி, லட்சுமணன் ஆகியோர் தங்க நிறத்தில் ஜொலிக்கின்றனர். தங்க முகப்பு பதித்த கனக மண்டபம் இருப்பதன் காரணமாக இந்தக் கோயிலுக்குக் கனக மந்திர் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்த மண்டபத்தில் சீதா சுயம்வரம், சீதா கல்யாணம், ராம பட்டாபிஷேகம், அனுமனின் இலங்கை விஜயம் போன்ற சித்திரங்கள் மனத்தைக் கவரும் வண்ணம் காணப்படுகின்றன.
ரகுநாயகர் ஆலயம் அயோத்தி சரயு நதியின் கரையில் அமைந்துள்ளது. 108 திவ்யதேச தலங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் ராமபிரான், ரகுநாயகன் என்ற திருப்பெயர் கொண்டு, சீதாபிராட்டியுடன் புஷ்கல விமானத்தின்கீழ் அமர்ந்த திருக் கோலத்தில் வடதிசை நோக்கி அருள்கிறார். புண்ணிய தீர்த்தம், சரயு நதி. பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்ய பெற்றது.
ராமன் திரும்பிவரும் வரை பரதன் அயோத்திக்குள் திரும்பவில்லை. நந்தி கிராமம் என்ற இடத்தில் ராமபிரானின் பாதுகைகளை வைத்து ஆட்சி செய்து வந்தான். ராமர் திரும்பி வரத் தாமதமானதால், அக்னிபிரவேசம் செய்யத் தயாரானான். இந்த நந்தி கிராமம் அயோத்தியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது.
ராமஜன்ம பூமிக்கு அருகில் `அனுமான்காடி’ என்ற பெயரில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயில், பேரழகுடன் காட்சி தருகிறது.
அயோத்திக்குச் செல்லும் பக்தர்களை வெகுவாகக் கவர்வது சரயு நதி. ராமன் அவதாரக் காலம் முடித்து, வைகுந்தத்துக்குத் திரும்புவதற்கு முன்பு சரயு நதியில் மூழ்கி மறைந்துபோனதாகவும், அதேபோல் சரயு நதியில் மூழ்கிய லட்சுமணன் ஆதிசேஷனாகவும், பரதன் சுதர்சன சக்கரமாகவும், சத்ருக்ணன் சங்காகவும் மாறி வைகுந்தத்தை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தலத்தில் சரயு நதியில் நீராடினால் சுவர்க்கபோகம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராமபிரான் சரயு நதியில் மூழ்கி மறைந்த இடம் `குப்தகாட்' என்று அழைக்கப்படுகிறது.
சரயு நதியின் படித்துறையில் அரச மரத்தினடியில் சீதா தேவியின் சிறிய விக்கிரகத்தை வைத்து பூஜை செய்கிறார்கள்.
தசரதர் நீராடிய இடம் `ராஜ்காட்' என்று அழைக்கப்படு கிறது. சுமார் 15 படிகள் இறங்கினால் நதியை அடையலாம். அங்கேயே பண்டாக்கள் எனப்படும் பூஜாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்குச் சங்கற்பம் செய்து வைத்து, மலரும் அட்சதையும் தருகிறார்கள். அவற்றை நதி நீரில் போட்டு வழிபட்ட பிறகு ஸ்நானம் செய்யவேண்டும்.
சரயு நதியின் படித்துறை ஒன்றில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கோயில் ஒன்று உண்டு. அங்கே வில்வ தளத்தால் அர்ச்சனை செய்யலாம்.
சரயு நதிக்கு அருகில் அம்மாஜி மந்திர் என்ற பெயரில் ஒரு கோயில் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலில் தென்னிந்திய வைஷ்ணவர்களே பூஜை செய்கின்றனர். இந்தக் கோயிலில் ராமபிரான் சந்நிதியும் ரங்கநாதர் சந்நிதியும் உள்ளன.
பைசலாபாத் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது அயோத்தி. செல்லும் வழியில் உள்ள ஊர்களில் ராமபிரானின் ஆலயங்கள் சிறிதும் பெரிதுமாக அமைந்திருப்பதைக் காணலாம். அனுமனுக் கான கோயில்களும் நிறைய உள்ளன. நாமும் வாழ்வில் ஒருமுறையேனும் அயோத்த்தி எனும் அந்த அற்புத நகரை தரிசித்து வருவோம். தசரத மைந்தனாம் ஸ்ரீராமனின் அருளா லும் சீதாதேவியின் அனுக்கிரகத்தாலும் வாழ்வும் வரமும் பெறுவோம்.
இனிமை சேர்த்த இக்ஷ்வாகு...
இனிமைக்கு அடிப்படை கரும்பு. இந்தக் கரும்பைத் தோற்றுவித்தவன் அயோத்தியை ஆட்சி செய்த இக்ஷ்வாகு. சூரியவம்ச வழித்தோன்றலான இவனே, பிரம்மாவிடம் ரங்கநாத பெருமானை அயோத்திக்குப் பெற்று வந்து பூஜித்தவன் என்ற பெருமைக்குரியவன்.
இக்ஷ்வாகு தாவரவியலில் வல்லுநன். சரயு ஆற்றின் கரையில் விளைந்திருந்த மூங்கில் சோற்றில் அவன் சற்று லேசான இனிப்புச் சுவையை அனுபவித்தான். அந்த இனிப்புச் சுவையை மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்பினான். புல்லிலிருந்து மூங்கில் தோன்றியதைப் போல், புல்லிலிருந்து புல்லைவிட மிகப் பெரிய, மூங்கிலை விட மிகச் சிறிய கரும்பைத் தோற்றுவித்தான். இது சரயு நதிக்கரையில் பல்கிப் பெருகலாயிற்று. மனிதர்கள் விரும்பிச் சுவைத்தனர். இந்தக் கரும்பே சர்க்கரையின் நிலைக்களன் ஆனது. கரும்பைத் தோற்றுவித்தவன் என்பதால்தான் இந்த சூரியகுலத் தோன்றலுக்கு இக்ஷ்வாகு என்ற பெயர் என்கின்றன புராண நூல்கள்.
அயோத்தியின் தீர்த்தங்கள்!
சகஸ்திர தாரை, சுவர்க்கத்துவாரம், ராமதந்ததாவன குண்டம், அனும குண்டம், கஜேந்திர குண்டம், சீதா கூபம், ஞான கூபம், சுக்ரீவ குண்டம், அக்னி குண்டம், வசிட்ட திலோதகி சங்கமம், கணேச தீர்த்தம், தசரத குண்டம், கோசலை குண்டம், சுமித்திரா குண்டம், யோகினி குண்டம், ஊர்வசி குண்டம், மகப்பிரம், தூர்ப்பர சரஸ், பிரகஸ்பதி தீர்த்தம், ருக்மிணி குண்டம், க்ஷீரோகதம், தனக்ஷய தீர்த்தம், ருணவிமோசன தீர்த்தம், பாப விமோசன தீர்த்தம், வைதரணி கோஷராக்கம் எனும் சூர்ய குண்டம், ரதி குண்டம், காந்தர்வ குண்டம், குஸுமாயுத குண்டம், மந்திரேசுர தீர்த்தம், இந்திர தீர்த்தம், துர்கா குண்டம், நாராயண குண்டம், வான்மீக தீர்த்தம், புண்ணிய ஹரி தீர்த்தம், கிருதாசி தீர்த்தம், சரயு கர்க்காசங்கம், சம்பு தீர்த்தம், அகஸ்திய சரஸ், ஸ்ரீகுண்டம், குடில நதி கலக்கும் வரசிரோதசு தீர்த்தம், குப்ஜா தீர்த்தம், மகஸ்தானம், ராம ரேகை... எனப் பலவிதமான தீர்த்தங்கள் அயோத்தியில் உண்டு.
பழம் நூல்கள் சொல்லும் இத்தீர்த்தங் களில் பல இன்று இல்லை. பெயர்களாவது நம் மனத்தில் பதியட்டும் என்ற நோக்கிலேயே, இத்தீர்த்தங்களின் பெயர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.