Published:Updated:

`பத்மபாதம் பணிந்த பின்னே...’

தேவியின் சித்தமில்லாமல் தன் நாவிலிருந்து வார்த்தைகள் வராது என்று நம்பிய ஸ்ரீநிவாச தீக்ஷிதர், தான் சொன்ன சொல்லை மாற்றிக்கொள்ளவில்லை.

பிரீமியம் ஸ்டோரி
திருக்கடவூர் அபிராமியம்மை அபிராமிப் பட்டருக்கு அருள்பாலித்த திருக்கதை, நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோன்று அன்னை காமாட்சியும் தன் ஆத்ம பக்தர் மூலம் நிகழ்த்திய லீலை ஒன்று உண்டு. இதை அம்பாள் `ரத்னகேட ஸ்ரீநிவாச தீக்ஷிதர்’ என்பவருக்காக நிகழ்த்தினாள். இவர் அப்பய்ய தீக்ஷிதரின் மாமனார்.

ஒருமுறை புனே ராஜ்ஜியத்தில் உள்ள மைதிலோட்ரம் என்னும் சமஸ்தானத்தை மன்னன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் அவைக்குச் சென்றிருந்தார் ஸ்ரீநிவாச தீக்ஷிதர்.

அப்போது மன்னர் அவரிடம் யதேச்சையாக, ‘இன்று என்ன திதி’ என்று கேட்க, காமாட்சிதேவியை மனத்தில் தியானித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாச தீக்ஷிதரோ, சட்டென்று `பௌர்ணமி’ என்று சொல்லிவிட்டார். அப்போது அரசவையிலிருந்தவர்கள் எல்லோரும் அதை ஆட்சேபித்தனர். காரணம் அன்று அமாவாசை!

ஆனால், தேவியின் சித்தமில்லாமல் தன் நாவிலிருந்து வார்த்தைகள் வராது என்று நம்பிய ஸ்ரீநிவாச தீக்ஷிதர், தான் சொன்ன சொல்லை மாற்றிக்கொள்ளவில்லை. அவையில் இருந்தவர்கள் அதை வன்மையாகக் கண்டித்தனர். மன்னனுக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை.

ஸ்ரீநிவாச தீக்ஷிதரோ, தன்னைக் கொண்டு காமாக்ஷியம்பாள் ஏதோ திருவிளையாடல் புரிய சித்தம் கொண்டுவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்டார். இரவு வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லி விட்டு அவையிலிருந்து வந்துவிட்டார்.

மாலை சந்தியா வேளை. தன் கடமைகளைச் செய்யத் தொடங் கினார் தீக்ஷிதர். தேவி காமாட்சியை மனத்தில் நிறுத்தியபடி அர்க்கியம் விட்டுக்கொண்டிருந்தார். அப்போது காமாக்ஷிதேவி அவர் முன் தோன்றி, தன் தாடகத்தைக் கழற்றித் தந்து, ‘இதை நீ ஆகாசத்தை நோக்கி வீசி எறி’ என்று சொல்லி மறைந்தாள்.

`பத்மபாதம் பணிந்த பின்னே...’

அன்றிரவு ஸ்ரீநிவாச தீக்ஷிதரும் அவ்வாறே செய்ய வானில் ஆயிரம் சந்திரன்கள் எழுந்தனபோன்ற பிரகாசம் ஏற்பட்டது. மக்கள் ஆச்சர்யப்பட்டனர். ராஜா ஸ்ரீநிவாச தீக்ஷிதரின் மகிமையை அறிந்து ஓடிவந்தார். ஸ்ரீநிவாச தீக்ஷிதருக்கு ரத்னகேட என்னும் ஆபரணத்தை அணிவித்து மரியாதை செய்ததோடு, அவர் பாதங்களில் வீழ்ந்து ஆசி பெற்றார். அன்று முதல் அவர் பெயரோடும் ரத்னகேட ஒட்டிக் கொண்டுவிட்டது.

அம்பிகை அற்புதங்கள் புரிய மனம் கனிந்துவிட்டால் அதைத் தன் அடியார்கள் மூலம் நிறைவேற்றுவாள் என்பதை அபிராமிப்பட்டர் மற்றும் ரத்னகேட ஸ்ரீநிவாச தீக்ஷிதரின் வாழ்க்கைச் சம்பவங்கள் விளக்குகின்றன.

நாமும் அனுதினமும் `பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே’ என்று அம்பாளைப் பணிந்து வணங்குவோம். அவளின் திருவருள் நமக்குத் துணை நிற்கும்; நம் வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு