ஜோதிடம்
Published:Updated:

கரடிகள் உருவில் சித்தர்கள்!

கதிர்காமம்
பிரீமியம் ஸ்டோரி
News
கதிர்காமம்

இலங்கைத் திருவுலா - செல்லக் கதிர்காமம்!

``கபிலித்தை வனத்தில் கந்தனை தரிசிக்கச் செல்பவர்கள், மாலை வேளைக்கு மேல் கும்புக்கன் ஆற்றைக் கடந்து கோயிலுக்குச் செல்வதில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இரவு நேரங்களில் சித்தர்கள் அந்தக் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வார்கள்; சித்தர்கள் பலரும் இங்கே சமாதியாகி சூட்சும ரூபமாக உலாவி இந்தக் கோயிலைப் பாதுகாக்கிறார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஐதிகத்தை உறுதி செய்யும் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.''

கரடிகள் உருவில் சித்தர்கள்!
HildaWeges

கபிலித்தைக் கந்தனின் மகிமைகளை திருச்செல்வம் மேலும் சொல்லத் தொடங்கினார்.

``போர்க்காலத்தில் ராணுவ வீரர்கள் இந்தக் காட்டுப்பகுதியில் இரவில் ரோந்து வருவார்கள். அப்படி ஒருநாள் அவர்கள் இந்தக் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்தபோது, கோயிலைச் சுற்றியும் புளியமரத்தைச் சுற்றியும் ஏராளமான கரடிகள் வந்து படுத்திருந்தனவாம். மறுநாள் காலையில் அவை எழுந்து போய் விட்டன. மறுநாளும் இதேபோன்று நிகழ்ந்திருக்கிறது. இப்படி இரவு ரோந்து வந்த பல நாள்களில் இந்தக் காட்சியை ராணுவ வீரர்கள் கண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்தக் கரடிகள் இரவு இங்கு வந்து படுக்கின்றன... அப்படி எதைப் பாதுகாக்க இப்படிச் சுற்றி அரண் அமைத்துக் காவல் இருக்கின்றன என்று அவர்களுக்குக் குழப்பம். அப்போது நம் முருகன் அடியவர்கள், `கரடி வடிவில் வந்து அந்தக் கோயிலைப் பாதுகாப்பவர்கள் சித்தர்களே' என்பதை அவர்களுக்கு விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.

கபிலித்தை முருகன் கோயில் ஆதிகாலத்தில் வேடுவர்களால் வழிபடப்பட்டது. இப்போதும்கூட இலங்கையில் வாழும் வேடுவர்கள் பலரும் அவ்வப்போது இங்கு வந்து தங்கள் வழக்கப்படி பூஜை செய்வார்கள். ஆலயத்துக்குச் செல்வதற்கு முன்பாக ஆற்றங்கரையில் ஏழு சிறு ஊற்றுகளைத் தோண்டி அதில் வரும் நீர் கொண்டு குளிக்கவேண்டும்.

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் காலங்களில் ஏழு பாத்திரங்களில் நீர் எடுத்து அதில் மஞ்சள் கலந்து ஒவ்வொரு பாத்திரத்திலும் ஒரு பூவை இட்டுப் பின் முருகப்பெருமானை மனதில் நினைத்து வணங்கி நீராடுவர். பின்னர் ஆற்றில் இறங்கிக் குளித்துக் கோயிலுக்குள் செல்வது அவர்கள் வழக்கம். அதன்பின் அங்கே அவர்கள் வழக்கப்படி பூஜைகள் செய்வார்கள். அப்போது `குறிஞ்சி வெறியாட்டு' எனும் நடனமும் ஆடி வழிபடுவார்களாம்.

கரடிகள் உருவில் சித்தர்கள்!

இங்கே ஒரு சத்தியக் கல் இருக்கிறது. வேடுவர்களுக்குள் ஏதேனும் பிரச்னைகள், சண்டைகள் ஏற்பட்டால் இந்தக் கோயிலுக்கு வந்து, `தான் சொல்வதுதான் சத்தியம்' என்று சத்தியக் கல்லின் மீது கைவைத்துச் சொல்வார்களாம். யாரேனும் பொய்ச்சத்தியம் செய்தால் அவர்களை அந்தக் காட்டு மிருகங்கள் எப்படியும் வேட்டையாடி தண்டிக்குமாம். இந்த நம்பிக்கை அவர்களிடம் இப்போதும் உள்ளது.

இந்தக் கோயிலில் பூசாரி கிடையாது. அங்கு செல்பவர்களே முருகனுக்கு தீபம் ஏற்றி நிவேதனம் செய்து வழிபாடு செய்துகொள்ளலாம். நாங்கள் செல்ல ஆரம்பித்த முதல் வருடத்தில் அங்கேயே நிவேதனம் தயார் செய்து பூஜைகளைத் தொடங்கினோம். அப்போது அங்கே பெரிய யானை ஒன்று வந்தது. முதலில் எங்களுக்கு அச்சமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. பூஜையைக் கைவிடவும் மனமில்லை. யானை அமைதியாக நின்றது.

பூஜை முடிந்ததும் அங்கே அந்த யானைக்குக் கொஞ்சம் நிவேதனத்தை எடுத்து ஓரிடத்தில் வைத்துவிட்டு நகர்ந்து வந்துவிட்டோம். அந்த யானை மெதுவாக நடந்துபோய் அந்த பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. இது அடுத்த ஆண்டும் தொடர்ந்தது. இப்போது இரண்டு யானைகள் பூஜை நேரத்துக்கு சரியாக வருகின்றன. பூஜை நடக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்கும். பின்பு பிரசாதம் சமர்ப்பிப்போம். அதை ஏற்றுக்கொண்டு பொறுமையாகச் சென்றுவிடும்.

அதை யானை என்று நாங்கள் நினைக்கவில்லை. ஏதோ ஒரு இறைசக்திதான் அவ்வாறு வந்து செல்கிறது என்று நினைத்து மகிழ்கிறோம். காரணம் இந்த இடம் அப்படிப்பட்டது. இந்த இடத்துக்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து பாருங்கள்... கோயில் இருக்கும் புளிய மரத்தடியைச் சுற்றிலும் இருபது முப்பது மீட்டர் தொலைவுக்கு சுத்தமாகவே இருக்கும். ஒரு இலை, தழை, குப்பையைக் கூடப் பார்க்கமுடியாது. அப்போதுதான் தூய்மை செய்ததைப் போன்று இருக்கும்.

யாரும் அங்கே தங்கியிருப்பதில்லை.... பிறகு யார் இதைச் செய்கிறார்கள்... தெரியாது. இந்த இடத்தைப் பாதுகாக்கும் சித்தர்கள்தான் இந்தக் கோயிலைப் பராமரிக்கிறார்கள் என்னும் கருத்து உண்மையிலேயே பொருத்தம் உடையதாகவே படுகிறது.

இங்கு விளையாட்டாய் சுற்றுலாவாய் நினைத்துக்கொண்டு யாரும் வரமுடியாது. அவ்வாறு வந்த சில செல்வந்தர்கள் வழிதவறித் திண்டாடி மூன்று நான்கு நாள்கள் வனத்துக்குள் உயிர்பயத்துடன் சுற்றித் திரிந்து, பிறகு மீட்கப்பட்டிருக்கிறார்கள். இப்படியான சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல! கபிலித்தைக் கந்தனை நீங்கள் தரிசிக்க வேண்டும் என்று விரும்பினால், முறை யாக விரதம் இருந்து உரிய வழிகாட்டிகளை அழைத்துக்கொண்டு பக்தியோடு வாருங்கள். உங்களைக் கந்தன் வழிநடத்தி வாழவைப்பான்'' என்றார் திருச்செல்வம்.

கரடிகள் உருவில் சித்தர்கள்!
HildaWeges

கதிர்காமத்தின் மகிமைகளையும் கபிலை வனத்தின் சிறப்புகளையும் கேட்கவே மலைப்பாக இருந்தது. திருச் செல்வம் அறிவுறுத்தியதுபோல விரதம் இருக்கக் கால அவகாசம் இல்லாததால், நாம் கதிர்காமம் மட்டுமே தரிசனம் செய்யலாம் என்று முடிவு செய்தோம்.

இனி அந்தக் கதிர்காம முருகனை தரிசிக்கலாம் என்று புறப்பட்டோம். கதிர்காமம் செல்வதற்கு முன்பாக இங்கே அருகே செல்லக் கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. அங்கே மாணிக்க கங்கை ஆற்றின் கரையில் விநாயகப்பெருமானின் ஆலயம் உள்ளது. அங்கே சென்று வழிபட்டபிறகே, கதிர்காமம் செல்லவேண்டும் என்பது மரபு.

செல்லக் கதிர்காமம்... இயற்கை எழில் கொஞ்சும் சிற்றூர். அங்கே மாணிக்க கங்கை ஆற்றில் ஆண்டு முழுவதும் நீர் ஓடும் என்கிறார்கள். பொதுவாகத் திருவிழாக் காலங்களில் மக்கள் அதிக அளவில் இங்கே கூடுகிறார்கள். மற்ற நாள்களில் நிறைய பேர் வருவதில்லை. காரணம் இது யானைகளின் வசிப்பிட மாகத் திகழ்கிறது. இங்குதான் விநாயகப் பெருமான் யானை வடிவில் வந்து முருகப்பெருமான் வள்ளியின் திருமணத் துக்கு அருள் புரிந்தாராம்.

இங்கே உள்ள சிறு மலையின் மீது வேல் ஒன்று உள்ளது. அங்குதான் முருகப்பெருமான் ஆதியில் தவம் செய்தார் என்கிறார்கள். பக்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடி விநாயகப் பெருமானை வழிபட்டுப் பின் மலை மீதேறி முருகப்பெருமானை வேல்வடிவில் வழிபடுகின்றனர்.

செல்லக் கதிர்காமத்திலிருந்து கதிர்காமம் 3 கி.மீ தொலைவில் உள்ளது. கதிர்காமக் கோயிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு விக்ரகம் இல்லை. மாறாக திரைச்சீலையே உள்ளது. உண்மையில் ஏழு திரைகள் அங்கு உள்ளதாகவும் ஏழாவது திரைக்குப் பின் சடாக்ஷர யந்திரப் பெட்டி இருப்பதா

கவும் சொல்கிறார்கள். பக்தர்கள் தரிசனம் செய்யும் முதல் திரையில் முருகன் மயில்மீது வள்ளி தேவ சேனாவுடன் எழுந்தருளியிருப்பதைப் போன்ற படம் காணப்படுகிறது.

ஆலயத்தினுள் முருகப்பெருமான் அழகிய ஓவியங்களாகக் காட்சிகொடுக்கிறார். முருகனின் சந்நிதிக்கு அருகிலேயே விநாயகருக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இங்கும் திரை வணக்கமே. இதேபோன்று வள்ளி அம்மனுக்கும் தெய்வானை அம்மனுக்கும் தனிச் சந்நிதி உண்டு. வள்ளி முருகப்பெருமானை நோக்கிய கோலத்திலும் தெய்வானை முருகப் பெருமானோடு ஊடல் கொண்டு திரும்பி நிற்பது போன்று பக்கவாட்டிலும் சந்நிதி அமைந்துள்ளது.

இந்தத் தலத்தின் சிறப்புகளில் முக்கியமானது சித்தர்கள் வழிபாடு. இங்கே பல்வேறு சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. ஆலய வளாகத்தின் பால்குடி பாவா என்பவரின் சமாதி உள்ளது. மகா அவதார் பாபாஜியும் இங்குதான் ஜீவசமாதி கொண்டார் என்கிறார்கள்.

காஷ்மீரத்திலிருந்து இங்கே வந்த `கல்யாணகிரி' என்னும் சித்தர் இங்கே 12 ஆண்டுகள் உண்ணாமல் உறங்காமல் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டித் தவம் செய்திருக்கிறார். அப்போது அவரின் தவத்தில் மகிழ்ந்த முருகனும் வள்ளியும் சிறுவன் சிறுமியாக மாறி அவருக்குத் தொண்டு செய்திருக்கிறார்கள்.

ஆண்டு 12 ஆகியும் முருகனின் திருக்காட்சி கிடைக்கவில்லையே என்று வருந்திய கல்யாணகிரி மனம் சோர்வடைந்து அப்படியே அயர்ந்து படுத்து உறங்கத் தொடங்கியிருக்கிறார். அப்போது அங்கே வந்த சிறுவனும் சிறுமியும் அவரைத் தட்டி எழுப்ப, ``என் தூக்கத்தை ஏன் கெடுக்கிறீர்கள்...'' என்று கோபித்து அவர்களைத் திட்ட இருவரும் சிரித்துக் கொண்டே ஓடியிருக்கிறார்கள்.

கல்யாணகிரி சுவாமிகளும் அவர்களை விரட்டிக் கொண்டு ஓடினார். அந்த சிறுவனும் சிறுமியும் மாணிக்கக் கங்கை ஆற்றங்கரையில் ஒரு பாறையின் மீது ஏறி நின்று, தம் உண்மைக் கோலத்தில் தரிசனம் கொடுத்தார்களாம். கல்யாணகிரி சுவாமிகள் நெகிழ்ந்தார். முருகனைப் போற்றித் துதித்தார். இனி வாழ்நாள் முழுவதும் கதிர்காமத்திலேயே இருப்ப தாகச் சொல்லி அங்கேயே ஒரு மடத்தை நிறுவி வாழ்ந்து, முருகனுக்குத் தொண்டு செய்து ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்.

இப்படி சித்தர்களாலும் முக்தர்களாலும் வழிபடப்பட்டக் கதிர்காமக் கந்தனை வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வழிபட்டு மகிழ்வோம்.

- உலா வருவோம்...