தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

பிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்!

ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்

ஆபத்தில் இருப்போரை காக்கும் தெய்வமான இத்தல ஈசனை வழிபட்டால், இன்னல்களும் பகையும் அகலும். சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம்.

ஆபத்து ஏற்படும்போதும், ஆற்றாமை வெளிப்படும்போதும் ஆண்டவன் சந்நிதிகளில் அடைக்கலமாவது பக்தர்களின் இயல்பு. அப்படியோர் ஆபத்தான சூழ்நிலையில் சுக்ரீவன் வந்து வணங்கி பலன்பெற்ற தலமே தென்குரங்காடுதுறை என்னும் ஆடுதுறை திருத்தலம்.

ஸ்ரீபவளக்கொடியம்மை உடனாய ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம் பவள மல்லியாகும். சூரிய தீர்த்தம், சகாய தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்

தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 31-வது தலம் இது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் மற்றும் வள்ளலார் போன்றவர்களால் பாடப்பெற்ற பெருமைக்குரிய ஆலயம்.

ராமாயண காலத்தில் கிஷ்கிந்தை நாட்டை ஆட்சி செய்த வானர அரசன் வாலி. அவன் சகோதரன் சுக்ரீவன். ஒரு நேரம் வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் பகை ஏற்பட்டது. இருவரும் கடுமையாக சண்டையிட்டனர்.

வாலியிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் அச்சமடைந்த அசுரன், புதர்கள் நிறைந்த இருண்ட குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். தன் படையுடன் அவனைத் தேடிச்சென்ற வாலி, சுக்ரீவனை குகைக்கு வெளியே காவல் இருக்குமாறு பணித்தான்.

ஈசன்
ஈசன்

குகைக்குள் சென்ற வானரங்கள் அனைவரும் வந்துவிட்ட நிலையில் வாலி மட்டும் வரவில்லை. ஓராண்டு கடந்துவிட்டது. எனவே, வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுக்ரீவன் தவறாகக் கருதினான்.

அதன்பின் தன் சகோதரனைக் கொன்றவன் வெளியே வரக் கூடாது என்பதற்காக, குகையின் வாசலை ஒரு பெரும் பாறையால் மூடினான்.வாலி இறந்துவிட்டதாக அனைவரும் கருதியதால் கிஷ்கிந்தைக்கு சுக்ரீவனை அரசனாக்கினார்கள்.

பிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்!

இந்நிலையில் அசுரனைக் கொன்றுவிட்டு வாலி திரும்பியபோது, குகை மூடியிருப்பது கண்டு அதிர்ந்தான். ஒருவழியாகப் போராடி வெளியே வந்து கிஷ்கிந்தையை அடைந்த போது, சுக்ரீவன் அரசாட்சியில் இருப்பதைப் பார்த்ததும், வாலிக்குக் கடும் கோபம் உண்டானது. குகை வாசலை மூடிவிட்டு அரசை தந்திரமாகக் கைப்பற்றியதாக சுக்ரீவன் மீது குற்றம்சாட்டி, அவனை நாட்டை விட்டே வெளியேற்றினான்.

தன் தவறான அனுமானத்தால், அண்ணனுக்குத் தீங்கு இழைத்துவிட்டதாகக் கருதிய சுக்ரீவன், அதற்குப் பரிகாரம் தேடியும். வாலியால் தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், சிவபெருமானை வேண்டினான். உடனே சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலியிடமிருந்து காப்பாற்றியதுடன், `ஆடுதுறைக்குச் சென்று வழிபடுக' என்றும் அருளினார் ஈசன். சுக்ரீவனை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் இத்தலத்து ஈசன் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார் என்கிறது தல புராணம்.

பிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்!

ஒருமுறை, நாரதர் ஆகாய வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஓரிடத்தில் அனுமன் இருப்பதைக் கண்டு கீழே இறங்கினார். அனுமன் ராமனை துதிப்பதில் தன்னையே மறந்திருந்ததால் நாரதர் வருவதைக் கவனிக்கவில்லை. அதனால் சினம்கொண்ட நாரதர் அனுமனின் சங்கீத கலை மறந்து போகுமாறு சபித்தார். இந்தச் சாபத்திலிருந்து விடுபட அனுமன் இத்தலத்து ஈசனை வணங்கி கலைகளைத் திரும்ப பெற்றாராம்.

தில்லையில் பதஞ்சலி முனிவருக்காக நடனமாடி பரவசப்படுத்தினார் சிவனார். அதனையறிந்த தேவர்களும் பிற முனிவர்களும் `எங்களுக்கும் அந்த நடனம் காணும் பாக்கியத்தை அருள வேண்டும்' என்று ஈசனை வேண்டினர். அதன்படி இத்தலத்தில் சிவபெருமான் திருநடனம் ஆடி அருளினார். எனவே, நடனக் கலைஞர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.

பிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்!

இத்தலத்தில் முருகன் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற பெருமைக்குரியவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெருமானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராகச் சந்திப்பது போன்ற அமைப்பு, வேறு எந்த ஆலயத்திலும் காண்பதற்கரிய சிறப்பாகும்.

ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிப்பட்டு பரிகார பூஜை செய்துகொண்டால், அனைத்து தீவினைகளிலிருந்தும் விடுபடலாம்.

சிறந்த சிவ பக்தரான ஹரதத்தர், தினமும் திருநீலக்குடி, திருக்குழம்பியம், திருக் கோடிக்காவல், கஞ்சனூர், திருமாந்துறை, திருமங்கலக்குடி ஆகிய தலங்களை தரிசித்து விட்டு, இறுதியாக ஆடுதுறை ஈசனை தரிசித்து விட்டுதான் உணவு அருந்துவாராம். ஒருநாள் காவிரியில் வெள்ளம் கரை புரண்டோட ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த ஹரதத்தர், `இறைவா, இதென்ன சோதனை... உன்னை தரிசிப்பது எப்படி?' என்று ஆடுதுறை ஈசனிடம் முறையிட்டாராம். உடனே ஆற்றின் அக்கரையில் இருந்த ஹரதத்தருக்கு, இறைவன் அங்கேயே காட்சி தந்து அருள்புரிந்தாராம்.

பிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்!

``ஆபத்தில் இருப்போரை காக்கும் தெய்வமான இத்தல ஈசனை வழிபட்டால், இன்னல்களும் பகையும் அகலும். சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து குணம் அடையலாம். திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். சகல சௌபாக்கியங் களுடன் வாழலாம்'' என்கிறார் இக்கோயில் சிவாச்சார்யார்.

எப்படிச் செல்வது ?: கும்பகோணம் - மயிலாடுதுறை பேருந்து மார்க்கம் மற்றும் ரயில் மார்க்கம் மூலம் ஆடுதுறைக்குச் செல்லலாம்.

ஆடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து ஒரு பர்லாங் தொலைவில் இக்கோயில் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.

சுந்தரகாண்ட பாராயணம்!

ராமாயணத்தில் சிறப்பான திருப்புமுனையை அறிமுகம் செய்தவர் அனுமன். அவரின் சிறப்பை விவரிப்பது சுந்தரகாண்டம். தற்போதைய சூழலில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதால் மனத் திண்மையும் நம்பிக்கையும் பிறக்கும். சரி, அனுதினமும் எப்படி பாராயணம் செய்வது?

நாள் ஒன்றுக்கு ஏழு சர்க்கங்களாகப் பிரித்து பாராயணம் செய்யலாம். சப்த சர்க்க பாராயணம் என்பார்கள். நேரம் வாய்க்காதவர்கள் இன்னும் சிறிய சிறிய பகுதியாகப் பிரித்துக்கொண்டும் பாராயணம் செய்யலாம்.

- சேஷு மாமா