Published:Updated:

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்! - தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பர் ஆலயம்

நவராத்திரி தரிசனம்

பிரீமியம் ஸ்டோரி

கிருஷ்ணாவதாரத்தில் பெருமாள் பசுக்களைப் பாதுகாப்பவராக விளங்கியதால், அவருக்குக் கோபாலன் என்ற திருநாமம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே பெருமாள் பசுக்களைக் காக்கும் ஆயராகத் தோன்றிய தலம் ஒன்று உண்டு. அதுதான் திருவழுந்தூர் எனப்படும் தேரழுந்தூர்.

ஒருமுறை சிவனாரும் திருமாலும் திருவிளையாடல் புரிய சித்தம் கொண்டனர்; சொக்கட்டான் விளையாடினர். அப்போது ஜெயித்தது யார் என்ற தர்க்கம் ஏற்பட்டது. அன்னை பார்வதியின் கருத்து என்ன என்று கேட்டபோது, அவர் தன் சகோதரனுக்குப் பரிந்து, திருமாலே வெற்றி பெற்றதாகச் சொன்னார். உடனே சிவபெருமான் கோபித்துக்கொண்டவர்போல் நடித்து, உமை அன்னையைப் பசுவாகும்படி சபித்தார்.

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்! - தேரழுந்தூர்
ஸ்ரீஆமருவியப்பர் ஆலயம்

அன்னை பசுவாகி பூலோகம் வந்தாள். அதனால் வருத்தம் அடைந்த சரஸ்வதியும், லட்சுமியும் தாங்களும் பசுக்களாகி அன்னை யோடு சேர்ந்துகொண்டனர். அன்னையைப் பிரிந்து பிள்ளை இருப்பாரா? விநாயகரும் கன்றாக மாறி உடன் வந்துவிட்டார்.

சந்தன மரங்கள் நிறைந்த வனமாக இருந்த பகுதியில் இந்தப் பசுக்கள் மேய, இவர்களைப் பாதுகாக்க திருமாலே மேய்ப்பராகத் தோன்றி னார். அதனால் அவருக்கு ‘கோ சஹர் - ஆமருவியப்பர்' என்ற திருநாமம் இத்தலத்தில் உண்டாயிற்று.

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்! - தேரழுந்தூர்
ஸ்ரீஆமருவியப்பர் ஆலயம்

அப்போது, ஊர்த்துவ ரதன் எனும் அரசன் தனது ரதத்தில் ஆகாய மார்க்கமாகப் பயணித்தான். ரதத்தின் நிழல் பட்டு பசுக்கள் துன்புற்றதால் கோபமுற்ற திருமால், தனது திருப்பாதத்தினால் ரதத்தினை பூமியில் அழுந் தச் செய்தார். அவ்வாறு, ரதம் அழுந்திய ஊர் என்பதால் அதற்குத் தேரழுந்தூர் எனும் பெயர் உண்டானது என்கிறது தலபுராணம்.

கம்பன் பிறந்த ஊர் காவிரி தங்கும் ஊர்

கும்பமுனி சாபம் குலைந்த ஊர் - செம்பதுமத்

தாதகத்து நான்முகனும் தந்தையும் தேடிக் காணா

ஓதகத்தார் வாழும் அழுந்தூர் - என்று ஒரு தனிப்பாடல் இந்த ஊரின் பெருமையைச் சொல்லும்.

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே அமைந்துள் ளது இந்தத் தேரழுந்தூர். இங்கு ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார் சமேதராக ஸ்ரீ ஆமருவியப்பர் கோயில் கொண்டு அருள்கிறார். இந்தத் தலத்தை ஆழ்வார் பெருமக்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். 108 திவ்யதேசங்களில் 10-வது தலமான இங்கு, திருமங்கை ஆழ்வார் தாயாரையும் சிறப்பித்து 42 பாசுரங்கள் அருளியுள்ளார்.

திருமங்கையாழ்வார்
திருமங்கையாழ்வார்

`திரு' என்றால் அன்னை மகாலட்சுமி . அவள் அழுந்தி நிலைபெற்று அருளும் தலம் ஆகையால் இத் தலத்திற்கு திருவழுந்தூர் என்ற பெயரும் ஏற்பட்டது. கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவதாரத் தலமும் இதுதான்.

பசுக்களைத் துன்புறச் செய்த ஊர்த்துவ ரதனுக்கு கோஹத்தி தோஷம் பற்றியது. விமோசனம் பெற வேண்டி மன்னன், தாயாரையும் கோசஹர் பெருமாளையும் வேண்டி 1,000 குடங்கள் வெண்ணெய் சமர்ப்பித்து வழிபட்டு நிவர்த்தி பெற்றான். ராஜாவுக்கே ராஜாவாகத் திகழ்ந்த தால் தேவாதிராஜன் என்றும் இந்தப் பெருமாள் அழைக்கப்படுகிறார்.

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்! - தேரழுந்தூர்
ஸ்ரீஆமருவியப்பர் ஆலயம்

இந்த ஐதிகத்தின் நினைவூட்டலாக தை அமாவாசை மற்றும் புரட்டாசி கடைசிச் சனி தினங்களில் வெண் ணெய் சமர்ப்பிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலத்து சுவாமியை தரிசிக்க வந்த திருமங்கையாழ்வார், கோயில் அருகிலிருந்தவரிடம் ‘சுவாமியின் திருப்பெயர் என்ன?’ என்று கேட்டார். அவர் ‘தேவாதிராஜன்’ என்றார். `தேவாதிராஜன் என்றால் தேவர்களுக்கெல்லாம் தலைவன் - இந்திரன். எனவே, இது இந்திரனின் கோயில்' என எண்ணி பாதியிலே திரும்ப முயன்றார் ஆழ்வார். ஆனால் அவரால் நகரமுடியவில்லை. காலில் விலங்கு போடப்பட்டதுபோல் நகர முடியாமல் நின்றுவிட்டார்.

ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார்
ஸ்ரீசெங்கமலவல்லித் தாயார்

பின்னர், இது பெருமாளின் செயல்தான் என்று உணர்ந்து, ‘தாம் பிறந்ததுமே தன் தாய் - தந்தையின் காலிலிருந்த விலங்கை அகற்றிய பெருமாளைப் பாடாமல் போனது தவறுதான்’ என்று கருதி, திருமங்கையாழ்வார் பாடினார். அவரது முதல் பாட்டில்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தந்தை காலில் பெருவிலங்கு

தாளவிழ நள்ளிருட்கண்

வந்த எந்தை பெருமானார்

மருவி நின்ற ஊர்போலும்

முந்தி வானம் மழைபொழிய

மூவாவுருவில் மறையாளர்

அந்திமூன்றும் அனலோம்பும்

அணியார்வீதி அழுந்தூரே...'

என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வுக்குச் சான்றாகக் கோயிலுக்கு எதிரில் - ஆழ்வார் காலில் விலங்கிட்ட இடத்தில் ஆழ்வார் சந்நிதி உள்ளது. இன்றும் மூலவருக்கு பூஜைகள் முடிந்தவுடன் ஆழ்வாருக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன.

கம்பர்
கம்பர்

13 அடி உயரத்தில் வியக்க வைக்கும் பேரழகுடன், முழுவதும் சாளக்கிராமத்தினாலான திருமேனியராய் விளங்குகின்றார் இந்த கோசஹர் பெருமாள். கருவறையிலேயே பெரிய பசு மற்றும் கன்றுடன் கூடிய உலோகத் திருமேனியினராகவும் காட்சி அளிக்கிறார். உடன் பிரகலாதன், காவிரி அன்னை, மார்க்கண்டேயர் மற்றும் கருடாழ்வார் காட்சி தருகின்றனர்.

மற்ற தலங்களில் பெருமாளுக்கு எதிரே நின்று அருளும் கருடாழ்வார், இத்தலத்தில் அவர் அருகிலேயே விளங்குவது விசேஷம். இந்திரன் அளித்த கருட விமானம் இங்கே சிறப்பு. மார்க்கண்டேயர் ஆயுள் பலத்திற்காக வேண்டிய வைணவத் தலம் இது.

செங்கமலவல்லித் தாயாருக்கும் தனியே வருடாந்திர உற்சவங்கள் நடப்பது, இந்தத் தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. நவராத்திரி காலங்களில் விசேஷ ஆராதனைகள் இங்கு செய்யப்படுகின்றன.

இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்! - தேரழுந்தூர்
ஸ்ரீஆமருவியப்பர் ஆலயம்

உயர்பதவிகள் வேண்டுவோரும், லட்சுமி கடாட்சம் வேண்டுவோரும் இந்தத் தலத்தில் பிரார்த்தனை செய்து பலன் பெறுகிறார்கள். உயரதிகாரிகளின் துன்புறுத்தலால் பாதிப்படைந்தவர்கள், இத்தலத்தில் வேண்டிப் பலன் பெறுவது கண்கூடு. இத்தலத்துத் தாயாரை வேண்டிக் கொண்டால், திருமணத்தடைகள் அகலும், இழந்த செல்வம் மீண்டும் கிடைத்திடு்ம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நீங்களும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வாருங்கள். செந்தாமரையில் உறைந்தருளும் அன்னையுடன் அருளும் தேவாதிராஜரை வணங்கி, வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது?: நாகை மாவட்டம் மயிலாடுதுறை - கும்பகோணம் நெடுஞ் சாலையில் குத்தாலத்திலிருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில் தேரழுந்தூர் உள்ளது.

பசுவின் உருவில் பார்வதியாள் உலாவிய தலங்கள்!

சு உருவில் பார்வதியாள் வலம் வந்த அனைத்து ஊர்களும் இந்தப் பகுதியில் அருகருகே அமைந் துள்ளன. அவையாவும் பசுவுடன் தொடர்புடைய பெயருடன் திகழ்வது வியப்புக்குரியது.

தொழுதாலங்குடி (மாட்டுத் தொழுவம்), மேக்கிரி மங்கலம் (மாடுகள் மேய்ந்த இடம்), கூடலூர் (மாடுகள் கூடிய இடம்), கோமல் (மாடுகள் வசித்த இடம்), மாந்தை (மாடுகள் கூடி ஓய்வெடுத்த இடம்), மறையூர் (மாடுகள் மறைந்து நின்ற இடம்), இளங்காரங்குடி (மாடுகள் இளைப்பாறிய இடம்), கோவங்குடி (மாடுகள் குடியிருந்த இடம் ), திருக் கொளம்பியம் - (பசுவின் குளம்பு ஈசன்மீது பட்ட இடம்), திருவாவடுதுறை (பசுவாக இருந்த பார்வதி சாபம் நீங்கிய இடம்).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு