Published:Updated:

பாவங்களை வேட்டையாடும் பெருமாள்!

பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
பெருமாள்

வாழ்க்கை இனிக்க வரம் தரும் தேன்கனிகோட்டை

பாவங்களை வேட்டையாடும் பெருமாள்!

வாழ்க்கை இனிக்க வரம் தரும் தேன்கனிகோட்டை

Published:Updated:
பெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
பெருமாள்

தேன்கனிக்கோட்டை - வேட்டையாடும் கோலத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் திருத்தலம். அதுமட்டுமல்ல, திருப்பதி திருமலை, திருவரங்கம், காஞ்சிபுரம், மேல்கோட்டை ஆகிய நான்கு திவ்யதேசங்களுடன் தொடர்புடைய திருத்தலம் இது.

முதலில் நாம் இந்தத் தலத்தில் வேட்டைக் கோலத்தில் பெருமாள் எழுந்தருளியதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வோம்.

குபேரனின் உறவினனான மாகர்ணவன் என்ற யக்‌ஷன், கோகர்ணம் எனும் தலத்தில் தவமியற்றி வந்தான். தன்னைக் குறித்து தவம் இருக்கும் அந்த யக்‌ஷனுக்கு அருள்பாலிக்க நினைத்தார் பிரம்மன். அவன்முன் காட்சி கொடுத்து, `வேண்டும் வரத்தைக் கேள்' என்றார். மாகர்ணவன், ‘மனிதர், யக்‌ஷர், கந்தர்வர், கின்னரர் என்று எவராலும் தனக்குத் தோல்வியே வரக் கூடாது’ என்று வரம் கேட்டுப் பெற்றான்.

யக்‌ஷனாக இருந்தும் தான் கேட்டுப் பெற்ற வரத்தின் தன்மையை உணராமல், கர்வத்துடன் திரிந்த மாகர்ணவன், தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் தொல்லைகள் கொடுத்து வந்தான். அதனால் அவனுக்கு, `தேவர்களுக்குத் துன்பம் தருபவன்' என்ற பொருளில் `தேவகண்டகன்' என்ற பெயரும் ஏற்பட்டது. நாமும், இனி தேவகண்டகன் என்றே பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருநாள் தேவகண்டகன் புலியின் வடிவம் கொண்டு, அத்திரி முனிவரின் பர்ணசாலைக்குச் சென்றான். அவரது தவத்துக்குப் பெருமளவில் இடையூறுகள் விளைவித்தான். அதனால் கடும் கோபம்கொண்ட முனிவர், அவன் நிரந்தரமாக புலியாகவே இருக்கும்படி சபித்துவிட்டார்.

தேவகண்டகன் தவற்றை உணர்ந்தான்; சாபத்தை எண்ணி அஞ்சினான். அத்திரி முனிவரிடமே விமோசனம் வேண்டினான்.

அவனுடைய மன மாற்றத்தை உணர்ந்த அத்திரி முனிவர், ‘`தேவகண்டகனே... சில காலம் புலியாகத் திரிந்துகொண்டிருப்பாய். பின்னர் திருவேங்கடப்பெருமாளின் `டேங்கிணி' எனும் கதாயுதத்தால் தாக்கப்பெற்று, நற்கதி அடைவாய்’’ என்று அருளினார்.

பாவங்களை வேட்டையாடும் பெருமாள்!

யுகங்கள் கடந்தன...

மாலினி என்ற நதியின் கரையில் தங்கி தவம் இயற்றி வந்தார் கண்வ மகரிஷி. கால ஓட்டத்தில் அந்தப் பகுதியில் வறட்சி ஏற்பட்டது. கண்வ மகரிஷியின் தவத்துக்கும் பல தடைகள் ஏற்பட்டன. என்ன செய்வதென்று புரியாமல் தவித்த கண்வ மகரிஷியின் முன்பு தோன்றிய சனத்குமாரர், ‘`கண்வரே, காவிரியின் வட கரையில் நாராயணகிரி அமைந்திருக்கிறது. அதற்குச் சற்றுத் தொலைவிலுள்ள வனப் பகுதிக்குச் சென்று தவமும் யாகமும் செய்யுங்கள்’’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே இடத்தில்தான் முன்னர் அத்திரி முனிவர் தனது தவத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு செல்லும்படி நேரிட்டது.

சனத்குமாரர் சொல்லியபடியே, காவிரியின் வடபகுதியிலுள்ள அந்த வனப் பகுதிக்கு வந்து, யாகசாலை அமைத்து கடும் தவம் மேற்கொண்டார், கண்வ ரிஷி. அங்கே புலியாகத் திரிந்த தேவகண்டகன், கண்வரின் தவத்துக்கும் இடையூறுகள் விளைவித்தான். அதனால் பெரிதும் வருந்திய கண்வ மகரிஷியின் காதுகளில், `திருவேங்கடத்துப் பெருமாளைச் சரணடைந்தால் கவலைகள் தீரும்’ என்பதாக ஓர் அசரீரி ஒலித்தது.

அதன்படியே கண்வரும் திருமலையில் அருளும் வேங்கடப் பெருமாளைப் பாடி துதித்தார். அவருக்கு அருள்புரியவும், தேவகண்டகனுக்கு சாபத்திலிருந்து விமோசனம் தரவும் திருவுள்ளம் கொண்ட திருவேங்கடவன், வேடவனாக கோலம் பூண்டு, தேவர்கள் பின்தொடர, கண்வர் தவமியற்றிக்கொண்டிருந்த வனப் பகுதிக்கு வந்தார். பகவானின் திருமேனியை வேடர் களுக்கே உரித்தான பற்பல விசித்திரமான ஆபரணங்கள் அலங்கரித்தன.

பாவங்களை வேட்டையாடும் பெருமாள்!

குறிப்பிட்ட வனப்பகுதியை அடைந்ததும் தம்முடைய திருக்கரத்தில் இருந்த `சார்ங்கம்' என்ற வில்லின் நாணைப் பிடித்து இழுத்துப் பேரொலி எழுப்பினார். அந்த ஒலி எதிரொலித்ததால் அருகிலிருந்த மலை, ‘தனுர்கிரி’ என்று பெயர்பெற்றது. அந்தப் பேரொலியைக் கேட்டு அந்த இடத்துக்கு வந்த தேவகண்டகன், வேடுவன் கோலத்தில் இருந்த பெருமாளுடன் போர் புரியத் தொடங்கினான்.

எந்த ஒரு போருக்கும் முன்பு களப்பலி கொடுப்பது மரபு என்பதால், பெருமாளின் கணைகள் முதலில் சில துஷ்ட மிருகங்களை வதம் செய்தன. பின்னர் தேவகண்டக னுடன் உக்கிரமாகப் போரிடத் தொடங்கினார். சற்று நேரம் பெருமாளுடன் போர் செய்த தேவகண்டகன், மாயா சக்தியைப் பயன்படுத்தி பெருமாளின் மீது பாய்ந்தான். அவன் தன்னை நெருங்கியதும் தம்மிடமிருந்த டேங்கிணி என்ற கதாயுதத்தால் அவன் தலையில் அடித்தார். தலையில் குருதி பெருகிய நிலையில் அவனுக்கு சாப விமோசனம் கிடைத்தது.

அவன் பெருமாளிடம், ‘`ஐயனே, தாங்கள் இந்தத் தலத்திலேயே கோயில் கொண்டு அருள வேண்டும். இங்கு வந்து உங்களை வழிபடுவோரின் பாவங்கள் அனைத்தும் பொசுங்க வேண்டும்'' என்று வரம் கேட்டான். அப்படியே வரம் தந்த பெருமாள், அவன் சாபவிமோசனம் பெற காரணமாக இருந்த டேங்கிணி எனும் கதாயுதத்தின் பெயராலேயே, அந்த ஊர் `டேங்கிணிபுரம்' என்று அழைக்கப்படும் என்றும் கூறி அருள்புரிந்தார். அப்படி `டேங்கிணிபுரம்' என்று பெயர்பெற்ற இந்தத் தலம் தற்போது தேன்கனிக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

யக்‌ஷனுக்கு சாபவிமோசனம் அருளிய வேட்டைப் பெருமாள் கண்வருக்கும் காட்சி கொடுத்தார். தம்முடைய பிரார்த்தனைக்கிரங்கி தேவகண்டகனை அடக்கி, தமக்குக் காட்சி தந்த பெருமாளை வணங்கிப் பணிந்தார் கண்வர். அத்துடன், ``என் பொருட்டு வேட்டைக்கோலம் பூண்ட தாங்கள், ‘மிருகயாநாதன்’ (வேட்டையாடிய பிரான்) என்ற திருநாமத்தை ஏற்று, இந்தத் தலத்தில் யுகங்கள்தோறும் அருள்கோலம் கொண்டிருக்க வேண்டும்’’ என்றும் வரம் வேண்டினார்.

மேலும் வேடிக்கையாக, ‘`தேவரீர் இங்கு எழுந்தருளிய நோக்கம் நிறைவேறிவிட்டது. தேவகண்டகன் விமோசனம் பெற்றுவிட்டான். இனி என்ன செய்வதாக உத்தேசம்’’ என்றும் பெருமாளிடம் கேட்டார்.

அதற்குப் பெருமாள், ``எனது வேட்டை இன்னும் முடியவில்லை. அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆம்! இந்தத் தலத்துக்கு வந்து என்னை வழிபடும் பக்தர்களின் பொன் விலங்காகிய புண்ணியம் மற்றும் இரும்பு விலங்காகிய பாவம் இரண்டையும் வேட்டையாடி, அவர்களுக்கு மோட்சம் அருள்வேன்’’ என்று அருளினார்.

ஆக, இந்தத் தலம் நம்முடைய புண்ணிய பாவங்கள் அனைத்தையும் அகற்றி, நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் மகத்துவம் பெற்ற தலமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, தேன்கனிக் கோட்டை. இவ்வூரில் அழகுற அமைந்திருக்கும் திருக்கோயிலின் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலை, ஐந்து கலசங்களுடன் காட்சி தருகிறது. ஆலயத்துக்கு வெளியிலேயே சுவாமி புஷ்கரிணி என்ற தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது.

ஆலயத்தினுள் செல்கிறோம். கருவறையில் பெருமாள் சங்கு, சக்கரம், வாள் ஆகிய ஆயுதங்களை ஏந்தி நின்ற கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூமிதேவி பிராட்டியர் காட்சி தருகின்றனர்.

‘பூவுலக மாந்தர்களின் குறைகளைத் தீர்ப்பதற் காகப் பெருமாள் அடிக்கடி பலவிதத் தோற்றங் களை எடுக்கவேண்டி இருக்கிறதே’ என்று நினைத்தோ என்னவோ, ஸ்ரீதேவி தாயாரின் திருமுகம் கூம்பிய மலர் போல் காட்சி தருகிறது. அதேநேரம், தன் மக்களின் நலன் காக்க பரந்தாமன் பல வடிவங்கள் ஏற்பது கண்டு மகிழ்ச்சியுற்றதற்கு அடையாளமாக, பூமிதேவி தாயாரின் திருவதனம் அன்றலர்ந்த தாமரையைப் போல் மலர்ச்சியுடன் காணப்படுகிறது.

பாவங்களை வேட்டையாடும் பெருமாள்!

முகப்பு வாயிலின் தென்மேற்குப் பகுதியில் சௌந்தர்யவல்லி தாயார் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். மேலும் ருக்மிணி, சத்யபாமா சமேத வேணுகோபாலர், லட்சுமணன், சீதை ஆகியோருடன் ஸ்ரீராமர், வீர ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. கண்வ மகரிஷி, மணவாள மாமுனி, எம்பெருமானார், வேதாந்த தேசிகர், பன்னிரண்டு ஆழ்வார்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

வேட்டைப்பெருமாளின் விமானத்துக்குத் தென்கிழக்கில் அமைந்திருக்கிறது சுந்தரி தீர்த்தம். சகுந்தலையின் வாழ்க்கையுடன் தொடர்புள்ள தீர்த்தம் இது.

கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகளான சகுந்தலை, சுந்தரி பொய்கையின் கரையில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு, தினமும் புற்றுமண்ணால் மகாலட்சுமி தேவியின் திருவுருவம் செய்து வழிபடுவதும், பின்னர் அந்தத் திருவுருவத்தைப் பொய்கையில் விட்டுவிடுவதும் வழக்கம்.

ஒருநாள், வழக்கப்படி மகாலட்சுமி திருவுருவத்துக்குப் பூஜைகள் செய்து, பூஜை செய்த பொருள்களை பொய்கையில் விட்டாள். அப்போது அந்தத் தடாகத்திலிருந்து அற்புத எழிலுடன் தோன்றிய தாமரை மலரில் மகாலட்சுமி தேவி காட்சி தந்து, ‘`சகுந்தலை, உன் வழிபாட்டில் மனம் மகிழ்ந்தேன். நீ விரும்பிய படியே கணவனை அடைவாய். அவன் மூலமாக நீ பெறப்போகும் மகனின் பெயரே இந்தப் புண்ணிய பூமிக்கு நிலைத்திருக்கும்’’ என்று வரம் அருளினார். அதேபோல் சகுந்தலை துஷ்யந்தனை கணவனாகவும், பரதனை மகனாகவும் பெற்றுச் சிறந்தாள். நம் தேசமும் பாரதம் என்று பெயர் பெற்றது.

நம்முடன் ஆலயம் பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்துகொண்ட ஆயிஸ்வாமி ஜகந்நாதாசார்ய ஸ்வாமிகள், ஆலயம் தொடர்பான மகாபாரத சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.

‘`ராமாயணக் காலத்துக்கு முன்பிருந்தே பிரசித்தி பெற்றிருந்த இந்தத் தலம் காலப்போக்கில் சிதிலமடைந்து, இறைவனின் சந்நிதியும், திருவுருவமும் மண்ணில் புதையுண்டுவிட்டன. நர மாமிசம் புசிக்கும் மிலேச்சர்கள் அந்தப் பகுதியில் குடியேறி இருந்தனர்.

இந்த நிலையில், தீர்த்த யாத்திரை மேற் கொண்டிருந்த அர்ஜுனன், கண்வரின் ஆசிரமம் இருந்த இந்தப் பகுதிக்கு வந்துசேர்ந்தான். முனிவர்கள் பலரும் இந்த இடத்தின் மேன்மையை அவனுக்கு எடுத்துரைத்தனர். அன்று இரவு அவன் கனவில் தோன்றிய பெருமாள், மண்ணில் தாம் புதையுண்டிருக்கும் இடத்தை அடையாளம் காட்டி, தம்மை வெளியில் எடுத்து ஓர் ஆலயம் அமைக்கும்படி உத்தரவிட்டார். அதன்படியே அர்ஜுனன் அந்தப் பகுதியில் இருந்த மிலேச்சர்களை அழித்து, வேட்டைப் பெருமாளுக்கு சிறப்பான முறையில் ஆலயம் அமைத்தான். மேலும், ஆலயத்தில் நித்ய பூஜை களும் விழாக்களும் நடைபெறுவதற்கான ஏற்பாடு களைச் செய்துகொடுத்துவிட்டு, பெருமாளின் அருளுடன் தீர்த்த யாத்திரையைத் தொடர்ந்தான்.

பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினப்பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தின் அறங்காவலர் களாக, மேல்கோட்டை ஜனன்யாசார்யர் வழிவந்தவர்களே இருக்கின்றனர். அத்திரி முனிவரின் கோத்திரத்தைச் சேர்ந்த ‘கிடாம்பி’ என்ற வம்சத்தினர் தலைமுறை தலைமுறையாக `ஸ்தானீகர்கள் கைங்கர்யம்' நடத்தி வருகின்றனர்’’ என்ற ஸ்வாமிகள், இந்தத் தலத்துடனான நான்கு திவ்ய தேசங்களின் தொடர்பு பற்றியும் விளக்கினார்.

‘`பெருமாளுக்குரிய திவ்யதேசங்கள் நூற்றி யெட்டில் பிரதானமான திவ்யதேசங்கள் நான்கு. அவை திருப்பதி திருமலை, திருவரங்கம், காஞ்சி, மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரம்.

அந்த திவ்யதேசங்களின் சம்பிரதாயம் சங்கமித்த தலம் இது. இங்கு மூலவரான பெருமாள் திருமலையிலிருந்து எழுந்தருளியவர். அதன் காரணமாக வேங்கடேச பெருமாளுக்கு உரிய சில வைபவங்கள் நடைபெறுகின்றன. ஆகமம், திருவரங்கத்தில் உள்ள முறைப்படி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால்தான் பகல் பத்து, இராப் பத்து போன்ற உற்சவங்கள் பாஞ்சராத்ர ஆகமப்படி நடைபெறுகின்றன.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலிருந்து உற்சவரை எழுந்தருளியச் செய்ததால், காஞ்சியில் நடைபெறக்கூடிய கருடசேவை போன்ற விசேஷ உற்சவங்களும் இங்கே நடைபெறுகின்றன.

திருநாராயணபுரத்திலிருந்து ஆயிஸ்வாமிகள் இந்தத் தலத்துக்கு எழுந்தருளியபடியால் திருநாராயணபுரம் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப் படுகிறது. அந்த வகையில் தேன்கனிக்கோட்டை திருத்தலத்துக்கு வந்து பெருமாளைச் சேவித்தால், நான்கு திவ்யதேசங்களையும் சேவித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்’’ என்றார் சிலிர்ப்புடன்.

ஆலயத்தை விட்டு வெளியில் வருகிறோம். நம் மனத்திரையில் நற்றவ முனிவரின் பொருட்டு வேட்டைக் கோலம் ஏற்று வந்த பெருமாளின் அருட்திறமே பிரகாசித்து நின்றது.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: தேன்கனிக்கோட்டை

பெருமாள்: ஸ்ரீவேட்டையாடிய பிரான் (ஸ்ரீபேட்டராய ஸ்வாமி).

தாயார்: ஸ்ரீசௌந்தர்யவல்லி நாச்சியார்

தீர்த்தம்: சக்ர தீர்த்தம், சுந்தரி தீர்த்தம், சனத்குமார நதி.

வணங்கி வழிபட்டவர்கள்: கண்வ மகரிஷி, சகுந்தலை, அர்ஜுனன்.

விழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம், ஆழ்வார்கள் சாற்றுமுறை, பகல் பத்து, இராப் பத்து, சித்திரைத் திருவிழா.

எப்படிச் செல்வது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, தேன்கனிக்கோட்டை. ஓசூரில் தங்கும் வசதிகள் உள்ளன. அங்கிருந்து பேருந்து வசதி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism