கட்டுரைகள்
Published:Updated:

விரும்பிய வரன் அமைய குடைக் கல்யாணம் செய்துகொள்ளும் பக்தர்கள்!

பெரியபாளையம் பவானி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
பெரியபாளையம் பவானி அம்மன்

கருவறையில் பவானி அம்மன் வலது இருகரத்தில் கத்தி, சக்கரம் ஏந்தியும், இடது கையில் அமுத கலசம், சங்கு ஏந்தியும் காட்சி அளிக்கிறாள். சங்கு, சக்கரம் இருப்பதால் இவள் வைஷ்ணவி வடிவம் என்கிறார்கள்.

தொடரவிருக்கும் தலைமுறைகள் சிறப்பாக வாழ, ஒருவருக்குச் சிறந்த வாழ்க்கைத்துணை அமைவது அவசியம். திருமணம் என்பது இருவர் மட்டும் இணையும் விஷயம் இல்லை. இரு குடும்பங்களின் சமூகமே இணைந்து கொள்ளும் பாரம்பர்ய உறவு விழா. இது சரியாக அமைய இறையருளும் அவசியம் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

திருமண வரம் அளிக்கும் தலங்கள் பல இருந்தாலும் `இனி இவருக்குத் திருமணமே நடக்க வாய்ப்பில்லை' என்ற நிலையை அல்லது வயதை அடைந்தவருக்கும் மனங்குளிர நல்ல வரனை அளித்து மகிழ்விக்கும் தாய் ஒருத்தி இருக்கிறாள். யார் அவள்?

`பெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே

பெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா

ஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை

ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா...'

என்று பக்தர்கள் எல்லாம் போற்றும் பெரியபாளையம் பவானி அம்மனே திருமண வரம் அருளும் அன்னையாகவும் திகழ்கிறாள். கண்ணனுக்கு முன் பிறந்தவள் ஸ்ரீதுர்கை. இவளே பெரியபாளையத்தில் பவானியாக அமர்ந்தாள் என்கிறது திருத்தல வரலாறு. மேலும், உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்றுருவில் அமர்ந்தாள் பவானி. அவளுக்குத் துணையாக வந்தமர்ந்தாள் அன்னை ரேணுகாதேவி. அபயம் கேட்டு ஓடி வந்த ரேணுகா தேவிக்கு அடைக்கலம் தந்த தியாக தேவி, பவானி என்கிறது புராணம்.

பெரியபாளையம் பவானி அம்மன்
பெரியபாளையம் பவானி அம்மன்

ஆதியில் மீனவகுலத்தவருக்குத் தாயாக இருந்தவள் அன்னை பவானி. மீன் பிடிக்கச் செல்லும் மக்களுக்குப் பாதுகாப்பாக நின்றவள் பவானி என்கிறது மற்றொரு புராணம். நீண்ட காலம் புற்று வடிவில் இருந்த பவானி, வளையல் வியாபாரி ஒருவர் வழியே தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள். வியாபாரியின் கனவில் வந்த பவானியின் ஆணைப்படி அந்தப் புற்றை இடிக்க, அங்கு ரத்தம் கிளம்பியது. புற்றுக்குள் சுயம்பு வடிவில் அன்னை வெளியானாள். அதனால் இன்றும் பவானியின் வெள்ளிக் கவசத்தை நீக்கிப் பார்த்தால், கடப்பாரை பட்ட வடுவைக் காணலாம்.

கருவறையில் பவானி அம்மன் வலது இருகரத்தில் கத்தி, சக்கரம் ஏந்தியும், இடது கையில் அமுத கலசம், சங்கு ஏந்தியும் காட்சி அளிக்கிறாள். சங்கு, சக்கரம் இருப்பதால் இவள் வைஷ்ணவி வடிவம் என்கிறார்கள். பவானியின் மடியருகே தலைமட்டுமே கொண்ட ரேணுகாதேவியும் எழுந்தருளி இருக்கிறாள். பவானியின் அருகில் ஸ்ரீகிருஷ்ணர், நாகர் திருவுருவங்கள் உள்ளன.

இங்கு கணபதி, மகாமாதங்கி, முருகர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், பரசுராமர், நாகர், புற்றுக்கோயில் தேவி, சந்நிதிகளும் உள்ளன. மாங்கல்யம் நிலைத்திருக்க, மழை பொழிய, காலரா, வைசூரி போன்ற கொடிய நோய்கள் தாக்காமல் இருக்க இன்றும் இவளே காவல் செய்கிறாள் என்று பெண்கள் கூட்டம் நம்பிவருகிறது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்

`முப்பது வயது தாண்டிவிட்டது, இனியும் திருமணம் நடக்க வாய்ப்பில்லை...' என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த பவானித் தாயே துணை நின்று திருமணம் செய்து வைக்கிறாள் என்பது இங்கு பிரபலமான நம்பிக்கை. திருமண வரம் வேண்டுவோர் இங்கு வந்து அம்மனிடம் வேண்டிக்கொள்வார்கள். திருமணமாகி வேண்டுதல் நிறைவேறியதும் சந்தனக் குங்குமம் பூசிக்கொண்டு, தலையில் கரகத்தைச் சுமந்தபடி, உடுக்கை, பாம்பை, சிலம்பம் முழங்க, கரகம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது ‘குடைக் கல்யாணம்’ எனப்படுகிறது.

அதுமட்டுமல்ல, இங்கு விதவிதமான வேண்டுதல்கள்-பரிகாரங்களும் செய்யப்படுகின்றன. வேப்பஞ்சேலை உடுத்தல், தீச்சட்டி ஏந்தல், கோழி சுற்றி விடுதல், வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வழிபடுதல், முடி காணிக்கை, காது குத்துதல், திருமாங்கல்ய காணிக்கை அளித்தல், கண் மலர் சாத்துதல், உப்பு மிளகு கொட்டுதல், தேங்காய் உருட்டல், அங்கப் பிரதட்சணம், மாவிளக்கு-அகல் விளக்கு ஏற்றுதல், துலாபாரம் கொடுத்தல், வேப்பிலையால் மந்திரித்தல், சேலை சாத்துதல், பொங்கல் வைத்தல் என ஆலயம் எங்கும் நேர்த்திக்கடன்கள் நடந்தபடியே உள்ளன.

ஆடி மாதத்துக்கு முன்பும் பின்பும் உள்ள 14 வாரங்களும், சித்திரா பௌர்ணமி நாளும் இங்கு விசேஷம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் 12.30 மணி வரையும்; பிற்பகல் 3 முதல் இரவு 9 மணி வரையும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 முதல் தொடர்ந்து இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

அன்றாடம் காலை 8 மணி, 11 மணி, மாலை 5 மணி என மூன்று வேளைகளும் பவானி அம்மனுக்குத் தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. குங்குமமும் மஞ்சளும் கலந்த இந்தத் தீர்த்தம் நோய்களைத் தீர்க்கும் மகாபிரசாதமாக உள்ளது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்

எப்போதும் கூட்டம் நிறைந்திருக்கும் இந்த ஆலயத்தில் அருமையான அன்னதானமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அம்மனுக்குச் சேலை சாத்தி இங்கு வேண்டிக்கொண்டால் தீராத துன்பங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

`பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்

வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாராளம்மா

பதினாயிரங் கண்ணுடையாள் பவானி வாராளம்மா...'

நம்பிக்கையோடு ஒருமுறை பவானி அமர்ந்திருக்கும் மண்ணை மிதித்துவிட்டு வாருங்கள். உங்கள் துன்பங்கள், குறைகள் எல்லாம் நீங்கிவிடும் என்பது வெள்ளிடை மலை. வேண்டியவரின் வீடு தேடி வந்து அருள்வதில் பவானிக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்கிறார்கள் இவள் பக்தர்கள்.

அமைவிடம் - சென்னையிலிருந்து செங்குன்றம் வழியாகச் சென்று தச்சூருக்கு முன்பாக இடப்புறம் திரும்பி, கன்னிகைபேர் வழியே பெரியபாளையம் செல்லலாம். சென்னையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை கோயம்பேடு மற்றும் செங்குன்றம் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.