அரசியல்
கட்டுரைகள்
Published:Updated:

சொந்த வீடு கனவை நிஜமாக்கும் ஸ்ரீபூமீஸ்வரர்!

ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை

வெகுகாலத்துக்கு முன்பு இந்த ஊருக்கு விருந்துக்கு வந்த ஒரு மாப்பிள்ளை, இந்த ஊரிலும் அருகேயும் எந்த சிவாலயமும் இல்லாத சூழலில், சிவதரிசனம் செய்யாமல் உணவு உண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்

எத்தனை ஆசைப்பட்டாலும், மிகத்துல்லியமாகத் திட்டமிட்டாலும் சிலருக்கு சொந்த வீட்டுக் கனவு, இன்னமும் கனவாகவே இருந்துவரலாம். `காலம் முழுக்க வாடகை வீட்டிலேயே இருந்து காலம் தள்ளவேண்டுமா!' என்ற ஏக்கம் இருக்கலாம். அடிக்கடி வீடு மாறுவதும், அதற்காக வீடு தேடுவதும், ஏகப்பட்ட நிபந்தனைகளுக்கு ஒத்துப்போவதும் என, சொல்ல முடியாத வேதனையைக் கொடுப்பவை அந்த அனுபவங்கள்.

* இனி கவலை வேண்டாம். உங்களின் சொந்த வீட்டுக் கனவை, சொந்தமாக நிலம் வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றித் தரவென்றே `பூமீஸ்வரன்' என்ற திருநாமத்துடன், சென்னையிலிருந்து நீளும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுச்சேரிக்கு முன்னதாக உள்ள மரக்காணம் நகரில் அமர்ந்திருக்கிறார் நம் ஈசன். அவரை வணங்கி பலன்களை அடைவோம்... வாருங்கள்!

ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை கோயில்
ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை கோயில்

* ஒருவரின் ஜாதகத்தில் சுகஸ்தானம் எனப்படும் நான்காம் இடத்தில், செவ்வாய், சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவருக்குச் சொந்த வீடு அமையும் என்கிறது ஜோதிடம். அந்த வகையில் சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து உங்களுக்கான நிலத்தை, வீட்டைப் பெற்றுத் தருவதில் மிகச்சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது மரக்காணம் பூமீஸ்வரர் ஆலயம். இந்தக் கோயில். பழைமை மாறாமல், அதேசமயம் சாநித்யம் குறையாமல் அமைந்துள்ளது.

* கிரேக்க நாட்டுப் பயண நூல் ஒன்று மரக்காணத்தை `சோபட்மா' துறைமுகம் எனக் கூறுகின்றது. சோழர் காலத்தில் இருந்தே புகழ்பெற்று விளங்கிய இந்தப் பகுதியை `எயினர் பட்டணம்' என்கிறது வரலாறு. எயில் என்றால் நீண்ட மதில் என்றும் பொருள். நீண்ட மதில் கொண்ட நகரமாக இது இருந்துள்ளது. கடற்கரையோரம் மணல் குவியல் நிறைந்த பகுதி என்பதால், `மணற்கானம்' என்றழைக்கப்பட்டது மருவி, மரக்காணம் என்றானதாகக் கூறப்படுகிறது.

* வெகுகாலத்துக்கு முன்பு இந்த ஊருக்கு விருந்துக்கு வந்த ஒரு மாப்பிள்ளை, இந்த ஊரிலும் அருகேயும் எந்த சிவாலயமும் இல்லாத சூழலில், சிவதரிசனம் செய்யாமல் உணவு உண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். அதனால் வருந்திய அவருடைய மாமியார், மருமகன் குறை நீங்க, ஈசனை வணங்கி, நெல் அளக்கும் மரக்காலை எடுத்து வந்து வீட்டின் கொல்லைப்புறத்தில் தலைகீழாகக் கவிழ்த்துவைத்து சிவலிங்கம் போலவே மாற்றினாராம். அதற்கு ஆடை சாற்றி, விபூதி் பூசி, பூச்சாற்றி வணங்கினாராம். இது கண்டு மாப்பிள்ளையும் சிவபூஜை செய்துவிட்டு, சாப்பிட்டாராம்.

ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை கோயில்
ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை கோயில்

* பிறகு, அந்த மாமியார் மரக்காலை எடுக்க முயன்றார். ஆனால், அது சிறிதும் நகரவில்லை. கடப்பாரை கொண்டு முயற்சி செய்ய, மரக்கால்மீது பட்டு ரத்தம் கொப்பளித்தது. இதை ஈசனின் செயலாகவே கருதி நெகிழ்ந்துபோன ஊரார் மரக்காலை ஈசனாகவே கருதி வழிபடத் தொடங்கினார்களாம். இப்படித்தான் இந்த ஈசன் இங்கு எழுந்தருளினார் என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறப்படுகிறது.

*இங்கு தலயாத்திரை வந்த ரிஷி ஒருவர், தாம் வழிபட ஆலயம் ஏதும் இல்லாததால் அன்றாட பூஜையை முடிக்க, தம்மிடம் இருந்த பூஜைப் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்து பூஜித்ததாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. புராணப்படி இங்கு வந்து பிரம்மன், வால்மீகி, பூமா தேவி, நந்தி வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பிரம்மதேவர் உருவாக்கிய பிரம்ம தீா்த்தம், தலதீர்த்தமாக உள்ளது.

* வரலாற்றின்படி இவ்வூர் 3,000 ஆண்டுகளைக் கடந்தது என்றும் சங்ககாலத் தமிழர்கள் திரைகடல் ஓடி வாணிபம் செய்தபோது இப்பகுதி புகழ்பெற்று விளங்கியது என்றும் கூறப்படுகிறது. முற்கால-பிற்கால சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்கள் மற்றும் அடையாளங்கள் பலவும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை
ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை

* மரக்காலில் இருந்து உருவான ஈசன் வெளியானதால் இந்த ஊர் மரக்காணம் என்று பெயர் கொண்டது என்பர். பூமியில் இருந்து எழுந்தருளியதால் ஈசன் பூமீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் என்றும் கூறுவர். அம்பிகையின் பெயர், கிரிஜாம்பாள்.

* ஆலயம் எங்கும் அழகிய சிற்பங்களும் மண்டபங்களும் நிறைந்துள்ளன. வாஸ்து புருஷன், நடன மங்கையர், அறுபத்து நான்கு கலைகளை விளக்கும் சிற்பங்கள், சிறுத்தொண்டரின் சரிதம் கூறும் சிற்பம் போன்றவை இங்கு சிறப்பு. ஆலய கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்கை, பிரம்மா, பிட்சாடனர் எழுந்தருளுகின்றனர். துவாரபாலகியருடன் துர்கை சந்நிதி அமைந்திருப்பதும், கோஷ்டத்தில் விநாயகர் இல்லாமல் பிட்சாடனர் அருள்வதும் சிறப்பம்சம் எனலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இங்குள்ள துர்கைக்கு விளக்கேற்றி வழிபட, ஜாதகத் தடைகள் நீங்கும் என்கின்றனர்.

* விநாயகர், முருகப்பெருமான் தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர் சந்நிதியும் தனிச்சிறப்பானது. அம்பிகை சந்நிதிக்கு எதிரில் பைரவர் அருள்கிறார். தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், தீவினைகள் நீங்கும் என்கிறார்கள்.

* இங்குள்ள ஸ்ரீகிரிஜாம்பிகை கருணை வழியும் திருமுக மண்டலத்தோடு, அபய-வரத ஹஸ்தத் திருக்கோலத்தில் கம்பீர வடிவில் திகழ்கிறாள். தன்னுடைய பிள்ளைகளின் துன்பங்களை வாஞ்சையோடு துடைத்தெறியும் சக்தியாக விளங்கும், அன்னையின் கடைக்கண் பாா்வை நம் நெஞ்சை விட்டு அகலாத ஈர்ப்புகொண்டது என்பர்.

ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை கோயில்
ஸ்ரீபூமீஸ்வரர் -ஸ்ரீகிரிஜாம்பிகை கோயில்

* இங்குள்ள ஈசன் காலம் அறியமுடியாத பெருமை கொண்டவர் என்பர். முழுதும் அழிந்துபோன இந்தக் கோயிலை ராஜராஜசோழன் காலத்தில் திருப்பணி செய்து மீட்டெடுத்ததாகவும் கூறப்படுகிறது. நிலந்தரு மகாதேவர், ஸ்ரீபூமீஸ்வரா், ஸ்ரீபூமீஸ்வர தேவா், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வாா், திருபூமீசுவரமுடையாா், பிருத்வீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனாா், பூமீஸ்வரமுடைய தம்பிரான், திருபூமியப்ப தம்பிரானாா் என பல திருநாமங்களில் இவரைப் போற்றுகின்றன நூல்கள். தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் முற்பட்ட இந்த ஆலயம் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இருந்துவருகின்றது.

* மரக்காணம் பூமீஸ்வரா் கருவறையில் கிழக்குத் திருமுக மண்டலத்தில் அருள்பாலிக்கின்றாா். ஈசனின் கிழக்கு நோக்கிய `தத்புருஷ' வடிவத்தை வணங்குபவா்கள், என்றும் குறைவில்லாத செல்வங்களைப் பெற்று ஏற்றம் பெறுவாா்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

* சொந்த வீடு, நிலம், தோட்டம் போன்ற மண் சார்ந்த சொத்துகள் வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள், அந்தச் சொத்தில் பிரச்னை இருக்கும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட பலன் கிட்டும் என்கிறார்கள். தங்களின் நிலம் அல்லது தோட்டத்தில் இருந்து மண் எடுத்துவந்து, பூமீஸ்வரர் முன்வைத்து பூஜித்து எடுத்துச் செல்கின்றனர். இதனால் அந்த நிலத்தில் வீடு கட்டுவது, பயிர் செய்வது போன்றவை விரைவில் நடைபெறும்.மேலும் மனை தொடர்பான பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் நிலம் தொடர்பான வேண்டுதல்கள் பலித்ததும், இங்குள்ள ஈசனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.

* ஆலய வழி: சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி செல்லும் சாலையில் 123 கி.மீ. தூரத்தில் உள்ளது மரக்காணம்.

* கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 8:30 மணி வரை.