தொடர்கள்
திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சிட்டுக் குருவிக்கும் அருள் வழங்கிய வடகுரங்காடுதுறை ஶ்ரீதயாநிதீஸ்வரர்

ஶ்ரீதயாநிதீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீதயாநிதீஸ்வரர்

இறைவனின் திருநாமம் - ஶ்ரீதயாநிதீஸ்வரர் என்பதால் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் தயாள குணத்துடன் நல்லவை அருளிச் செய்து வருகிறார்.

கர்ப்பிணிகள் என்றால் கல்நெஞ்சமும் கரையும் எனச் சொல்வதுண்டு. கல்நெஞ்சமே கரையுமெனில் கடவுளர் நெஞ்சம் என்ன செய்யும்? திருக்கருகாவூர் ஆலயத்தினுள் அம்மை கர்ப்பரக்ஷாம்பிகை உடன் அமர்ந்து, கரு காக்கும் நாயகனாக அருள்கிறார். திருச்சிராப்பள்ளியிலோ, ஓரு கர்ப்பிணியை ரக்ஷிக்க அவளின் தாயாக மாறி பிரசவத்துக்கு உதவிபுரிந்து தாயுமானவனாகப் பெயர்பெற்றார்! அதேபோல்...

ஓர் கர்ப்பிணிக்கு இறைவன் அருளிய பிறிதொரு தலமொன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - திருவையாறு வழித்தடத்தில், கபிஸ்தலம் அருகே வடகுரங்காடுதுறையில் அமைந்துள்ளது.

ஶ்ரீதயாநிதீஸ்வரர்
ஶ்ரீதயாநிதீஸ்வரர்

இத்திருத்தலத்து இறைவன் பெயர் ஶ்ரீதயாநிதீஸ்வர ஸ்வாமி. இறைவி பெயர் ஶ்ரீஜடாமகுடநாயகி. தேவாரப் பாடல் பெற்ற 49-வது காவிரி வடகரை தலம். இறைவனின் திருநாமம் - ஶ்ரீதயாநிதீஸ்வரர் என்பதால் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் தயாள குணத்துடன் நல்லவை அருளிச் செய்து வருகிறார்.

இத்தலத்தைக் கடந்து சென்ற ஓர் கர்ப்ப வதியான செட்டிப்பெண் வெயிலின் உக்கிரத்தால் நா வறண்டு, களைப்படைந்து மயக்கமுற, இறைவனே தென்னை மரத்தைக் குலையோடு வளைத்து, ஒரு பணியாள் போலத் தோன்றி, இளநீர் தந்து அந்தப் பெண்ணின் தாகம் தீர்த்திருக்கிறார். அந்தப் பெண்ணின் சிலை ஒன்றும் கோயிலின் கிழக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ளது.இத்தலத்தின் ஸ்தலவிருட்சம் தென்னை என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீதயாநிதீஸ்வரர்
ஶ்ரீதயாநிதீஸ்வரர்

மரம் நட்ட சில ஆண்டுகளுக்கு மட்டுமே நீர் பாய்ச்சுகிறோம். அதற்கு நன்றிக்கடனாக தென்னை வாழ்நாள் முழுதும் தன் தலையில் பெரிய பாரத்தைச் சுமந்துகொண்டு சுவையான இளநீரைத் தருகிறது. தேங்காய் என்பது கோயில்களிலும் பூஜைகளிலும் உணவிலும் தவிர்க்க முடியாத ஒன்று. இலை முதல் நார் வரை எல்லா பகுதிகளும் பயன்படுவதால் இந்த மரத்தை கற்பக விருட்சமாகக் கருதுவோரும் உண்டு.

ஶ்ரீதயாநிதீஸ்வரர்
ஶ்ரீதயாநிதீஸ்வரர்

தமிழ்நாட்டில் திருத்தெங்கூர், வடகுரங்காடுதுறை ஆகிய கோயில்களில் மட்டுமே தென்னை தல விருட்சமாக விளங்குகிறது. ராமாயணக் கதாபாத்திரமான வாலி, இத்தலத்து இறைவனை வணங்கி, இழந்த தன் வலிமையைப் பெற்றதனால், இத்தலத்து சுவாமிக்கு ஶ்ரீவாலிநாதர் என சிறப்புப் பெயரும் உண்டு. தன்னுடைய அலகினால் நீர் கொண்டுவந்து பூஜித்த ஓரு சிட்டுக்குருவிக்குக் காட்சி தந்ததால் ஶ்ரீசிட்டு லிங்கேஸ்வரர் எனவும் திருப் பெயருண்டு.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால் முதலில் வலப்புறத்தில் நவகிரக சந்நிதி. அதனையடுத்து ஶ்ரீஜடாமகுட நாயகி எனும் அம்பாள் சந்நதி. கல்லினால் ஆன சிவகாமி சமேத நடராஜர் சிற்பம். பிராகாரம் சுற்றி வந்தால் அற்புதமான குடையுடன் கூடிய கணபதி, தக்ஷிணாமூர்த்தி சந்நிதிகள், எதிரில் பூச்செடிகளினூடே அழகான ஜேஷ்டாதேவி சிற்பம் ஒன்று. கருவறையின் பின்புறத்தில் அதியற்புதமான அர்த்தநாரீஸ்வரர்!

ஶ்ரீதயாநிதீஸ்வரர்
ஶ்ரீதயாநிதீஸ்வரர்

மேலும் அண்ணாந்து பார்த்தால் கருவறை விமானத்தில் சுதையா லான வாலி, கர்ப்பிணிப் பெண் ஆகியோரின் சிற்பங்கள்! வடக்குப் பிராகாரத்தில் அஷ்ட புஜங்களுடன் அருள்கிறாள் விஷ்ணு துர்கை. நான்முகனும் இக்கோயிலில் அருள்கிறார். வடகுரங்காடுதுறை பதிகத்தின் முதல் பாடல்...

கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை

வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்

ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை

வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா ரிடமென விரும்பினாரே.

`கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடக்கு கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர்' என்கிறது இந்தப் பாடல்.

“இத்தலத்தை ஈசனே மனம் விரும்பி ஏற்று, தயாள குணத்தோடு தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் அருள் மழையை வாரி வழங்குகிறார். குறிப்பாக கர்ப்பிணிகள் ஒருமுறையேனும் இத்தலத்தை தரிசித்து சென்றால் எவ்வித குறைபாடும் இல்லாமல் குழந்தைப்பேறு அடையலாம்.

மானிடருக்கு தென்னையைப் போல சகலமும் உதவும் தயாள குணத்தை அளிப்பார் இந்த ஈசன். அதுமட்டுமா? வாலிக்கு வலிமையைத் தந்ததுபோல தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தேக வலிமை, உடல் ஆரோக்கியம், வளமான வாழ்வு என சகலமும் அருளும் ஈசன் இவர்” என்று சிலிர்ப்புடன் கூறுகிறார் இக்கோயிலின் சிவாசார்யர்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - திருவையாறு நெடுஞ்சாலையில் கபிஸ்தலத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் ஶ்ரீதயாநிதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.