Published:Updated:

‘மண்ணெடுத்த இடத்துல கோயில் கட்டு’ - கனவில் கட்டளையிட்ட குலசாமி!

ஸ்ரீ கூப்பாருடையார் ஐயனார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீ கூப்பாருடையார் ஐயனார்

மகரந்தை கூப்பாருடைய ஐயனார் கோயில்

சிவகங்கை பக்கத்துல மகரந்தைன்னு ஒரு கிராமம். சில நூறு வருசங்களுக்கு முன்னாடி மழை தண்ணி இல்லாம ஒரே பஞ்சம். பொழைக்க வழியில்லை. மக்கள் ஊரவிட்டே போகத் துணிஞ்சிட்டாங்க.

ஊரை விட்டுப்போகலாம். உறவை விட்டுப் போகலாம். குலத்தைவிட்டும் போகலாம். ஆனால் குலதெய்வத்தை விட்டுப் போகமுடியுமா... அதோட தயவாலதான ஏதோ உசுரேனும் பிழைச்சி கிடக்கு. உழைக்கும் தெம்பும் நிறைஞ்சிருக்கு.

தொத்தன் அந்த ஊர்ல வலுவான ஆளு. உழைக்க அஞ்சமாட்டாரு. அவரிடம் ‘பர்மா போனா ஏதேனும் வேலை செஞ்சேனும் பிழைச்சிக்க லாம்’னு சொன்னாரு, ஊருக்கு வந்த சொந்தம் ஒருத்தர். தொத்தனோ ரொம்ப பக்தியான ஆளு. ஊரை விட்டுப் போனா தன் குலதெய்வமான கூப்பார் சாமியைக் கும்பிடமுடியாமப் போயிருமோன்னும் பயந்தார். ஆனா, ஊர் பெரியவக எடுத்துச் சொன்னாக.

‘மண்ணெடுத்த இடத்துல கோயில் கட்டு’ - கனவில் கட்டளையிட்ட குலசாமி!

‘மனுசனுக்குத்தான் எல்லை; தெய்வத்துக்கு அது இல்லை. சாமி சந்நிதில இருந்து மண்ணெடுத்துப் போனாக்க, அந்தச் சாமியின் அருளும் கூடவே வரும். நீ அதை வெச்சுப் பூச செஞ்சா அங்கையே வந்து சாமி காக்கும்’ அப்படின்னு எடுத்துச் சொன்னாக.

தொத்தனுக்கும் அது சரின்னு பட்டது. கூப்பார் இருக்கிற கம்மாக் கரைக்குப் போனார். அங்க இருந்த மரத்தடிலதான் சாமிக்குக் கல்லு ஊன்றி பூசை வழிபாடு எல்லாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ரீ கூப்பாருடையார் ஐயனார்
ஸ்ரீ கூப்பாருடையார் ஐயனார்

‘சாமி, நான் எங்க போனாலும் நீ என் கூடவே வந்து காக்கோணும்’னு வேண்டிக்கிட்டு, அங்கே இருந்து ஒருபிடி மண்ணை அள்ளித் துணில முடிஞ்சிக்கிட்டார் தொத்தன்.

ஒருவழியாக, பர்மா போகும் சில வியாபரிகளோட சேர்ந்து அங்க போய்ச் சேர்ந்தார். அந்தக் காலத்துல தமிழ்நாட்டுல இருந்து நிறையபேரு பொழைப்புக்காக பர்மா போயிருந்ததால், அவருக்குப் பெரிய கஷ்டம் தெரியலை. கிடைச்ச சின்ன இடத்துல தங்கினார். அங்கேயே கூப்பார் சாமி சந்நிதி மண்ணை வெச்சி வணங்கினார்.

ஸ்ரீ காளியம்மன்
ஸ்ரீ காளியம்மன்

மறுநாள்ல இருந்து வேலை பார்க்க ஆரம்பிச்சார். உடல் வலுவும் கூப்பாரோட ஆசியும் அவருக்குத் துணை செஞ்சிச்சி. கூலிக்குப் போனவர் சில நாள்ல நாலு காசு சேர்த்துத் தானே வாங்கி விக்கிற மாதிரி வியாபாரம் தொடங்கினார். மழைக்காலத்துல வைகை நதி பொறண்டு வர்ற மாதிரி வேகம் எடுத்து வியாபாரம் பெருகிச்சி. பர்மாவுலயே பணக்காரர் ஆயிட்டார் தொத்தன்.

அவருக்குக் கல்யாணம் ஆகி இரண்டு புள்ளைங்க. இரண்டாம் புள்ளைக்கு அவர் கூப்பான்னு சாமி பேரையே வச்சி நாள்தோறும் கூப்பிட்டுக்கிட்டே இருந்தார். அப்பப்ப நினைச்சாலே அள்ளித் தரும் குலதெய்வம், அடிக்கடிக் கூப்புட்டா அம்புட்டும் தந்திடாதா... தொத்தான் பெரிய செல்வந்தன் ஆகிட்டார்.

வெள்ளைக் குதிரை...
வெள்ளைக் குதிரை...

மனுசனுக்கு ஆயிரம் ஆசை. ஆனா தெய்வத்துக்கு ஒரே ஆசை... தன்னை வழிபடுற மக்களுக்கு எப்போதும் வழிகாட்டணும்னு. அப்படி கூப்பாருக்கும் ஒரு ஆசை வந்துச்சி. கல்லுலையும் மண்ணுலயும் கடவுளைப் பார்க்கிற நம்பிக்கை தொத்தன் போல எல்லோருக்கும் வந்துறாது. அதனால தனக்கு ஒரு கோயில் கட்டினால் தன் குலத்து மக்கள் எல்லாம் தேடிவந்து கும்புடும். அதுங்களுக்கு நாடிப்போய் உதவலாங்கிற ஆசைல, அந்தத் தெய்வம் ஒரு நாள் தொத்தனின் மகன் கூப்பானின் கனவுல வந்தது.

“சொந்த ஊருல மண்ணெடுத்த இடத்துல எனக்கு ஒரு கோயிலைக் கட்டு”ன்னு சொல்லிட்டு மறைஞ்சிபோச்சு. மகன் கண்விழிச்சி தொத்தன்கிட்ட அப்படியே சொல்றான். தொத்தனுக்கும் அது நிச்சயம் தெய்வத்தோட ஆணைதான்னு தெரிஞ்சிபோச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஊருக்குத் திரும்பி வந்து சேர்த்த செல்வத்துல கோயிலைக் கட்டினார். அப்போ தொத்தன் கட்டின கோயில் இன்னமும் மகரந்தை கிராமத்துக் கம்மாய் பக்கதுல நிலைச்சு நிக்குது. சொந்த பந்தமெல்லாம் கூடி வந்தது. கூப்பாரோட மகிமையைக் கண்டு வியந்தது. அதுமுதல் அந்தக் குலம் கூப்பாரைத் தேடிவந்து கும்பிட்டுச்சி. கூப்பாரும் தொத்தனுக்குக் காட்டின அதே கருணையை தன் ஜனம் எல்லாத்துக்கும் காட்டினாரு.

‘மண்ணெடுத்த இடத்துல கோயில் கட்டு’ - கனவில் கட்டளையிட்ட குலசாமி!

இப்போ கூப்பாரை ‘ஸ்ரீகூப்பாருடையார் ஐயனார்’னு சொல்றாங்க. இந்தக் கோயில்ல காளியம்மன், கருப்பண்ணன், நாகம்மை, ஐயனார் பவனி வரும் பெரிய வெள்ளைக் குதிரைன்னு கோயில் பார்க்கவே அழகா அமைஞ்சிருக்கு. கோயில் பக்கத்துலேயே ஒரு தெப்பக்குளமும் பெரிய மண்டபமும் கட்டியிருக்காங்க.

தொத்தனோட குலமக்கள் மட்டுமல்ல, இப்போ பக்கத்துல உள்ள பெரிய ஊரான வேளாரேந்தலைச் சுத்தியிருக்கிற பல கிராம மக்களுக்கும் இந்த ஐயனார்தான் குல தெய்வம். ஸ்ரீகூப்பாருடையார் ஐயனார் தன் வெள்ளைக்குதிரையில் ஏறி, சுத்துப்பட்டு இருக்கிற காடுகளில் எல்லாம் பயணிச்சுக் காவல் காப்பதால இங்க இருக்கிற மக்களுக்கு எந்தப் பயமும் இல்லை.

ஸ்ரீ கருப்பண்ணன்
ஸ்ரீ கருப்பண்ணன்

இந்தக் கோயில்ல இருக்கிற காளிக்கு 10 கை. துன்பப்படுகிறவங்க, இந்த அம்மா முன்னாடி நின்னு அழுதா, அந்த அழுகைக்குக் காரணமானவங்களை இந்தக் காளி தண்டிக்காம விடமாட்டான்னு நம்புறாக. வேண்டிக்கிட்டுத் தங்களோட துன்பம் தீர்ந்த மக்கள் ஆடு, கோழிகள் பலியிட்டு அம்மாவுக்கு வேண்டுதல் நிறைவேத்துறாங்க.

மாசி சிவராத்திரிக்கு இங்க கோலாகலமா இருக்கும். மக்கள் பால் குடம், காவடி, அக்னி சட்டி எடுத்து வந்து கோயில் முன்னாடி அக்னில இறங்குவாங்க. வேண்டிக்கிட்ட நேர்த்திக்கடனை செலுத்துவாங்க.

ஸ்ரீ நாகம்மை
ஸ்ரீ நாகம்மை

இந்தக் கோயிலுக்கு பெண்கள்தான் அதிகம் வர்றாக. செவ்வாய் வெள்ளின்னா கூட்டம் குவியும். அம்மனுக்கு அடிக்கடி விளக்கு பூசை நடத்திக் கும்புடுறாக. புரட்டாசி மாசம்னா பஜனைகளும் நடக்கும். கோயில் தெப்பத்து நீர் எடுத்து வீடு வயல்ல தெளிச்சா எந்தத் தீய சக்தியும் அண்டாது; சுபிட்சமா இருக்கும்னு நம்புறாங்க ஊர் மக்கள். வெளியூருக்குப் பிழைப்புக்காகப் போற மக்கள், இந்தத் தீர்த்த தண்ணியைக் கொஞ்சம் கையோட கொண்டு போவாங்க.

வீட்டுல ஒரு நோவுன்னாலோ கஷ்டமுன்னாலோ ஒத்த ரூபாயை கூப்பார் பேரச் சொல்லி முடிஞ்சி வெச்சி வேண்டிக்கிட்டா போதும். அது எதுவானாலும் சரியாயிரும்ங்கிறது இவங்க நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொத்தன் பர்மாவுல இருந்தப்போ, தன் குலதெய்வ மகிமையை அங்க இருக்கிறவக கிட்டையும் சொல்ல அவங்களும் வழிபட ஆரம்பிச்சாங்க. இப்பவும்கூட பர்மாவுல சில குடும்பங்கள் கூப்பனைத்தான் தங்கள் குலசாமியா கும்புடுறாக.

கூப்பாரைக் கும்பிட்டா தொழில் வளம் பெருகும். கல்யாணம் ஆகாத இளசுகளுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகும். குழந்தை இல்லாதவங்களுக்குப் பிள்ளைவரம் கிடைக்கும். கேட்டவரம் தரும் கூப்பாருடையார் ஐயனாரோட பெருமைகள் அறிஞ்சு தினம் தினம் மக்கள் தேடிவந்துகிட்டே இருக்காங்க.

தொத்தன் மகன் கூப்பான், வேளாரேந்தலில் ஜோதி விநாயகர்னு ஒரு விநாயகர் கோயிலும் கட்டிக்கொடுத்தார். அங்க ரவிவர்மா ஓவியங்களை வாங்கிகிட்டு வந்து வெச்சி அழகு செய்தாரு கூப்பான். அந்த விநாயகரையும் மகிமை வாய்ந்த விநாயகரா மக்கள் கொண்டாடுறாங்க.

சிவகங்கைச் சீமைக்கு வந்தீங்கன்னா வாய்ப்புக் கிடைக்கும்போது மகரந்தைக்கும் போய் கூப்பாருடைய ஐயனாரை வணங்கிட்டுப் போங்க. நீங்க தொட்டதெல்லம் துலங்கும்!

எப்படிச் செல்வது ? காளையார்கோவிலிலிருந்து தெற்கில் சுமார் 20 கி. மீ தொலைவில் உள்ளது வேளாரேந்தல் கிராமம். அதன் அருகே உள்ள மகரந்தை கண்மாய்கரையில் அழகுற காட்சியளிக்கிறது கூப்பாருடையார் ஐயனார் கோயில்.