Published:Updated:

ஆலயம் தேடுவோம்: `லட்சுமிகடாட்சம் உண்டாகும்!’

ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்

இறைவனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்

ஆலயம் தேடுவோம்: `லட்சுமிகடாட்சம் உண்டாகும்!’

இறைவனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்

Published:Updated:
ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்

நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று, கிழக்கே பிரமாண்டமான தோரணத்திருவாயிலை உடையதாக ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருநின்றியூரில் உள்ளது இந்த ஆலயம்; தருமை ஆதீன நிர்வாகத்துக்குட்பட்டது. திருமகள் வழிபட்ட காரணத்தினால் இத்தலம் திருநின்றியூர் என வழங்கப்படுகிறது. (திருநின்றவூர் எனும் வேறொரு தலம், சென்னைக்கு அருகிலுள்ளது. அது பூசலார் மனக்கோயில் கட்டி வாழ்ந்த தலம்).

ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்
ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள், `இத்தலத்து இறைவன் இந்திரனின் வழிபாட்டை ஏற்று அவனுக்கு வான் உலகையும், அகத்தியரின் வழிபாட்டில் மகிழ்ந்து அவருக்குப் பொதிகை மலையில் இருக்கும் பேற்றையும், கதிரவன் எழுவதற்கு முன் பால்சொரிந்து வழிபட்ட பசுவுக்குத் திருவடிப் பேற்றையும், ஐராவதத்தின் வழிப்பாட்டில் மகிழ்ந்து அதற்கு விண்ணுலக வாழ்வையும் அருளினார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.திருஞானசம்பந்தர், `இத்தலத்து இறைவனை வழிபடுவோர் அச்சம், பாவம், கேடு, நோய் முதலியன நீங்கி நலமுடன் வாழ்வர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருநாவுக்கரசு சுவாமிகள், `அஞ்சியாகிலும், அன்புபட்டாகிலும் திருநின்றியூர் இறைவனை நினைக' என்றும், `திருநின்றியூர் இறைவனைப் பற்றினாரை வினை, பாவம் பற்றா' என்றும், `வினைகள் அகலும்' என்றும் அருளியுள்ளார்.

ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்
ஸ்ரீலட்சுமி புரீஸ்வரர்

`நாளொன்றுக்கு ஒரு வேலி நிலத்தின் வருவா யில் வழிபாடுகள் செய்யவேண்டும் எனக் கருதி கோயிலுக்கு 360 வேலி நிலம் அளித்ததுடன், 300 அந்தணர்களுடன் வேதம் ஓதி வழிபட்டாராம் பரசுராமன். அவருக்கு இத்தலத்து இறைவன் அருள்பாலித்தார்’ என்றும் பெரியோர்கள் பாடியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீபங்கள் அணைந்தன திருக்கோயில் எழுந்தது!

ஞ்சையை ஆண்ட குலோத்துங்கச் சோழன் அடிக்கடி சிதம்பரம் நடராஜரை தரிசிக்க செல்வது வழக்கம். மன்னனின் இரவு பயணத்தில் தேருக்கு முன்னால் தீவட்டி ஏந்தி வீரர்கள் செல்வர். அப்படிச் செல்லும்போது ஓரிடத்தில் தீபங்கள் எல்லாம் தானாகவே அணையும். கொஞ்ச தூரம் சென்றதும் தானாகவே எரியும்.

இதையறிந்த மன்னன், ``தீவட்டிகள் எரிய தேவையான எண்ணெய் ஊற்ற மாட்டீர்களா?'' என்று கடிந்துகொண்டான்.அப்போது வீரர்கள், “எப்போது வந்தாலும் இந்த இடத்தில் மட்டும் தீபங்கள் தானாகவே அணைந்து, பின்னர் தானாகவே எரிகின்றன. இந்த அதிசயம் எப்படி நடக்கிறது என்பதே தெரியவில்லை மன்னா'' என்று கூறியிருக்கிறார்கள். மன்னன் வியந்தான். அதே சிந்தனையுடன் அவன் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் செய்துகொண்டிருந்தபோது, `அங்கும் நான்தான் குடிகொண்டுள்ளேன். என்னைக் கண்டறிந்து கோயில் கட்டு' என்றொரு குரல் ஒலித்தது.

எனவே, திரும்பி வரும்போது குறிப்பிட்ட இடத்தில் தேரை நிறுத்தி அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினான் மன்னன். அப்போது அவர்கள், “இந்தக் காட்டுக்குள் வானிலிருந்து ஒரு பசுமாடு இறங்குகிறது. இரவில் மாட்டின் சப்தம் கேட்கிறது. விடியற்காலை அது மேலே எழும்பி செல்கிறது. இதைப் பார்த்திருக்கிறோம். பயத்தின் காரணமாக காட்டுக்குள் நாங்கள் செல்வதில்லை” என்று கூறியிருக்கிறார்கள்.

உடனே மன்னன், அந்தக் காட்டை அழித்து சுத்தம் செய்ய சொன்னான். அப்போது ஓரிடத்தில் தரை ஈரமாகத் திகழ்ந்தது. அந்த இடத்தைத் தோண்டி பார்த்தபோது சுயம்பு லிங்கத்தைக் கண்டு அனைவரும் மெய் சிலிர்த்தார்கள். பின்னர், அங்கே மிகவும் பிரமாண்டமான கலைநயமிக்க கோயிலைக் கட்டினான் மன்னன். எரியும் திரி அணைந்து நின்ற ஊர் என்பதால் ‘திருநின்றியூர்’ என்றழைக்கப்படுகிறது என்கிறது தல வரலாறு.

இத்தகைய சிறப்புமிக்க, தமிழகத்தின் பெருமை யைப் பறைசாற்றும், கலைப்பொக்கிஷ மான இத்திருக்கோயில் இன்று சிதிலமுற்றுத் திகழ்கிறது. வானுயர்ந்து நிற்கும் ராஜ கோபுரத்தில் களைகள் மண்டி, சிற்பங்கள் பலவும் சிதறுண்டு கிடப்பது நெஞ்சைப் பதறவைக்கிறது. இறைவன் பவனிவரும் வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. நவகிரக மண்டபம், மடப்பள்ளி ஆகியவை பரிதாப நிலையில் உள்ளன.

கருவறை விமானத்தில் உள்ள சிற்பங்கள் சிதைந்து இக்கோயில் அழிவின் விளிம்பில் உள்ளதை வெளிப்படுத்துகின்றன. இதுகுறித்து, சேதுராம குருக்களிடம் பேசினோம்.

“இக்கோயிலில் எட்டாவது தலைமுறையாக நான் சேவை செய்து வருகிறேன். மகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் இடப்பாகத்தில் நிரந்தரமாக இருக்கும் வரத்தை இத்தலத்து அம்பிகையிடம் வேண்டிபெற்றாள். ஆடி மாதம் முழுவதும் வரலட்சுமி நோன்பு இருந்து பெறுகின்ற பலனை, இத்தலத்து ஈசனை ஒருமுறை தரிசனம் செய்தாலே பெறலாம். லட்சுமி வழிபட்டு வரம் பெற்ற தலம் என்பதால், இங்கு வந்து தரிசிக்கும் அன்பர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதிகம்.

மேலும் திருநின்றியூர் ஈசனையும் அம்பாளையும் தரிசித்து வணங்கினால் திருமணத்தடை, வேலைவாய்ப்புத்தடை, வீடு கட்டத் தடை போன்ற தடைகள் யாவும் நீங்கி,

உரிய காரியங்களில் உன்னத வெற்றி கிடைக்கும். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறும், பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சும் கிட்டும். அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகாரத் தலமாகும்.

பல ஆண்டுகளாகக் குடமுழுக்கு காணாமல் இக்கோயில் சிதலமடைந்து கிடந்தது வருத்தமான விஷயம்தான். தற்போது புதிதாக தருமபுர ஆதீனகர்த்தராக பதவியேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் இத்தலத்துக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். அதுவே எங்களுக்குப் பெரிய சந்தோஷம்” என்றார்.

இதுபோன்ற அற்புதக் கோயில்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நம்முடைய கடமையுமாகும். நாமும் இக்கோயிலின் சிறப்பை உலகறியச் செய்வதில் துணை நிற்போம்.

இறையருளால் விரைவில் நல்லது நடக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism