சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

மக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்!

ஸ்ரீமலைக் கொழுந்தீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமலைக் கொழுந்தீஸ்வரர்

ஆன்மிகம்

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்துவிடுவதுண்டு. பெயருக்குப் பின்னே ஒரு வரலாறோ, கதையோ ஒளிந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான் `மூவரை வென்றான்.’ இந்த ஊர் மட்டுமல்ல, இங்கு மலைமேல் அருளும் மலைக் கொழுந்தீஸ்வரர் ஆலயமும் தனிச் சிறப்பு வாய்ந்தது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றோம்.

பொதுவாக விருதுநகர் மாவட்டத்தை, `கந்தக பூமி’ என்று சொல்வார்கள். விருதுநகர் - திருவில்லிபுத்தூர் இடையிலான நெடுஞ்சாலையில், அழகாபுரியிலிருந்து மேற்கு நோக்கிப் பிரியும் பாதையில் சுமார் நான்கு கி.மீ தூரம் பயணம் செய்தால், மூவரை வென்றானை அடையலாம். ஊரிலிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை. நீர்வளம் நிறைந்த இந்தப் பகுதி, தென்னை மரங்கள், விவசாய நிலங்கள் எனப் பசுமையும் செழிப்புமாகக் கண்ணுக்கு விருந்தாகவும் திகழ்கிறது.

ஒரு காலத்தில் ‘வீரமல்லன்’ எனும் நாட்டாமையின் கீழ் இந்த கிராமம் இருந்தது. கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் ராணி மங்கம்மாள் மதுரையை ஆட்சிபுரிந்தபோது, தன் வீரத்தின் காரணமாக இந்த கிராமத்தை மானியமாகப் பெற்றான் வீரமல்லன். ராணி மங்கம்மாள் ஆட்சியில் இருந்தவரை இவனுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. அவள் இறந்த பிறகு சுற்றிலுமிருந்த ஜமீன்தார்களால் பிரச்னைகள் ஏற்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ‘கன்னிமாலை’ ஆற்றுநீரைப் பயன்படுத்துவதில் வீரமல்லனுக்கும் நத்தம்பட்டி ஜமீனுக்குமிடையே பிரச்னை தொடங்கியது. கன்னிமாலை ஆறுதான் இரு ஊர்களுக்கும் எல்லையாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் வடகரையில் வீரமல்லனும், தெற்கே நத்தம்பட்டி ஜமீனும் ஆட்சி புரிந்துகொண்டிருந்தார்கள்.

மூவரை வென்றான்
மூவரை வென்றான்

தனது கிராமத்தை வளப்படுத்தப் புதிதாகக் கண்மாய் ஒன்றை வெட்டினான் வீரமல்லன். இதனால், தனது ஜமீன் பகுதி பாதிக்கப்படும் என்று கருதிய நத்தம்பட்டி ஜமீன்தார் கோபமடைந்தார். அவர் ஜமீனுக்கு மூன்று கண்மாய்கள் இருந்தன. ஆனால், அவற்றைவிட வீரமல்லனின் கண்மாய் தாழ்வான பகுதியில் இருந்ததால், எளிதில் நிரம்பியது. இந்தப் பிரச்னை பெரிதாகி சண்டையை நோக்கிச் சென்றது. நத்தம்பட்டி ஜமீனுக்கு அருகேயிருந்த தேவதானம் ஜமீன் மற்றும் சாப்டூர் ஜமீன் ஆகியோரும் உதவிக்கு வந்தார்கள். மூன்று ஜமீன்களும் ஒன்றுசேர்ந்து படை திரட்டிக்கொண்டு வீரமல்லனை வீழ்த்த வந்தார்கள். ஜமீன்களுடையதோ பெரும்படை, வீரமல்லனின் படையோ மிகச் சிறியது. வீரமல்லன் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தான். பெரியவர்கள் துணையுடன் மூன்று ஜமீன்தாரர்களிடமும் பக்குவமாகப் பேசினான்.

``ஒருவரை மூவர் எதிர்த்தல் முறையன்று; தர்மம் ஆகாது. எனவே, இந்த யுத்தத்துக்கு ஒரு நிபந்தனை வைத்துக்கொள்வோம். அதாவது, மூன்று படைகளும், மூன்று நாழிகை நேரத்துக்குள் என்னை வீழ்த்த வேண்டும். அப்படியில்லையென்றால், நானே வென்றதாக அறிவிக்க வேண்டும்’’ என்று கூறினான்.

`நத்தம்பட்டி ஜமீனின் படை ஏற்கெனவே மிகப்பெரியது. கூடவே வேறு இரு ஜமீன் படைகளும் சேர்ந்திருந்தன. மூவரும் சேர்ந்து தாக்கினால், ஒரு நாழிகைகூட வீரமல்லன் படை தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம்.’ இதைக் கணக்கிட்ட நத்தம்பட்டி ஜமீன்தார் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டார். அதோடு, ‘மூன்று நாழிகைக்குள் வீரமல்லனைத் தோற்கடிப்பேன். இல்லையென்றால், என் ஆட்சியை அவனிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவறம் மேற்கொள்வேன்’ என்று சபதம் வேறு செய்தார்.

ஸ்ரீமரகத வள்ளி
ஸ்ரீமரகத வள்ளி

போருக்கான நாள் குறிக்கப்பட்டது. மூன்று ஜமீன் படைகளும் வீரமல்லன் கிராமத்தைச் சூழ்ந்தன. வீரமல்லன், தன் குலதெய்வமான மொட்டை மலை சிவபெருமானை மனத்தில் வேண்டிக்கொண்டான். போருக்குத் தயாரானான். அது மழைக்காலம். கண்மாயில் நீர் நிறைந்திருந்தது. முதலில் அதன் கரையை உடைத்தான் வீரமல்லன். இதனால் படைகளிடம் ஏற்பட்ட குழப்பத்துக்கிடையே நத்தம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான மூன்று கண்மாய்க் கரைகளையும் உடைத்தான். இதனால் வீரமல்லனின் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.

வெள்ளத்தை எதிர்பாராத ஜமீன் படைவீரர்கள் முன்னே நகர முடியாமல் திண்டாடினார்கள். குதிரைகளும் யானைகளும் வெள்ளத்தைக் கண்டு மிரண்டு ஓடின. வீரர்கள் வெள்ளத்தைக் கடக்க வழியில்லாமல் திணறினார்கள். இப்படியே மூன்று நாழிகை நேரமும் கழிந்தது. நத்தம்பட்டி ஜமீன்தான் வீரமல்லனின் சாதுர்யத்தை எண்ணி வியந்தார். சொன்ன சொல் தவறாமல் தன் ஜமீனை வீரமல்லனிடம் ஒப்படைத்துவிட்டுத் துறவறம் மேற்கொண்டார். வீரமல்லன், மூன்று ஜமீன்களை சாதுர்யமாக வென்றதால், அந்த கிராமம் ‘மூவரை வென்றான்’ எனறு பெயர் பெற்றது. தங்கள் ஊருக்காகத் துணிந்து செயல்பட்ட வீரமல்லனை கிராம மக்கள் குலதெய்வமாக வழிபட ஆரம்பித்தனர்.

ஸ்ரீமலைக் கொழுந்தீஸ்வரர்
ஸ்ரீமலைக் கொழுந்தீஸ்வரர்

ஊரின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கிறது மொட்டை மலை. சிறிய மலை. வேகமாக நடந்தால், இரண்டு மணி நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். ‘அனுமன் லட்சுமணனைக் காக்க சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு வந்தபோது சிதறி விழுந்த துண்டுகளுள் இதுவும் ஒன்று’ என்று நம்புகிறார்கள் இந்த ஊர் மக்கள். மொட்டை மலைக்கு முன்புறம் ஓடும் நதியை, ‘அர்ச்சுனா நதி’ என்று அழைக்கிறார்கள்.

இந்த நதிக்கரையில் அமைந்திருக்கும் மொட்டை மலைமீதுதான், மலைக் கொழுந்தீஸ்வரர், மரகதவள்ளி அம்மனுடன் அருள்புரிகிறார். இது கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு முன்னர் பாண்டியர்காலத்தில் எழுப்பப்பட்ட குடைவரைக் கோயில். கோயில் கருவறையும், அதற்கு முன்னேயுள்ள மண்டபத்தின் ஒரு பகுதியும் மொட்டை மலையைக் குடைந்து, குடைவரையாக உருவாக்கப்பட்டவை. மலைக் கொழுந்தீஸ்வரரின் ஆவுடையார், தாய்ப் பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது. குடைவரைக்கு முன்பாக கம்பீரமான நந்தி. கோஷ்ட சிற்பங்களாக முருகப் பெருமான், விநாயகர், சிவகாமி அம்மை சமேதராக நடராஜப் பெருமான் ஆகியோர் அருள்புரிகிறார்கள். கோயிலுக்கு வெளியே தெற்கு நோக்கி ஆலமர் செல்வரான தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். குடைவரைக் கோயிலுக்கு இடப்புறம் மரகதவள்ளித் தாயார் தனிச் சந்நிதியில் அருள்புரிகிறார். தாயார் சந்நிதிக்கு அடுத்ததாக நவகிரக சந்நிதியும், பைரவர் சந்நிதியும் அமைந்துள்ளன.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீபைரவர்
ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீபைரவர்

`இங்கே இருக்கும் கல்வெட்டுகள் சிதைந்திருப்பதால், குடைவரை பற்றிய தகவல்களை முழுமையாக அறிய முடியவில்லை’ என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சிவனாருக்கு ‘மலைக் கொழுந்தீஸ்வரர்’ எனும் பெயர் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது. ஒரு விதை எப்படிக் கொழுந்தாகத் தளிர்த்து மரமாக மாறுகிறதோ, அதேபோல் மொட்டை மலை சிவனாரின் அருளும் நம் வாழ்வில் விதைபோல விழுந்து பின் செழித்து நம் வாழ்வை வளமாக்கும் என்பதால் ‘கொழுந்தீஸ்வரர்’ என்று பெயர் சூட்டினார்களாம் பக்தர்கள்.

மொட்டை மலை சிவபெருமானுக்கு, `மலைக் கொழுந்தீஸ்வரர்’ என்று பெயர் ஏற்பட்டதன் காரணத்தையும் கூறுகிறார்கள். ஒருகாலத்தில், குழந்தைப்பேறில்லாத தம்பதியர் மொட்டை மலை சிவபெருமானை வேண்டிக் குழந்தை பாக்கியம் பெற்றார்கள். ஆனால் குழந்தை, பார்வைத்திறன் இல்லாமல் பிறந்தது. எந்த வைத்தியமும் பலனளிக்காத நிலையில் பெரும் வைத்தியநாதனான ஈசனையே சரணடைந்தனர்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஸ்ரீதட்சிணாமூர்த்தி

“குழந்தை பாக்கியம் அளித்த நீரே அதன் பார்வைக்கும் பொறுப்பு” என்று சொல்லி, குழந்தையைக் கோயிலில் விட்டுவிட்டுச் சென்றனர். நாள்கள் உருண்டோடின.

பெற்றவர்களின் மனம் தவித்தது. குழந்தையைத் தேடி ஈசன் கோயிலுக்கு வந்தார்கள். அங்கே குழந்தை, கருவறையிலிருந்த லிங்கத்தைப் பற்றியபடி விளையாடிக்கொண்டிருந்தது. குழந்தை விளையாடுவதைப் பார்த்து, குழந்தை பார்க்கும் திறன் பெற்றுவிட்டதை உணர்ந்தார்கள். அதை அள்ளியெடுத்துக் கொஞ்சினார்கள். ஊரே ஈசனின் கருணையை எண்ணி நெகிழ்ந்தது.

மலைக் கொழுந்தீஸ்வரருக்கு அர்ச்சுனன் சுனையிலிருந்து கொண்டு வரப்படும் நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மரம்கூட முளைக்க முடியாத மலையில், கோடைக் காலத்தில்கூட சுனையில் வற்றாமல் நீர் சுரக்கிறது. பதினெண் சித்தர்கள் இந்த மலையில் தவமிருந்ததாகவும் அப்போது அவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அர்ஜுனன் தன் கணையை ஏவி இந்த நீரூற்றைத் தோற்றுவித்தான் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள். கோயிலுக்கு அருகே திருவோட்டுக் கேணி அமைந்திருக்கிறது. பதினெட்டு சித்தர்களும் இந்தக் கேணியில் நீராடித்தான் சிவபெருமானை வழிபட்டார்களாம். அர்ச்சுனன் ஊற்று நீர், திருவோட்டுக்கேணி நீர் இரண்டையும் நோய் தீர்க்கும் மருந்தாகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.

மீனாட்சி சுந்தரம், கணேசன்
மீனாட்சி சுந்தரம், கணேசன்

நாம் மலைக் கோயிலுக்குச் சென்றபோது அங்கே தேவாரம் பாடிக்கொண்டிருந்தார் பக்தர் ஒருவர். அவரைப் பற்றிக் கோயில் பூசாரியிடம் விசாரித்தோம். ``ஒவ்வொரு கார்த்திகைக்கும் தவறாமல் கோயிலுக்கு வந்து செல்கிறார்’’ என்றார்.

அந்த பக்தரிடம் பேசினோம். “என் பேரு மீனாட்சி சுந்தரம். அருப்புக்கோட்டை பக்கத்துல இருக்குற புளியம்பட்டியைச் சேர்ந்தவன். இருபத்தஞ்சு வருஷமா எல்லாக் கார்த்திகைக்கும் தவறாம இங்கே வந்து அய்யாவைத் தொழுதுடுவேன். எனக்குக் கல்யாணம் முடிஞ்சு, 12 வருஷம் குழந்தை இல்லாம இருந்தேன். இங்கே வந்து அய்யாவைத் தொழுததுக்கு அப்புறம், அவரோட அருளால எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மரகதவள்ளித் தாயாரின் பேரைத்தான் வெச்சிருக்கேன். ஒரு ஆண் குழந்தையும் பொறந்துச்சி. அதுக்கு அய்யாவோட பேரைவெச்சிருக்கேன். என் வாழ்க்கையில நடந்த எல்லா நன்மைகளுக்கும் அய்யாதான் காரணம். வாழ்நாள் முழுக்க எல்லாக் கார்த்திகைக்கும் அய்யாவைப் பார்த்துட்டுப் போகணும்ங்கறது என் ஆசை. அய்யா துணை இருக்கறப்போ எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்கிறார் உருக்கமாக.

பூசாரி கணேசனிடம் பேசினோம்... “மலைக் கொழுந்தீஸ்வரர் கருணைமிக்கவர். இந்த மொட்டை மலை ‘ஓம்’ எனும் வடிவில் அமைந்திருக்கிறது. ஓம் எழுத்தில் காணப்படும் ‘ம்’ எனும் ஸ்தானத்தில் அமர்ந்து அருள்புரிகிறார் ஈசன். பெயருக்கு ஏற்ப, மலைக் கொழுந்தீஸ்வரர் மக்களைத் தழைக்கவைத்துக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் வேண்டும் வரங்களை அளிப்பதில் நிகரற்றவர். ஈசனை நினைத்து, அவரிடம் உத்தரவு வாங்கித் தொழில் தொடங்கினால் சீரும் சிறப்புமாகத் தொழில் நடக்கும். நந்தீஸ்வரருக்குத் தயிர் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் வாய்க்கும்” என்றார்.

இங்கே பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. சித்திரை முதல் நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் பக்தர்கள் கூட்டமாக வந்து திரள்கிறார்கள். பௌர்ணமியன்று கிரிவலம் மேற்கொள்கிறார்கள். `இத்தலத்தில் அருள்புரியும் முருகப் பெருமானை வேண்டிக்கொண்டால் செவ்வாய் தோஷம் தீரும்’ என்பது நம்பிக்கை. கடன் பிரச்னைகள் தீர பைரவர் அருள்புரிகிறார். ஞான வரமளிப்பவராக தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறார்.

தென்மாவட்டங்களில் குடும்பத்துப் பெரியவர்களை, `அய்யா...’ என்று அழைப்பது வழக்கம். இங்கிருக்கும் மக்கள் ஈசனை, `அய்யா...’ என்றே அழைக்கிறார்கள். ஈசனை, தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து அன்புசெலுத்துகிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. மக்களின் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரரை வாய்ப்பு கிடைக்கும்போது எல்லோருமே தரிசித்து வழிபடுவோம்.

மூலவர்: மலைக் கொழுந்தீஸ்வரர்

அம்மன்: மரகத வள்ளி

தீர்த்தம்: அர்ச்சுனன் சுனை மற்றும் திருவோட்டுக் கேணி

தலவிருட்சம்: இலுப்பை

திறந்திருக்கும் நேரம்: காலை 9 முதல் மதியம் 2 மணிவரை; மாலை 4 முதல் 6 மணிவரை.