Published:Updated:

ஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்!’

வெள்ளிமேடுபேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில்

பிரீமியம் ஸ்டோரி

‘ஒருவருக்குச் சுக்கிர பலம் அமோகமாக அமைந்திருந்தால், அவரின் வாழ்க்கை வளமாக அமையும்’ என்பது ஜோதிட சாஸ்திரங்கள் கூறும் தகவல். ஜாதகத்தில் சுக்கிரன் பலமின்றி இருந்தாலோ, சுக்கிர பகவானின் அருள்பார்வை குறைவாக இருந்தாலோ அந்த அன்பர்கள் உரிய தலங்களுக்குச் சென்று பரிகாரம் தேடுவது வழக்கம். அவ்வகையில், சுக்கிர பலம் ஸித்திக்கும் பரிகாரத் தலம் ஒன்று திருப்பணி செய்யப்பட்டு வருவதாகவும் தற்போது பொருளுதவி கிடைக்காமல் அந்தப் பணி பாதியிலேயே நின்றுபோய்விட்டதாகவும் தகவல் அறிந்து, அத்தலத்துக்குக் கிளம்பினோம்.

ஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்!’

`வெள்ளிமேடுபேட்டை' என்பது அந்த ஊரின் பெயர். ‘புத்தனந்தல்’ எனும் பழைமையான பெயரும் அந்த ஊருக்கு உண்டு. ஊரின் மையத்தில் அற்புதமாக அமைந்துள்ளது, அன்னை ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம். முற்காலப் பாண்டியர்களின் காலத்தில் உருவான ஆலயம் இது என்பதற்குச் சான்றாக மண்டப விதானங்களில் ஆங்காங்கே மீன் லட்சினை காணப்படுகிறது.

சுமார் 2500 ஆண்டுகளைக் கடந்த ஆலயம் இது என்கிறார்கள், ஊர் மக்கள். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் ஆகம விதிகளின்படி அழகுற அமைந்துள்ள ஆலயத்தில், இரண்டு நிலை விமானத்தின் கீழ் ஐயன் நாகேஸ்வரரும் ஒரு நிலை விமானத்தின் கீழ் திரிபுரசுந்தரி அம்மனும் அமர்ந்து ஆட்சி புரிகிறார்கள். மேலும் ஸ்ரீவிநாயகர் சந்நிதி, ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வயானை சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி சந்நிதி, நால்வர் சந்நிதி, மேற்கு நோக்கிய ஸ்ரீசனீஸ்வரர் சந்நிதி ஆகியவையும் எழிலுற அமைந்துள்ளன. சூரியன், சந்திரன், ராகு ஆகியோரும் தனித்தனியே அருள்பாலிக்கிறார்கள்.

Sri Nageswarar temple
Sri Nageswarar temple

கருவறையில் ஈசன் சதுர வடிவ ஆவுடையில் அமர்ந்திருக்கும் கோலம் அபூர்வமானது என்கிறார்கள். ‘சதுர ஆவுடை’ எனில், அது பிரம்மன் அமைத்த லிங்கத்திருமேனியாக இருக்கக் கூடும் என்பது பெரியோர்கள் கூற்று. ஆக, இத்தல ஈசனையும் பிரம்மன் வழிபட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆன்மிக ஆன்பர்கள். லிங்கத்தின் மீது நாகத்தின் செதில்கள் போன்ற அமைப்பு இருப்பது விசேஷ அம்சம்! `‘இந்த நாகேஸ்வர ஸ்வாமியை வழிபட்டால், நாகதோஷம் உட்பட சகல தோஷங்களும் நீங்கும்'’ என்கிறார்கள் பக்தர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈசனின் சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கிய சந்நிதியில் திருபுரசுந்தரி அருள்பாலிக்கிறாள்; யம பயத்தை நீக்கும் அன்னை இவள் என்கிறார்கள். ஈசன் தோஷங்களை நீக்குவார் என்றால், இந்த அம்பிகை ஐஸ்வர்யங்களை அள்ளித் தருபவளாம். குடும்ப ஒற்றுமை மேம்பட இந்த அம்பிகையை வேண்டிக்கொள்கிறார்கள். தொழிலில் நஷ்டம், கடன் பிரச்னை, காரியத் தடைகள் உள்ளவர்கள் இங்கு வந்து நெய் தீபமேற்றி, மாலை சாத்தி, வழிபட்டு ஈசனை வேண்டிக்கொண்டால் விரைவில் நிவர்த்தி கிட்டும். ஆலயத்தின் தல விருட்சம் வன்னி மரம். தென்மேற்கு திசையில் ஆலயத் தீர்த்தம் அமைந்துள்ளது.

Sri Nageswarar
Sri Nageswarar

திருக்காளத்திக்கும் திருநாகேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்த மத்திய ராகு - கேது தலமாக வெள்ளிமேடுபேட்டை அமைந்திருப்பதால், இது ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் இங்கே விசேஷ அம்சமாக, ஈசனை (மேற்கு) நோக்கியபடி சனிபகவான் அருள்கிறார். ஆகவே, இது சனிபகவானுக்கு உரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது (திருநள்ளாருக்கும் தெள்ளாறுக்கும் இடையே அமைந்த மத்திய சனீஸ்வரம் என்றும் கூறுகிறார்கள்). இப்படி ஒரே தலம் சனி, ராகு-கேது, சுக்கிரன் என்று பல கிரகங்களுக்கானப் பரிகாரத் தலமாக இருப்பது, வெகு அபூர்வம்!

ஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்!’

ஒருமுறை, திருமாலை அவமதிக்கும் வகையிலான பிருகு முனிவரின் செய்கையைக் கண்டு வெகுண்டெழுந்த திருமகள் வைகுந்தத்தை விட்டு விலகினாள். அவள் பூகோளம் வந்து, நம் தென்னகத்தில் திருமாலை எண்ணித் தவமிருந்த தலங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் ஆன்மிக அன்பர்கள். திருப்பதி மார்க்கத்தில் அமைந் திருக்கும் இந்த ஆலயத்தில், மீண்டும் திருமாலை அடையவேண்டி அவரையும் நாகேஸ்வரரையும் வேண்டி வழிபட்டாளாம் திருமகள்.

அதேபோல், சுக்கிரபகவான் தான் இழந்த ஆற்றலை மீண்டும் பெற இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டார் என்கிறது தலபுரானம். சுக்கிரன் வழிபட்ட மேடான ஊர் என்பதால் வெள்ளிமேடுபேட்டை என்றானதாம்.

இப்படித் திருமகளும் சுக்கிரனும் வழிபட்ட ஆலயம் இது என்பதால், சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது. அதுமட்டுமல்ல, காஞ்சி மகாபெரியவர் இந்த ஊருக்கு வந்து தங்கி நாகேஸ்வரப் பெருமானைப் பூசித்து மகிழ்ந்திருக்கிறார் என்பதும் ஒரு விசேஷத் தகவல்.

ஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்!’

ஆலயத்தைச் சுற்றிலும் கிடக்கும் உடைந்துபோன பழைய தூண்களும் சுற்றுச்சுவர்க் கற்களும் இந்த ஆலயத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

தற்போது, இந்த ஊரின் அன்பர்கள் பலர் ஒன்றுகூடி நல்ல மனிதர்கள் துணையோடு ஓரளவுக்கு இந்த ஆலயத்தைக் கட்டிவிட்டார்கள். ஆனால், மேலும் பல பணிகள் முடிவடையாமல் கிடக்கின்றன. ஆகவே, ஆலயக் கருவறைக்குள் போகாமல் அருகிலிருக்கும் கூரையிலேயே அமர்ந்தருளுகிறார் இவ்வுர் ஈசன்.

அகில லோகங்களுக்கும் நாயகனான நம் ஈசன் இப்படிக் கூரையின் கீழே இருக்கலாமா?

ஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்!’

சிவபக்தி நிறைந்த அன்பர்கள் அனைவரும் இந்த ஆலயத் தின் திருப்பணிக்கு உதவுங்கள். கற்பக விருட்சமான நம் இறைவன் கட்டாயம் உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவான். நீங்கள் செய்யும் சிறு உதவியும் இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும். அதனால் கிடைக்கும் சிவப்புண்ணியத்தால், உங்கள் சந்ததி வாழ்வாங்கு வாழும்.

அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளிமேடுப்பேட்டை நாகேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்குத் தோள் கொடுப்போம்; நம் பிரச்னைகள் அனைத்தையும் அவர் தீர்த்துவைப்பார்!

பக்தர்கள் கவனத்துக்கு...

ஸ்வாமி : ஸ்ரீநாகேஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீதிரிபுரசுந்தரி

பிரார்த்தனைச் சிறப்பு: கடன் பிரச்னைகள் நீங்க, வியாபார விருத்தி உண்டாக, செல்வ வளம் பெற இங்கு வந்து வழிபடலாம். குடும்ப ஒற்றுமை மேம்பட இந்தத் தல அம்பிகையை வேண்டிக்கொள்கிறார்கள்.

எப்படிச் செல்வது: திண்டிவனத்திலிருந்து வந்தவாசி செல்லும் மார்க்கத் தில் சுமார் 14 கி.மீ. தொலைவில் வெள்ளிமேடுப்பேட்டை அமைந்துள்ளது.

வங்கிக் கணக்கு விவரம் :

Subramanian, V - Kulasekaran A S

A/c.No: 313501011001263

Bank Name: VIJAYA BANK

Branch: TINDIVANAM

IFSC No: VIJIB0003135

தொடர்புக்கு: 90471 25445

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு