Published:Updated:

கல் மாடு புல் தின்ற திருத்தலம்! - வயிற்றுவலி தீர்க்கும் ஸ்ரீநீள்நெறிநாதர்

ஸ்ரீநீள்நெறிநாதர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீநீள்நெறிநாதர்

ஈசனின் கருணையால் அதை அறிந்து, யானைகள் ஏற முடியாத 70 மாடக் கோயில்கள் கட்டினான் என்று சமய வரலாறு கூறுகிறது.

`பிணிக்கு மருந்தே...’ என தெய்வங் களைப் போற்றி மகிழ்கிறார்கள் அருளாளர்கள் பலர். உள்ளத்தின் பிணிக்கு மட்டுமல்ல; உடற்பிணிக்கும் இறையருளே அருமருந்தாகும் என்பது அவர்களின் வாக்கு.

அந்த வகையில் வயிற்றுவலி தீர்க்கும் நாதனாய் ஈசன் அருள்பாலிக்கும் தலம், திருவாரூர் மாவட்டம், தண்டலச்சேரி திருத்தலம். இவ்வூரில் ஸ்ரீஞானாம்பிகை உடனுறையும் ஸ்ரீநீள்நெறிநாதரின் கோயில் அமைந்திருக்கிறது. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையது.

கோச்செங்கட்சோழன் முன்பிறவியில் யானையால் அதிக இடர்பாடு அடைந்தான். ஈசனின் கருணையால் அதை அறிந்து, யானைகள் ஏற முடியாத 70 மாடக் கோயில்கள் கட்டினான் என்று சமய வரலாறு கூறுகிறது. அத்தகைய ஆலயங்களில், திருத்தண்டலை ஸ்ரீநீள்நெறிநாதர் கோயிலும் ஒன்று. இந்தப் பழைமையான சிவன் கோயில், காலத்தின் கோலத்தால் சிதைந்துவிட்டது. பிற்காலத்தில், தேவகோட்டை ராமநாதன் செட்டியார் இப்போதுள்ள கோயிலைக் கற்றளியா கக் கட்டித் தந்துள்ளார்.

கல் மாடு புல் தின்ற திருத்தலம்! - வயிற்றுவலி தீர்க்கும் ஸ்ரீநீள்நெறிநாதர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோச்செங்கட்சோழனுக்கு ஒருமுறை குன்மநோய் (தீராத வயிற்றுவலி) ஏற்பட்டது. பலவகை மருந்துகள் உண்டும், பல கோயில்களில் வழிபாடு செய்தும் வயிற்றுவலி தீரவில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க சிவன் அசரீரியாகத் தோன்றி, `கோச்செங்கட்சோழனே, கல்மாடு புல் தின்னும் தலத்துக்குச் சென்று வணங்கினால் உன் குன்ம நோய் நிவர்த்தியாகும்' என்றார். மன்னனும் அப்படியொரு தலம் எங்குள்ளது என்று தேடி அலைந்தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள இத்தலத்தில் ஒரு சிவாலயம் இருக்கக் கண்டான். முறைப்படி, முதலில் விநாயகரை வழிபட, அறுகம்புல் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அப்போது, பிராகாரத்தின் வெளியேயுள்ள நந்தி அருகே செல்லும்போது, அது அவன் கையிலிருந்த அறுகம்புல்லை தன் நாவினால் பற்றி இழுத்துத் தின்ன ஆரம்பித்தது. அந்த வேளையில், அவன் குன்மநோயின் வேதனை தீருவதை உணர்ந்தான்.

கல் மாடு புல் தின்ற திருத்தலம்! - வயிற்றுவலி தீர்க்கும் ஸ்ரீநீள்நெறிநாதர்

அப்போது அவனுக்கு, சிவனார் அருளியது நினைவுக்கு வந்தது. குன்மநோய் நீங்கியதால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்தக் கோயிலுக்குத் திருப்பணி செய்து மாடக்கோயிலை உருவாக்கி இறைவனை வழிபட்டான். இத்தலத்தில், புல்லைத் தின்பதற்காகக் கழுத்தைத் திருப்பிய நிலையில் நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

கோச்செங்கட்சோழனின் குன்மநோயைத் தீர்த்து அருளிய இத்தல இறைவனை, வயிற்று உபாதைகளால் அல்லல்படுவோர் வந்து வழிபடுவதன் மூலம் தங்களின் நோயிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பது நம்பிக்கை.

கல் மாடு புல் தின்ற திருத்தலம்! - வயிற்றுவலி தீர்க்கும் ஸ்ரீநீள்நெறிநாதர்

தண்டலச்சேரிக்குக் கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலம் என்ற ஊரில் (இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என்றழைக்கப்படுகிறது) வாழ்ந்த தாயனார் என்பவர் சிவபெருமான் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.

தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறை வனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்துவந்தார். அவர் மனைவியும் இறைவனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாயனாரின் பக்தியை உலகறியச் செய்ய திருவுளங்கொண்ட இறைவன், தமது அருளாடலைத் தொடங்கினார். தாயனாருக்கு வறுமை ஏற்படச் செய்தார். வறுமையைக் கண்டு அடியார் மனம்தளராமல், தெய்வத் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்துவந்த அவர், வறுமை காரணமாகத் தானே கூலிக்கு நெல் அறுக்கச் சென்றார். வேலைக்குக் கூலியாகக் கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார்.

ஸ்ரீவிநாயகர்
ஸ்ரீவிநாயகர்

கூலியாகக் கிடைத்த நெல்லை யெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், அவரின் குடும்பத்துக்கு உணவில்லாமல் போனது. அவரும் அவர் மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில், கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீரைக் குடித்து வாழ்ந்தனர்

ஒருநாள், இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காகச் செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்துகொண்டு புறப்பட்டார் தாயனார். சாப்பிடாததால் பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். உத்தராயன காலமாதலால், வயல்களில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தன. அவர் பசியினால் கீழே விழப்போக, அவரை மனைவி தாங்கிக்கொண்டார். கூடையில் சுமந்துவந்த நைவேத்தியப் பொருள்கள் நிலத்தில் உள்ள வெடிப்பில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். நைவேத்தியம் வீணானதால், அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை.

ஸ்ரீசந்திரன்
ஸ்ரீசந்திரன்

எனவே, நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்துத் தன் கழுத்தை அறுத்துக் கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தைக்கண்டு, உடன்வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள்.

அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த வெடிப்பிலிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீறும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.

அத்திருக்கரம், தாயனாரின் கையைப் பற்றியது. மாவடுவைக் கடித்துச் சாப்பிடும் சத்தமும் கேட்டது.

இறைவனின் திருக்கரம்பட்டவுடன் மெய்ம்மறந்து நின்றார் தாயனார். அவரது பக்தியை மெச்சிய இறைவன், இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அறுக்க துணிந்தமையால், தாயனாருக்கு ‘அரிவாட்ட நாயனார்’ என்ற பெயர் ஏற்பட்டது என்கிறது தல வரலாறு.

கல் மாடு புல் தின்ற திருத்தலம்! - வயிற்றுவலி தீர்க்கும் ஸ்ரீநீள்நெறிநாதர்

தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கிப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மந்தார மலை சாயாமல் இருக்க, மகாவிஷ்ணு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்துக் கடலுக்குள் சென்று, தன் வலிமையான கூர்ம ஓட்டினால் மலையைத் தாங்கிக்கொண்டார்.

இந்தச் சம்பவத்தையொட்டி, தன் பெருஞ் செயலால் மகாவிஷ்ணுக்கு ஆணவம் உண்டானதாகவும் சிவபெருமான் அதை நீக்கி அருளிய தலம் இது என்றும் கூறுவர். ஆகவே, இத்தலத்தில் `கூர்மபங்கமூர்த்தி; என்ற திருநாமத்தோடு கூடிய சந்நிதியும் பிராகாரத்தில் உள்ளது. வெள்ளியால் ஆன கூர்ம உரு பதக்கம் இன்றளவும் இறைவனுக்கு அணிவிக்கப்படுகிறது.

இறையனார், தாயனாருக்கு முதலில் நடராஜர் உருவில் காட்சி கொடுத்ததாகவும், பின்பு அம்மையப்பராக ரிஷபாரூடராகக் காட்சி கொடுத்ததாகவும் ஐதிகம். இது உச்சிக்கால வேளையில், ஒரு தை மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

தில்லையில் உச்சிக்கால பூஜை வேளையில் நடராஜப் பெருமானை காணப்பெறாத பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள், தங்கள் ஞான திருஷ்டியால் நடராஜர் தண்டலையில் இருப்பதை அறிந்து இத்தலம் வந்து பெருமானை வழிபட்டனர். இதற்குச் சான்றாக, ஆலயத்தின் கீழ்மதில் சுவரையொட்டியுள்ள மண்டபத்தில், இந்த இரு முனிவர்களும் பூஜித்ததாகக் கருதப்படும் லிங்கத் திருமேனிகள் உள்ளன.

ஸ்ரீபாலசுப்பிரமணியர்
ஸ்ரீபாலசுப்பிரமணியர்

நடராஜப் பெருமான் இங்கு எழுந்தருளிய காரணத்தால் தை மாதம் திருவாதிரை நாளில் தில்லையில் நடராஜருக்கு உச்சிக்கால பூஜை இன்றைக்கும் நிகழ்த்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“இத்தலத்து ஈசனை தரிசித்தால், எந்த வகையான வயிறு பிரச்னைகள் இருந் தாலும் தீர்ந்துவிடும். ஸ்வாமி இங்கு அன்னப்பிரியர் என்பதால் பக்தர்களுக்குப் பசி அண்டாது காப்பார். குறையின்றி நிறைவான வாழ்வு வேண்டுவோர் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இது'' என்கிறார் கோயிலின் சிவாசார்யர்.

நீங்களும் வாய்ப்பு ஏற்படும்போது அவசியம் தண்டலை நீள்நெறிநாதரை வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்!

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: தண்டலை

ஸ்வாமி: ஸ்ரீநீள்நெறிநாதர்

அம்பாள்: ஸ்ரீஞானாம்பிகை

சிறப்பு: கோச்செங்கட்சோழனும் அரிவெட்ட நாயனாரும் அருள் பெற்ற தலம் இது. தில்லையில் உச்சிக்கால பூஜை வேளையில் நடராஜப் பெருமானை காணப்பெறாத பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள், தங்கள் ஞான திருஷ்டியால் நடராஜர் தண்டலையில் இருப்பதை அறிந்து இத்தலம் வந்து பெருமானை வழிபட்டனர்.

இத்தலத்து ஈசனை தரிசித்தால் எந்த வகையான வயிற்று பிரச்னைகள் இருந்தாலும் தீர்ந்துவிடும் என்பது கண்கூடாகக் கண்ட விஷயம். ஸ்வாமி இங்கு அன்னப்பிரியர் என்பதால் பக்தர்களுக்குப் பசி அண்டாது காப்பார்.

எப்படிச் செல்வது ? : திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் தண்டலச்சேரி உள்ளது.