Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: 'வெள்ளறை கண்டாயோ வினைகள் தீர?'

திருவெள்ளறை மகிமைகள்! (சென்ற இதழ் தொடர்ச்சி)

பிரீமியம் ஸ்டோரி
திருவெள்ளறையின் மகத்துவம் குறித்து கா்ண பரம்பரைத் தகவல் ஒன்று கூறப்படுகிறது.

இந்த உலகில் வாழும்போது ஒருவன் செய்கிற நற்செயல்கள் மற்றும் தீய செயல்களைக்கொண்டே அவனுக்குக் கிடைக்கப்போவது சொா்க்கமா, நரகமா என்பது நிச்சயிக்கப்படுகிறது. மானிடன் ஒருவன் யம உலகம் செல்லும்போது, அவனுடைய செயல்கள் சீா்தூக்கி ஆராயப்படுமாம்.

தாய், தந்தையருக்கு உணவளித்தது உண்டா?

தாகம் தீா்க்கத் தண்ணீா் கொடுத்தது உண்டா?

பசித்தவா்களுக்கு உணவளித்தது உண்டா?

பசு வதையைத் தடுத்தது உண்டா?

அடுத்தவருக்கு உதவியது உண்டா?

இப்படி ஒருவரின் செயல்பாடுகளை ஆராய்ந்து முடிவெடுப்பாா்களாம். இவை அனைத்துக்குமே ஒருவனின் பதில் `இல்லை’ என்றால், சந்தேகமின்றி அவனுக்கு நரகம்தான்.

எனினும், அவனுக்கு ஓர் இறுதி வாய்ப்பளிக்கும் பொருட்டு, `திருவெள்ளறையின் கோபுரத்தையாவது உன் வாழ்நாளில் தரிசித்தது உண்டா?' என்ற கேள்வி முன்வைக்கப்படுமாம்.

எங்கள் ஆன்மிகம்: 'வெள்ளறை கண்டாயோ வினைகள் தீர?'

இதற்கு அவனுடைய பதில் `ஆம்’ எனில், அவனுடைய மொத்த தீய வினைகளும் நீங்கி அவன் சொா்க்கத்துக்கு அனுப்பப்படுவான் என்பது தகவல். இதனால்தான், `வெள்ளறை கண்டாயோ வினைகள் தீா்வதற்கு?’ என்ற முதுமொழி இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அற்புதம்தான்!

`உம்மிலும் மேலான நிலை வேண்டும்’ என்று பகவான் விஷ்ணுவிடம் மகாலட்சுமி தாயார் வேண்டிக்கொள்ள, அவளை இந்தத் தலத்தில் தவம் செய்யும்படி பகவான் பணித்த கதையையும், ஸ்வாமியின் ஆணைப்படி, வராஹம் புகுந்து மறைந்த புற்றுக்குக் காமதேனுவின் பாலால் மன்னன் சிபி திருமஞ்சனம் செய்ய, புற்றுக்குள்ளிருந்து கோடி சூரியப் பிரகாசத்துடன் ஶ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் மன்னனுக்குக் காட்சியளித்த சம்பவத்தையும் சென்ற இதழில் பார்த்தோம். இனி...

புற்றுக்குள்ளிருந்து தோன்றிய ஶ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள், சமுத்திர ராஜனின் மகளான லட்சுமி பிராட்டியை நோக்கி, “தேவி! உன் தவத்தினால் என் உள்ளம் மகிழ்ந்தது. நான் வாக்களித்தபடி உனக்கு வரம் அளிக்கும் நேரம் கனிந்தது. சகல உலகங்களுக்கும் நானே ஸ்வாமியாக இருக்கும் தன்மை இனி உனக்கும் உண்டாகட்டும். இனி, உன்னுடைய ஆணை என்னிடத்திலும் செல்லும்” என்று அருளினாா்.

பின்னர் சிபியை நோக்கி, “அரசே! உம் பக்தியிலும் யாம் அகம் நிறைந்தோம். தாமரை மலராள் ஆட்சியில் இருக்கும் இந்தத் தேசத்துக்கு இன்று முதல் என் தேவியின் திருநாமமே துலங்கட்டும்” என்று ஆணையிட்டாா்.

பகவான் இங்கே இப்படி எழுந்தருளியதைத் தங்களின் ஞான திருஷ்டியால் அறிந்த பிரம்மாதி தேவா்களும் மார்க்கண்டேயர் முதலான முனிவர்களும் திருவெள்ளறைக்கு எழுந்தருளி, எம்பெருமானுடைய திருமேனியைக் கண்டு நிலம் கிடந்து வணங்கி சந்தோஷம் அடைந்தனா்.

திருவெள்ளறையின் திருக்கதையை அறிந் தோம். இனி, இத்தலத்தின் சிறப்புகளை அறிவோம்.

அழகனே காப்பிட வாராய்...

திருவெள்ளறையில் உள்ள புண்ணிய தீா்த்தமான பூங்கிணற்றில் பகவானைக் குறித்து தவம் செய்த பிராட்டிக்கு (பங்கயச்செல்வி), ஆலிலை துயின்ற ஆதிபிரான், செந்தாமரைக் கண்ணனாகத் திருக்காட்சி அளித்தாராம். ஆகவே, இத்தலம் பெருமானின் கிருஷ்ண அவதாரத்தை உணா்த்தும் தலமாகவும் உள்ளது.

எங்கள் ஆன்மிகம்: 'வெள்ளறை கண்டாயோ வினைகள் தீர?'

இதை உணா்த்தும் வண்ணம் விஷ்ணுச் சித்தராகிய பெரியாழ்வார், தேனினும் இனிய தம்முடைய பாசுரங்களில், இத்தலத்துப் பெருமாளைக் குழந்தையாக பாவித்து அவருக்குப் பூச்சூட்டி, நீராட்டி, காப்பிட்டு மகிழ்கிறார்.

`இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம்

மந்திரமாமலா்கொண்டு மறைந்துவராய் வந்து நின்றாா

சந்திரன்மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்

அந்தியம்போது இதுவாகும்அழகனே காப்பிட வாராய்...’

- என்று பாடுகிறார் பெரியாழ்வார்.

திருமங்கையாழ்வாரோ `அஞ்சனம்புரையும் திரு உருவனை, ஆதியை, அமுதத்தை...’ என்றெல்லாம் திருவெள்ளறைக் கமலக் கண்ணனைப் போற்றுகிறாா்.

ஆம்! இத்தலம் குறித்து பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் 24 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்துள்ளனா்.

எங்கள் ஆன்மிகம்: 'வெள்ளறை கண்டாயோ வினைகள் தீர?'

நாதமுனிகளின் சீடரான உய்யக்கொண்டாா் அவதாரம் செய்த தலம் திருவெள்ளறை. ஶ்ரீராமாநுஜரின் ஶ்ரீபாஷ்யத்துக்கு உரை எழுதியவா்களில் குறிப்பிடத்தக்கவர் விஷ்ணு சித்தாரியா். இவரை `எங்களாழ்வாா்’ எனப் பாராட்டினாராம் ஶ்ரீராமாநுஜா். எங்களாழ்வாா் திரு அவதாரம் செய்த தலமும் திருவெள்ளறையே.

திருவெள்ளறையில் ஶ்ரீராமாநுஜர்

ஶ்ரீராமாநுஜா் திருவெள்ளறையில் இரண்டு ஆண்டுகள் தங்கி ஶ்ரீரங்கம் கோயிலின் வழிபாட்டு முறைகளையும் விழாக்களையும் ஒழுங்குபடுத்தினாா். திருவெள்ளறை கோயிலுக்கு அருகில் உடையவா் ஶ்ரீமத் ராமாநுஜருக்குத் தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

ஶ்ரீராமாநுஜர் இந்தத் தலத்துக்கு வந்தபோது, அவரின் பசியைப் போக்க திருவுள்ளம் உகந்த பெருமாள், நாச்சியாா் அமுது செய்த சேஷப்ரஸாதத்தையே (தாயாருக்கு அமுது செய்தருளின பிரசாதம்) ஶ்ரீராமாநுஜருக்கு அனுப்பும்படி அருள்பாலித்தாராம். அந்த நியமனப்படியே இன்றும் தாயாருக்கு அமுது செய்யப்பட்ட பிரசாதமே உடையவருக்கு அமுது செய்விக்கப்படுகிறது.

உடையவா் தன் நித்ய அநுஷ்டானங்களைச் செய்த குளம் இன்றும் `உடையவா் குளம்’ என்றும் அவா் அநுஷ்டானம் செய்த மண்டபம் `வடதிருவரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி ஶ்ரீமத் நிகமாந்த மகாதேசிகரும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த திருத்தலம் இது. திருவெள் ளறையில் எழுந்தருளியுள்ள ஜீயா் சுவாமி களும் இத்தலத்தின் தாயாரை முன்னிட்டு பங்கயச்செல்வி ஜீயா் என்றே வழங்கப்படுகிறாா்.

நீலிவனம் என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தின் அருகில் திருப்பைஞ்ஞீலி என்னும் சிவத்தலம் உள்ளது. ஈசன் தனது திருக்கரத்தில் ஒட்டிக்கொண்ட கபாலம் நீங்குவதற்காக, திருவெள்ளறைப் பெருமாளை வழிபட்டதாகத் தல வரலாறு தொிவிக்கிறது.

உத்தராயன வாசல், தட்சிணாயன வாசல் என பெருமாளை தரிசிக்கச் செல்ல இத்தலத்தில் இரு வழிகள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரையிலும் உத்தராயன வாசல் வழியாகவும் ஆடி முதல் மாா்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் சென்று வழிபடும் முறை இன்றும் இத்தலத்தில் பின்பற்றப்படுகிறது.

குடைவரைக் கோயில்

திருவெள்ளறையில் எழுந்தருளியுள்ள பெருமாள் ஶ்ரீசெந்தாமரைக் கண்ணாழ்வாா் (புண்டரீகாட்சப் பெருமாள்) எனவும் தாயாா் பங்கயச்செல்வி எனவும் வணங்கப்படுகின்றனா்.

இத்தலத்தின் நான்காம் திருச்சுற்றில் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் திருவெள்ளறை ஆலயம் `பெரிய ஶ்ரீகோயில்’ என்றும் பெருமாள் `பெரிய ஶ்ரீகோயில் பெருமாளடிகள்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இக்குடைவரைக் கோயில் இரண்டாம் நந்திவா்மன் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீதேவி, பூமிதேவி, சூரியன், சந்திரன், ஆதிசேஷன் ஆகியோா் மானிட உருவில் தினமும் திருவெள்ளறை பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். இதனை `இந்திரனோடு, பிரமன், ஈசன், இமையவரெல்லாம் மந்திர மாமலா் கொண்டு வந்து மறைந்தவராய் வந்து நின்றாா்...’, `சந்திரன் மாளிகை சேரும் சதுரா்கள் வெள்ளறை” எனும் பெரியாழ்வாரின் பாசுர வரிகள் உறுதிப்படுத்துகின்றன.

தற்போது வழிபாட்டில் உள்ள பெருமாள் கோயில், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் புனரமைக்கப்பட்டது என்கிறார்கள், வரலாற்று ஆய்வாளர்கள். இங்கு கருவறையின் அடித்தளத்தில் காணப்படும் சிறிய பலகைச் சிற்பங்களில் காணப்படும் குடமெடுத்து ஆடும் கோபாலன், புள்ளின் வாய் கீண்ட கண்ணன், காளிங்க நடனம், இரண்யன் வதை, அனந்த வைகுந்தா் ஆகிய வடிவங்கள் கலையழகு மிகுந்த கவின்மிகு சிற்பங்களாகும்.

திருவெள்ளறை ஆலயம் பிரமாண்ட மதில்களால் சூழப்பட்டுள்ளது. ஶ்ரீமகாலட்சுமி தவம் செய்த பூங்கிணறு, கோயிலின் வளாகத்தில் உள்ளது. இது தவிர இத்தலத்தில் ஏழு புண்ணிய தீா்த்தங்கள் உள்ளன. அவை: திவ்ய தீா்த்தம், வராஹ தீா்த்தம், குசஹஸ்தி தீா்த்தம், சந்திர புஷ்கரணி தீா்த்தம், பத்ம தீா்த்தம், புஷ்கல தீா்த்தம் மற்றும் மணிகா்ணிகா தீா்த்தம்.

வாழ்வு செழிக்க வரம் தரும் ஶ்ரீபங்கயச் செல்வி

பங்கயச் செல்வி, செண்பகவல்லி என்பது தாயாரின் திருநாமங்கள். உற்சவருக்கும் பங்கயச் செல்வி என்ற திருநாமமே வழங்கப்படுகிறது. ஶ்ரீதாயாா் நீலிகாவனத்தில் தவம் செய்து பெருமாளிடம் பெற்ற வரத்தின்படி, இத்தலத்தில் எல்லா அதிகாரங்களும் தாயாருக்கே. உற்சவ காலங்களில் தாயாா் முன்னே செல்ல பெருமாள் பின்னால் தொடா்வது வழக்கத்தில் உள்ளது.

ஆம்! பகவான் தந்த வரத்தால் மகிழ்ந்த அலை மகள், தன் சாந்நித்தியத்தைப் பரிபூரணமாய் நிறைத்து வைத்திருக்கும் அற்புத க்ஷேத்திரம் இது. வாழ்வில் ஒருமுறையேனும் திருவெள்ளறைக்கு வந்து வழிபட்டுச் செல்வோரை, வறுமைப்பிணி அண்டவே அண்டாது. அவர்களின் இல்லத்தில் திருமகளின் சாந்நித்தியம் நிரந்தரமாய் நிறைந்திருக்கும்.

நீங்களும் ஒருமுறை. திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாளை தரித்து வாருங்கள்; அருள்மிகு பங்கயச் செல்வித் தாயாரை வழிபட்டு வறுமையில்லா வாழ் வையும், என்றும் அழியாத செல்வ வளத்தையும் வரமாகப் பெற்று வாருங்கள்.

ராஜ கோபுரத் திருப்பணி!

திருவெள்ளறை தலத்தின் ராஜகோபுரம் ஹொய்சாள மன்னர்களது கட்டடக்கலை முறைப்படி கி.பி 12 மற்றும் 13-ம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாகும். பல வருடங்களாக நடைபெற்ற ராஜகோபுரத் திருப்பணி இரண்டு நிலை மட்டுமே முற்றுப்பெற்ற நிலையில் பாதியிலேயே நின்றுவிட்டது. அக்காலத்தில் நிகழ்ந்த அந்நிய படையெடுப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம்.

வி.எஸ்.ஜெயபால் - கல்பனா தம்பதி
வி.எஸ்.ஜெயபால் - கல்பனா தம்பதி

ஏறத்தாழ 700 ஆண்டுகளாக முழுமை அடையாமலேயே திகழ்கிறது ராஜகோபுரம். தற்போது இந்தக் கோபுரத்தின் திருப்பணியைக் கோவை சகோதரர்கள் இருவர் முழு அா்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனா்.

கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வி.எஸ்.ஜெயபால்- கல்பனா தம்பதி மற்றும் டாக்டர் எஸ்.வேலுமணி- ஜெயலக்ஷ்மி தம்பதியினர் இந்தத் திருப்பணியைத் தங்களுக்குக் கிடைத்த பெறும் பேறாக நினைத்து, எல்லையற்ற மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி வருகின்றனர். டாக்டர் எஸ். வேலுமணி, ஶ்ரீமத் பரமஹம்ஸேம்ஸேத் யாதி ஶ்ரீஶ்ரீ ரங்கநாராயண ஜீயர் சுவாமி அவர்களின் திருவடி சம்பந்தம் பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

எஸ். வேலுமணி - ஜெயலக்ஷ்மி தம்பதி
எஸ். வேலுமணி - ஜெயலக்ஷ்மி தம்பதி

இவர்கள் ஏற்கெனவே 2008-ம் ஆண்டில் திருவரங்கம் திருக்கோயிலில் ரங்கநாயகித் தாயார் சந்நிதியின் வசந்த மண்டபத்தையும் 2014-ல் திருவரங்கம் யாகசாலைத் திருப்பணி யையும் மேற்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவெள்ளறையில் இவர்கள் மேற்கொண்டிருக்கும் இந்தத் திருப்பணிக்கு, தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது. தற்போதுள்ள அஸ்திவாரத்தைக் கொண்டு, ஏற்கெனவே உள்ள இரண்டு நிலைகள் எப்படி நிா்மாணிக்கப்பட்டனவோ, அதே கலைப்பாணியைப் பின்பற்றி கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுரத் திருப்பணி தொடர்பாக சென்னை ஐ.ஐ.டி-யுடன் அன்பர் ஜெயபால் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி (MoU), சென்னை ஐ.ஐ.டி தரப்பில், ஏற்கெனவே உள்ள இரண்டடுக்கு மொட்டைக் கோபுரத்தை மேலும் வலுவூட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. திருச்சி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (NIT)நிறுவனமும் இது தொடர்பாக தங்களது ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மொட்டைக் கோபுரத்தை ஏழுநிலை ராஜ கோபுரமாக அமைக்க முடிவு செய்திருப்பதுடன், செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு அக்காலத்துப் பாரம்பர்ய முறைப்படியே ராஜகோபுரத்தை நிா்மாணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுண்ணாம்பு அரைப்பதற்காக வட்ட வடிவப் பாதையில் அரவைக் கல் அமைத்து, அதில் உரிய இயந்திரம் பொருத்தி, தற்போதைய தொழில் நுட்பத்தையும் பாரம்பர்யத்தையும் ஒருங்கிணைத்து திருப்பணிகள் நடைபெறுவது பாராட்டத்தக்கதாகும்.

ராஜகோபுர திருப்பணிகள் 2013-ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. எனினும், ஏழு ஏக்கா் பரப்பளவில் உள்ள திருவெள்ளறை ஆலயத்தின் முன்பக்கம் மேடாகவும் பின்பக்கம் முப்பது அடி அளவில் தாழ்வாகவும் இருக்க, இதை முதலில் சரிசெய்யும் பணிகள் பூர்வாங்கமாக ஆரம்பிக்கப்பட்டு, இப்போதைய நிலையைத் திருப்பணி எட்டியுள்ளது என்கிறார்கள்.

இவா்கள் மேற்கொண்டிருக்கும் புனிதமான இத்திருப்பணியில் தடைகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக திருவெள்ளறை தலத்தில் நாற்பது ரித்விக்குகள் (சாஸ்திரிகள்) கொண்டு பிரம்ம ஶ்ரீரிஷிகேஷபைரி தலைமையில், ஶ்ரீலக்ஷ்மி மந்த்ர ஜப ஹோமம் 32 லட்சம் முறை ஜபம் செய்துள்ளனர். ஶ்ரீசிவபெருமானால் அருளப்பெற்ற இந்த மந்திரம் மிகச் சிறப்பானதாகும்.

இதனால் இந்த மந்திரத்திற்கு `மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம்' என்றும் பெயர் உண்டு. இம்மந்திர ஜபம் நடத்தி முடித்து,இரவு பகல் பாராமல் திருப்பணிகளுக்காகப் பாடுபட்டு வருகின்றனர் சகோதரர்கள் இருவரும்.

மாற்பிடுகு பெருங்கிணறு

இத்தலத்தில் `ஸ்வஸ்திக் குளம்’ எனப்படும் சக்கரக்குளம் ஒன்று உள்ளது. ஒரு துறையில் குளிப்பவா்களை இன்னொரு துறையில் குளிப்பவா்கள் காணமுடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது இந்தக் குளம். நான்கு புறத்திலும் 52 படிகள். இக்குளத்தினை `நாலு மூலைக்கேணி’ என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.

எங்கள் ஆன்மிகம்: 'வெள்ளறை கண்டாயோ வினைகள் தீர?'

முற்காலத்தில் இந்தக் கிணறு `மாற்பிடுகு பெருங் கிணறு’ என்ற பெயருடன் அழைக்கப்பட்டதை இக்கிணற்றின் சுவரிலுள்ள கல்வெட் டால் அறிய முடிகிறது. பல்லவ மன்னன் தந்திவா்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து விசைய நல்லூழான் தம்பி கம்பன் அரையன் என்பவனால் இக்கிணறு அமைக்கப் பட்டுள்ளது. இக்கிணற்றைப் பாதுகாப்பவா்கள் இவ்வூா் `மூவாயிரத்து எழுநூற்றுவா்’ என்று ஒரு கல்வெட்டு தொிவிக்கிறது.

எங்கள் ஆன்மிகம்: 'வெள்ளறை கண்டாயோ வினைகள் தீர?'

தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை இக்கிணற்றினை வரலாற்றுச் சின்னமாக அறிவித்துப் பராமரித்து வருகிறது. திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாளை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் இந்த மாற்பிடுகு பெருங்கிணற்றையும் காண்பது அவசியமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு