திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ராமாநுஜர் வழிபட்ட இருகரை ரங்கநாதர்

இருகரை ரங்கநாதர்
பிரீமியம் ஸ்டோரி
News
இருகரை ரங்கநாதர்

வைணவர்களுக்குக் கோயில் என்றால் அது திருவரங்கத்தையே குறிக்கும்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், பெருமாள் ஸ்ரீரங்கநாதராக அருள்பாலிக்கிறார். இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் வந்திருந்து ரங்கநாதருக்குத் திருப்பணி செய்தனர். அவர்களில் முக்கியமானவர் ராமாநுஜர்.

பிற மதங்களால் வைணவம் நெருக்கடிக் குள்ளானபோது, அதை எதிர்த்து நின்று போராடியவர் ஸ்ரீராமாநுஜர். இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் அவர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு பல இடங்களுக்கும் பயணம் செய்ய நேர்ந்தது. அந்தப் பயணங்களின்போது ஆசார்யர் பல புண்ணிய க்ஷேத்திரங்களைக் கண்டறிந்து, அங்கு பெருமாளைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அந்தத் தலங்களில் எல்லாம் நித்ய ஆராதனை நடைபெறவும் ஏற்பாடுகள் செய்தார்.

அவ்வாறு ஸ்ரீராமாநுஜர் தங்கியிருந்து வழிபட்ட திருத்தலங்களில் ஒன்று இடிகரை. கோவை மாவட்டம், துடியலூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இடிகரை. இங்கு அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயம் பாண்டியர் காலத்தில் விரிவாகக் கட்டப்பட்டதாம். காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்கு நடுவே திருவரங்கம் பெருமாள் கோயில் கொண்டிருப்பது போல், இங்கும் பள்ளிகொண்ட பெருமாள் இரு காட்டாறுகளுக்கு நடுவே கோயில் கொண்டிருக்கிறார். ஆகவே, இந்த ஊர் ‘இருகரை’ எனப் பெயர்பெற்றது. நாளடை வில் அது மருவி இடிகரையாக மாறியது.

ராமாநுஜர்
ராமாநுஜர்

ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்தத் தலத்திலும் ஸ்ரீரங்கநாயகி தாயார் தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். ஸ்ரீரங்கத்து ஆகமவிதிகளே இங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இங்கு மூலவர், பள்ளிகொண்ட பெருமாளாக ரங்கநாதர் என்னும் திருநாமத்தோடு அருள்கிறார். ரங்கநாதருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சேவை சாதிக்கின்றனர். உற்சவர் திருநாமம் ஸ்ரீகஸ்தூரிரங்கன். இவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார்.

இங்கு ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராதாகிருஷ்ணர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். ஆண்டாளுக்கு உகந்த ஆடிப்பூரத் திருவிழா இங்கு விமர்சையாக நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரைப் போன்றே இத்தலத்திலும் ஆண்டாளுக்குத் தனித் திருத் தேர் அமைந்துள்ளது. பிற ஆழ்வார்களும் இங்கு விமானத்துடன் கூடிய சந்நிதியில் அருள்கிறார்கள்.

பெருமாள் சத்ய நாராயணர் திருக்கோலத்திலும் சந்நிதி கொண்டருளும் கோயில் இது. எனவே இங்கு ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சத்ய நாராயண பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. பொதுவாக இந்த பூஜையின்போது சத்ய நாராயணர் ஓவியம் அல்லது படத்தை வைத்து வழிபடுவார்கள். இங்கு நேரடியாக சுவாமிக்கே செய்யப்படுவது விசேஷம். இந்த பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தால், கடன் பிரச்னை தீரும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதிகம்.

இக்கோயிலில் வழங்கப்படும் சடாரி சேவை மிகவும் பவித்ரமானது. இந்தச் சடாரி, திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு ஆராதிக்கப்பட்டது என்கின்றனர் அடியவர்கள். ஆகவே, இந்தக் கோயிலின் சடாரி சேவை நோய் நொடிகளை நீக்கி ஆரோக்கியமும் சிறப்பான வாழ்வும் அருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.இக்கோயிலில் அருளும் ஸ்ரீவிஷ்வக்சேனருக்கு தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டால், தடைகள் நீங்கி தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பூதத்தாழ்வாரை வழிபட்டால், திருமணத்தடைகள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

இருகரை ரங்கநாதர்
இருகரை ரங்கநாதர்

நீங்களும் ஒருமுறை இருகரை என வழங்கப்படும் இடிகரைக்குச் சென்று ரங்கநாதப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்; உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி கவலைகள் இல்லாத வாழ்வை வரமாகப் பெற்று மகிழ்வீர்கள்!

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 9 மணி வரை; மாலை 6 முதல் 7:30 மணி வரை கோயிலின் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் அதிகாலை 4 முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?: கோவை மாவட்டம், துடியலூரிலிருந்து கோவில்பாளையம் செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இடிகரை. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 87, 62, 27 ஆகிய தட எண்கள் கொண்ட பேருந்துகள் இடிகரைக்குச் செல்லும்.