சிவனார் விறகு வெட்டியாகவும், வியாபாரியாகவும் பல வேடங்கள் ஏற்றுச் செய்த திருவிளையாடல்கள் ஏராளம் உண்டு. அவ்வகையில் அவர் உழவனாக நடவுநட்ட அருள் கதையும் ஒன்று உண்டு!
திருவாரூர் மாவட்டம், மாவூர் அருகில் ஒரு சிவத்தலம் உள்ளது; திருநாட்டியத்தான் குடி என்பது அதன் பெயர். ஸ்ரீமங்களாம்பிகை சமேதராக ஸ்ரீரத்னபுரீஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் தலம். திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரரால் பாடல்பெற்ற தலம். இங்குள்ள கோயில் கற்றளி.

யானை ஒன்று இந்தத் தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி, இறை வனை வழிபட்டு முக்தி அடைந்தது. யானையால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் `கரி தீர்த்தம்' என்றும், கரிக்கு அருள்புரிந்த இறைவன் `கரிநாலேசுரர்' என்றும் திருப்பெயர் விளங்குகின்றன.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 118-வது தலம் இது. மகரகண்டிகை என்ற ருத்ராட்சத்தை இங்குள்ள அனைத்துத் தெய்வ மூர்த்தங்களும் அணிந்துள்ளனர். கிழக்கு நோக்கிய கோயில். கிழக்குக் கோபுர வாயிலின் முன் சுந்தரருக்குக் கை காட்டி வழி சொன்ன விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்து நிலைகளுடன் திகழ்கிறது ராஜகோபுரம். உள் பிராகாரத்தில் விநாயகர், முருகன், விஸ்வநாதர், மற்றும் கஜலட்சுமி சந்நிதி உள்ளது கோட்புலி நாயனாரும் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் அருள்கிறார்கள். மகாமண்டபத்தில் நடராச சபை உள்ளது.
ரத்னேந்திர சோழனும், அவன் தம்பியும் தம் தந்தை விட்டுச்சென்ற ரத்தினங்களை மதிப்பிட்டுப் பிரித்துக் கொள்ள முயற்சி செய்தனர். வல்லுநர்கள் பலர் வந்து மதிப்பிட்டுச் சொல்லியும் சகோதரர்கள் இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. குழப்பம் நீடித்தது.

நிறைவில் இருவரும் இத்தலத்து ஈசனிடம் வேண்டினர். இறைவனும் ரத்தின வியாபாரியாக வந்து சேர்ந்தார். ரத்தினங்களை மதிப்பிட்டு பிரித்தளித்ததுடன், நாட்டை யும் சமமாகப் பங்கிட்டு அளித்துவிட்டு மறைந்தார். இதுவே தலபுராணம் சொல்லும் திருக்கதை.
ஆகவே, இத்தலத்து இறைவன் ரத்னபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோட்புலி நாயனாரின் அவதாரத் தலம் இது. சோழப் படைத் தலைவராகப் பணியாற்றவர் இவர். பகைவர் எவராயினும் அவர்களைக் கொன்று குவிப்பதில் வல்லவர் என்பதால், `கோட்புலி' என்று பெயராம் இவருக்கு. சிவபக்தரான இவர் தன் செல்வங் களைச் செலவழித்து நெல்மூட்டைகளை வாங்கி வீட்டில் அடுக்கியிருந்தார். அவற்றைக் கோயில் திருப்பணிகளுக்குச் செலவிட்டார். ஒரு முறை நாயனார் போர்க்களம் செல்ல நேர்ந்தது.

புறப்படுமுன், ``இந்த நெற்மூட்டைகள், இறைப் பணிக்கு உரியவை. அவற்றை எக்காரணம் கொண்டும் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது' என்று வீட்டாரிடமும் உறவுகளிட மும் திட்டவட்டமாக கூறிச் சென்றார்.
சில நாள்களில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் உணவுக்குக் கஷ்டப்பட்டனர். அதனால் கோட்புலி நாயனார் சேமித்து வைத்திருந்த நெல்லை எடுத்துத் தாராளமாக செலவு செய்தனர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநாள்கள் நகர்ந்தன. போரில் வாகை சூடித் திரும்பிய நாயனார், நெல் மூட்டைகள் செலவு செய்யப் பட்ட விஷயத்தை அறிந்து கடும் கோபம் கொண்டார். அவற்றைச் செலவழித்த உறவுகள், பெற்றோர் உள்பட அனைவரையும் வெட்டி வீழ்த்தினார்.

நிறைவில் ஒரு குழந்தை. அதையும் அவர் தண்டிக்க முயன்றார். அப்போது, ‘இக் குழந்தை உணவு உண்ணவில்லை’ என்று கூறி சிலர் தடுக்க முயன்றனர். நாயனாரோ “இக்குழந்தை உணவு உண்ட தாயிடம் பால் அருந்தியதல்லவா’' என்றபடியே வாளை ஓங்க, இறைவன் காட்சி தந்தார். கோட்புலி நாயனாருக்கு அருள் செய்ததுடன் அனை வரையும் உயிர்ப்பித்து அருளினார் என்கிறது கதை.

ஒரு முறை சுந்தரர் இக்கோயிலுக்கு வந்த போது, சிவனையும் அம்மையையும் காணாமல் திகைத்தார்.விநாயகரை வணங்கினார். விநாயகரோ, ஈசானத் திசையில் கையைக் காட்டிவிட்டு வாய் பேசாதிருந் தார். சுந்தரர் அந்தத் திசையில் சென்று பார்த்த போது சிவனும் பார்வதியும் நடவு நட்டுக்கொண்டிருந் தனராம். இதைப் பார்த்த சுந்தரர் பாடினார்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
`நட்ட நடாக்குறை நாளை நடலாம்.
நாளை நடாக்குறை சேறுதங் கிடவே
நட்டது போதும். கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி' - எனச் சுந்தரர் பாடவும் அம்மையும் அப்பனும் அங்கிருந்து மறைந்து கோயிலில் எழுந்தருளினர் (ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இதுதொடர்பான ஐதிக விழா `நடவுத் திருவிழா'வாக நடைபெறுகிறது).

சுந்தரரும் கோயிலுக்குத் திரும்பினார். வாயிலில் அவரைப் பாம்புகள் வழிமறித்தன. உடனே சுந்தரர், `பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ் சேன்...' என்று பாடிட, பாம்புகள் வழிவிட்டு மறைந்தனவாம். இன்று வரை, இவ்வூரில் பாம்புகள் எவரையும் தீண்டியதில்லை என்கிறார்கள்.
சுந்தரருக்குப் பணி செய்ய தன் மகள்களான சிங்கடி, வனப்பகை இருவரையும் பணிப் பெண்களாகத் தந்தாராம் கோட்புலி நாயனார். இருவரையும் புதல்விகளாக ஏற்றுக் கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார்.

இக்கோயிலில் பூஜைகள் செய்து வரும் சிவபாலாஜிடம் பேசினோம். “ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கோட்புலி நாயனார் குருபூஜை கொண்டாடப்படுகிறது. அத்துடன் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. குடும்பத் தில் பிரச்னை, பாகப்பிரிவினை பிரச்னைகள், சொத்துப் பங்கில் குழப்பம் ஆகிய பிரச்னைகள் தீரவும், விவசாயம் செழிக்கவும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் நடவுத் திருவிழாவை கோயிலுக்குள்ளேயே எளிமையாக நடத்தினோம்” என்றார்.

நீங்களும் ஒருமுரை நாட்டியத்தான் குடிக்குச் சென்று வாருங்கள். மனம் எனும் வயலில் நன்மையை விதைத்து, நாளும் நாம் நலம்பெற அருள்புரிவார் இத்தலத்து ஈசன்.
எப்படிச் செல்வது? : திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மெயின்ரோட்டில் மாவூரிலிருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் திருநாட்டியத்தான்குடி உள்ளது. பஸ், கார், ஆட்டோ வசதியுண்டு.