
துர்கை வடிவங்களில் மூவர் மிகச் சிறப்பானவர்கள் என்கிறது புராணம். சிவதுர்க்கை, விஷ்ணுதுர்கை, வைஷ்ணவி துர்கை ஆகிய மூவருமே இங்கு தனித்தனியாக கோஷ்டங்களில் எழுந்தருளி இருப்பது இங்கு விசேஷம்.
`எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை; என்ன முயன்றாலும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை; வீண் விரயச் செலவுகள்; சுற்றிலும் கடன் பிரச்னைகள்; ஒருநாள் பொழுதைக்கூட நிம்மதியாகக் கடக்க முடியவில்லை!' இப்படிப் புலம்புகிறவர்கள் அநேகம் பேர்.
முறையாகத் திட்டமிட்டு வாழ்ந்தாலும் கடன் தொல்லைகளை சரிசெய்யவே முடியாதவர்கள் பலரும் உண்டு. ஜாதக ரீதியான தோஷமோ, பாவமோ, சாபமோ தெரியவில்லை. ஆனால் கடன் பட்டவர்கள் கலங்குவதைப்போல வேறொரு கலக்கம் இருக்கவே முடியாது. இவர்களுக்கெல்லாம் அபயம் அளிக்கவென்றே கருணை வடிவான ஈசன் திருச்சேறையில் அருளாட்சி செய்து வருகிறார்.
சோழ நாடு சோறுடைத்து, சோறாகச் சேறுடைத்து என்கிறது இலக்கியம். காவிரி பாய்ந்து சேறாகி நின்ற பகுதி இது என்பதால், திருச்சேறை என்றானது என்கிறது வரலாறு. வயல்களால் சேறு நிறைந்த பகுதி, சேற்றூர் என்றாகி சேறை என்று மருவியது. பிரளய காலத்தில், மண்ணெடுத்துக் கடம் செய்து, அதில் சிருஷ்டிக்கான வித்துகளைப் பாதுகாக்க பிரம்மன் இங்கிருந்து சேற்று மண்ணெடுத்ததால், சேறு தந்த ஊர் சேறையூர் ஆனது என்கிறது புராணம்.

சுயம்புவாக, மூலவர், வட்ட வடிவ ஆவுடையாருடன், உயரமான பாணத்துடன் ஜெகஜோதியாகத் திகழ்கிறார் இங்குள்ள ஈசன். செந்நெறியப்பர், திருச்சேறை உடையார், ஒளியாண்டார் எனத் திருநாமங்கள் இவருக்கு. ஆதிகாலத்தில், தௌமிய மகரிஷி, புலஸ்தியர் ஆகியோர் வணங்கிப் பேறு பெற்றனர் என்கிறது தலவரலாறு.
அன்னை ஞானாம்பிகையாக, அகன்ற விழியாள், ஞானவல்லி எனும் திருநாமங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அழகே வடிவாக முல்லை மலர் வாசத்துடன் எழுந்தருளி இருக்கிறாள். நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், அபயம் மற்றும் வரம் தாங்கி நிற்கிறாள். நான்கு வேதங்களும் நான்கு திருக்கரங்களாகக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதிகம்.
ஈசன் ஸ்ரீசாரபரமேஸ்வரர் முக்தி அருளும் பேராற்றல் கொண்டவர் என்றால், ஞானாம்பிகை இகலோகத்துக்கான அத்தனை செல்வங்களையும் அருள்பவள். இவளே மார்க்கண்டேய மகரிஷிக்கு அபிராமியாகக் காட்சியளித்துப் பிறப்பிலா பேரின்பம் அளித்தவள் என்கிறது தல வரலாறு. மார்க்கண்டேயருக்கு இங்குதான் முக்தி அளித்து ஈசன் தன்னுள் ஏற்றுக் கொண்டான் என்பதும் இந்தத் தலத்தின் சிறப்பு.
கும்பகோணம்-திருவாரூர் சாலையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத் திருச்சேறை. கடன் தீர்க்கும் பரிகாரத் தலம் என்பதால் தற்போது ஆலயமே கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயம் எனப்படுகிறது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் எதிரே உள்ளது ஞான தீர்த்தம். இது மார்க்கண்டேயரால் உருவாகி, சிரஞ்சீவித்தன்மையை அருளும் அமிர்தமாக விளங்குகிறது. இதனால் இது சிரஞ்சீவித் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம் என்றும் கூறப்படுகிறது. சகல பாவங்களையும், தோஷங்களையும் போக்கவல்லது.

மார்க்கண்டேயர் ஸ்தாபித்த அமிர்தகடேஸ்வரர், அபிராமி சந்நிதிகளும் இங்கு உள்ளன. இங்கு சூரிய பகவான் வழிபட்டு நவகிரகங்களின் தலைவன் என்ற அந்தஸ்தைப் பெற்றான். தட்சன் யாகத்தில் கலந்துகொண்ட பாவம் தீரவும், ஈசனின் கோபத்தைத் தணிக்கவும் ஆண்டுதோறும் சூரியன் இங்கு வந்து வழிபட்டு, தனது கிரணங்களால் ஈசனைக் கொண்டாடும் சூரியபூஜை விழா மாசி 13, 14, 15 ஆகிய மூன்று தினங்களிலும் நடைபெறுகிறது. அதே சமயம் சூரியக் கதிர்கள் அம்பிகையின் திருப்பாதங்களையும் வணங்கி மகிழும் சிறப்பு நிகழ்வும் இங்கேதான் நடைபெறுகிறது.
துர்கை வடிவங்களில் மூவர் மிகச் சிறப்பானவர்கள் என்கிறது புராணம். சிவதுர்க்கை, விஷ்ணுதுர்கை, வைஷ்ணவி துர்கை ஆகிய மூவருமே இங்கு தனித்தனியாக கோஷ்டங்களில் எழுந்தருளி இருப்பது இங்கு விசேஷம். முக்திக்கும் ஞானத்துக்கும் சிவதுர்கை, செல்வவளத்துக்கு விஷ்ணு துர்கை, துணிச்சலுக்கு வைஷ்ணவி துர்கை என்று ராகு காலத்தில் பக்தர்கள் இங்கே கூடி 3 தேவியர்களையும் ஆராதிக்கிறார்கள்.
இங்குள்ள ஜேஷ்டா தேவியும் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் தேவியாக பாவிக்கப்பட்டு வணங்கப்படுகிறாள். இங்குள்ள தலவிருட்சமான மாவிலங்கை வித்தியாசமானது. நான்கு மாதங்கள், மரம் முழுக்க இலைகள் மட்டும் காணப்படும்; அடுத்த நான்கு மாதங்கள், வெண்பூக்களாகக் காணப்படும். மீதமுள்ள நான்கு மாதங்கள், பூவோ இலையோ இன்றிக் கிளைகள் மட்டுமே நிற்கும். இம்மரத்தைச் சுற்றி வந்து வணங்க, திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.
கணபதி, முருகன், கஜலட்சுமி, வாயுலிங்கம், நால்வர், நடராஜர், பைரவர், சனீஸ்வரர் மற்றும் சூரியன் என சிவாலயத்துக்குரிய அனைத்து சந்நிதிகளும் இங்கு உள்ளன. 1600 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்துக்கு குலோத்துங்கச் சோழனின் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்றன என்று வரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்துக்குச் சிறப்பு சேர்க்கும் தெய்வமாக, மக்கள் கூட்டம் தேடிவந்து வணங்கும் பரிகாரத் தெய்வமாக விளங்குபவர் ஸ்ரீருணவிமோசனர். ருணம் என்றால் தீர்க்க முடியாத தொடர்ந்து வரும் இம்சை என்று பொருள். கடன் என்றால் இந்த உடலும் ஒரு கடன்தானே, கடன் வாங்கிய இந்த உடலுக்கான நோய்கள், தோஷங்கள் யாவும் நீங்கி முக்தியும் மோட்சமும் அருளும் கடவுளாகவும் இவர் விளங்குகிறார் என்பதை உணர்ந்துகொண்ட மார்க்கண்டேயர் இவரை வணங்கி பலன் பெற்றார்.
செல்வத்தால் வரும் கடனைத் தீர்க்கவும் இவர் உதவுகிறார் என்பதால் மக்கள் கூட்டம் இங்கு வந்து வழிபட்டு பலன் பெறுகிறார்கள். தீராத கடன்கள், வியாபாரத்தில் ஏமாற்றம், தொழிலில் மந்தம், பணியில் பிரச்னை, வீணான விரயங்கள், நம்பி ஏமாந்துபோவது, வெளிநாட்டு வேலை தள்ளிப்போவது இப்படி எத்தனை எத்தனை பேர் இங்கு வந்து பலன் பெறுகிறார்கள் என்று வியக்கிறார்கள் ஊரார்.
மூலவருக்கு பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் எழுந்துள்ளது ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதி. திங்கள்கிழமைகளில் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சுவாமிக்கு மலர் சாத்தி, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட நிச்சயம் கடன்கள் தீரும் என்பது ஐதிகம். வசிஷ்ட மகரிஷி அருளிய `தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம்' சொல்லி வழிபட நிச்சயம் பலன் கிடைக்கும்.
'விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹனாய நமச்சிவாய!'
பதினொரு திங்கள்கிழமைகள் தொடர்ந்து இங்கு வந்து பூஜித்து வழிபட, கண்டிப்பாகக் கடன் தொல்லைகள் நீங்கும். நேரில் 11 முறை வரமுடியாதவர்கள், ஒருமுறை இங்கு வந்து வழிபாட்டை ஆரம்பித்து மீதி 10 திங்கள் அன்று வீட்டிலேயே ருணவிமோசனரை மானசீகமாக வழிபட்டு இந்த ஸ்லோகம் சொல்லி வர பலன் கிட்டுமாம். ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம், சிவாலயங்களில் மாம்பொடி அபிஷேகம் செய்வித்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்றும் கூடுதல் தகவலாகச் சொல்கிறார்கள்.