கட்டுரைகள்
Published:Updated:

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

மப்பேடு சிங்கீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
மப்பேடு சிங்கீஸ்வரர்

ஈசனோடு இங்கு வந்த சக்தி, நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்று திருநாமம் கொண்டாளாம்.

ஒரே கோயிலில் பல அதிசயங்களைக் காண வேண்டும் என்று விருப்பினால் நீங்கள் இந்த ஆலயத்துக்குத்தான் வரவேண்டும். நான்கு யுகங்களாகச் சிறந்து விளங்கும் இந்த மப்பேடு சிங்கீஸ்வரர் பெருமைகளைக் காண்போமா!

பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த திருமால், இந்தத் தலத்துக்கு வந்தே மீண்டும் சுயரூபம் கொண்டாராம். அதனால் இந்த ஊர் மெய்ப்பேடு என்று மாறி (மெய் - உண்மை, பேடு - வடிவம்). பிறகு `மப்பேடு’ என்று மருவியதாகச் சொல்வார்கள்.

வாய் பேச முடியாத பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து குணமானதால், இது `மேய்ப்பேடு’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்வார்கள். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இந்தத் தலத்துக்கு வந்து நீக்கிக்கொள்ளலாம் என்கிறது புராணம்.

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

கார்க்கோடகனும் முஞ்சிகேஸ்வர முனியும் வேண்டிக்கொண்டதற்கு ஏற்ப, ஈசன் ஆலங்காட்டு மயானத்தில் அண்டம் அதிர ஊர்த்துவத் தாண்டவம் ஆடினார். அப்போது மத்தளம் வாசித்த நந்தி, அந்த அற்புத நடனத்தில் மெய்மறந்து கண்கள் மூடிக் கொண்டாராம்.

அந்தத் தவற்றை உணர்ந்து திருவாலங்காட்டுக்கு அருகே மீண்டும் இந்த மெய்ப்பேட்டில் நடனத் திருக்காட்சி கண்டாராம். நந்திக்கு ‘சிங்கி’ என்றொரு நாமமும் உண்டு. நந்திக்கு அருள் செய்த ஈசன் இங்கு சிங்கீஸ்வரர் என்றே அருளுகிறார்.

ஈசனோடு இங்கு வந்த சக்தி, நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்று திருநாமம் கொண்டாளாம். சுவாமி சந்நிதியின் வலது புறத்தில், சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில்-கிழக்கு முகமாய் அருளாசி வழங்குகிறாள், புஷ்பகுஜாம்பாள்.

இந்த அம்பிகையை வணங்கி வேண்டிக்கொண்டால், பேச்சில் வல்லமை தருவாள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த ஆலயத்தின் தென்கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், ஏழு கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கிறது. ராஜகோபுரம் முழுவதுமே கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்களைக் கொண்ட சிற்பப் பெட்டகமாக விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அழகுற அமைந்துள்ளது ஆலயம்.

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

மகா மண்டபத்தின் முன்பு செவ்வக வடிவ முன்மண்டபம் அமைந்துள்ளது. தென்புற நுழைவு வாசலில் நடராஜர் சபை. ஆலயத்தின் நீண்ட பிராகாரத்தில் ஆஸ்தான விநாயகர், இடம்புரி விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானையுடன் முருகப்பெருமான், தேவி பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.

மூலவரின் கருவறைக் கோஷ்டத்தில் பிரம்மாவின் திருவுருவம் காணப்படுகிறது. வியாழக்கிழமைதோறும் பிரம்மாவுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நம் தலையெழுத்து நல்லவிதமாக மாறி, வாழ்க்கை சிறக்கும் என்கிறார்கள்.

பிரதோஷ காலத்தில், நந்தி மண்டபத்தின் முன்பாக உள்ள `நவ வியாகரணக் கல்’ என்ற சிறிய கருங்கல்லின் மீது ஏறி நின்று, ஒருசேர நந்தியையும் ஈசனையும் வழிபட்டால், நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை சோம வாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு.

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

தொண்டை மண்டலத்து செங்காடு கோட்டம் - செங்காடு நாட்டில் அமைந்த ஊராக மப்பேடு விளங்கி வந்துள்ளது. இரண்டாம் ஆதித்த கரிகால சோழன் காலத்துக் கல்வெட்டு இங்கு கண்டெடுக்கப் பட்டது. அதில் விளக்கெரிக்கக் கொடையளித்த விவரமும், இவ்வாலயம் கி.பி. 967-ல் இரண்டாம் ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட தகவலும் உள்ளன.

இந்த ஆலயம் மூல நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகாரத் தலமாக உள்ளது. கலைகளின் தேவியான கலைமகளுக்கும், ஆற்றலில் சிறந்தவரான அனுமனுக்கும் உரிய நட்சத்திரம் மூலம். இந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்க, ஆற்றலும் கலையும் பெருகும் என்கிறார்கள் பெரியோர்கள்.

இங்குள்ள வீரபாலீஸ்வரர் காரியத் தடைகளை விலக்குபவர். இவரின் சந்நிதிக்கு முன்பு நின்று வீணை இசைத்து அனுமன், ஈசனின் அருளைப் பெற்றதாகத் தலபுராணம் தெரிவிக்கிறது.

இங்குள்ள வீணை ஆஞ்சநேயர் விசேஷமானவர். சீதாதேவியைத் தேடிக்கொண்டு தென்திசை சென்றபோது, மேய்ப்பேடு தலத்துக்கு ஆஞ்சநேயர் வந்தார். அப்போது இப்பகுதி மக்களின் வேண்டுதலுக்காக அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்துப் பாடி மழையை வரவழைத்துப் பஞ்சம் போக்கினார் என்றொரு கதை உண்டு.

பேசாதவர்களைப் பேச வைக்கும் மப்பேடு சிங்கீஸ்வரர்!

அதனால் இன்றும் இங்கே ஆஞ்சநேயர் வீணை வாசித்தபடியே அருள்கிறார் என்கிறார்கள். இசைத்துறையில் வெற்றிபெற விரும்புவோர், இத்தலத்து வீணை அனுமனை வணங்கி பலன் அடைகிறார்கள்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்குவதற்காக, தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்சகரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்துகொள்ளவேண்டும். இப்படிச் செய்தால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

அற்புதமான இந்த ஆலயத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் ஜனவரி-18 புதன் கிழமை அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சிவனருள் பெற்று வரலாம்.

செல்லும் வழி: பூந்தமல்லி - பேரம்பாக்கம் மார்க்கத்தில், பூந்தமல்லியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மப்பேடு. சென்னையிலிருந்து சுமார் 38 கி.மீ. தூரம்.