Published:Updated:

அகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்!

ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர்

புதன் பரிகாரத் தலம் திருவெண்காடு

டுந்தவம் செய்து பெருவரம் பெறுவதும் பெற்ற வரத்தைக்கொண்டு தீவினை புரிவதும் அசுரர்களின் வழக்கம். அப்படி ஓர் அசுரன், தான் பெற்ற வரத்தைக்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினான். அவன் பெயர் மருத்துவன். ஓடி ஒளிய வழியில்லாதவர்கள், பாடிச் சரணடைய இருக்கும் ஒரே இடம் ஈசனின் திருவடி. தேவர்களும் ஈசனைச் சரணடைய, அவர் அவர்களுக்கு அபயம் அளித்து, சுவேதாரண்ய க்ஷேத்திரம் சென்று வாசம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

சுவேதாரண்யம் ஓர் ஆதிக்ஷேத்திரம். ஈசன் நடனம் புரிந்த தலம் என்பதால், இதற்கு ஆதிச் சிதம்பரம் என்ற திருநாமமும் உண்டு. இதன் பெருமையை வால்மீகி ராமாயணம் போற்றுகிறது. ஈசன் நித்திய வாசம் செய்யும் தலம் எனும் பெருமையைப் பெற்றது. அங்கு வந்து அசுரன் அட்டகாசம் செய்யமாட்டான் என்று நம்பினார்கள் தேவர்கள். ஆனால், அவனோ அங்கும் வந்துவிட்டான். திருவடி பணிந்தவரைக் காப்பதுதானே திருவருள்.

அகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்!

ஆகவே, அசுரனை அழித்து வருமாறு தன் வாகனமான நந்தியை அனுப்பினார் ஈசன். அசுரன் மருத்துவனோ, தான் வரமாய்ப் பெற்ற மாயச் சூலத்தை நந்தியின் மீது எய்தான். சூலம் நந்தியை ஒன்பது இடங்களில் துளைத்து வெளியேறியது. இதைக் கண்ட ஈசனின் கோபம் எல்லை கடந்தது. அகோர மூர்த்தியாக அவரே தோன்றினார் அசுரன் முன்.

என்னே அசுரனின் முன்வினைப்பயன்... பிறவிகள் பல கண்டும் காணமுடியாத அந்த அற்புத ரூபத்தை அவன் கண்டான். கண்ட கணம் தன் அகந்தை அழிந்தான். ஈசனின் திருவடியைப் பணிந்தான். நித்த மும் அவர் காலடியில் நிலைகொண்டான். இன்றும் அகோர மூர்த்தியை தரிசிப்போர், அவர் காலடியில் இருக்கும் மருத்துவனையும் காணலாம். இது நிகழ்ந்த அற்புதத் தலம்தான் திருவெண்காடு.

காசிக்குச் சமமான ஆறு தலங்களில் ஒன்றான இங்கு, ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் என்ற திருநாமத்தோடு ஈசனும் பிரம்ம வித்யாம்பிகை என்ற திருநாமத்தோடு அம்பாளும் அருள்கின்றனர்.

சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ள இத்தலத்தில் விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, இந்திரன், ஐராவதம், சிவப்பிரியா், வேதராசி, சுவேதகேது, சுவேதன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

இந்தத் தலத்தில் சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி என மூன்று சிவமூர்த்தங்கள் அருள்வது விசேஷம். அதேபோல் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என மூன்று தீர்த் தங்களும் ஆல், கொன்றை, வில்வம் ஆகிய மூன்று தல விருட்சங்களும் திகழ் வது இத்தலத்தின் தனிச் சிறப்பம்சங்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அடியார்கள் போற்றிய அற்புதத்தலம்

இவ்வளவு சிறப்புகளையுடைய திருத் தலத்தை சமயக்குரவர்கள் பாடாமல் இருப்பார்களா? திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற தலம் திருவெண்காடு. மேலும் பரஞ்சோதி முனிவர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்தடிகள், கச்சியப்ப சிவாச்சார்யர், காஞ்சி சிதம்பர முனிவர், சோமசுந்தர தேசிகர், சைவ எல்லப்ப நாவலர் ஆகியோரும் இத்தலத் தைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

அகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்!

திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் சிவதீக்ஷௌ பெற்ற தலம் இது. சிறுதொண்டர் இளமையில் வாழ்ந்ததும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கை பிறந்ததும் இந்தத் தலத்தில்தான். `சிவஞானபோதம்' எனும் சைவ சித்தாந்த நூலை அருளிச்செய்த மெய்கண்டார் அவதரித்த தலமும் இதுவே.

புதன் பரிகார திருத்தலம்

நவகிரகங்களில் ஒன்றான புதன் சிவ பெருமானை வழிபட்ட தலம் இது. இத்தலத்தில் புதனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டு, அதன்பின் புத பகவானை தரிசித்தால் கல்வியறிவு ,பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம் ஆகியவற்றில் சிறப்புடைவராக விளங்கலாம்.

அகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்!

கல்விக்குக் காரகமாக விளங்குவதால் புதனுக்கு வித்யாகாரகன் என்றும் பெயருண்டு. வித்தைக்கு அதிபதியான பிரம்மனின் சந்நிதியும் புதன் சந்நிதிக்கு தெற்கே அமைந்துள்ளது. புதனின் தந்தையான சந்திர னின் கோயிலும், சந்திர தீர்த்தமும் புதன் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளன.

ஜாதகத்தில் புதன், 5-ம் இடத்தின் சம்பந்தம் பெறுவதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் தடைப்படலாம். மேற்படி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து, முக்குளத் தீர்த்தத்தில் நீராடி மூலவரை வழிபட்டு, புதபகவானையும் வேண்டிக் கொண்டால் குழந்தைப்பேறு பெறலாம்.

அகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்!

புதன் ஜாதகத்தில் வலுவிழந்து காணப்பட்டால் சிலருக்கு அறிவுத் திறனில் குறைபாடும், கல்வியில் மந்தமான நிலையும், நரம்பு தளர்ச்சியும் ஏற்படலாம். மேற்கண்ட குறைகளை இத்தலத்தில் வந்து வழிபட்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அகோர மூர்த்தி தரிசனம்!

இத்தலத்தின் தனிச் சிறப்பு ஸ்ரீஅகோர மூர்த்தி தரிசனம். இந்த மூர்த்தி, மகிமைமிகு 64 சிவமூர்த்தங்களில் 43-வது மூர்த்தியாவார். இவரின் திருவுருவத்தை இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.

அகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்!

திருவெண்காடு அகோரமூர்த்தியை தரிசிக்கக் கண்கோடி வேண்டும். இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டை விரலையும், அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் காட்சி அருள்கிறார். எட்டு திருக்கரங்கள் இந்த ஸ்வாமிக்கு. ஆறு கரங்களில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி ஆகியவை திகழ, இரண்டு கரங்கள் திரிசூலம் ஒன்றை ஏந்தியுள்ளன. சிவந்த ஆடைகளை அணிந் தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகை களுடனும், நெற்றிக்கண்ணோடும், கோரைப் பற்களுடனும், 14 நாகங் களைத் திருமேனியில் பூண்டு கம்பீரமாகக் காட்சி அருள்கிறார், இந்த அகோர மூர்த்தி.

அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடிய ‘தூண்டு சுடர் மேனி’ எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் சொல்லப்பட்ட ஈசனின் திருவடிவம் முழுமையும் அமைந்த திருக்கோலம் இந்த மூர்த்தியினுடையது.

அகோர மூர்த்தியின் அருள் பெறுவோம்!

அருள் நிறைந்த அகோர பூஜை!

இந்த அற்புதத்தலம் குறித்து சுவாமிநாத சிவாசார்யாரிடம் பேசினோம்.

“மாசி மாதம் தேய்பிறை பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக் கிழமையுடன் கூடிய நாளில் இரவு 12 மணிக்கு அகோரமூர்த்தி அவதரித்தார். அதை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் மாசிமக உற்சவத்தின் ஐந்தாம் திருவிழா அன்று அகோரமூர்த்தி மருத்துவாசு ரனை அடக்கும் நிகழ்வு நடைபெறும்.

மேலும் ஞாயிறுதோறும் இரவில் இங்கு அகோர பூஜை நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் மிக விசேஷ மாக அகோரபூஜைகள் நடைபெறும். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி வாழ்வில் இன்பங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருமண வரம், புத்திரப்பேறு, நோயற்ற வாழ்வு என்று வேண்டும் வரங்களையெல்லாம் அருள்பவர் அகோரமூர்த்தி. குறிப்பாக, எதிரி களின் தொல்லைகள் உள்ளவர்கள் இங்குவந்து வேண்டிக் கொண்டால், ஸ்வாமியின் அருளால் அவர்களின் தொல்லைகள் விலகும்; சத்ரு பயம் நீங்கும்” என்றார் சுவாமிநாதன்.

நீங்களும் ஒருமுறை திருவெண்காடு சென்று அகோர மூர்த்தியை வழிபட்டு, அவரின் திருவருளைப் பெற்று வாருங்களேன்!

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: திருவெண்காடு

சுவாமி: ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீபிரம்மவித்யாம்பிகை

தலச் சிறப்பு: காசிக்குச் சமமாகத் திகழும் ஆறு தலங்களுள் ஒன்று. மூன்று சிவ மூர்த்தங்கள், மூன்று தல விருட்சங்கள், மூன்று தீர்த்தங்களால் சிறப்புப் பெற்ற க்ஷேத்திரம் இது.

வழிபாட்டுச் சிறப்பு: இங்கு வந்து ஸ்ரீசுவேதாரண் யேஸ்வரரை வழிபட்டு அதன்பின் புத பகவானை தரிசித்தால், கல்வியறிவு,பேச்சுத் திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம் ஆகியவற்றில் சிறப்படையலாம். ஞாயிறுதோறும் இரவில் இங்கு நடைபெறும் அகோர பூஜை பெரும் வல்லமைகளை அருள வல்லது.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் மேலையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கே சுமார் 3 கி.மீ தூரத்தில் திருவெண்காடு உள்ளது. பஸ், கார், ஆட்டோ வசதி உண்டு.