
தீர்த்தக் கரையில் புருஷாமிருகம், விசேஷ கோலத்தில் சனி பகவான்...
தமிழகத்தில் புராணச் சிறப்புகளும் வரலாற்றுப் பெருமைகளும் கொண்ட ஒரு மூதூர் திருவாதவூர். சங்க காலப் புலவர் கபிலர், மாணிக்கவாசகர் ஆகியோர் அவதரித்த தலமிது. கடையேழு வள்ளல்களில் சிறந்தவனான பாரி மன்னனின் தென்பறம்பு நாட்டின் 300 ஊர்களில் இதுவும் ஒன்று என்கிறது வரலாறு.
பஞ்சபூதங்களும் வழிபட்ட சிறப்புக்குரிய தலமிது. வாயுதேவன் வழிபட்டு அனுமனைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்த தலம். பிருகு முனிவரால் ஆற்றல் குன்றிய அக்னிதேவன், தனது ஆற்றலைத் திரும்பப் பெற்ற தலம். கௌதம முனிவர் வழிபட்ட தலம். கபில முனிவரின் வீரஹத்தி தோஷத்தை நீக்கிய தலம்.
மதுரையிலிருந்து வடக்கே 25 கி.மீ. தூரத்திலும், மேலூரிலிருந்து மேற்கே 8 கி.மீ. தூரத்திலும் உள்ளது திருவாதவூர். இங்குதான் வேதநாயகி அம்மன் உடனுறை திருமறைநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

மாண்டவ்ய முனிவரின் சாபம் பெற்ற சனிபகவானின் வாதநோயை ஈசன் இங்கு தீர்த்ததால் இத்தலம் ‘வாதவூர்' எனப் பெயர் பெற்றது. இதனால் இங்கு வந்து திருமறைநாதரை வழிபட்டால் வாதக்கோளாறுகள், கை கால் முடக்கு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட எல்லா வாதநோய்களும் தீரும் என்று நம்பப்படுகிறது.
`இருந்தையூர்' என்ற பழைமையான புகழ்கொண்ட சங்க கால பாண்டிய நகரமே பின்னர் திருவாதவூர் என்றானது என்கிறது வரலாறு. வேதநகர், மாணிக்கபுரம், வாதபுரம், வாயுபுரம், பைரவபுரி, பிரம்மபுரம், குருவனம், சம்யாகவனம் எனப் பல பெயர்களில் இத்தலம் வழங்கப் படுகிறது. பாண்டிநாட்டு வைப்புத் தலங்களில் இதுவும் ஒன்று. திருமாலுக்கு ‘நானே வேதம்' என்று ஈசன் உபதேசித்த தலம்.
அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பிருகு முனிவரின் மனைவி கியாதியின் தலையைக் கொய்தார் திருமால். இந்தப் பாவம் நீங்க இங்கு வந்து வணங்கி சாபவிமோசனம் பெற்றாராம். இங்கு தல விருட்சம் மகிழ மரம். சிவ தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம் என ஏழு புண்ணிய தீர்த்தங்கள் இங்கு உள்ளன.

திருவாசகம் இயற்றிய மாணிக்க வாசகரின் அவதாரத் தலம் என்பதால் இது சைவர்களுக்கு முக்கியத் தலமாக உள்ளது. திருமறைநாதர் ஆலயத்துக்கு அருகே மாணிக்கவாசகர் பிறந்த இடம், இன்றும் கோயிலாக இருந்து வருகிறது. அன்றாடம் இரண்டு கால பூஜைகள் இங்கு சிறப்புற நடைபெறுகின்றன.
வியாழக்கிழமை மற்றும் மகம் நட்சத்திர நாளில் இங்கே வந்து வழிபடுவது சிறப்பு. படிப்பு வராதவர்கள் மந்தமாக இருப்பவர்கள், பேச்சுத் திறன் குறைந்தவர்கள் இங்கு வந்து மாணிக்கவாசகருக்கு நெய் தீபமேற்றி வழிபட் டால், விரைவில் குணம் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு வந்து திருவாசகம் முற்றோதுதல் செய்தால் எண்ணியது ஈடேறும் என்பதும் நம்பிக்கை. ஆனி மாத மக நட்சத்திர நாளில் இங்கு மாணிக்கவாசகர் குருபூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருமறைநாதர் கோயிலுக்கு முன்பு, ஈசன் தம் பாதச் சிலம்பொலி எழுப்பி, மாணிக்கவாசகரை ஆட்கொண்ட சிலம்பொலி நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்பங்களுடன் காணப்படுகிறது. `இது மாணிக்கவாசகர் கட்டியது' என்கிறார்கள். ஆவுடையார்கோயில் சிற்பங்களுக்கு இணையான மண்டபம் இது. அழகிய நுட்பமான கொடுங்கைகள் இங்கு அதிசயமாகப் பார்க்கப்படுகின்றன. ஆலய நுழைவாயிலில் கபிலர் சிலையும், ஆலயத்துள் ஒற்றைக்காலை மடக்கி அமர்ந்தபடி அபூர்வக் கோலத்தில் அருளும் சனீஸ்வரரின் சிலையும் உள்ளன.

பரந்துவிரிந்த இந்த ஆலயத்தில் எண்ணற்ற சந்நிதிகளும் அழகிய சிற்பங்களைக் கொண்ட மண்டபங்களும் தூண்களும் அமைந்துள்ளன. சிந்தாமணி விநாயகர், முருகப்பெருமான், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, மாணிக்கவாசகர், சுந்தரர் சந்நிதிகள் இங்கு சிறப்பானவை.
ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரத் தைத் தாண்டி உள்ளே சென்றால், கருவறையில் திருமறைநாதர் கிழக்கு நோக்கி, பசுவின் குளம்புகள் பதிந்துள்ள சுயம்புத் திருமேனியுடன் அருள்பாலிக்கிறார்.
பிரம்மன் நடத்திய ஆரண கேத வேள்வி யில் நீலத் திருமேனியளாக அம்பிகை இங்கு அவதரித்தாள். அதனால் அம்பிகை இங்கு கிழக்கு நோக்கி ஆரணவல்லி, திருமறைநாயகி, வேதவல்லி என்ற திருநாமங்களோடு அழைக்கப்படுகிறாள்.
சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, மாசி ஆகிய ஒன்பது மாதங்களில் இங்கே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத் திங்கள் கிழமைகளில் 1008 சங்குகளைக் கொண்டு ஈசனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.
திருமறைநாதர் ஆலயத்துக்கு வெளியே வடக்கே உள்ள கண்மாய், `விஷ்ணு தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. இங்கு புருஷாமிருகம் (மனிதத்தலையும் மிருக உடம்பும் கொண்டது) பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது. பாண்டவர்களின் தந்தை பாண்டு மகாராஜா அசுவமேத யாகம் செய்யாமல் இறந்ததால், அவருக்குச் சொர்க்கத்தில் இடமில்லை என்றானது. இதனால் பஞ்ச பாண்டவர்கள் இணைந்து அசுவமேதயாகம் நடத்துகின்றனர். அப்போது அவர்களுக்கு உதவியது புருஷா மிருகம்.

சிவ பக்தரான புருஷாமிருகத்தைக் கண்ணன், திருவாதவூரின் விஷ்ணுதீர்த்தத்தில் காவல் தெய்வமாக நிறுத்தினார் என்கிறது புராணம். இன்றும் இந்தப் புருஷாமிருகத்தை மழை வருவதற்காக வேண்டிக்கொள்கிறார்கள் இந்த ஊரார்.
ஒருமுறை கயிலையில் ஸ்ரீபைரவரின் வாகனமான சுவானத்தை (நாய்) மறைத்துவிட்டார் ஈசன். இதனால் பைரவர், ஈசனிடம் தனது வாகனத்தை மீண்டும் அளிக்கும்படி வேண்டினார். ஈசனும் திருவாதவூர் சென்று வழிபட்டால் தொலைந்த வாகனம் கிடைக்கும் என்று வழிகாட்டினார். அதன்படி திருவாதவூர் வந்த பைரவர் இங்கு பைரவர் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டாக்கித் திருமறைநாதரை அபிஷேகித்து வணங்கினார்.

அதனால் தனது நாய் வாகனத்தையும் மீட்டார். இதனால் இங்குள்ள பைரவரைத் தொடர்ந்து எட்டு அஷ்டமி நாளில் தீபமேற்றி வணங்கி வந்தால், தொலைந்த வாகனங்கள் மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேலும், இத்தலத்தில் உள்ள சனிபகவான், பைரவர் மற்றும் திருமறைநாதரை ஐந்து நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் சகலவிதமான பாவங்களும் தோஷங்களும் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை.
இழந்த வாகனத்தைத் திரும்பப் பெறவும், வாத நோய்கள் தீரவும், குழந்தை இல்லாதவர்கள் பிள்ளை வரம் வேண்டியும், சகலவிதமான தோஷங்கள் நீங்கவும் பலரும் இங்கு வந்து வேண்டி, பலன் பெற்றுச் செல்வதை இன்றும் கண்கூடாகக் காணமுடிகிறது. நீங்களும் பலன் பெற விரும்பினால் ஒருமுறை இத்தலத்துக்குச் சென்று வரலாமே!