திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

வெற்றியைப் பரிசளிப்பாள் உலகாட்சி அம்மன்!

ஸ்ரீஉலகாட்சி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீஉலகாட்சி அம்மன்

பெரும்பாலான சிவாலயங்களில் தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் அன்னை இவள்.

அம்பிகையின் வடிவங்களில் மிக உக்கிரமானதும் பிரசித்தி பெற்றதுமான வடிவம் காளி. இத்தேவி சிவபெருமானுடைய ருத்ர அம்சத்தில் தோன்றியவள்.

பெரும்பாலான சிவாலயங்களில் தனிச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் அன்னை இவள். காளி வடிவங்களில் மிகவும் தொன்மையானது, `நிசும்பசூதனி’ எனப்படும் ‘வடபத்ரகாளி’ திருவுருவாகும்.

பிற்காலச் சோழர்கள், காளி வழிபாட்டில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்கள். அவர்கள் தங்களுக்கு வெற்றிதரும் குல தெய்வமாகக் காளியைக் கொண்டாடினார்கள். அவ்வகையில், தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீமகாலிங்க க்ஷேத்திரமான திருவிடைமருதூரிலும் அதைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளிலும் சோழர்கள் நிர்மாணித்து வழிபட்ட தொன்மையான காளிக்கோட்டங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்.

ஸ்ரீஉலகாட்சி அம்மன்
ஸ்ரீஉலகாட்சி அம்மன்

முதலாம் பராந்தக சோழனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அம்பிகை, திருவிடைமருதூர் செங்கழுநீர் ஊருணிக்கு வடகரையில் (தெற்கு வீதி) சிறு கோட்டத்தில் குடிகொண்டுள்ளாள். நிசும்பசூதனி எனும் வடிவுடைய பத்ரகாளியே ஆயினும், உலகத்துக்கே தாயாக விளங்கி அருளாட்சி செய்யும் அன்னைக்குச் சோழ மன்னர்கள் ஸ்ரீஉலகாட்சியம்மை என்று திருநாமம் சூட்டி வழிபட்டுள்ளனர்.

கருவறையில், அன்னையின் இடது பாதத்தின் கீழ் அசுரனொருவன் மிதிபட்டுக் கிடக்க, அவளின் வலது கால் தூக்கி மடக்கிவைத்த நிலையில் காணப்பெறுகிறது. வலப்புறத்து நான்கு கரங்களில் குறுவாள், போர்வாள், வில், உடுக்கை ஆகியவை திகழ, இடப்புறத்து நான்கு கரங்களில் விஸ்மய முத்திரை, அம்பு, கேடயம், கபாலம் ஆகியவை திகழ்கின்றன. மேலும் கீழிரு கரங்களில் சூலாயுதத்தைத் தாங்கியிருக்கிறாள் அன்னை.

வெற்றியைப் பரிசளிப்பாள் 
உலகாட்சி அம்மன்!

வலிமை பொருந்திய அசுரனை அழிக்க வந்தவளாக... கோரைப் பற்களும், பிதுங்கிச் சினந்த விழிகளும், வளைந்துயர்ந்த புருவங் களும், ஜ்வாலை போன்ற நெற்றிக் கண்ணும் துலங்க, இந்த அன்னை மறக்கருணையோடு காட்சியளித்தாலும், திருமுகத்தில் அறக்கருணை வெளிப்படுகிறது. அன்னையின் சிரசில் சூரிய சந்திரரும் சூலக் குறியும் திகழ, அதற்கு நேர்மேலாக சர்ப்பம் பொறிக்கப் பெற்றுள்ளது. மேலாடைக்குப் பதிலாக அரவம் புனைந்து காட்சி தரும் இந்த மாகாளி, தன்னை வணங்கிடுவோருக்கு அருள்மழைப் பொழியும் கற்பகமாக விளங்குகிறாள்.

இந்தக் காளி நரம்பு மண்டலத்துக்கு அதிபதி. செவ்வாய் ஞாயிறுகளில் ராகு காலத்தில் செம்மலர்களால் அர்ச்சித்து இவளை வழிபட்டால், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

பராந்தக சோழன் காலத்தில் வெற்றித் தெய்வமாக கொண்டாடப்பெற்ற இந்த அன்னையின் ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைய, 1962-ம் வருடத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் முற்றிலும் சேதமுற்றது. ஆயினும், இந்த அன்னையின் திருமேனி மட்டும் எவ்வித சேதமும் இன்றி பொலிவுடன் இருந்ததை வியப்புடன் பகிர்கிறார்கள், இப்பகுதி மக்கள்.

ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்
ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்
ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்
ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்

பின்னர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, திருக்கயிலாயப் பரம்பரை திருவாவடுதுறை ஆதினத்தின் ஒத்துழைப்பாலும், பக்தர்களின் சீரிய முயற்சியாலும் புது ஆலயம் எழுப்பப் பெற்று 1962-ம் வருடம் ஓர் குடமுழுக்கும்; 2011-ல் பிறிதொன்றுமாக நிகழ்த்தப்பெற்றது.

ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்
ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்

“இந்தக் காளி நரம்பு மண்டலத்துக்கு அதிபதி. ராகு கிரகத்துக்குரிய தேவதை. இந்த தேவியைச் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் சிவந்த நிற ஆடை சாத்தி, செம்மலர்களால் அர்ச்சித்து வழிபடுவோருக்குச் சகல தோஷங்களையும் போக்கி வெற்றிகள் குவிந்திட அருள்பாலிப்பாள். தேவிக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் அன்னையை வழிபட்டால், சகல நன்மைகளையும் அருளி காத்திடுவாள். அன்புடன் தன்னை வழிபடுவோரின் குறைகளைப் போக்கி அவர்களுக்கு நன்மைகளை அருள்கிறாள் இந்த தசபுஜ மாகாளி” என்கிறார் இக்கோயில் சிவாசார்யர்.

ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்
ஸ்ரீஉலகாட்சி அம்மன் கோயில்

எப்படிச் செல்வது ? : கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூரில் இறங்கினால், ஒரு பர்லாங் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதியுண்டு.

"முருகா என்றழைத்தால் ..."

விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள் - மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா” என்கிறார் அருணகிரிநாதர். 'முருகா...' என்று அழைத்தால் சகல தேவர்களும் ஓடி வருவார்களாம்.

முருகன்
முருகன்

ஏன் என்றால், மு என்றால் முகுந்தன், ரு என்றால் ருத்ரன், கா என்றால் பிரம்மா, இதனால் முருகா என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் வருகைக்கான புண்ணியமும் கிடைக்கும் என்பார்கள்.

அதுமட்டுமா! முகுந்தன் தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார். ருத்ரன் எனும் ஈசன் சக்திக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார். பிரம்மா தமது மனைவியான கலைமகளை நாக்கில் வைத்திருக்கிறார். எனவே முருகனை அழைத்தால் முப்பெருந்தேவிகளும் கூடவே வருவார்கள் என்கிறார் அருணகிரிநாதர்.

இதனால்தான் 'முருகா' என்னும் திருநாமம் சகல தெய்வங்களையும் கூடவே அழைத்துவரும் என்கிறார் அருணகிரிநாதர்.

- எம்.அபர்ணா, சென்னை-21