Published:Updated:

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

வாலிகண்டபுரம்
பிரீமியம் ஸ்டோரி
வாலிகண்டபுரம்

பெரம்பலூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் நான்கு வழிச் சாலையில், சுமாா் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம்.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

பெரம்பலூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் நான்கு வழிச் சாலையில், சுமாா் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம்.

Published:Updated:
வாலிகண்டபுரம்
பிரீமியம் ஸ்டோரி
வாலிகண்டபுரம்

வியக்கவும் சிலிர்க்கவும் வைக்கும் சரித்திரப் பின்னணியுடன் நூற்றாண்டுகளைக் கடந்து திகழும் மாபெரும் காலப் பொக்கிஷமே வாலிகண்டபுரம் எனும் ஊர். கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த போர்களின் சாட்சியாகத் திகழும் இவ்வூர், அந்தப் போர்களால் பல சிதிலங்களை ஏற்றுக்கொண்ட தலமும்கூட.

பெரம்பலூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் நான்கு வழிச் சாலையில், சுமாா் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம். நதி தீரங்களே நாகரீகங்களின் பிறப்பிடம் என்பதற்கு ஏற்ப, இலாடபுரத்து பச்சை மலையில் உற்பத்தியாகி இப்பகுதியை வளப்படுத்தும் கோனேரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இந்தச் சிற்றூர். கண்டீரம் என்பதற்கு சிங்கம் என்றும் சதுரக் கள்ளி என்றும் பொருள் சொல்வர்.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

சங்க காலத்தில் இந்தப் பகுதியில் திகழ்ந்த கண்டீரம் எனும் குறுநில ராஜ்ஜியத்தின் தலைநகராக இவ்வூர் திகழ்ந்தது என சரித்திர ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். சங்க காலத்துக்கும் பிற்காலச் சோழர் காலத்துக்கும் இடைப்பட்ட - களப்பிரர் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலத்திலேயே வாலிகண்டபுரம் என்று பெயர் பெற்றிருக்கக்கூடும் என்கிறார்கள்.

வாலி வழிபட்ட திருத்தலம்

புராணத்தின்படி ஒரு காரணம் சொல்லப் படுகிறது. ராமாயணக் காவியத்தின் நாயகனான ராமபிரான், வானரச் சேனைகளின் தன்னிகரில்லாதத் தலைவனாக விளங்கிய வாலியை முதன்முதலாக சந்தித்த இடம் இதுவாம். ஆக, `வாலி+கண்ட+புரம்’ என்ற பெயருடன் திகழ்கிறது என்றும் கூறுவர். இதற்கேற்ப இவ்வூர் சிவாலயத்தில் இறைவன் வாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்கிறார்.

இவ்வூர் வணிக மையமாகவும் திகழ்ந்துள்ளது. சங்ககாலம் தொட்டு தொண்டி உள்ளிட்ட சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினங்களுடன் இவ்வூரை இணைக்கும் வணிகப் பெருவழி இருந் துள்ளது. சோழா்களின் காலத்திலும் முக்கிய வாணிப நகரமாக விளங்கியுள்ளது வாலிகண்டபுரம். சோழர் ஆட்சியில் திகழ்ந்த வாணிபக் கூட்டுறவுக் குழுக்களில் ஒன்றான `மணி கிராமம்’ என்ற குழுவினரின் ஆதித் தலம் வாலிகண்டபுரம்.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

இவ்வூரின் சரித்திரப் பக்கங்கள் சொல்லும் பல தகவல்கள் இன்னும் உண்டு. முதலாம் பராந்தகன் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில், சோழத்தின் பல பகுதிகள் ராஷ்டிரகூடர்களிடம் வசப்பட்டன. அதனால் சோழப் பேரரசு குறுகியது. வாலிகண்ட புரமும் அதன் பகுதிகளும் சோழநாட்டின் எல்லைகளாக மாறின.

அவ்வகையில் இவ்வூரின் அருகிலுள்ள தூங்கானை கிராமத்தில் அமைந்த `துர்க்கம்’ சோழ நாட்டின் காவல் கண்காணிப்பு மையமாகச் செயல்பட்டுள்ளது. மட்டுமன்றி, விஜயநகரப் பேரரசின் இறுதிக்காலத்தில் நிகழ்ந்த பல போா்களின்போதும், இவ்வூர் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் பெற்ற பகுதியாக இருந்துள்ளது.

செஞ்சி நாயக்க அரசா்களின் காலத்திலும் தூங்கானை துா்க்கத்தில் ஒரு காவல் மண்டபம் அமைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செஞ்சி மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் பிஜப்பூர் சுல்தானால் கைப்பற்றப்பட்டு, வாலிகண்டபுரம் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, தூங்கானை கிராமத்துக் காவல் மண்டபம் காவல் கோட்டையாக மாற்றப்பட்டதாம்.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

ஆக, வாலிகண்டபுரமும் அருகிலுள்ள தூங்கானை காவல் கோட்டையும் சரித்திரத்தில் பிரிக்கமுடியாத சின்னங்களாகத் திகழ்கின்றன. இந்தத் தூங்கானைக் கோட்டையே `இரஞ்சன்குடிக் கோட்டை’ ஆகும்.

இன்றைக்கு வாலிகண்டபுரத்தின் சரித்திரப் பின்னணியைச் சொல்லும் சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திலும் ஒரு கோட்டை இருந்தது. அங்கிருந்தே ஆட்சியாளர்கள் நிர்வாகம் செய்தனர் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அருகிலுள்ள சதுரக் குளம் மற்றும் சிவாலயத்தை ஒட்டி அந்தக் கோட்டையின் சுவர் அமைந்திருந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இனி, கோயிலை தரிசிப்போம்.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

பிற்காலச் சோழா்கள் காலத்தில், அருள்மிகு வாலீஸ்வரா் கோயில் பல வளா்ச்சிகளைக் கண்டுள்ளது. கி.பி. 885-ல் ஆதித்த சோழன் காலத்தில் இக்கோயில் கற்றளியாக புனரமைக்கப்பட்டது. ஆக, தற்போதுள்ள கோயிலின் பிரதானக் கட்டுமானங்கள் 1135 வருடங்கள் பழைமை வாய்ந்தது. தஞ்சை பெரியகோயிலைவிட 127 வருடங்கள் பழைமையானது எனலாம்.

இத்தலத்தில் அருளும் இறைத் திருமேனிகளின் சிற்ப அழகின் சிறப்பை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. விண்ணை அளந்து நிற்கும் ஏழு நிலை இராஜ கோபுரமும் இத்தலத்தின் புராதனப் பெருமையைப் பறைசாற்றுகிறது.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

திருவாலீஸ்வரத்துப் பரமேஸ்வரன்

சிருஷ்டிக் கடவுளான நான்முகன் தன் படைப்புத் தொழில் சிறக்கவேண்டும் எனும் பிரார்த்தனையுடன் இங்கே கோனேரி ஆற்றின் கரையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாா். எனவே, வாலிகண்டபுரம் ஈசனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும் ஒரு பெயர் உண்டு. இதையொட்டி இத்தலத்தை `பிரம்ம புரி’ என்றும் நதியை `பிரம்ம தீா்த்தம்’ என்றும் அழைக்கின்றன ஞானநூல்கள். தல விருட்சம்-  மாவிலங்கை.

ராமாயணக் காலத்தில் வானர சேனைகளின் அரசனான வால வழிபட்டதால், இத்தல ஈசனுக்கு ஸ்ரீவாலீஸ்வரா் என்ற திருநாமமும் அம்பிகைக்கு ஸ்ரீவாலாம்பிகை என்ற திருநாமமும் ஏற்பட்டது. ஊரின் பெயரும் வாலிகண்டபுரம் ஆயிற்று என்கின்றன புராணங்கள்.

சூதாட்டத்தில் தோற்றுப்போன பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த காலத்தில், இப்பகுதியை ஆண்ட விராட மன்னனிடம் சேவகா்களாக பணியாற்றினார்கள். அப்போது பாண்டவர்கள் கோனேரி நதியான பிரம்ம தீா்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபட்டுப் பல பேறுகளைப் பெற்றனா். இப்பகுதி விராட மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்ததை உணா்த்தும் வண்ணம் `இலாடபுரம்’ என்ற ஊா் வாலிகண்டபுரத்தின் அருகே அமைந்துள்ளது.

ராஜராஜச் சோழன் தன்னுடைய வெற்றித் திருநாமங்களில் ஒன்றான `கேரளாந்தகன்’ என்னும் பெயரை நினைவுகூரும் விதமாக வாலிகண்டபுரத்துக்கு `கேரளாந்தக புரம்’ என்ற பெயா் சூட்டி மகிழ்ந்ததாக இத்தலத்தின் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

அருள்மிகு வாலீஸ்வரரின் இந்தச் சாந்நித் தியத்துக்குச் சான்றாகத் திகழ்கிறது, இக்கோயிலின் மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

வாலிகண்டபுரத்தை ஆண்ட `சுத்தமல்லன் ஜயங்கொண்ட சோழ வன்னாடுடையான்’ என்பவா் மழலைப் பேறு இன்றி வருந்தினாா். இவா் தனது குறை தீர வாலீஸ்வரப் பெருமானை உருகி வழிபட்டார். அதன் பலனாக அவரின் மனைவி ஓர் அழகான ஆண் மகவினை ஈன்றெடுத்தாா். சுத்தமல்லன், தன் குறை தீா்த்த ஈசனுக்குத் தங்கத்தாலான பட்டம் செய்து அணிவிக்கும் பொருட்டும் `புகழறைப்பூண்டி’ என்ற கிராமத்தை இறையிலியாக அளித்துள்ளதை வாலிகண்டபுரத்தின் கல்வெட்டு தொிவிக்கிறது. இன்றும் மழலைப்பேறு இல்லாத அன்பா்கள் இத்தல ஈசனை வழிபட்டு தங்களது குறைகள் நீங்கப் பெறுகின்றனா்.

`வாலி’ இத்தலத்தின் ஈசனை வழிபட்ட பிறகே, தன்னுடன் மோதும் எதிரியின் பலத்தில் சரிபாதியைத் தன் பலத்துடன் பெற்று எவரையும் வீழ்த்தும் வல்லமை பெற்றதாகப் புராணங்கள் தொிவிக்கின்றன. திருமண தோஷம் உள்ளவா்கள் இத்தலத்தில் வழிபாடுகள் செய்தால், தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுவதாக தொிவிக்கின்றனா். மேலும், எம பயம் நீங்கவும் ஆயுள் விருத்திக்காகவும் இத்தலத்தில் வழிபாடு செய்கின்றனா்.

அன்னை ஸ்ரீவாலாம்பிகை தெற்கு நோக்கிய வண்ணம், நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். இந்த அம்பிகைக்கு ஸ்ரீபிரகன்நாயகி என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. ஸ்ரீவாலீஸ்வரா் கருவறைக்கு வெளிப் பிராகாரத்தில், சுமாா் 9 அடி உயரத்தில் மிகக் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீதண்டாயுதபாணி. அவருக்கு எதிரில் சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

நடராஜர் மண்டபமும் திருக்குளமும்

கோயிலின் ஏழு நிலை ராஜ கோபுரத்திற்கு முன்பாக இடது புறத்தில் அழகான ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்துக்கு  `நடராஜா் மண்டபம்’ என்று பெயா். நடராஜா் சிற்பமும், நாட்டிய சிற்பங்களும், யாளி வடிவங்களும், வீரா்கள் சவாரி செய்வது போன்ற குதிரைச் சிற்பங்களும் செதுக்கப்பட்ட அழகான இந்த மண்டபம், ஸ்ரீகிருஷ்ணதேவ ராயா் காலத்தில் நிா்மாணிக்கப்பட்டுள்ளது. `கட்டி முதலிகள்’ மரபினரால் அவா்களின் நிா்வாகியான `கிருஷ்ணப்ப நாயக்கா்’ என்பவரால் நிா்மாணிக்கப்பட்டதாம் இம்மண்டபம். கோயில் வளாகத்தில் சதுர வடிவில் அமைந்துள்ளது திருக்குளம். இக்குளத்தில் இறங்குவதற்குப் படிக்கட்டுகளும் குளத்தைச் சுற்றி தரை மட்டத்திற்கு அழகான மண்டபமும் நிா்மாணிக்கப்பட்டுள்ளன. இதனைச் `சரவண தீா்த்தம்’ என்று குறிப்பிடுகின்றனா். இத்தீா்த்தத்தில் வாலி சிவபூஜை செய்வது போன்ற சிற்பம் காணப்படுகிறது.

மன்னா்கள் திருக்கோயிலுக்கு வரும்போது, நீராடிய பின்னா் இறைவனை தரிசிக்க வசதியாக, (கி.பி. 1761-ல்) மதுரையை ஆட்சி புரிந்த `கிருஷ்ண கோனாா்’ என்பவரால் இத்திருக்குளமும் அதனைச் சுற்றியுள்ள அழகான தா்பாா் மண்டபமும் சேர நாட்டுக் கலை அம்சத்துடன் நிா்மாணிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் தொிவிக்கின்றன.

மூன்று நந்திகள்...

ராஜகோபுரத்தை அடுத்துள்ள அழகிய சிறு மண்டபத்தில் அமைதியே உருவாகக் காட்சி தருகிறார் நந்திதேவர். இக்கோயிலில் ஸ்ரீவாலீஸ்வரா் அருள்பாலிக்கும் கருவறையிலிருந்து மூன்று நந்திதேவர்கள் அருள்பாலிப்பது, விசேஷ அம்சமாகும். ஆம்! பால நந்தி, வாலிப நந்தி, யவ்வன நந்தி என்ற மூன்று திருக்கோலங்களில் நந்தியெம்பெருமான் இங்கு அருள்கிறாா். இது மானிடப் பிறவியின் இளமைக் காலம், வாலிபப் பருவம் மற்றும் முதுமைக் காலத்தை உணா்த்துவதாக அமைந்துள்ளது.

அருணகிரி நாதா், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், குமர குருபரா், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளாா், திருமுருக கிருபானந்த வாரியாா் போன்ற அருளாளா்கள் இத் தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளனர். அருணகிரிநாதருக்கு முக்தி அடைய முருகன் வழிகாட்டி அருளிய திருத்தலம் `வாலிகண்டபுரம்’ என்றும் கூறப்படுகிறது.

ஸ்ரீவாலாம்பிகை
ஸ்ரீவாலாம்பிகை

தொடர்ச்சியாக நடந்த பல போர்களின் விளைவாக பிற்காலத்தில் வீழ்ச்சியடைந்து சிறு ஊராகிப்போனது கால தோஷத்தின் விளைவு. மிகவும் சிதிலமடைந்திருந்த வாலீஸ்வரா் திருக்கோயில் இந்திய தொல்லியல் துறையினரால் சமீப காலத்தில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கி.பி. 1767 ஆம் ஆண்டு இரண்டாம் மைசூா் போா் தொடங்கிய போது, ஹைதா் அலி தன் படைகளின் ஒரு பிரிவை அரியலூா், உடையார்பாளையம் பாளையக்காரா்களுக்கு ஆதரவாக அனுப்பி வைத்தார். அவர்கள் ஆற்காடு நவாபின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களின் பாளையப் பகுதிகளை மீட்க ஹைதர்அலியின் உதவியை நாடினார்கள். இந்தப் போர் நடைபெற்ற காலத்தில் இவ்வூர் வழியே ஹைதர்அலியின் படைகள் சென்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்தப் படைகளால் இக்கோயில் சேதத்துக்கு உள்ளானது என்பது, `ஜான் வாலஸ்’ என்ற ஆராயச்சியாளரின் கருத்தாகும்.

ஸ்ரீவாலீஸ்வரர்
ஸ்ரீவாலீஸ்வரர்
வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!
வரலாற்றுப் பொக்கிஷம் வாலிகண்டபுரம்!

சரித்திரப் பெருமையும் ஆன்மிகச் சிறப்பும் மிக்க வாலிகண்டபுரம், சிவனடியார்களும் சரித்திர ஆர்வலர்களும் அவசியம் தரிசிக்கவேண்டிய பொக்கிஷமாகும். மேலும் மழலைப் பேறுக்காகவும், தீராத நோய்கள் தீரவும், திருமணம் கைகூடவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த திருத்தலமும் ஆகும். காலை 7 முதல் முற்பகல் 11 மணி வரையிலும்; மாலை 4:30 முதல் இரவு 7:30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

சரித்திரம் பேசும் கல்வெட்டுகள்!

பல நூற்றாண்டுகள் உன்னத நிலையிலிருந்த இக்கோயில் கி.பி.17மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் பேரழிவைச் சந்தித்துள்ளது. இக்கால கட்டத்தில் போா் வீரா்கள் தங்கும் படை வீடாகவும் போா்க் கருவிகள் வைக்கும் கிடங்காகவும் பயன்பட்டுள்ளது.

இக்கோயிலில் 134 கல்வெட்டுத் தொடா்கள் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் படியெடுத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள், முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் பாளையக் காரா்கள் அரசாண்ட காலம் வரை பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகும்.

வழிபாட்டுக்காக அளிக்கப்பட்ட கொடைகள், வரி விலக்குகள், பிரம்மதேயங்கள், தேவதானங்கள், திருவிடையாட்ட நிலங்கள் குறித்தும் நொந்தா விளக்கு மற்றும் சந்தி விளக்குகள் ஏற்ற எண்ணெய் வழங்குவதற்கான நிவந்தங்கள் குறித்தும் சாவா மூவா பேராடுகள் வழங்கியது குறித்தும் தகவல்கள் காணப்படுகின்றன.

மேலும் இந்தக் கல்வெட்டுகள் மூலம் இறைவனின் சிறப்புத் திருநாமங்கள், கோயில் நிர்வாகச் செயல்ல்பாடுகள், ஊர்ச் சபை, நகர சபை, வணிகர் சபை தொடர்பான தகவல்களையும் அறிய முடிகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism