நீண்டதோர் வீதியில், பரஸ்பரம் ஒருவரையொருவர் நோக்கியபடி அரியும் அரனும் கோயில்கள் கொண்டு, சைவ-வைணவ ஒற்றுமைக்கு பெயர் விளங்கும்படி அருளும் தலம் தேரழுந்தூர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே யுள்ள தேரழுந்தூரின் ஸ்ரீஆமருவியப்பர் பெருமாள் ஆலயத்தைச் சென்ற இதழில் தரிசித்தோம். இந்த இதழில் ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயத்தை தரிசிப்போம்.
புறத்தில் மட்டுமல்ல மனத்தாலும் அழகு பெற அருளும் அம்மையாம் ஸ்ரீசௌந்தரநாயகியும், வேதஞானம் வழங்கிடும் ஸ்ரீவேத புரீஸ்வரரும் குடியிருக்கும் தலம் இது.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் அவதரித்த தலம், சிவனார் சந்தன மரத்தடியில் உறைந்து வேதம் பயில்வித்த தலம், காவிரிக்கும், அகத்தியருக்கும் சாப விமோசனம் கிடைத்த தலம், அம்பிகை பசு உருவில் சிவனாரைப் பூசித்த தலம்... என இவ்வூரின் - இக்கோயிலின் சிறப்பைப் போற்றுகின்றன புராணங்கள்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. மாசி 23, 24, 25 ஆகிய தேதிகளில் - மாலை 5.59 முதல் 6.18 வரை சூரியன் தன் கிரணங்களால் பூஜிக்கும் சிறப்பும் உண்டு.
புராணக் காலத்தில், சந்தன வனமாக விளங்கியதால் ‘சந்தனாரண்யம்’ என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. ஒருமுறை இங்கு அகத்தியர் சிவபூஜையில் ஈடுபட்டிருந் தார். அப்போது ஆகாய மார்க்கமாக பயணித்தான் ஊர்த்துவரதன் எனும் அரசன். அவனது பறக்கும் ரதத்தின் நிழல் பட்டு, பூமியில் ஜீவராசிகள் பிணியுறுவதைக் கண்டு கோபமுற்றார் அகத்தியர். ஆகவே, தன் தவ வலிமையால் அந்த ரதத்தினை நிலத்தில் அழுந்தச் செய்தார். அதனால் இத்தலத்திற்கு, ‘தேர்+ அழுந்தூர்- தேரழுந்தூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. திருமகள் அழுந்தி நிலை பெற்ற தலம் ஆகையால் ‘திருவழுந்தூர்’ என்றும் பெயர் உண்டு.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருமுறை சிவனாரும் திருமாலும் சொக்கட் டான் விளையாடினர். அப்போது ஜெயித்தது யார் என்ற தர்க்கம் ஏற்பட்டது. அன்னை பார்வதியின் கருத்தைக் கேட்டபோது, அவர் திருமாலே வெற்றி பெற்றதாகச் சொன்னார். உடனே சிவனார் கோபம் கொண்டவர்போல் நடித்து, அன்னையைப் பசுவாகும்படி சபித்தார் (இப்புராணக் கதை பல தலங்களில் சொல்லப் பட்டாலும் இங்கு மட்டுமே ‘சொக்கட்டான் மண்டபம் உள்ளது).
ஈசனின் இந்தத் திருவிளையாடலால் பசு உருவை அடைந்த பார்வதிதேவி, சிவனாரைப் பூசித்த காவிரிக்கரைத் தலங்கள் பல உண்டு. அவற்றில் தேரழுந்தூர் முதன்மையானது.
அம்பிகை கயிலையை விட்டு நீங்கியதும் அலைமகளும் கலை மகளும் தாங்களும் பசுக்களாகி பூமிக்கு வந்தனர். விநாயகர் கன்றாக வந்தார்; பெருமாள் ஆயராக வந்தார்.
ஈசனும் வேதம் பயிற்றுவிக்கும் அந்தணராக இத்தலத்துக்கு வந்தார். அவ்வாறு அவர் இங்கு வந்து தங்கியது சந்தன மரத்தடியில். ஆக, சந்தன மரமே இங்கு தலவிருட்சம். அனைத்து தெய்வங்களும் இத்தலத்திலேயே உறைவது கண்ட, தேவர்கள் அனைவரும் இங்கேயே வந்து தங்கி பூஜித்ததால் பெரும் புண்ணியப் பதியாகத் திகழ்கிறது தேரழுந்தூர்.

அற்புதமான இந்தத் தலத்துக்கு வந்து, வேதமே உருவாக அருளும் வேத புரீஸ்வரரைத் தொழ, கல்வி, கலை-ஞானம் சிறப்புறும்.
இவ்வூரில் பெருமாள் ஆமருவியப்பர் கிழக்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்க, எதிரில் மேற்கு நோக்கிக் கோயில் கொண்டுள்ளார் வேதபுரீஸ்வரர்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇரண்டு கோபுரங்களைக் கண்டு எத்திசையில் செல்வது எனத் திகைத்த திருஞானசம்பந்தருக்கு, இங்குள்ள விநாயகர் சிவத் தலத்தை வழிகாட்டிய தால் ‘வழிகாட்டிய விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
இவ்வூரில் வித்தியாசமான விழாக் கால வைபவம் ஒன்று உண்டு. உற்சவ காலத்தில், வேதபுரீசுவரரின் அனுக்ஞை பெற்ற பின்னரே, பெருமாள் தனக்குரிய வழிபாடுகளைக் காத்திருந்து ஏற்கிறார். அதேபோல் கோசஹராகிய பெருமாளிடமிருந்து பிறந்த வீட்டு சீர் வந்த பின்னரே, சிவாலயத்தில் அம்மையப்பர் திருக்கல்யாணம் நிகழ்த்தப்படும். வேறெங்கும் காண்பதற்கு அரிய சிறப்பம்சம் இது.
சொக்கட்டான் விளையாட்டில் பிரிந்த சிவனும், பார்வதியும் ஒன்றுபட்டு, மாசி - புனர்பூசத்தன்று திருமணஞ்சேரியில் திருக்கல்யாணக் காட்சி அருளியதாக வரலாறு. இந்த ஐதிகத்தின்படி, மாசி- புனர்பூசத்தன்று, அம்மையும் அப்பனும் தேரடி அருகில் பெருமாளுக்குக் கல்யாணக் கோலத்தில் காட்சி தருவது வருடாந்திர உற்சவமாக நிகழ்கிறது.

கோயிலின் ராஜமோகன சிவாசார்யரிடம் பேசினோம். “சம்பந்தி வீடுகளில் மனப்பிசகு ஏற்பட்டு மனம் வருந்தும் இல்லறத்தார்கள்... குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், குடும்ப ஒற்றுமை மேம்படும் என்பது நம்பிக்கை. அம்மை சௌந்தராம்பிகையோ அழகு நிறைந்த திருமேனியினள். விபத்துகள் அல்லது நோய்கள் காரணமாக உருவப் பொலிவு இழந்து வாடுவோர், இத்தலத்து அம்பிகையை வழிபட்டால் மீண்டும் பொலிவு பெறுவர் என்பது ஐதிகம். இவளை வழிபடும் அன்பர்களுக்கு லட்சுமிகடாட்சத்தையும் அருளும் அம்பிகை இவள்.
தோஷங்களால் மன வேறுபாடு கொண்டு பிரிந்திருக்கும் தம்பதிகள் இங்கு வந்து தீபமேற்றி வழிபட்டால், பிணக்குகள் நீங்கி மீண்டும் வாழ்வில் இணையலாம்; மகிழ்வான வாழ்வை வரமாகப் பெறலாம்.
மகாவிஷ்ணுவின் அம்சமாக விளங்கும் இத்தலத்து தல விருட்சமான சந்தன மரத்தினை வலம் வந்து வணங்கினால் தேக சௌந்தர்யமும், மகிழ்ச்சியும் வாய்க்கும்.
இந்தத் தலத்தில் பூஜைக்குத் தேவையான சந்தனம் அளிக்கும் அன்பர்களுக்குப் பெரும் கீர்த்தியும்; லட்சுமிகடாட்சமும் கிடைக்கும். திங்கள் கிழமைகளில தீபமேற்றி இத்தலத்து இறையை வணங்கிட, பாவங்கள் நசிந்து பிறவா நிலை கிடைக்கும்” என்றார் சிலிர்ப்புடன்.
அரியும் அரனும் அருளும் இந்த அற்புத க்ஷேத்திரத்துக்குக் குடும்பசமேதராகச் சென்று வழிபட்டு வாருங்கள்; உங்கள் இல்லம் செழிக்க இறையருள் கிடைக்கும்.
எப்படிச் செல்வது ?: மயிலாடு துறை - கும்பகோணம் மெயின் ரோட்டில், சேத்திரபாலபுரத்தில் இறங்கி, தெற்கே பயணித்தால் சுமார் 2 கி.மீ. தொலைவில் தேரழுந்தூர் உள்ளது. பஸ், ஆட்டோ வசதியுண்டு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சுக்ரீவன் வழிபட்ட ஈசன்!
திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள ஊர் சர்க்கார்பெரியபாளையம். இங்கே சுக்ரீவன் வழிபட்ட ஸ்ரீசுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது.
உடம்பில் மரு பாதிப்பு உள்ளவர்கள், இக்கோயிலுக்குச் சென்று மிளகு சமர்ப்பித்து வழிபட்டு, பிரசாதமாகப் பெற்று, 48 நாள்கள் அதைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் பாதிப்பு நீங்கும் என்பது நம்பிக்கை.
- மல்லிகா அன்பழகன், சென்னை-78