Published:Updated:

அதிகாலை 4.45 மணி; அதிர்ந்த `ரெங்கா கோஷம்' - ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட நொடிகள்!

சொர்க்க வாசல் திறப்பு
News
சொர்க்க வாசல் திறப்பு

சொர்க்க வாசல் திறப்பின் போது நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி, வைர அபயஸ்தம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு சொர்க்க வாசலைக் கடந்து சென்று பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசாமி திருக்கோயிலில் ஆண்டு முழுக்க பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும், திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவ மிக்க சிறப்பு கொண்டதாகும். பகல்பத்து, ராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இந்த வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் போது, மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.

இதேபோல், ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு விதவிதமான அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். அந்தவகையில், இந்தாண்டு டிசம்பர் 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசித் திருநாளைவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சொர்க்க வாசல் திறப்பு
சொர்க்க வாசல் திறப்பு

அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி, வைர அபயஸ்தம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட, சரியாக அதிகாலை 4.45 மணிக்குப் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அடியார் திருக்கூட்டம் சூழ பரமபத வாசலைக் கடந்து சென்ற நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வின்போது பக்தர்களும் அடியார்களும் 'ரெங்கா... ரெங்கா' என்று உற்சாகத்தில் கோஷம் எழுப்பினர். பொதுவாக ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியன்றுதான் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றிருக்கிறது. காரணம் என்னவென்றால், ஸ்ரீரங்கம் கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தேர் உற்சவம் தை மாதம் புனர்பூச நாளில் நடக்க வேண்டும் என்பது நியதி. இந்த ஆண்டு புனர்பூசம் நாள் தை மாதம் நான்காம் தேதியே வந்து விடுகிறது. இதனால் தான் திருவத்யயன எனப்படும் வைகுண்ட ஏகாதிசி ஒரு மாதம் முன்னதாகவே கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதேசி அன்றே நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய சொர்க்கவாசல் திறப்பின் போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சொர்க்க வாசல் திறப்பு
சொர்க்க வாசல் திறப்பு
கடந்தாண்டைப் போலவே கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக சொர்க்கவாசல் திறப்பின் போது பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தெற்கு வாசல் ஸ்ரீ ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் இரவும் 8 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.