Published:Updated:

`ரத்தின அங்கியுடன் காட்சியளித்த நம்பெருமாள்!' - ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலாகலம்

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா
ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா என முழங்க திறக்கப்பட்டது ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல்.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் எனப் புகழப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த வைகுந்த ஏகாதசி விழா, கடந்த மாதம் 26-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10 நாள்களாகப் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் பத்து நிகழ்ச்சியின் நிறைவு நாளான பத்தாம் நாள் நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா
ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா

அதையடுத்து, நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ஆண்டாள் கொண்டை நவரத்தின நெற்றிப்பட்டம், தங்கக் கிளி பவளமாலை, பெரிய கல் பதக்கம், திருமாங்கல்யம் அடுக்கு பதக்கம், தண்டைக் கொலுசு உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அணிந்து வெண்பட்டு உடுத்தி மோகினி அலங்காரத்தில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு பகல் பத்து உற்சவம் ஆணவமான அர்ஜுன மண்டபத்துக்குக் காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகு, காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை மற்றும் பொது ஜன சேவையுடன் பக்தர்களுக்குப் பெருமாள் காட்சி அளித்தார்.

அதன் பின் இரண்டாவது அரையர் சேவையாக திருமொழியில் இருந்து ராவண வதம் நிகழ்ச்சி பக்தர்கள் சேவையுடன் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. பின்னர், உபயோகங்கள் மரியாதையுடன் பக்தர்கள் தரிசனம் மாலை 3 மணி முதல் 4 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து 4 மணி முதல் 4.30 மணி வரை பொதுஜன சேவை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நம்பெருமாள் மாலை 5 மணிக்கு பகல் பத்து அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியபட்டா வாசல் வந்து சேர்ந்தார்.

அதன் பின் அங்கிருந்து திருக்கொட்டாரம் பிரகாரம் வழியாகப் பெருமாள் கருட மண்டபத்தில் இரவு 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் மரியாதை செய்த பின்னர், இரவு 8.30 மணிக்குக் கருட மண்டபத்தில் இருந்து புறப்பட்ட பெருமாள் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா
ஶ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா

அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வைபவங்கள் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் திறக்கப்பட்டது. முன்னதாக 3.30 மணியளவில் நம்பெருமாள் கருவறையிலிருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டார்.

பிறகு, ராஜமகேந்திரன் சுற்று வலம் வந்து, நாழிகேட்டான் வாசல் வழியாகக் குலசேகரன் திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தைச் சுற்றி பிரகாரம் வழியாகப் பரமபத வாசல் வந்து சேர்ந்த நம்பெருமாள், விரஜா நதி மண்டபத்தில் பக்தர்களின். வேத விண்ணப்பங்களைக் கேட்டருளினார். பரமபத வாசல் திறக்கப்பட்டதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த பக்தர்களின், ``கோவிந்தா'' என பக்திப் பரவசத்தில் கோஷமிட்டனர். தொடர்ந்து, நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 7.30 மணிக்கு நள்ளிரவு வரை பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். பிறகு, இரவு 11 மணியளவில் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்களுடன் அதிகாலை 12. 45 மணி அளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு வைபவம். On live - ஆர்.வெங்கடேஷ்

Posted by Vikatan EMagazine on Sunday, January 5, 2020

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இன்று முதல் ராப்பத்து நிகழ்ச்சி உற்சவம் தொடங்கியுள்ளது. அந்நிகழ்ச்சி, வரும் 15-ம் தேதி வரை நம்பெருமாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதுவரை உற்சவர் நம்பெருமாளை, தினமும் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம். 15-ம் தேதி பக்தர்கள் சொர்க்கவாசலில், மூலவர் முத்தங்கி தரிசனம் செய்யலாம். அதன்படி இராப்பத்து நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று மூலவரைக் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தரிசனம் செய்யலாம். பரமபதவாசல் இன்று அதிகாலை முதல் இரவு 10 மணி வரை திறந்து வைக்கப்படும். அதன்பின் 14-ம் தேதி வரை தினமும் பகல் 1 மணி முதல் 8 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். வரும் 15-ம் தேதி தீர்த்தவாரி திருவிழாவும், 13-ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் பெரிய விழாவான பரமபத வாசல் திறப்பு விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். இவ்விழாவுக்காக, ஶ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயிலின் அனைத்து கோபுரங்கள், விமானங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. 234 அடி உயர ராஜகோபுரம் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்காரம் செய்யப்பட்ட ராஜகோபுரம் மின்னொளியில் ஜொலித்தது.

இவ்விழாவுக்காகத் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூ தலைமையில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் பட்டுள்ளனர் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோயில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் இணை ஆணையர் ஜெயராமன், சுந்தர் பட்டர், நந்து பட்டர் உள்ளிட்டோர் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கான ஶ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு