Published:Updated:

`கருணை இல்லக் குழந்தைகளின் தரிசன விருப்பம்!' - நிறைவேற்றிய திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி

திருப்பதி
திருப்பதி

கருணை இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகள் மலையப்பசுவாமியைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

திருமலை திருப்பதி வேங்கடேச பெருமாளைத் தரிசனம் செய்யும் பாக்கியம் எல்லோருக்கும் அத்தனை எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. பெரும் செல்வந்தர்கள், படித்தவர்கள், அந்தஸ்த்தில் உள்ளவர்களால்கூட சிலவேளைகளில் மலையப்பசுவாமியைத் தரிசிக்க முடியாமல் போவதுண்டு. அதுவே ஏழைகள், பாமரர்களுக்கு எளிதில் தரிசனம் செய்யும் அற்புதம் நிகழ்வதும் உண்டு. எல்லாம் வேங்கடவனின் லீலா விநோதங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

Tirupaty
Tirupaty

தினமும் 80,000-க்கும் குறையாத எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காகப் பல்வேறு தரிசன முறைகளில் காத்திருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 17 பேருக்கு எளிய முறையில் தன் சொந்த செலவில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி.

Subba Retty with children
Subba Retty with children
JAISEKHARQ

ஒருமுறை அவர் ஸ்ரீகாக்குளம் நகரிலிருக்கும் கருணை இல்லம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அந்தக் கருணை இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகள் மலையப்பசுவாமியைத் தரிசனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அதைக் கேட்டவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று தன் சொந்த செலவில் சிறப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார்.

திருமலை திருப்பதி வேங்கடேச பெருமாளின் பிரசாதம் புகைப்படங்கள் ஆகியவற்றையும் அவர்களுக்குப் பரிசாக வழங்கினார். மலையப்பசுவாமியின் தரிசனத்தை முடித்த பிறகு, அவர்கள் வேலூரிலிருக்கும் நாராயணீய மண்டபம் செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

Vekatesaperumal
Vekatesaperumal

``குழந்தைகள் சுவாமி தரிசனம் கிடைத்ததில் மிகுந்த பரவசமும் ஆனந்தமும் கொண்டனர். அவர்களின் அந்த மகிழ்ச்சிகரமான முகங்களைப் பார்க்கும்போது, `ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' எனும் வார்த்தைகள் எத்தனை உண்மையானவை என்பதை உணர முடிந்தது" என்றார் சுப்பா ரெட்டி.

திருமலையில் இருக்கும் பத்மாவதி ஹவுசில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வெப்சைட்டுகளை உரிய முறையில் கண்காணித்து வருகிறோம். தவறான செய்திகளை, வதந்திகளாகப் பரப்பும் நோக்கத்துடன் செயல்படுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

Subba Retty with children
Subba Retty with children
JAISEKHARQ

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானத்தை ஆந்திர அரசாங்கத்தின் கணக்குக்கு மாற்றி விடுவதாக வதந்தி பரப்பிய ஒரு இணையதளத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற தகவலையும் அப்போது அவர் தெரிவித்தார்.

தவிர, இன்றும் நாளையும் அன்னமய்யாவின் கீர்த்தனை நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு