Published:Updated:

திருப்புகழ் ஓங்கும் திருத்தணி படிபூஜை... விடிய விடிய புத்தாண்டில் அருளும் சுப்ரமணியன்!

திருத்தணிகை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருத்தலத்தில் பிரசித்தி பெற்ற படிபூஜை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.

திருத்தணி
திருத்தணி

பழநி, சுவாமிமலைக்கு அடுத்தபடியாக அறுபடைவீடுகளில் திருத்தணியில்தான் மலைப் படிகளில் ஏறி குமரனை தரிசிக்க முடியும். அத்தகைய அரும்பெருமை வாய்ந்தது, திருத்தணிகை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருத்தலம். இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிற சிறப்புவாய்ந்த படிபூஜை இன்று காலையில் தொடங்கியது.

படிபூஜை
படிபூஜை

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். அந்தக் குமரனை தரிசிப்பதற்குப் படிகளில் ஏறியே செல்ல வேண்டும். படிப்படியாக இறைவனை நெருங்குதலே இந்தத் திருப்படிகள் நமக்கு உணர்த்துகின்ற உயரிய தத்துவம். நீளமும் உயரமுமாய் உள்ள மலைப்படிகளில் `அரோகரா' சொல்லி எட்டுகள் வைத்து ஏறி வியர்க்க விறுவிறுக்கக் கோயிலை அடைகிறோம். அத்தனை சோர்வுகளையும், அலுப்புகளையும் உதறிவிட்டு பக்தகோடிகளோடு நின்று அவனைச் சந்நிதியில் தரிசிக்கும்போது கிடைக்கிற ஆனந்தம் சொல்லிமாளாது.

சுவாமி மலையில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் ஆண்டுதோறும் தமிழ் வருடப்பிறப்பன்று படிபூஜை நடைபெறுகிறது. 60 தமிழ் வருடங்களின் பெயர்களாக இந்தப் படிகள் விளங்குவதாய் ஐதிகம். எனவே, அவற்றுக்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் பூஜைகள் நடைபெறுகின்றன. அதைப்போலவே 365 படிகளைக் கொண்டிருக்கிற திருத்தணிகை முருகன் கோயில் படிபூஜையும் பிரசித்திபெற்றது.

Vikatan
வேலவனின் சினம் தணிந்த திருத்தணிகையில் 100 வது ஆண்டு படிபூஜை செய்து புத்தாண்டைக் கொண்டாடலாம்!
வேலவனின் சினம் தணிந்த திருத்தணிகையில் 100 வது ஆண்டு படிபூஜை செய்து புத்தாண்டைக் கொண்டாடலாம்!

ஆண்டின் 365 நாள்களைக் குறிக்கும் வகையில் இந்தப் படிகள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் வெற்றிலை, பழம், சூடம் வைத்து இரண்டு நாள்களும் பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 31-ம் தேதி காலையில் தொடங்கி மறுநாள் விடிய விடிய நடைபெறுகின்ற இந்தப் படிபூஜை புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதியன்று இரவு 10 மணிவரையிலும் நடைபெறும். அதன்படி இன்று காலையில் படிபூஜை தொடங்கியது.

Vikatan

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் ஆதலால் படிபூஜையை முன்னிட்டு திருத்தணி பகுதியில் உள்ள ஆன்மிக மடங்கள், மண்டபங்கள் முழுவதிலும் திருப்புகழ் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் எனத் தொடர்ந்து களைகட்டி வருகின்றன. முருகப்பெருமானை வழிபட வருகை தருகிற அடியவர்கள் அனைவருக்கும் உள்ளூர் பக்தர்கள் வாரி வாரி அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

முருகன்
முருகன்

புதிய ஆண்டின் எல்லா தினங்களிலும் நன்மையே சூழ்ந்திட வேண்டும் என ஒவ்வொரு தினத்தையும் வணங்கி மனமுருகப் பிரார்த்தித்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். நாமும் அவன் நாமம் துதிப்போம். வேண்டியன அருள்வான் வேலவன்.

இந்தப் புத்தாண்டில் திருத்தணி முருகனின் தரிசனமும், அங்கே திருப்படிகளுக்குச் செய்யும் வழிபாடும் வாழ்வில் வழியும் வளமும் தருவன!