Published:Updated:

கேரளக் கதைகள்: 14 - `முப்பது நாள் உயிரோடு இருந்தால்...'

கேரளக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கேரளக் கதைகள்

- `சாஸ்தா வியாசர்' வி.அரவிந்த்சுப்ரமணியம்; ஓவியம்: ஜெயசூர்யா

கேரளக் கதைகள்: 14 - `முப்பது நாள் உயிரோடு இருந்தால்...'

- `சாஸ்தா வியாசர்' வி.அரவிந்த்சுப்ரமணியம்; ஓவியம்: ஜெயசூர்யா

Published:Updated:
கேரளக் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கேரளக் கதைகள்

கேரளத்தில் `அஷ்ட வைத்தியர்கள்' என்று போற்றப்படும் குடும்பங்களில் மிக முக்கியமானது `வயஸ்க்கரை மூஸு' என்றழைக்கப்பட்ட வைத்தியக் குடும்பம். பாரம்பர்யமான வைத்திய ஞானம், குருவருள், நோயாளிகளை அணுகும் தன்மை ஆகிய அனைத்தும் அவர்களின் தனிச் சிறப்புக்குக் காரணமாயின.

கேரளக் கதைகள்: 14 - `முப்பது நாள் உயிரோடு இருந்தால்...'

ருந்து மட்டுமே நோயைக் குணப்படுத்திவிடாது என்று யதார்த்த வழிமுறைகளோடுகூடிய அவர்களின் மருத்துவம் கேரளாவில் பிரசித்தம். இந்தக் குடும்பம் குறித்து பல சுவையான கதைகள் சொல்லப்படுவது உண்டு. பலருக்கும் அகப்படாத அபூர்வ வைத்தியமுறைகள் வயஸ்க்கரை வைத்தியருக்கு மட்டுமே வசப்பட்டு இருந்தன என்பார்கள்.

ஒருமுறை இஸ்லாமிய அன்பர் ஒருவர் `வயஸ்க்கரை’ வைத்தியரைச் சந்திக்க வந்தார். மிகுந்த பருமனான உடல்வாகு உடையவர் அவர். நடக்கும்போதே மூச்சு வாங்கும் அவருக்கு.

வைத்தியரைச் சந்தித்தவர், “எப்படியாவது எனது உடல் எடையைக் குறைக்கவேண்டும். நீங்கள்தான் வழி சொல்ல வேண்டும். அதேநேரம், என்னால் சாப்பாட்டைக் குறைக்க முடியாது. உடற்பயிற்சி செய்யவும் என் உடல் ஒத்துழைப்பதில்லை” என்றார் இஸ்லாமிய அன்பர்.

அவர் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தார்கள். ஆனால், வைத்தியர் சற்று நேரம் அவரைப் பார்த்தபடியே இருந்தார்.

பின்னர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, “உடல் எடையைக் குறைப்பது இருக்கட்டும். இப்போது வேறொரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லியாக வேண் டும். உண்மையை உங்களிடம் மறைக்க விரும்ப வில்லை. இன்னும் 30 நாள்களில் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று உங்களின் நாடித் துடிப்பு சொல்கிறது’’ என்றார்.

மேலும், ``ஒருவேளை இறையருளால் நீங்கள் 30 நாள்களைத் தாண்டி உயிருடன் இருந்தால், அப்போது வாருங்கள், நாம் வைத்தியத்தைத் தொடங்கலாம்’’ என்று கூறினார் வைத்தியர்.

இதைக்கேட்டதும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் அந்த அன்பர். மயக்கம் தெளிவித்து அவரைச் சமாதானப் வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள்.

இஸ்லாமிய அன்பர் மனம் நொந்துபோனார். செய்வதறியாமல், `வாழ்க்கையின் மீதிருந்த பிடிப்பே போய்விட்டது’ என்று கூறி, சகலத்தையும் வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார். சாப்பாடு முதல் சகலத்திலும் பிடிப்பில்லாமல் போயிற்று.

இப்படியாக ஒரு மாதம் ஓடியது. அதன் பிறகும் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றதும் வைத்தியரிடம் வந்து சேர்ந்தார் அந்த அன்பர்.

“ஐயா! நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

வைத்தியர் புன்னகைத்தார். ``உமக்கு எதுவும் ஆகாது என்பது அன்றைக்கே எனக்குத் தெரியும். ஆனால், இப்போது வைத்தியம் தேவையில்லை. நீரே போய் கண்ணாடியில் பாரும் உமது உருவத்தை...’’ என்றவர் தொடர்ந்து கூறினார்.

``மிகவும் சோர்வாக ஒல்லியாக இருப்பவர்களின் உடலைத் தேற்றுவதற்கும் குண்டாக்குவதற்கும் எளிய வழிமுறைகள் மருத்துவத்தில் உண்டு. ஆனால், குண்டாக இருப்பவர்களை இளைக்கவைப்பது மிகவும் கடினம். முன்பு நீங்கள் இருந்த நிலையில், நான் சொல்லக்கூடிய எதையும் உம்மால் கடைப்பிடிக்க முடியாது.

ஆகவேதான், உமக்கு மனக்கவலையை உண்டாக்கி, அதன் மூலம் வைத்தியம் செய்ய நினைத்தேன். மனித உடம்பை இளைக்கச் செய்ய மனக் கவலையைவிட பெரிய வைத்தியம் எதுவும் இல்லை. ஆகவே, `ஒரு மாதத்தில் இறந்து விடுவீர்’ என்று நான் சொன்ன பொய் யும் வைத்தியத்தின் அங்கம்தான்’’ என்றார்.

``இப்போது சரியாகிவிட்டது அல்லவா? இனி தினமும் நன்றாக உடற்பயிற்சி செய்து, கட்டுப்பாட்டுடன் சாப்பிட்டு, உடம்பை நன்றாக வைத்துக்கொள்ளும்’’ எனக் கூறி அனுப்பிவைத்தார்.

யஸ்கரை குடும்பத்தில் சின்னஞ் சிறுவர்களுக்குகூட அபரிமிதமான மருத்துவ அறிவு உண்டு; பாரம்பர்யமாக கைகூடும் ஞானம் அது என்று சொல்வது உண்டு. ஒருமுறை அந்த இல்லத்தில் குடும்பப் பெரியவர்கள் அனைவரும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதேநேரம், அவர்களின் இல்லத்துக்கு வெள்ளை அடிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதன் பொருட்டு பெரிய தொட்டி ஒன்றில் சுண்ணாம்பைக் கலக்கி தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த வீட்டுப் பசுமாடு எப்படியோ கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடி வந்து அங்கே நின்றது. சுண்ணாம்பு நீரைக் கண்டதும், அது தனக்குக் குடிப்பதற் கான நீர் என்று கருதி குடித்துவிட்டது. அதனால் உடல் நலமில்லாமல் படுத்துவிட்டது. வீட்டில் இருந்த பெண்கள் கவலை கொண்டனர்.

வீட்டின் பெரியவரான வைத்தியர் இல்லாத நிலையில், இல்லத்தைச் சேர்ந்த சிறுவனிடம் ``உனக்கு ஏதாவது தெரியுமா... பசுவைக் காப்பாற்ற வழி உண்டா?’’ எனக் கேட்டனர்.

அந்தச் சிறுவன் சிறிதும் அசரவில்லை. வேலை ஆள்களிடம் நிறைய வெற்றிலைகளைப் பறித்து வரும்படி கூறினான். வெற்றிலை வந்ததும் அரைத்துக் கூழாக்கி, தண்ணீருடன் கலந்து மாட்டுக்குப் புகட்டச் செய்தான். சற்று நேரத்திலெல்லாம் பசுமாடு குணம் பெற்று எழுந்தது.

பெரிய வைத்தியர் திரும்பியதும் பெண்கள் நடந்ததை விவரித்தனர். அவர் அந்தச் சிறுவனை அழைத்து “உனக்கு யார் இப்படியொரு மருத்துவத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள்?” என்று கேட்டார்.

``யாரும் சொல்லித் தரவில்லை. உங்கள் செயல்களைப் பார்த்து நானே புரிந்து கொண்டதுதான்’’ என்றான்.

“என்ன புரிந்துகொண்டாய்?”

``சிலநேரம் நீங்கள் வெற்றிலை போடும்போது, சுண்ணாம்பு அதிகமாகிவிட்டது எனக் கூறி, இன்னொரு வெற்றிலை சேர்த்துப் போடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆக, சுண்ணாம்பு அதிகமானால் அதைச் சரிப்படுத்த வெற்றிலை பயன்படும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதன்படியே பசுமாட்டுக்கு வெற்றிலை அரைத்துப் புகட்டினேன்’’ என்றான்.

பெரிய வைத்தியரும் சிறுவனை மனம் விட்டுப் பாராட்டினார்!

ற்றொரு முறை, விசித்திரமான பிரச்னையுடன் வந்தர் ஒருவர். அதாவது, ஒரு பெண்மணி சமையலறை அலமாரியில் மேலே வைத்திருந்த ஜாடியை எடுக்க முனைந்தார். ஒரு நாற்காலியின் மீது ஏறி நின்று ஜாடியை எடுப்பதற்காக கையை உயர்த்தியபோது, அந்த இடது கை அப்படியே விரைத்துப்போனது.

எவ்வளவோ வைத்தியர்களிடம் காட்டியும், தைலம் தடவியும் கையை பழைய நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை. கையை மடக்க முடியாமல் அவதிப்பட்டார் அந்தப் பெண். நிறைவாக, வயஸ்க்கரை குடும்ப இல்லத்துக்கு வந்து சேர்ந்தார் அவளின் கணவர். வைத்தியரிடம் `நீங்கள் மட்டுமே எனக்கு ஒரே கதி' என்று மன்றாடினார்.

``சரி! உன் வீட்டுக்கு நான் வருகிறேன்” என்று சொல்லி வைத்தியரும் கிளம்பினார்.

வைத்தியர் வந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டு ஊரே ஒன்றுகூடி விட்டது.

``உங்கள் மனைவி நாற்காலிமீது எப்படி நின்றாரோ, அப்படியே நிற்கவையுங்கள். என்றார் வைத்தியர்.

குறிப்பிட்ட இடத்தில் நாற்காலி போடப் பட்டது. அந்தப் பெண் நாற்காலியில் ஏற்றி நிற்க வைக்கப்பட்டாள். விரைத்துப்போன நிலையில் அவளின் கை மேல்நோக்கி உயர்ந்திருந்தது.

அவளது இடது கை மேலே தூக்கியபடி இருக்க, வலது கையைக் கயிற்றால் இறுக்கக் கட்டி, அந்த கயிற்றின் நுனியை கூரையில் இருக்கும் வளையத்தில் பிணைக்கச் செய்தார் வைத்தியர். இப்போது வலது கை கட்டப்பட்ட நிலையில், இடது கையைத் தூக்கியபடி நாற்காலியின் மீது நின்றுகொண்டிருந்தாள் அந்தப் பெண்.

அவளின் கணவரை அழைத்த வைத்தியர், ``உன் மனைவி உடுத்தியிருக்கும் புடவையை உருவி அவிழ்த்துவிடு'' என்றார்.

கணவர் திகைத்தார்!

“என்ன சொல்கிறீர்கள்... இவ்வளவுபேருக்கு முன்பாகவா?'' என்று கேட்டார் கணவர். மனைவியோ பதைபதைத்துப் பொனாள். சுற்றியிருந்த மக்களும் அதிர்ந்துபோனார்கள்.

வைத்தியரோ எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு பெண்ணின் கணவனையும் பார்த்தார். பின்னர், ``நீ தயங்குகிறாய்... நானே அதைச் செய்கிறேன்'' என்று கூறிவிட்டு, வேகமாக சென்று அவளுடைய புடவையின் நுனியைப் பிடித்து இழுக்க முற்பட்டார்.

அவ்வளவுதான்... ``வேண்டாம்... வேண்டாம்...'' என்று அலறிய பெண், சட்டென்று இடது கையை மடக்கிப் புடவையைப் பற்றிக்கொண்டாள். ஆம், அவளையும் அறியாமல் இடதுகை செயல்பாட்டுக்கு வந்தது!

``அவ்வளவுதான்... வைத்தியம் முடிந்தது!” என்று விடைபெற்றார் வைத்தியர்.

- தொடரும்...