Published:Updated:

`இந்தப் பாவம் என்னையும் அல்லவா சேரும்?'

ஆன்மிகச் சிறுகதை: தி.துரை

பிரீமியம் ஸ்டோரி

ஶ்ரீராமபிரானின் மகிமையைப் போற்றும் விதம் பல திருக்கதைகள் சொல்லப்படுவது உண்டு. அவற்றில் ஒன்று உங்களுக்காக!

`இந்தப் பாவம் என்னையும் அல்லவா சேரும்?'

லங்கை சென்று சீதா தேவியைச் சந்தித்துவிட்டு வந்த ஹனுமன் ஶ்ரீராமரைப் பணிந்தார். சீதாதேவியின் சூடாமணியைக் கொடுத்தார். அதைக் கண்களில் ஒற்றிக்கொண்ட ராமனின் முகத்தில் ஆனந்தம் இல்லை; மாறாக, கவலை படர்ந்தது.

``ஹனுமான்... என் சீதாதேவி இருக்கும் இடத்தை அறிந்து வரத்தான் உன்னை அனுப்பினேன். ஆனால் நீயோ இலங்கையைத் தீக்கிரையாக்கி, ராவணனின் குடி மக்களில் பலரை அழித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு ஏன் என்னிடம் அனுமதி கேட்க வில்லை?'' என்றார்.

``பிரபு! என் வாலுக்கு ராவணன் தீயிட்டான். அந்த வாலை அங்கும் இங் கும் சுழற்றி ஆட்டினேன். பட்ட இடமெல்லாம் தீப்பற்றியது. இதில் என் பிழை ஏதும் இல்லையே?'' என்றான் ஹனுமன்.

ராமனோ, ``இல்லை ஹனுமான்! ராவணன் உன் வாலில் தீ வைத்த போது, உன்னை அந்த நெருப்பு சுட்டதா, உனது வால் எரிந்ததா?'' என்று கேட்டார்.

``இல்லை. நான் ராம மந்திரத்தை விடாமல் ஜபித்து கொண்டிருந்தேன். தங்கள் நாம மகிமையால் எனக்கு ஒரு தீங்கும் ஏற்படவில்லை'' என்று கூறினான் ஹனுமன்.

``நீ ஜபித்த மந்திரத்தை, இலங்கை மக்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாமா? உன்னை நீ காப்பாற்றிக்கொண்டாய். ஆனால், ஒரு பிழையும் செய்யாத இலங்கை மக்களை அல்லலுக்கும் மரணத் துக்கும் ஆளாக்கி விட்டாயே... இது பாவம் அல்லவா? இந்தப் பாவம் என்னையும் அல்லவா சேரும்!'' என்று கேட்டார் ஶ்ரீராமன்.

``பிரபு, என்னை அறியாமல் இது நிகழ்ந்துவிட்டது. நான் பெரும் பாவி. என்னை மன்னியுங்கள்'' என்றான் ஹனுமன்.

உடனே ஶ்ரீராமன். ``ஒருவேளை ராவணன் மனம் மாறி, சீதா தேவியை அழைத்து வந்து என்னிடம் ஒப்படைத்தாலும், நான் கண்டிப்பாக இலங்கைக்குச் சென்றே ஆகவேண்டும். அக்னியால் அழிந்த இலங்கையை மீண்டும் உருவாக்கித் தந்து, இந்தப் பாவத்துக்கு நான் பிராயச்சித்தம் தேடவேண்டும்'' என்றார்.

தர்மத்தின் வடிவமாகவும், கருணையின் உருவமாகவும் திகழும் ஶ்ரீராமனுக்குச் சேவகனாகத் தொண்டாற்றும் வாய்ப்பு தனக்குக் கிட்டியிருப்பதை எண்ணி, ஹனுமன் மனம் பூரித்தது. ஶ்ரீராமனின் திருவடிகளை வணங்கி, ``ராம்... ராம்'' என்று ஜபிக்க ஆரம்பித்தான் ஹனுமன்.

இப்போது ஹனுமன் ஜபித்தது தனக்காக அல்ல; தன்னால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு