சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்!

தென்காசி விசுவநாதர்!
பிரீமியம் ஸ்டோரி
News
தென்காசி விசுவநாதர்!

ஆன்மிகம்

நாடாளும் மன்னவன் பெருவிருப்பத்தோடு அந்த ஆலயத்தை எழுப்பினான். ஈசனே தன் கனவில் தோன்றிக் கட்டளையிட்டதற்கேற்ப எழுப்பும் ஆலயம் என்பதால், அவன் அந்தத் திருப்பணியைத் தலையாய பணியாகக் கருதிச் செய்தான். ஆலயமும் அழகுடன் எழுந்தது. காலமெல்லம் அந்த ஆலயம் நிலைத்து சிவனருள் அங்கு நிலைகொள்ள வேண்டும் என்று விரும்பினான்.

``பிற்காலத்தில் இந்த ஆலயத்தில் சிறு பழுது ஏற்பட்டாலும், அதைத் தீர்த்து, திருக்கோயிலைப் புனரமைப்ப வர்களின் பாதங்களில் விழுந்து இந்த உலகம் அறியும் வண்ணம் தொழுவேன்’’ என்று சொல்லி அதைக் கல்வெட்டா கவும் வடித்துவைத்தான் அந்த மன்னன். அவன், பராக்கிரமப் பாண்டியன். பார்போற்றும் அந்த ஆலயம் தென்காசி விசுவநாதர் கோயில்.

`ஆராயினும் இந்தத் தென்காசி மேவும்பொன் ஆலயத்து

வாராததோர் குற்றம் வந்தால்; அப்போதங்கு வந்ததனை

நேராகவே திருத்திப் புரப்பார் தமை நீதியுடன்

பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே' என்னும் பாடலாக அவனின் வேண்டுகோள் இன்றும் நிலைத்து அவன் புகழ்பேசுகிறது.

காசி, இந்த பாரத தேசத்தின் புண்ணியத் தலங்களுள் முதன்மையானது. பாவம் போக்கும் காசியில் உறைந்து அருள்பாலிப்பவர் காசி விசுவநாதர்.

பதினைந்தாம் நூற்றாண்டின் இடைக்காலம். தென் ஆரிநாட்டைத் தலைநகரமாகக்கொண்டு ஆட்சிசெய்து வந்த பராக்கிரம பாண்டியன், காசி விசுவநாதரிடம் ஆழ்ந்த பக்திகொண்டிருந்தான்.

‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்!

அந்தக் காலத்தில் காசி மாநகரை ஆக்கிரமித்துக் கொண்ட அந்நியர்கள், காசி விசுவநாதரின் ஆலயத்தையும் சேதப்படுத்தி விட்டனர். வழிபாடுகள் நின்றுவிட்டதுடன், பக்தர்களின் வருகையும் இல்லாமற்போய்விட்டது. மேலும், தெற்கிலிருந்து காசிக்குச் செல்லும் பக்தர்களில் பலர் காசி யாத்திரையைத் தொடர முடியாமற் போய்விடும் சூழ்நிலையும் ஏற்பட்டது. மன்னவன் மனம் வருந்தினான்.

இந்தச் சூழ்நிலையில், ஒருநாள் இரவு அவன் கனவில் தோன்றிய காசி விசுவநாதர், `காசிக்கு இணையாக தென்னகத்தில் யாம் காட்டியருளும் தலத்தில் எமக்கு ஓர் ஆலயம் எழுப்புவாயாக' என்று உத்தரவிட்டார்.

அந்தக் காலத்தில் தென் ஆரிநாட்டைக் காட்டியருளினார். அதை ஒட்டி `சிவமது கங்கை' என்ற சிற்றாறு வடக்குப்புறமாக ஓடிக்கொண்டிருந் தது. இறைவனுக்குக் கோயில் எழுப்பவேண்டி, பராக்கிரம பாண்டியன் ஆற்றின் போக்கைத் தெற்குப்புறமாக மாற்றிவிட்டு, கோயில் எழுப்பும் திருப்பணியைத் தொடங்கினார்.

இந்தச் செய்தியை, `உடையார் விசுவநாதன் உத்தர காசியில் எழுந்தருளியிருந்த சிவாலயம் ஜீர்ணமாகையாலே, நமக்கு தட்சிண காசியில் ஆலயம் செய்து தர வேணும்... என்று தொடங்கும் கோயிலின் கல்வெட்டு ஒன்று விவரிக்கிறது.

ஆலயத்தை தரிசிக்கச் சென்றோம்.தரையிலிருந்து ஆறு படிகள் ஏறிச் சென்றால் மிகப் பெரிய மேடை போன்ற தளம். மேடையின் முடிவில் இரண்டு யானைகள் தாங்கி நிற்கும் பெரிய தேர் போன்ற அமைப்பில் ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன், பதினொரு கலசங்களுடன், அழகுச் சிற்பங்களுடன் பிரமாண்டமாகக் காட்சிதருகிறது. கோபுரத்தின் வடக்குப் பகுதியில் மகிஷாசுரமர்த்தினி நின்ற கோலத்தில் அருள்கிறாள்.

ராஜகோபுர வாயில் கடந்து ஆலயத்துக்குள் நுழைந்தபோது குறிப்பிட்ட அடிகள்வரை பொதிகை மலையிலிருந்து ஆரியங்காவு வழியாக வீசும் காற்று நம் மேனியையும் உள்ளத்தையும் ஒருசேரக் குளிர்விக்கிறது!

‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்!

முகப்பு மண்டபம் `திருவோலக்க மண்டபம்’ எனும் பெயரில், சிற்பக் களஞ்சிய மாகத் திகழ்கிறது. தெற்குப்புறத் தூண்களில் மேற்கிலிருந்து கிழக்காக அகோர வீரபத்திரர், மன்மதன், குழலிசைக்கும் கண்ணன் மற்றும் காளி சிலைகளும், வடக்குப்புறத்தில் மேற்கிலிருந்து கிழக்காக வீரபத்திரர், ரதிதேவி, பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதருடன் மகா தாண்டவ மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகிய சிற்பங்களும் காட்சிதருகின்றன.

முகப்பு மண்டபத்தைக் கடந்தால் நந்தி மண்டபம். இந்த மண்டபத்தின் தூண்களிலும் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இறைவன் காசி விசுவநாதருக்கு வெண்கவரி வீசும் இரு பாவையர்களின் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

தொடர்ந்து வரும் மணிமண்டபத்தில் - கண்ணப்ப நாயனார் ஈசனுக்குக் கண் கொடுக்கும் காட்சி, சிறுத்தொண்ட நாயனார் தம் மனைவியுடன் ஈசனுக்குப் பிள்ளைக் கறியமுது படைக்கும் காட்சி, காரைக்கால் அம்மையாரின் தவக் கோலம் போன்ற பெரியபுராணக் காட்சிகளும், திருக்கடவூர், திருவிடைமருதூர், திருமயிலை, திருவானைக்கா போன்ற தலங்களின் வரலாற்றுத் தொடர்புடைய சிற்பங்களும் மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்!

மேலும், சைவ- வைணவ ஒற்றுமையை உணர்த்துவதைப்போல் நரசிம்ம அவதாரம், ராமன் கையில் வில்லேந்தி நிற்க, அருகில் பணிவுடன் முழந்தாளிட்ட நிலையில் அனுமன், நாணம் முகத்தில் தவழக் காட்சி தரும் சீதை, வாலி-சுக்ரீவன் யுத்தம் போன்ற ராமாயண நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

மணிமண்டபத்தை அடுத்துள்ள மகாமண்டபத்தில் ஐயனின் கருவறை அமைந்திருக்கிறது. கருவறையின் வெளியில் ஈசனின் வலப்புறத்தில் விநாயகப் பெருமான் பிரமாண்டமாகக் காட்சிதருகிறார். அவரை வழிபட்டு, ஐயனின் சந்நிதிக்குள் சென்றோம். காசியில் உள்ளதைப்போலவே அகலமாக அமைக்கப்பட்ட சந்நிதி. சிவலிங்கத் திருமேனி யைச் சுற்றிவர வசதியாக இடம் விடப் பட்டிருக்கிறது. தென்காசி ஐயன் `ரிக்வேத பெருமான்' என்று போற்றப்படுகிறார். ஐயனைப் பணிந்துவிட்டு, சந்திரசேகரர், நடராஜப் பெருமானை வணங்கிவிட்டு, சந்நிதியில் நின்றகோலத்தில் ஐயனை வழிபட்டபடி இருக்கும் பராக்கிரம பாண்டியனையும் வழிபட்டோம்.

பிராகாரத்தில் சுரதேவரின் தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. மூன்று கரங்கள் மற்றும் மூன்று கால்களுடன் பெரிய திருமேனியராகக் காட்சிதருகிறார். `சுரதேவருக்குச் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் அரைத்து அபிஷேகம் செய்தால் காய்ச்சல் குணமாகும்’ என்பது ஐதிகம். தட்சிணாமூர்த்தி, கன்னிமூல விநாயகர், மகாலட்சுமி, ஆறுமுகப் பெருமான் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். சனி பகவானும் தெற்குப் பார்த்து தனிச் சந்நிதியில் அருள்கிறார்.

ஐயனின் சந்நிதிக்கும் அம்பிகையின் சந்நிதிக்கும் இடையே முருகப்பெருமானின் சந்நிதி அமைந்திருக்கிறது. சோமாஸ்கந்த அமைப்பு. இதுகுறித்து அறியுமுன் அம்பிகை உலகம்மை சந்நிதியை தரிசித்துவிடுவோம். வலப்புறத்தில் உள்ள வல்லப விநாயகரை தரிசித்த பிறகு அம்பிகையின் சந்நிதிக்குச் சென்றோம்.

சந்நிதியில் அம்பிகை உலகம்மை, அதியற்புத எழிலுடன் திருக்காட்சி அருள்கிறாள். அம்மன் சந்நிதியில் பராக்கிரம பாண்டியன் கீழே விழுந்து இரண்டு கரங்களைக் கூப்பி வழிபடும் சிற்பம் காணப்படுகிறது. முதலில் பராக்கிரம பாண்டியனின் தேவி விழுந்து வணங்கு வது போன்ற சிற்பமும் இருந்ததாம். தற்போது அந்தச் சிற்பம் இல்லை என்றாலும், `உலக முழுதுடையாள் உலகம்மனாலயம்' என்ற எழுத்துகள் இருப்பதைக் காணலாம்.

இனி, முருகன் சந்நிதிக்குச் செல்வோம்.

பராக்கிரம பாண்டியன் சுவாமிக்கும் அம்பிகைக்கும் மட்டுமே கோயில் கட்டினார். அவருக்குப் பிறகு வந்த, அவரின் ஒன்றுவிட்ட சகோதரனான பொன்னன் பெருமாள் அழகன் குலசேகரன், பாதியில் நின்ற ராஜ கோபுரத்தை நிறைவுசெய்து, பெருமாளுக்குத் தனிச் சந்நிதியும் ஏற்படுத்தினார்.

சுமார் இருநூறு வருடங்கள் மட்டுமே அந்தக் கோயிலில் பெருமாள் எழுந்தருளியிருந்தார். அதற்குப் பிறகு வந்த பாண்டியர்கள், பொருந்தி நின்ற பெருமாளுக்குச் சிற்றாற்றங்கரையில் தனிக் கோயில் எழுப்பினர். அதன் பிறகு பெருமாளின் சந்நிதி, நெல் குவிக்கும் நெற்களஞ்சியமாகப் பயன்பட்டது.

‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்!

1967-ம் வருடம்தான் பி.டி.ராஜன் தலைமையில் திருப்பணிக் கமிட்டி அமைக்கப்பட்டு, பிளவுபட்டிருந்த கோபுரம் இடிக்கப்பட்டதுடன் ராஜகோபுரத்துக்கான திருப் பணியும் தொடங்கப்பட்டது. ஆனாலும், ராஜகோபுரத் திருப்பணி அப்போது நிறைவுபெற முடியாமல் போய் விட்டது. அப்போது நெற்களஞ்சியமாக இருந்த பொருந்தி நின்ற பெருமாளின் சந்நிதியில் பாலமுருகனை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடைபெற்றது. இந்த அமைப்பில் அமைந்திருக்கும் ஆலயம் `சோமாஸ்கந்த வடிவம்' என்று சொல்லப்படுகிறது.

ராஜகோபுரத்தின் கதை

தென்காசி விசுவநாதர் ஆலயத்துக்கு ஒன்பது நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எழுப்ப நினைத்த பராக்கிரம பாண்டியன், அதற்காக கால்கோள் இட்டான்.

இதுகுறித்த இரண்டு கல்வெட்டுப் பாடல்களையும் ஆய்வுசெய்த கல்வெட்டு அறிஞர் குடந்தை சேதுராமன், `கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி, வியாழக்கிழமை (30.11.1457) மிருகசீரிடம் நட்சத்திரம், சிம்ம லக்னத்தில் இரவு பதினொரு மணி முதல் ஒரு மணி வரையுள்ள காலத்தில் கோபுரம் கட்ட கால்கோள் இடப்பட்டது' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சந்திரனின் ஆதிக்கம் இருக்கும் இரவு வேளையில் கால்கோள் விழா நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பல சோதனைகளுக்கு இடையிலும் கோபுரத்தைக் கட்ட முயற்சி செய்தும் முழுமையாக முடிக்க முடியவில்லை. பின்னர்வந்த பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் ராஜகோபுரத்தை நிறைவுசெய்து குடமுழுக்கும் செய்வித்தான்.

கோபுரத்துக்கு ஏற்பட்ட சோதனை

ராஜகோபுரத்தின் இரண்டாவது தளம் நவாப்களின் தாலுகா அலுவலகமாகச் செயல்பட்டதாகவும், அங்கிருந்த ஆவணங்களை அழிப்பதற்காக ஆங்கிலேயர்கள் தீவைத்துக் கொளுத்தியதாகவும், அதன் விளைவாக ராஜகோபுரம் பிளவுபட்டதாகவும் திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பு என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

சுமார் 1792-1824-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வருந்தத்தக்க சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. மிக நீண்டகாலம் சிதிலமடைந்த நிலையிலேயே இருந்த தென்காசி ராஜகோபுரத்தை மறுபடியும் கட்டுவதற்கான திருப்பணிகள் 1982-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1990-ம் வருடம் குடமுழுக்கு நடைபெற்றது.

தென்காசி ஆலயத்துக்கு மற்றுமொரு தனிச் சிறப்பும் உண்டு. பிரசித்திபெற்ற எண்ணற்ற ஆலயங்கள் இருந்தாலும், அவற்றின் திருப்பணிகளில் பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள், பல்லவர்கள், நாயக்க மன்னர்கள் என்று பலரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், தென்காசி விசுவநாதர் ஆலயம் மட்டும் முழுக்க முழுக்க தென்காசி பாண்டியர்களால் மட்டுமே திருப்பணிகள் செய்யப்பெற்றது.

பராக்கிரம பாண்டியன் எழுப்பிய ஐயனின் திருக்கோயில் காலமெல்லாம் சிறந்து விளங்கிடவும், பராக்கிரம பாண்டியனின் புகழ் என்றென்றும் நிலைத்திடவும் காசி விசுவநாதரையும் உலகம்மையையும் பிரார்த்தனை செய்துகொண்டு ஆலயத்தை விட்டுக் கிளம்பினோம்.