Published:Updated:

`உயர்விலும் உயர்வானது உழவாரம்!'

உழவாரப் பணி
பிரீமியம் ஸ்டோரி
News
உழவாரப் பணி

- ஆனந்த் பாலாஜி

அது 90-களின் தொடக்கம். முத்துகிருஷ்ணன் என்னும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தமிழகக் கோயில்களுக்கெல்லாம் சென்று தரிசனம் செய்து வந்தார். அப்படி அவர் சென்றபோது பல கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதைக்கண்டு மனம் வருந்தினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குறிப்பாகத் திருநெல்வேலி மணிமுக்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது, அவர் மனம் உடைந்தது. இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும் நாயகனான ஈசனின் ஆலயம் இப்படிச் சிதிலமடைந்து கிடக்கிறதே என்று வருந்தினார்.

அந்தத் தருணத்தில் முத்துகிருஷ்ணனின் மனத்தில் ஓர் ஒளி தோன்றியது. `என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற அப்பர் பெருமானின் கூற்றும் அவர் மனத்தில் உதித்தது. தன் சிந்தனையொத்த சிவனடியார் களோடு கலந்து பேச ஆரம்பித்தார். அவர்கள் ஒரு குழுவாக உருவானார்கள். நெல்லை உழவாரப் பணிக் குழாம் உருவானது.

பொருள் தேவைக்கான பணியைவிட அருள் தேவைக்கான பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கினர். அடியவர்கள் முயல்வதை ஆண்டவன் முடித்துவைப்பான் அல்லவா! விளைவு... சிவனடியார்களின் தொண்டால், விரைவில் மணிமுக்தீஸ்வரம் கோயில் காண்பதற்கு அழகும் அருளும் கொண்டு பொலிவுற்றது.

இறைப்பணியில் ஈடுபடும்போது இதயம் முழுவதும் இன்பம் நிரம்பி வழிவதை அனுபவித்துவிட்ட சிவனடியார்கள் மேலும் மேலும் உழவாரப்பணி செய்யத் தீர்மானித்தனர். அன்று தொடங்கிய இந்த அருட் பணி இன்று 1,100 உழவாரப்பணிகளைக் கடந்துள்ளது. இவர்களின் முயற்சியில் 250-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

`உயர்விலும் உயர்வானது
உழவாரம்!'

60-க்கும் அதிகமான திருக்கோயில் குளங்களும் கிணறுகளும் தூர்வாரப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இரும்பைக் கண்ட காந்தம் போல் சிவனடியார்களைக் கண்டு ஈர்க்கப்பட்ட பலரும் இத்தகைய மாபெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.

இத்தகைய அற்புதத் திருப்பணிகளைச் செய்து வரும் நெல்லை உழவாரப் பணிக் குழாம் அன்பர்களோடு பேசினோம்.

``உழவாரப் பணி செய்து தொழும் அடியார் களை முற்பிறவி கர்மா வருத்தாது. அதேபோல் இப்பிறவியின் கர்மம் நல்வினையாக மாறும்.

ஒரு முறை, திருவீழிமிழலையில் திருமடம் அமைத்து அப்பர் சுவாமிகளும் சம்பந்தப் பெருமானும் தங்கியிருந்தனர். அப்போது கோள்களின் நிலை மாற்றத்தினால் பருவமழை தவறியது. பஞ்சம் வந்தது. சூழ்நிலை கண்டு மனம் வருந்திய இருவரின் கனவிலும் தோன்றிய ஈசன், `நாளை முதல் பஞ்சம் தீரும் நாள்வரை யிலும் நாளும் ஒரு பொற்காசு அருளப்படும். அது கொண்டு மக்கள் துயர் நீக்குக' என்று கூறியருளினார். ஞானசம்பந்தப் பெருமானுக்கு ஒரு காசும், அப்பர் சுவாமிகளுக்கு ஒரு காசும் அருளப்பெற்றது. அந்தக் காசுகளைக் கொண்டு அடியவர்களுக்கும் மக்களுக்கும் நல்ல முறையில் அன்னம் பாலிக்கப்பட்டது.

இறையருளால் அனைத்தும் நல்லபடியாக நடந்துகொண்டிருந்த வேளையில், அப்பர் பெருமானின் திருமடத்தில் சரியான நேரத்திற்கு அன்னம் பாலிக்கப்பட்டது; ஞானசம்பந்தப் பெருமான் திருமடத்தில் காலதாமதம் ஆனது.

காரணம் கேட்டபோது, நாவுக்கரசர் பெறும் காசு மாற்று குறையாததாக இருந்தது. எனவே அதை மாற்றுவது எளிதாகியது. ஞானசம்பந்தப் பெருமானுக்கு வழங்கப்படும் காசு மாற்று குறைவாக இருந்ததால் அதை மாற்றுவதற்குத் தாமதம் ஆகிறது என்பதை அடியார்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஞானசம்பந்தர் சிந்தித்தபோது, திருநாவுக்கரசர் இறைப் பணியுடன் மக்கள் பணியாக உழவாரப் பணித் தொண்டும் செய்து வருவதால், அவருக்கு வாசி இல்லாத மாற்று குறையாத காசு இறைவனால் வழங்கப்படுவதை உணர்ந்தார்.

`உயர்விலும் உயர்வானது
உழவாரம்!'

உழவாரப்பணியின் பெருமையை உணர்த் தவே ஈசன் இத்தகைய திருவிளையாடல்கள் ஆடுகிறான் என்பதை உணர்ந்த சம்பந்தர், `தமக்கும் மாற்று குறையாத காசு அருளவேண்டும்' என ஈசனிடம் வேண்டிக்கொண்டார் என்கிறது தேவாரம்.

அதை அடிப்படையாகக் கொண்டே வழிபாட்டுக்கு இணையாக உழவாரத்தையும் முன்வைக்க வேண்டும் என்னும் சிந்தனையோடு தமிழகமெங்கும் உள்ள அநேகத் திருக் கோயில்களில் திருப்பணிகள் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாது, எங்கள் குழுவில் முக்கியமான ஒரு கொள்கை உண்டு. சிவாலயம், விஷ்ணு ஆலயம் என்ற பேதம் பார்க்கும் வழக்கம் கூடாது என்பதுதான் அது. புராதன ஆலயமாக இருந்து பாழ்ப்பட்டிருந்தால், அது எந்த ஆலயமாக இருந்தாலும் எடுத்துச் செய்யத் தயங்கமாட்டோம்.

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் சென்று எங்களால் ஆன கைங்கர்யத்தைச் செய்துள்ளோம். கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை, விருபாக்ஷிபுரம், ஹம்பி ஆகிய ஆலயங்களில் திருப்பணி செய்தது என்றும் நினைவை விட்டு நீங்காதது.

மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத் தில் உள்ளது. இதைத் திருநாராயணபுரம் என்றும் அழைப்பார்கள். 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஸ்ரீராமாநுஜர் இங்கு 12 ஆண்டுகள் தங்கியிருந்து சேவை செய்தார். அன்றே பழங்குடி மக்களை ஆலய வழிபாட்டுக் குள் கொண்டு வந்ததோடு, திருவிழாவில் ஒருநாள் கட்டளையையும் அவர்களுக்கே ஒதுக்கினார். இந்தச் சம்பிரதாயம் இன்று தொடர்கிறது.

ஸ்ரீராமாநுஜர் அங்கு தங்கியிருந்த காலத்தில் நியமித்த தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர வழிபாட்டு நியமங்களே இன்று வரை இக்கோயிலில் நடைமுறையில் உள்ளன. அதன்படி இந்த ஆலயத்தின் முக்கியத் திருவிழாவின்போது, உற்சவர் அப்பகுதியில் உள்ள எட்டு தீர்த்தங்களில் நீராடுதல் வழக்கம்.

`உயர்விலும் உயர்வானது
உழவாரம்!'

ஆனால், மலையைச் சுற்றிய காட்டுப்பாதை அசுத்தமாகவும் தீர்த்தக்குளங்கள் தூர்வாரப் படாமலும் இருந்ததால், எட்டு ஆண்டுகளாக மூன்று தீர்த்தக் கட்டங்களில் மட்டுமே திருவிழா உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீராமாநுஜர் வகுத்த மரபு காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைத்த நம் குழு அன்பர்கள் 40 பேர் மேல்கோட்டைக்குச் சென்றோம்.

சுற்றுலாத் தலமாக விளங்கும் அந்த மலைப் பகுதியை சுற்றியுள்ள காட்டு பாதையினை

5 கி.மீ தொலைவு சுத்தம் செய்து 5 தீர்த்த கட்டங்களையும் தூர்வாரித் தூய்மை செய்தோம். அதற்கு அடுத்த வாரமே நடைபெற்ற திருவிழாவில் எட்டு தீர்த்தங்களிலும் பெருமாள் ஆனந்த நீராடி உற்சவம் பழைய முறைமையின் படி நடைபெற்றது.

நீர் ஆதாரங்களே வாழ்வாதாரம்

நம் மரபில் வழிபாட்டுக்கு இணையாக வைக்கப்பட்டது நீர் ஆதாரப் பராமரிப்பு. நம் முன்னோர் நீர் ஆதாரங்களை பெருக்கு வதற்காகவே கோயில்களோடு குளங்களையும் அமைத்தனர். நதிகளைக் கொண்டாடினர். அவற்றைப் புனிதமானவையாகக் கருதிப் பராமரித்தனர். ஆனால் அதன் முக்கியத்து வத்தை நாம் பெரிதாக உணரவில்லை.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப் படும் தாமிரபரணி புஷ்கரம், 12 நாள்கள் விழாவாக அக்டோபர் 2018-ல் கொண்டாடப் பட்டது. பொதிகை மலை தொடங்கி புன்னைக் காயல் வரை - தாமிரபரணி ஆறு பாய்கின்ற 149 கி.மீ. தூரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் பக்தர்கள் நீராடி வழிபட அனுமதி தரப் பட்டிருந்தது. அவற்றில் 35 தீர்த்தக் கட்டங்களில் நம் குழுவினர் பணி செய்து, சுற்றியிருந்த முள் களையும் குப்பைகளையும் அகற்றி, பக்தர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் மாற்றினோம்.

தீர்த்தக்கட்டங்களுக்கு அருகில் இருக்கும் மண்டபங்களையும் செப்பனிட்டுத் திருப்பணி செய்தோம். இந்த இறைப்பணியைக் கண்ட மாவட்ட ஆட்சியர் எங்களை அழைத்துப் பாராட்டி கௌரவித்தார்.

இதேபோன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீசொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்களில் உழவாரப் பணிகளும், தெப்பகுளம் தூர்வருதலும் செய் தோம். ராமேஸ்வரம் விவேகானந்தா கேந்திர கவனிப்பில் உள்ள ஆறு முக்கிய தீர்த்தக் கட்டங்களில், ஆறு நாள்கள் பணிசெய்து சுத்தம் செய்து கொடுத்தோம்.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில் திருக்குளம் சுமார் 2.6 ஏக்கர் பரப்பளவுள்ளது. அதேபோன்று ஸ்ரீபூமிநாதசுவாமி கோயிலின் குளம் 1.6 ஏக்கர் அளவுள்ளது. இக்குளங்கள் பராமரிப்பின்றிக் கிடந்தன. பூமிநாத சுவாமி குளமோ நீர் வரத்தே இல்லாமல் காய்ந்துபோய்க் கிடந்தது. இரண்டையும் தூர்வாரினோம்.

ஸ்ரீபூமிநாதசுவாமி கோயில் குளத்துக்கு நீர் வரும் வழிகளைக் கண்டறிந்து சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் வரும்படிச் செய்தோம். இப்போது இரண்டும் நல்ல நிலையில் உள்ளன.

`உயர்விலும் உயர்வானது
உழவாரம்!'

திருப்பணியே இறைப்பணி...

ஆரம்பத்தில் 10, 20 என்ற அளவில் இருந்த அடியார்களின் எண்ணிக்கை, இன்று 100க்கும் மேல் கூடிவிட்டது. திருப்பணிக்கு ஏற்ப தொண்டு செய்ய அடியார்கள் தயாராக உள்ளார்கள். சாதாரணக் கூலி வேலை செய்யும் மக்களிலிருந்து உயர்பதவிகளில் விளங்கும் பக்தர்களும் ஆர்வமுடன் வந்து இந்தப் பணிகளில் கலந்துகொள்கிறார்கள்.

நாகர்கோவில் திருப்பதிசாரத்தில் உழவாரப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு பக்தர், `நானும் இந்தத் தொண்டில் பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். காவி உடை அணிந்திருந்தாலும் அவரை நம்மில் சிலருக்கு அடையாளம் தெரிந்திருந்தது. அவர் ஒரு நீதி அரசர். உறுதிப்படுத்திக்கொள்ள அவரிடம் கேட்டபோது, அவரும் `ஆம்' என்று சொன்னதோடு, `வேறு யாரிடமும் இதைப் பகிரவேண்டாம். சிவனுக்குத் தொண்டு செய்யும்போது அனைவரும் சமமானவர்களே' என்று தாழ்மையுடன் கூறினார். அடியவர்கள் பெருக்கித் தள்ளிய குப்பைகளைக் கூடைகளில் சுமந்து சென்று குளத்துக்கு வெளியே கரையில் கொட்டும் பணியினை அவர் செய்ததைக் கண்டபோது, மேனி சிலிர்த்தது.

சில திருப்பணிகளை ஆரம்பிக்கும்போது கடினமாகத் தோன்றும். செய்யச் செய்ய வேலைகள் எளிதாக முடிந்து விடும். ஆனால் எளிதாக நினைத்த பல வேலைகள் சில அதிக நாள்களை எடுத்து கொள்ளும். இதை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.

தென் திருவாரூர் எனப்படும் இடைக்கால் சிவன் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு நான்கு நாள்களே உள்ள நிலை. அப்போது கோயிலின் பொறுப்பாளர்கள் வந்து கோயில் கிணற்றைத் தூர்வாரித் தரமுடியுமா என்று கேட்டார்கள். அது மிகவும் ஆழமான கிணறு. கிணற்றுக்குள்ளே சகதியும் பெரிய பெரிய கற்களும் மிகுந்திருந்தன.

`உயர்விலும் உயர்வானது
உழவாரம்!'

அந்தச் சிரமமான பணியில் நம் அடியார்கள் மகிழ்வுடன் ஈடுபட்டனர். கற்களையும் சகதியையும் முழுமையாக அகற்றினர். வேலை முடிந்ததும் அதைப் பார்த்த ஊர்மக்கள் அனைவருக்கும் வியப்பு. காரணம் தூர்வாரப் பயன்படுத்தபட்ட கம்பு, கப்பி, கயிறு ஆகியன அவ்வளவு வலிமையானவை அல்ல. இவ்வளவு பெரிய கற்களை வெளியேற்றியது சாதாரண காரியம் அல்ல என்று போற்றினர். நம் கையில் என்ன இருக்கிறது. செய்பவனும் செய்விப்ப வனும் அவன்தானே.

மனித வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்தது. பலரும் துன்பங்களிலிருந்து விடுபட ஜோதிடம், பரிகாரம் என்று அலைகிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் விட அருமையான தீர்வு உழவாரப்பணி. நாங்கள் பல ஊர்களுக்கும் சென்று திருப்பணி செய்கிறோம். பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்; ஒருசிலர் உடன் வந்து உதவுகிறார்கள்.

அப்படி உடலால் ஈசனுக்கு உழைக்கும் போது அந்த இறைவனின் ஆசி பரிபூரண மாகக் கிடைக்கும். இதை உணர்ந்த அடியார்கள் தொடர்ந்து இதில் ஈடுபட்டுத் துயர் இல்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள். சில ஊர்களில் அன்பர்கள் நாங்கள் திருப் பணி செய்வதைப் பார்த்து, அவர்கள் ஊர்களில் உழவாரப்பணிக் குழுக்களைத் தொடங்கி நடத்துவதாகக் கேள்விப்பட்டோம். இதைவிட மகிழ்ச்சிகரமான செய்தி என்ன இருக்கிறது.

அவரவர் ஊர்களில் இருக்கும் ஆலயங்களைத் தூய்மையோடு பராமரித்தால் ஈசன் நம் வீட்டையும் நாட்டையும் குறையின்றிப் பார்த்துக் கொள்வார்'' என்று தங்கள் சிந்தையில் நிறைந்த சிவனை வணங்கி முடித்தார்கள் அந்த அடியவர்கள்.

`அடியார்க்கு அடியார் போற்றி' அவர்களின் தொண்டினைப் போற்றி வணங்கி விடை பெற்றோம் நாம்.