Published:Updated:

திருச்செந்தூரில் எதிரொலிக்கும் `அரோகரா’ கோஷம்!- சூரசம்ஹாரத்தைக் காணக் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்துள்ளனர்.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடுதான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் ஒன்று. சூரபத்மன் என்ற `ஆணவம்’, சிங்கமுகன் எனும் `கண்மம்’, தாரகாசூரன் என்ற `மாயை’ ஆகிய மும்மலங்களால் ஏற்படும் தீமையை ஒழிக்கவே `ஞானம்’ என்ற முருகப் பெருமான் தோன்றி, போரிட்டு வெல்கிறார்.

ஜெயந்திநாதர்
ஜெயந்திநாதர்

இந்த வெற்றிவீர நிகழ்ச்சிதான் கந்த சஷ்டி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல முருகன் தலங்களில் சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடைபெற்றாலும், அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமான திருச்செந்தூரில் நடைபெறுவது சிறப்பாகும்.

`சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என ஒரு பழமொழி உண்டு. `சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் (கருப்பையில்) குழந்தை பிறக்கும்' என்பதுதான் இதன் விளக்கம். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகளுக்கு உகந்த விரதமாகச் சஷ்டி விரதம் சொல்லப்படுகிறது. அத்துடன், வியாபார முடக்கம், தீராத நோய்ப் பிரச்னை, கடன் தொல்லை ஆகியவற்றிலிருந்தும் விடுபட இவ்விரதத்தை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள்.

சூரசம்ஹாரம்
சூரசம்ஹாரம்

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான இன்று மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்த 6 நாள்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றி, பாலும் பழமும் மட்டும் உட்கொண்டு விரதம் மேற்கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் முருகனை தரிசனம் செய்து விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள்.

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. உற்சவரான ஜெயந்திநாதர், இன்று மாலை 4.05 மணிக்கு மேளதாளங்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க கடற்கரைக்குப் புறப்படுகிறார். 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்குகிறது. அதைத் தொடந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. அசுரனை வதம் செய்த முருகனைக் குளிர்விக்கும் விதமாக, 108 மகாதேவர் சந்நிதி முன்பு ’சாயாபிஷேகம்’ நடைபெறுகிறது.

வேல் தாங்கும் பக்தர்கள்
வேல் தாங்கும் பக்தர்கள்

`சாயா' என்றால் நிழல் என்று பொருள். வெற்றி வேலனான, ஜெயந்திநாதருக்கு எதிரில் வைக்கப்படும் கண்ணாடிக்கு அபிஷேகங்கள், விஷேச தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மாலை தெய்வானை அம்பிகைக்கும் முருகப் பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம், பிற மாநிலங்கள் மட்டுமன்றி, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, மதுரையிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

சூரனை வீழ்த்திய வெற்றிவேல்
சூரனை வீழ்த்திய வெற்றிவேல்

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் சார்பில் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்குக் கூடுதலாகச் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளிலிருந்தும் மாலை அணிந்து வரும் பக்தர்கள் `அரோகரா’ கோஷத்துடன் திருச்செந்தூரை நோக்கி வந்தபடி உள்ளனர். விரதமிருக்கும் பக்தர்கள் கடற்கரையிலேயே மணலைக் குவித்து முருகனாகப் பாவித்து மாலை அணிவித்து வணங்கி பாடல்களைப் பாடுகிறார்கள். கைலாயத்தில் உள்ளது போல சிவன், பார்வதி, விநாயகர், முருகன், பெருமாள், நாரதர் என வேடமணிந்த பக்தர்களின் பஜனை பக்தர்களை ஈர்த்துள்ளது.

வேடமணிந்த பக்தர்கள்
வேடமணிந்த பக்தர்கள்

கடற்கரை, நாழிக்கிணறு, வெளிப் பிரகாரம், வள்ளிக்குகை எனத் திரும்பும் திசையெங்கும் பச்சை நிற ஆடை அணிந்த பக்தர்களின் அங்கப் பிரதட்சனம், காவடியாட்டம், பஜனை, ஆடல், பாடல், கோஷங்களால் பக்தி பரவி களை கட்டியுள்ளது திருச்செந்தூர்.

பக்தர்களின் `அரோகரா.. வேல்வேல்.. வெற்றிவேல்..' கோஷமும் திரும்பும் திசையெங்கும் எதிரொலிக்கிறது.