Published:Updated:

மகா யோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்! - 14

மகான் வீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
மகான் வீரபிரம்மேந்திரர்

`பாபா மாமி' ரமா சுப்ரமணியன்; ஓவியம்: ஜீவா

மகா யோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்! - 14

`பாபா மாமி' ரமா சுப்ரமணியன்; ஓவியம்: ஜீவா

Published:Updated:
மகான் வீரபிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
மகான் வீரபிரம்மேந்திரர்

சத்திய வாக்கை நிரூபிக்கிறேன் என்று வீரபிரம்மேந்திர ஸ்வாமிகள் சொன்னதை ஏற்க இயலாமல் திகைத்தனர் அந்தக் கூட்டத்தார். “இவர் என்ன பிதற்றுகிறார்? இறந்தவன் எப்படி உயிருடன் இருக்க முடியும்?” என்று முணுமுணுத்தனர்.

ஸ்வாமி அவர்களிடம், “ரெட்டியின் உடலைப் பிணைத் திருக்கும் கயிற்றை அவிழ்த்துவிடுங்கள்” என்றார். அப்போதும் கூட்டத்தினருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.

மகா யோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்! - 14

அப்போது அவர்களில் முதியவர் ஒருவர், ``இவர் கூறுவது உண்மையா பொய்யா என்பதை அறிந்துகொள்ள, இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே...''

அவரின் கூற்றை கூட்டத்தார் ஏற்றுக்கொண்டனர். உடலைச் சுமந்திருக்கும் பாடை கீழே இறக்கப்பட்டது. ரெட்டியின் உடலோடு சேர்த் துக் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்க்கப்பட்டது. அனை வரும் அடுத்து அங்கு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலுடன் இருந்தார்கள். ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமி, கருணையோடு தன் அபயக் கரத்தால் ரெட்டியின் உடலை தலை முதல் பாதம் வரையிலும் மென்மையாக ஒருமுறை வருடினார். மறுகணம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் பயந்துபோய் சில அடிகள் விலகி ஓடினர். ஆம்! இறந்துபோன ரெட்டியின் சடலம் மெள்ள அசையத் தொடங்கியது. சில கணங்களில் ரெட்டி எழுந்து உட்கார்ந்தான். சுற்றி நின்ற அனைவரையும் பார்த்துக் குழம்பினான்.

``இங்கே என்ன நடக்கிறது... ஏன் என்னை பாடையில் வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டதும், அவனுடைய உறவினர்களும் நண்பர்களும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.

`இது என்ன அதிசயம்! இவர் தோற்றத்தில் சாமான்யராகத் திகழ்கிறார். ஆனால் இறந்த வனை உயிருடன் எழுப்பி விட்டாரே... இவரிடம் ஏதோ விசேஷ சக்தி உள்ளது!' என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட கிராமத்தினர், ஸ்வாமியின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்து நன்றியைத் தெரிவித்தனர்.

மகா யோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்! - 14

காலக்ஞானி மகாயோகி ஶ்ரீவீரபிரம்மேந்திரர் அவர்களிடம் ``இன்று நடந்ததைவிடவும் மிகப் பெரிய அற்புதம் நாளை நடக்கப் போகிறது. நீங்கள் அனைவரும் அதற்கு சாட்சியாய்த் திகழ்வீர்கள்'' என்றார்.

மக்கள் அவரை வணங்கி விடைபெற்றனர். நிகழப்போகும் அற்புதத்தைக் காணும் ஆவலுடன் அன்றைய பொழுதைக் கழித்தனர். அதேநேரம், மரணித்த ஒருவனை ஸ்வாமி உயிரோடு எழுப்பிய அற்புதச் செயலை, அந்த கிராமத்தில் இருந்த சிலரால் ஏற்க இயலவில்லை. அவர்கள், ரெட்டியின் உடலைச் சுமந்து சென்ற அன்பர்களைச் சந்தித்தனர்.

“இது எவ்வாறு ஒரு மனிதரால் சாத்தியமாகும்? பரப்பிரம்மம் நினைத்தால் மட்டுமே இயற்கையின் நியதிகளை - விதியை மாற்ற இயலும். இந்த சந்நியாஸியைப் பார்த்தால் சாதாரண மனிதராகவே தோன்றுகிறார். இது ஏதோ மந்திர வேலையாகவே படுகிறது. இந்த நபர் மந்திர தந்திரங்களில் தேர்ந்தவராக இருக்கவேண்டும். மக்களைக் கவரும் நோக்கில் இவ்வாறெல்லாம் செய்கிறார். அவரை ஒரு தெய்வ புருஷராகக் கருத முடியாது. அவரின் ரகசியத்தை விரைவில் கண்டுபிடிப்போம்'' என்றனர்.

ரெட்டியின் அணுக்கர்களும் அவன் உடலைச் சுமந்து சென்று அற்புதத்தை நேரில் கண்டவர்களுமான அந்த அன்பர்கள், விஷமிகளின் பேச்சைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினர்.

`இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், ஸ்வாமியின் கடும் கோபத்துக்கு ஆளாகப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. ஸ்வாமி இவர்களைப் பார்த்துக் கொள்வார்' என்று தங்களுக்குள் பேசியபடி கலைந்தனர்.

மகான்களையும் யோகிகளையும் சோதித்துப் பார்க்க நினைப்பவர்கள், வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பார்கள். இந்த விஷமிகள் விஷயத்திலும் அப்படியே நடந்தது.

மகா யோகி காலக்ஞானி வீரபிரம்மேந்திரர்! - 14

மறுநாள், ஸ்வாமியின்மீது நம்பிக்கை இல்லாத விஷமிகள் ஒன்றுசேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். தங்கள் குழுவில் இருந்த ஒருவரை பாடையில் படுக்கவைத்து, இறந்தவர் போல நடிக்கச் செய்தனர். பின்னர் பாடையைத் துக்கிக்கொண்டு ஸ்வாமிகள் இருக்கும் இடத்தின் வழியாக அழுது புலம்பியவாறு சென்றனர்.

`இன்று, இவரையும் உயிருடன் எழுப்புவதாக அந்த மனிதர் சொல்வார். அப்போது அவரு டைய போலித்தனம் கிராமத்தார் மத்தியில் வெளிப்பட்டுவிடும்' என்ற நினைப்போடு பயணித்தனர்.

வழியிலுள்ள சிவாலயத்தில்தான் ஸ்வாமி கள் தங்கியிருந்தார். இந்தக் கூட்டம் கோயிலின் அருகில் வந்ததும் கோயில் பூசாரியான பிரம்மய்யாவிடம், “விநாசகாலே விபரீத புத்தி” என்றார் ஸ்வாமிகள். அதன் அர்த்தம் என்னவென்றால், தீய சிந்தனையை உடையவர் களுக்கு நிகழும் சகல சம்பவங்களும் அழிவில்தான் முடியும் என்பதாகும்.

ஸ்வாமிகள் வெளியே வரவும் அந்தக் கூட்டம் அந்த இடத்துக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. ஸ்வாமியின் அருகில் வந்ததும் பாடையை இறக்கி வைத்தனர். ஸ்வாமி ஒன்றுமே அறியாதவராக, ``குழந்தைகளே! என்ன நடந்தது? இவனுடைய மரணத்துக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அவர்கள் அழுவதாக நடித்தபடி, “ஸ்வாமி! இவன் எங்களின் நெருங் கிய நண்பன். பதினைந்து நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நேற்று இரவு இறந்து விட்டான்!” என்றனர்.

அவர்கள் கூறியதைக் கேட்ட ஸ்வாமி, “இவனுக்காகப் பரிதாபப்படுகிறேன். ஒருவன் துர்பாக்கியத்தை வலிய ஏற்படுத்திக் கொண்டு, தன் அழிவுக்கு தானே காரணமாகும் போது, நாம் என்ன செய்ய இயலும். உறங்குப வனை எழுப்பலாம்; உறங்குவது போல் நடிப்பவனை எவராலும் எழுப்ப இயலாது! நானோ சாதாரண மந்திரவாதி. என்னால் எதுவும் செய்ய முடியாது'' என்று கூறிவிட்டு மீண்டும் சிவாலயத்துக்குள் சென்றுவிட்டார்.

பாடையைச் சுமந்து வந்தவர்கள், தாங்கள் செய்த தவறை எவரும் அறியாதபடி, சிறிது தூரத்திலிருந்த மரத்தடிக்குப் பாடையைக் கொண்டுசென்றனர். பாடையைத் தரையில் இறக்கிவைத்து, கட்டுகளை அவிழ்த்தனர்.

பின்னர் மரணித்தவன் போல நடித்துக் கொண்டிருந்தவனை, ``எழுந்திரு! எவராவது பார்த்துவிட்டால் நம்மைத் தூற்றுவார்கள். அதனால் சீக்கிரம் எழுந்து எங்களுடன் புறப்படு!'' என்றனர்.

ஆனால் அவன் எழுந்திருக்கவே இல்லை. `விநாச காலே விபரீத புத்தி' என்று ஸ்வாமி கூறியதற்கேற்ப, நடித்தவன் உண்மையாகவே மரணித்துவிட்டான். அவனிடம் எந்த அசைவும் இல்லை. இதயத் துடிப்பும் நின்று விட்டது. இதையறிந்த விஷமிகள் பீதி அடைந்தனர்.

``இப்போது நாம் என்ன செய்வது... இவன் சடலத்தை ஊருக்குள் எவராவது பார்த்து விட்டால், நம்மைக் கொன்றுவிடுவார்கள். எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டோம்...'' என்று அஞ்சி நடுங்கினர்.

அவர்களில் ஒருவன், “நம்மைக் காப்பாற்ற ஒருவரால் மட்டுமே முடியும். சந்நியாஸி வடிவில் வந்திருப்பவர் சர்வேஸ்வரரின் அவதாரமே ஆவார். அவரால் மட்டுமே இவனை உயிருடன் எழுப்பி நம்மையும் காப்பாற்ற முடியும். நாம் அவரிடம் சென்று மன்னிப்பு வேண்டுவோம்'' என்றான்.

அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். இறந்துபோன நண்பனைத் தூக்கிக்கொண்டு ஸ்வாமியிடம் சென்றனர்.

“ஸ்வாமி! நீங்கள் பரம்பிரம்மம் ஆவீர்கள். மூடர்களான எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களைக் காப்பாற்றுங்கள்'' என்று ஸ்வாமியின் பாதங்களில் விழுந்து வேண்டினார்கள்.

ஸ்வாமி கருணாமூர்த்தி ஆவார்.

“நான் உங்கள் மேல் கோபம்கொள்ளவில்லை. வீணாக அஞ்சவேண்டாம்'' என்று கூறிவிட்டு, இறந்து போனவனின் நெற்றியில் தமது திருக்கரத்தை வைத்தார். அவ்வளவுதான் அவன் உடனடியாக எழுந்து உட்கார்ந்தான். அருகிலிருந்த ஸ்வாமியைப் பார்த்ததும், வெட்கத்தால் அவன் தலை கவிழ்ந்தது. அவர்கள் அனைவரும் அழ ஆரம்பித்தனர்.

ஸ்வாமி அவர்களிடம், “குழந்தைகளே! இப்போது நீங்கள் நிகழ்த்தியதைப் போன்று லட்சக்கணக்கான அவலங்கள் கலியுகத்தின் முடிவில் நிகழப்போகின்றன. நீங்கள் அவற்றை அறிந்தால், தீயவற்றை நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள்'' என்றார். அவர்கள் கண்ணீர் மல்க அவரை கைகூப்பி வணங்கித் தொழுதனர்.

- தரிசிப்போம்...