தஞ்சை பெருவுடையார் கோயிலில் தெய்வத்தமிழ் பேரவையின் சார்பில் தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் வழிபாட்டு இயக்கம் மற்றும் தெய்வத்தமிழ் பேரவை அமைப்பினைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஏராளமானவர்கள் பூஜைப் பொருள்களோடு திரண்டனர்.
இவர்கள் தேவாரம் பாடியவாறே கோயிலின் கருவறைக்கு சென்றார்கள். இவர்கள் வருவதை அறிந்து தமிழ் அர்ச்சனை செய்யக் கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அர்ச்சகர்கள், தமிழில் மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை செய்தனர். அப்போது இக்கோயிலுக்கு வந்திருந்த பொதுவான பக்தர்கள், இதனை வியப்புடனும் மகிழ்ச்சியுடன் பார்த்து பக்தி பரவசமடைந்தார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தெய்வத்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்,
‘’கோயில் கருவறையில் தமிழில் மந்திரங்கள் ஓதி, அர்ச்சனை செய்ய அரசாணைகள் இருந்தும் கூட, அவை நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை. தற்போதைய அரசு தமிழ் அர்ச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. ஆனால் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் கருவறைக்குள் இல்லை. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினால், இங்கு வழக்கமாக இருக்கக்கூடிய அர்ச்சகர்கள் மறுக்கிறார்கள். விடாபிடியாக வலியுறுத்தினால், இங்கு வைக்கப்பட்டுள்ள பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அர்ச்சகர்கள் தொலைபேசி எண்ணுக்கு பக்தர்களை தொடர்பு கொள்ள சொல்கிறார்கள். அப்படித் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் வந்தால்தான் தமிழில் அர்ச்சனை செய்ய முடியும் என்ற நிலை இருப்பது வருத்தம் அளிக்கிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த மோகனசுந்தரம் அடிகளார், குச்சனூர் கிளார் என்ற தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் வடகுரு ராஜயோகம் மடத்தின் தலைவர் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஆனால் இங்குள்ளவர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய தெரியாது என்று மறுத்து விட்டனர். இப்படித்தான் தமிழ்நாடு முழுக்க உள்ளது.

ஏற்கெனவே நாங்கள் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாகதான், தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய வலியுறுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம், தெய்வத்தமிழ் பேரவை அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமல்லாமல், ஆதரவாளர்கள், நண்பர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் இன்று தங்களது குடும்பத்தினருடன் வருகை புரிந்து தமிழ் அர்ச்சனை நிகழ்வில் பங்கு பெற்றுள்ளார்கள்.
தஞ்சை பெரியகோயில், கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட இன்னும் பல்வேறு ஊர்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் அறிவிப்பு செய்திருந்ததால், கருவறையில் தமிழில் அர்ச்சனை செய்வதற்கும், திருவாசகம் பாட ஒதுவாரையும் தஞ்சை பெரியகோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ் குடிமகன் பிறப்பித்த ஆணையில் அதே அர்ச்சகர் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதற்காக புத்தகங்கள் எல்லாம் அச்சடித்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த நடைமுறை தற்போது கிடையாது. பலகையில் கைபேசி எண்ணைக் குறிப்பிட்டு அதைத் தொடர்புகொண்டு அர்ச்சகர்களை பக்தர்கள் அழைக்கும் நடைமுறையை நீக்க வேண்டும்.
இங்கு உள்ளவர்களே தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும். அவர்களுக்கு முறையாகப் பயிற்சி கொடுக்க வேண்டும். தமிழ் அர்ச்சனை புத்தகத்தைக் கொடுத்து பயிற்சி அளிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் மாதம் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கும் தமிழ் அர்ச்சனை கிடையாது.

எனவே புது ஆணை ஒன்றை அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும். அதில் தமிழில் மட்டும்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சமஸ்கிருதத்தில் வேண்டும் எனக் கூறும் பக்தர்களுக்கு மட்டும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யலாம். மற்றப்படி முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே மந்திரங்கள் ஒலிக்க வேண்டும்.
மாவட்டங்களில் தமிழ் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்க வேண்டும். தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பவர்கள் மீது பக்தர்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக கோயில் வளாகத்தில் புகார்ப்பெட்டி வைக்க வேண்டும். அந்தப் புகார்களை விசாரித்து, தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பவர்கள் மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.