Published:Updated:

திருப்பதி பிரமாண்டநாயகனுக்கு பிரம்மோற்சவம்; கோலாகல ஏற்பாடுகள் - வி.ஐ.பி தரிசனம் ரத்து! #Tirupati

திருமலை பூங்காக்கள் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பார்ப்போரின் கண்களையும் கருத்தையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Tirupaty
Tirupaty

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, வண்ண வண்ண மலர்களாலும் விளக்குகளாலும் பூமியின் சொர்க்கமென வியக்கும் அளவுக்குத் திருமலை அலங்கரிக்கப்பட்டு வருகிறது. நான்கு மாட வீதிகளிலும் பெரிய பெரிய கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன.

Tirupaty
Tirupaty

திருமலை பூங்காக்கள் சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு, பார்ப்போரின் கண்களையும் கருத்தையும் கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவையின்போது குவியவிருக்கும் 3 லட்சம் பக்தர்களுக்காக அன்னதானம் சிறப்பாக நடைபெறப் பலவிதமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பிரம்மோற்சவம் நடைபெறும் நாள்களில் பக்தர்களுக்குச் சுத்தமான அன்னதானம், குடிநீர், கழிப்பறைகள் வசதி ஏற்பாடுகள், வரிசைகளுக்கான தடுப்புகள் என அனைத்தும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Mada street
Mada street

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1,200 பாதுகாவலர்கள் தவிர்த்து கூடுதலாக 6,000 பாதுகாவலர்கள், 3,500 சேவகர்கள், 1,000 சாரண இயக்கத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 1,650 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம்:

30-9-19

கருடக் கொடியேற்றம்

இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா

1-10-19

சிறிய சேஷ வாகன வீதி உலா

இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வாகன வீதி உலா

Mada street
Mada street

2-10-19

சிம்ம வாகன வீதி உலா, சிம்ம வாகனத்தில் சுவாமி பவனி

இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் நிகழ்ச்சி முத்துப்பந்தல் வாகனம்.

3-10-19

கற்பக விருட்ச வாகன வீதி உலா, கற்பக விருட்ச வாகனத்தில் ஶ்ரீதேவி பூதேவி சமேதராக வேங்கடேசப் பெருமாள் பவனி.

இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகன வீதி உலா

4-10-19 -

மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதி உலா,

இரவு 7 மணிக்கு கருட சேவை

5 -10-19

அனுமன் வாகன வீதி உலா

மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம்

Tirupaty
Tirupaty

6 -10-19

சூர்ய பிரபை வாகன வீதி உலா, சூரிய பிரபையின் ஒளிக் கதிர்களுக்கிடையே சூரிய நாராயணனாக வேங்கடவன் எழுந்தருளல்.

இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

7-10-19

தேரோட்டம்

இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா

8-10-19

சக்கர ஸ்நானம்

இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

பிரம்மோற்சவம் நடைபெறும் இந்த ஒன்பது நாள்களும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துவருகிறது.

Pushkarani
Pushkarani

பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இருப்பதால், விழா நடைபெறும் நாள்களில், அனைத்து வகையான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், மூத்தக் குடிமக்கள், கைக்குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கிவரும் சிறப்பு தரிசன சலுகைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை தவிர வி.ஐ.பி. தரிசனம், பரிந்துரை மற்றும் சிபாரிசுக் கடிதங்களின் அடிப்படையில் வருபவர்களுக்கும் சிறப்பு தரிசன அனுமதி மறுக்கப்படும்.