Published:Updated:

எழுத்துகளை வழிபட ஓர் ஆலயம்!

எழுத்துச் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துச் சிற்பங்கள்

பெளர்ணமியில் மட்டும் நடைதிறக்கும் பெளர்ணமிகாவு ஆலயம்!

பரசுராம க்ஷேத்திரமாம் கேரள பூமியில், திருவனந்தபுரம் மாவட்டம், வெங்கானூர் - சாவடிநடை என்ற இடத்தில் அமைந்திருக் கிறது பெளர்ணமிகாவு தேவியின் ஆலயம். மாதம்தோறும் பெளர்ணமி அன்று மட்டுமே திறக்கப்படும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம். வரும் உத்தராயன புண்ணிய காலத் தொடக்கத்தில் வேறோரு சிறப்பும் சேரப் போகிறது இந்த ஆலயத்துக்கு.

எழுத்துகளை வழிபட ஓர் ஆலயம்!

ம்! மலையாள எழுத்துகளுக்கு இங்கே சந்நிதிகள் அமையப்போகின்றன; பக்தர்களுக்கு அட்சர தேவியரின் தரிசனம் வாய்க்கப்போகிறது. மலையாளத்தின் 51 எழுத்துகளுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு. அவர்களுக்கான எழுத்து மற்றும் மந்திரங்களுடன் கூடிய 51 சிற்பங்கள் கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி கிராமத்தில் தயாராகியுள்ளன. நவராத்திரி புண்ணிய காலத்தில் பெளர்ணமிகாவு கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள இந்தச் சிற்பங்கள், தை மாதத்துக்குப் பிறகு அங்கே பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

``இதுவரை எவ்வளவோ சாமி சிற்பங்கள் வடித்திருக்கிறேன். ஆனால் எழுத்துகளுக்கான சிலைகளை வடித்ததில்லை. இப்போதுதான் அந்த வாய்ப்பு கிடைத்தது. பெளர்ணமிகாவு கோயிலைச் சேர்ந்தவர்கள் என்னிடம் வந்து சொன்னதும், வரைபடம் தேவை எனக் கேட்டேன். தெய்வ பிரச்னம் மூலம் திருவுருவங்களைக் கணித்து, வரைந்து தந்தார்கள். மூன்று வருடங்கள் நடந்த இந்தப் பணி இப்போதுதான் நிறைவடைந்துள்ளது...’’ என்கிறார் மயிலாடியைச் சேர்ந்த சிற்பி மதன்.

பெளர்ணமிகாவு கோயிலின் நிர்வாகி புவனச்சந்திரனிடம் பேசினோம்.

பெளர்ணமிகாவு கோயில்
பெளர்ணமிகாவு கோயில்
சிற்பி மதன்
சிற்பி மதன்

“எழுத்து-கல்விக்கான தெய்வம் சரஸ்வதி என்பது நாமறிந்ததே. அதேபோல் ஒவ்வொரு அட்சரத்துக்கும் உரிய தேவிமார் உண்டு. மலையாள மொழியில் `அ’ முதல் `அம்’ வரை - 15; `க’ முதல் `ற’ வரை 36 என 51 எழுத்துக்கள் உண்டு. இவற்றில் `த’ அட்சரத்துக்கான தெய்வம் சரஸ்வதிதேவி. ஆகவேதான் அவளை தமஸ்யாதேவி என அழைப்பார்கள். அப்படியே `இ’ எழுத்துக்கு இந்திராணி, `உ’ எழுத்துக்கு ஊர்த்தகேஷிதேவி என ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தேவிமார் உண்டு.

இந்த தேவிகள் உருவானது குறித்து புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. தட்ச யாகத்தை சிவபெருமான் அழித்த திருக்கதை எல்லோருக்கும் தெரியும். இந்த யாகத் தீயில் பாய்ந்த சதிதேவியின் உடலைச் சுமந்தபடி ஆக்ரோஷத்துடன் அலைந்து திரிந்தார் சிவபெருமான். இதனால் பேரழிவுக்கு ஆளானது பிரபஞ்சம். சதிதேவியின் உடலை இல்லாமல் செய்தால்தான் சிவபிரானின் ஆக்ரோஷம் தணியும் என்ற நிலை. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தனர். அவர் அஸ்திரம் பிரயோகித்தார். அதனால் துண்டுதுண்டான தேவியின் சரீரத்தின் பாகங்கள் பூமியில் 51 இடங்களில் விழுந்தன. அப்படி விழும்போது, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொருவிதமான சத்தம் உண்டானது. அந்த சத்தங்களே அட்சரங்களாக மாறினவாம்.

அட்சரம் படிப்புக்கானது மட்டுமல்ல, அதை அக்னி எனவும் சக்தி எனவும் போற்றுகின்றன ஞானநூல்கள். ஆகவேதான் குழந்தைகள் எழுதும்போதும் பேசும்போதும் அட்சரம் தெற்றக்கூடாது (தவறு ஆகக் கூடாது) என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

புவனச் சந்திரன்
புவனச் சந்திரன்

கும்பகர்ணன் தேவர்களை வேரறுக்க வேண்டும் எனும் நோக்கில் `நிர்தேவத்வம்’ என வரம் கேட்க நினைத்து, `நித்ராவத்வம்’ என்று கேட்டதால், அவன் அதிக நேரம் தூக்கத்தில் கழிக்கும் நிலை வாய்த்தது. அட்சரம் பிசகியதால் வந்த விளைவு இது. எனவே அட்சரம் தவறக்கூடாது. ஆகவே, அட்சரம் தவறாமல் உச்சரிக்க வேண்டி வழிபடவும் இந்த தேவியரைப் பிரதிஷ்டை செய்கிறோம்.

அட்சரங்களுக்கு - ஒரு பாஷைக்கு திருக்கோயிலில் சந்நிதி அமைவது என்பது, உலகத்தில் வேறெங்கும் காண்பதற்கரிய ஒன்று. திருவுருவம், ஆயுதங்கள், வாகனங்கள் என இந்த தேவியரின் வடிவங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும். சாஸ்திர விதிப்படி தேவியரின் திருவடிவங்களைத் தயாராக்கியுள்ளோம்.

திருச்சூர் நடுவிலே மடத்தின் மடாதிபதியான, திருவனந்த புரம் பத்மநாப சுவாமி கோயிலைச் சேர்ந்த புஷ்பாஞ்சலி சுவாமி இந்த அட்சர தேவிகளை பூஜிக்கும் தியான சுலோகத்தை எழுதியிருக்கிறார். குழந்தைகளின் கல்வி சிறக்கவும், நினைவாற்றல் பெருகவும் அருளும் சக்திகள் இந்த அட்சரதேவியர்.

சிவ சம்ஹிதை, தேவிபாகவதம் - அக்ஷரமாலா கர்மம் பகுதி, ஆதிசங்கரரின் பாடல்கள், கேரளத்தின் குஞ்ஞத்து எழுத்தச்சனின் ஹரிநாம கீர்த்தனம் ஆகியவற்றில் அட்சர தேவியரை துதிப்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

இதுவரையிலும் எங்கள் கோயிலில் விஜய தசமி தினத்தன்று மட்டும் வித்யாரம்ப வைபவம் நிகழும். அட்சரதேவியர் எழுந்தருளிய பிறகு, தினமும் வித்யாரம்ப வைபவம் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம். சகல கலைகளுக்கும் வித்யாரம்பம் தேவை. அவ்வகையில் கல்வி, விவசாயம், சங்கீதம், ஜோதிடம், ஓவியம், பொறியியல் துறை, மருத்துவம், ஆயுர்வேதம் என சகல வித்யைகளும் நல்லபடியான தொடக்கத்தைப் பெற அருளும் தலமாக எங்கள் ஆலயம் திகழும். மட்டுமன்றி, இது தாய்மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியும்கூட’’ என்றார் புவனச்சந்திரன்.

எழுத்துகளை வழிபட ஓர் ஆலயம்!
`பள்ளிக்கல்’ சுனில்
எழுத்துகளை வழிபட ஓர் ஆலயம்!

பெளர்ணமிகாவு கோயில் அம்பிகையின் பக்தரும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான `பள்ளிக்கல்’ சுனில், அட்சரதேவியரின் சிறப்பைப் பகிர்ந்துகொண்டார்: “நம் ரிஷிமார் கள் அட்சரத்தைப் பூஜித்தவர்கள். தமிழகத்தில் திருவள்ளுவர், கேரளத் தில் நாராயணகுரு, சட்டம்பி சுவாமி போன்றோர் அட்சரத்தைப் போற்றியவர்கள். ஆகவேதான், பெரிய தத்துவங் களை விளக்கும் ஞானநூல்களை அவர்களால் உலகுக்கு அளிக்க முடிந்தது.

அட்சரதேவிகளை உபாசிக்கும் கவிஞர் கைதப்பறம் தாமோதரன் நம்பூதிரி கூறிய சில அறிவுரைகளே, அட்சரதேவியரை நிர்மாணிக்க அடித்தளம் இட்டன. பரமேஸ்வரன் ஞானக் கடவுள், ஆதிகுரு என அறியப்படுகிறார். அவரே தேவியை துதிப்பதாகச் சொல்கின்றன ஞானநூல்கள். அவ்வகையில், மணிதீபத்தில் வீற்றிருக்கும் தேவியை சகலரும் துதிக்கும் விதமாக, பெளர்ணமி காவு கோயிலில் அட்சர தேவியர் பிரதிஷ்டை செய்யப்பட வுள்ளனர்.

காந்திஜியை மகாத்மா என்றழைத்த `ஐயங்காளி’ பிறந்த வெங்கானூரில், ஆயி ராஜாக்கள் காலத்தில் நிறுவப்பட்ட பெளர்ணமிகாவு கோயிலில், அட்சரதேவியர் எழுந்தருளப் போகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. சொழ ராஜாக்கள் போரிடச் செல்லும்போது, பெளர்ணமிகாவு தேவியை தேரில் அழைத்துச் சென்று வெற்றிபெற்றதாக வரலாறு உண்டு. இங்கு வந்து வழிபட்டால் ஏழு தலைமுறைக்கு சகல ஐஸ்வர்யமும், ஞானமும், வித்தையும், விவேகமும் நல்லபடியாக ஸித்திக்கும் என்பது நம்பிக்கை!’’

வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் ஒருமுறை பெளர்ணமிகாவு தலத்துக்குக் குடும்பத்துடன் சென்று வாருங்கள். தை மாதத்துக்குப் பிறகு சென்றால், அட்சரதேவியரையும் தரிசிக்கலாம். அவர்களின் திருவருளால் உங்கள் குழந்தைகளின் கல்வி சிறக்கும்; எதிர்காலம் சிறக்கும்!

எப்படிச் செல்வது?: திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெங்கானூர், விழிஞ்ஞம் செல்லும் பேருந்துகளில் சென்று சாவடிநடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.

நாகர்கோவில்-மார்த்தாண்டம் வழியாகச் செல்பவர்கள் பாலராமபுரம் சந்திப்புக்குச் சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் சிசிலிபுரம் செல்லவேண்டும். இந்த ஊரிலிருந்து கோயிலுக்குச் செல்ல போக்குவரத்து வசதி உண்டு. பெளர்ணமி தினங்களில் அதிகாலை 5 முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.