Published:Updated:

மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவைத் தொடர்ந்து கள்ளழகர் திருவிழா நடைபெறுமா? - அதிகாரிகள் ஆலோசனை

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா, ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதோடு சேர்ந்து நடைபெறும் கள்ளழகர் திருவிழாவும் ரத்து செய்யப்படுமா என்பது பற்றி அழகர்கோயில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அழகர்கோயில்
அழகர்கோயில்

தமிழகத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் மிக முக்கியமானது மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா. சங்க காலத்திலிருந்து நடைபெற்று வருவதாகச் சொல்லப்படும் சித்திரைத் திருவிழா, நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து மிகப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகப்போர் நடந்த காலகட்டத்தில்கூட. தடைபடாத சித்திரைத் திருவிழா, கொரோனா வைரஸ் அபாயத்தாலும் தொடரும் ஊரடங்காலும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என்று மே 5-ம் தேதி வரை சிறப்பாக நடைபெறவிருந்த மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா, ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சித்திரைத் திருவிழா
சித்திரைத் திருவிழா

ஆனாலும், கோயில் வழக்கப்படி குறிப்பிட்ட சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மே 4-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும், இதை இணையதளத்தில் மக்கள் காணலாம். அதுபோல வீட்டிலிருந்தபடியே பெண்கள் மங்கல நாண் மற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

``கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கூட்டம் கூடும் எந்தவொரு நிகழ்ச்சியும் இக்காலகட்டத்தில் நடத்தக் கூடாது என்று பேரிடர் மேலாண்மை சட்ட அடிப்படையில் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுகிறது'' என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்மிடம் கூறினார்.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்
என்.ஜி.மணிகண்டன்

மதுரை மக்கள் மட்டுமல்லாமல் மதுரையைச் சுற்றியுள்ள 20 மாவட்ட மக்கள் கலந்துகொள்ளும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி சித்திரைத் திருவிழாவில் முக்கியமானது. பல லட்சம் மக்கள் கூடும் இந்நிகழ்ச்சி மதுரை மக்களின் உணர்வோடு கலந்த விழாவாகும். தற்போது மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கள்ளழகர் திருவிழா நடைபெறுவது பற்றி, அழகர் கோயில் நிர்வாகத்தினர் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதுபற்றிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு