Published:Updated:

கூவம் நதிக்கரைக் கோயில்கள்!

கூவம் நதிக்கரைக் கோயில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கூவம் நதிக்கரைக் கோயில்கள்

சமீபகாலமாக சென்னை தினம் என்ற ஒன்றைக் கொண்டாடுகிறோம்.

கூவம் நதிக்கரைக் கோயில்கள்!

சமீபகாலமாக சென்னை தினம் என்ற ஒன்றைக் கொண்டாடுகிறோம்.

Published:Updated:
கூவம் நதிக்கரைக் கோயில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கூவம் நதிக்கரைக் கோயில்கள்

டவுள் உண்டு, இல்லை என்கிற வாதம் வேதகாலம் தொட்டே இருந்துவந்திருக்கிறது. அது ஒருவிதத்தில் நம் தர்மத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்று. ஆனால் ‘என் கடவுள் உண்டு; உன் கடவுள் இல்லை’ என்கிற வாதம் மிகவும் ஆபத்தானது.

அந்நியர் படையெடுப்புகளின்போதும் பிற மதங்கள் ஆதிக்கம்கொண்டபோதும் சனாதன தர்மம் கொஞ்சம் புகழ் மங்கினாலும் மீண்டும் தழைத்துவிட்டது. காரணம், நாம் நம் அடையாளங்களான வேதங்களை, கோயில் களை, சூழலை இடைவிடாது பாதுகாத்து வந்ததே. ஆனாலும் அந்நியரால் ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக நீங்கிவிடவில்லை என்றே சொல்லலாம். இன்று நம்மிடம் இருக்கும் பல வரலாறுகள் அந்நியர்கள் எழுதித் தந்தவையே.

கூவம் நதிக்கரைக் கோயில்கள்
கூவம் நதிக்கரைக் கோயில்கள்

சமீபகாலமாக சென்னை தினம் என்ற ஒன்றைக் கொண்டாடுகிறோம். அதாவது ஆங்கிலேயர்கள் நம் கரை ஒதுங்கி நகரை உருவாக்கியதாகக் கருதப்படும் தினத்தையே சென்னை தினம் என்று கொண்டாடுகிறோம். அப்படிக் கணக்கிட்டால் சென்னையின் வயது வெறும் 380 தான். ஆனால் ‘சென்னையின் வயது 2,000 ஆண்டுகளுக்கு மேல்’ என்கிறார்கள் நம் பண்பாட்டு ஆய்வாளர்கள். பாரத தேசத்தின் எந்த நதிக்கரை நாகரிகத்துக்கும் இணையானது நம் கூவம் நதிக்கரை நாகரிகம் என்பது அவர்களின் வாதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்தியாவில் பாயும் அனைத்துப் புனித நதிகளுக்கும் இணையானது கூவம் நதி. ஏன், ஒருபடி மேலே போய் உலகில் எந்தத் தீர்த்தமும் கூவத்துக்கு நிகர் இல்லை என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள். திருவிற்கோலமூர்த்தியின் புகழைக் கூவபுராணத்தில் பாடும்போது,

‘தீர்த்தம் உல குஉள எவையும் அப்புனித

தீர்த்தத்துக்கு ஒவ்வா;’

- என்று குறிப்பிடுகிறார். அந்த அளவுக்குப் புண்ணியமும் பெருமையும் வாய்ந்தது கூவம் நதி. இதன் கரையில் சைவமும் வைணவமும் தழைத்து ஓங்கின” என்று ஆதாரங்களோடு பேசுகிறார் ஆன்மிகப் பண்பாட்டு ஆய்வாளர் பிரியா பாஸ்கரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரியா பாஸ்கரன் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிபவர். தன் ஓய்வு நேரங்களில் ஆலயங்களுக்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 2010-ம் ஆண்டு, ஒரு வலைப்பக்கம் தொடங்கி அதில் தான் கண்ட ஆலயங்கள் குறித்துப் பதிவு செய்து வந்தார். பெரும்பாலானவர்களுக்குச் சென்னை என்றால் கபாலீஸ்வரர் கோயிலும் திருவொற்றியூர் கோயிலும் மட்டுமே நினைவுக்கு வரும். அதனால் பிரியா பாஸ்கரன் பழைய கோயில்களைத் தேடிப் போய் தரிசனம் செய்த தோடு அவைகுறித்துத் தன் வலைப் பக்கத்திலும் எழுத ஆரம்பித்தார். இது பலரின் கவனத்தையும் கவர்ந்தது. எனவே பிரத்யேகமாக ‘ஆலயம் கண்டேன்’ என்ற வலைப்பக்கம் தொடங்கி அவர் கோயில்கள் குறித்து எழுத ஆரம்பித்தார்.

கூவம் நதிக்கரைக் கோயில்கள்!

குறிப்பாகச் சென்னையைச் சுற்றியிருக்கும் கோயில்கள் குறித்து எழுதவேண்டும் என்கிற போது, அவை தொடர்பான பதிவுகளை இலக்கிய ஆதாரங்களைத் தேடத் தொடங்கியவருக்கு கூவபுராணம் கிடைத்திருக்கிறது. விளைவு, அந்த நதிக்கரையை ஒட்டிய திருத்தலங்களையும் கணக்கெடுக்க ஆரம்பித்து இன்று அதை மாபெரும் ஆவணமாக மாற்றியிருக்கிறார்.

“கூவம் என்கிற நதி இன்றைக்குக் கிண்டலுக்கும் கேலிக்கும் உரியதாக மாறிவிட்டது. 300 ஆண்டு களுக்கு முன்பு இப்படியில்லை. குறிப்பாக 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் சிந்தாதரிப் பேட்டையில் சாயப்பட்டறைக் கழிவுகளை நதியில் கலக்கும் வரைக்கும் கூவம் ஒரு தூய நதியாகவே இருந்தது.

இந்தியாவின் வேறெந்த நதிக் கரை நாகரிகத்துக்கும் சற்றும் சளைத்ததல்ல, கூவம் நதிக்கரை நாகரிகம். நதி ஓடிப் பாய்ந்து கடலில் கலக்கும் வழியெங்கும் கலையும் பண்பாடும் செழித்துவளர்ந்திருக்கின்றன. அதன் அடையாளம்தான் இந்த நதிக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கோயில்கள். இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஆண்டு பழைமை கொண்டவை. இன்று பல ஆலயங்கள் பராமரிப்பின்றி மண்மூடிப் போய்விட்டன. சில ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி விட்டன. இவற்றையெல்லாம் நாம் கருத்தில் கொள்ளவேயில்லை.

17-ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய பல்வேறு நூல் களில் கூவபுராணமும் ஒன்று. கூவ நதிக்கரையில் அமைந்த இறைவனின் சிறப்பையும் நதியின் மகிமையையும் சிறப்பித்துப் பாடியிருக்கும் நூல் அது. கூவம் என்பது இந்த நதி பிறக்கும் ஊரின் பெயர். இந்த நதியைப் புராணம், பாலி நதி என்று குறிப்பிடுகிறது. பாலாறு என்பதே பாலியானது. ஞானசம்பந்தரும் இந்த நதியைப் பாலி என்றே குறிப்பிடுகிறார். இதை ‘க்ஷீராநதி’ என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. க்ஷீரம் என்றால் பால் என்று பொருள்.

கூவம் நதிக்கரைக் கோயில்கள்
கூவம் நதிக்கரைக் கோயில்கள்

திரிபுரம் எரிக்கப் புறப்பட்டபோது தேவர்கள் விநாயகரை வணங்க மறந்தனர். அதனால் விநாயகர் சிவபெருமான் ஏறிய ரதத்தின் அச்சை முறித்தார். அதனால் ரதம் கவிழ்ந்தது. அப்போது சிவபெருமான் தன் வில்லை ஊன்றி நின்றார். அப்போது பாதாளத்தில் ஓடிக்கொண்டிருந்த நதி தெறித்து வெளியேறியது. அந்த நதியின் நான்கு துளிகள் விழுந்த இடத்தில் நான்கு சுயம்பு லிங்கங்கள் உருவாயின என்கிறது கூவ புராணம்.

மேலும் இந்தத் தலம் கயிலாயத்துக்கு இணையான தலம் என்றும் இங்கு சிவபெருமான் விரும்பிக் கோயில்கொண்டதால் தேவர்கள் வந்து வசித்த ஊர் இந்தக் கூவம் என்றும் குறிப்பிடுகிறது. இந்த நதியில் நீராட சகல பாவங்களும் தீரும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சிவப்பிரகாசர் வாழ்ந்த காலத்தில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் இங்கிருக்கும் நீர்நிலைகளில் நீராடினால் சகல செல்வங்களும் பெற்று வாழலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்ததையும் அவர் தெரிவிக்கிறார்.

இந்த நதியை ஆதாரமாகக் கொண்டு விவசாயமும் செழித்தோங்கி திகழ்ந்ததாம். தேவர்களே இங்கு வந்து விவசாயம் செய்யும் குடிகளாகப் பிறந்தனர் என்றும் சொல்கின்றனர். வேளாண்மை செழித்திருக்கும் சமூகத்தில் கலையும் பண்பாடும் தானாக செழிக்கும். அதனால்தான் இந்த நதிக்கரையில் பல நூறு கோயில்கள் அமைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் தேடிச்சென்றோம்.

கூவம் நதிக்கரைக் கோயில்கள்
கூவம் நதிக்கரைக் கோயில்கள்

சுமார் 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் இந்த நதியை ஒட்டி இருப்பதைக் கண்டுபிடித்தோம். இவற்றில் சில கோயில்கள் ஒரு கால பூஜைகூட நடைபெறாமல் சிதைந்திருப்பவை. சிலவற்றில் ஒருகால பூஜை மட்டும் நடைபெறுகிறது. கல்வெட்டு மற்றும் இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு கிடைத்த சில கோயில்களைத் தேடினோம். அவற்றில் பல மறைந்துவிட்டன, சில வேற்று மதங்களின் வழிபாட்டுத் தலங்களாக மாறிவிட்டன. இருக்கும் கோயில்களையாவது பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கூவம் நதிக்கரைக் கோயில்கள் என்கிற தலைப்பில் நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டேன்.

நதிக்கரையிலிருந்து ஒரு கி. மீ தொலைவுக்குள் இருக்கும் கோயில்களையே அவற்றில் சேர்க்க விரும்பினேன். அப்படிக் கிடைத்த கோயில்களே மொத்தம் 113. இத்தனை கோயில்கள் இருக்கின்றனவா என்று பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். நூலைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு கோயிலாகப் போகிறவர்களும் உண்டு. இந்த நூலில் கோயில்களின் தலபுராணத்தைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். ஆலய முகவரி தொடர்பு எண் ஆகியவற்றையும் தொகுத்துத் தந்துள்ளேன்.

இத்தகைய ஆவணப்படுத்தல் மிகவும் அவசியம் என்றே தோன்றுகிறது. இன்று கூவம் பகுதியில் இருக்கும் ஏரியை டிபிஎம் ஏரி என்கிறோம். திரிபுவனமாதேவி ஏரி என்பதைத்தான் டிபிஎம் ஆக்கிவிட்டோம். பெயர்கள் சுருங்கலாமா.... சோழர்கள் காலத்தில் கூவ நதியின் நீர்வரத்துக்காக ஒரு பெரும் ஏரி வெட்டப்பட்டது என்று குலோத்துங்கச் சோழன் காலமான கி.பி 1211-ம் ஆண்டுக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இப்படி 1,000 ஆண்டுகளுக்கும் மேலானவரலாற்றையே தன் வசம்கொண்டிருக்கும் கூவ நதிதான் இன்று சாக்கடையாகிவிட்டது.

2015-ம் ஆண்டு வெள்ளத்தின்போது நதி தன் சுய உருவில் வெளிப்பட்டு மறைந்தது!

இலம்பையங்கோட்டூரில் இருக்கும் இறைவனுக்குத் தீண்டாத் திருமேனி என்று பெயர். அந்த லிங்கத்தை யாரும் தொடுவதில்லை. அந்த லிங்கத் திருமேனிக்கு ஒரு விசேஷம் இருந்ததாம். மழை மற்றும் வெள்ளம் வரும் என்றால் திருமேனி வெண்மை நிறமாக மாறிவிடுமாம். போர் அல்லது கடும்கோடை வருமென்றால் சிவப்பு நிறமாகிவிடுமாம். இப்படி இந்த நதியின் கரையில் இருக்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அவற்றைப் பாதுகாக்கவேண்டிய கடமையும் நமக்குண்டு” என்றார் பிரியா பாஸ்கரன்.

நம் பண்பாடு கலாசாரம் என்ன என்பதை அறிய நாம் நம் வேர்களைத் தேட வேண்டும். அப்போதுதான் நம் மண்ணின் மகிமை நமக்குப் புலப்படும். அதை அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல இயலும். அவ்வகையில், கூவம் எனும் நதியின் சிறப்புகளை, தர்மமிகு சென்னையின் மகிமையை அறிந்து அவற்றைப் பாதுகாக்க பிரியா பாஸ்கரன் எடுத்திருக்கும் முன்னெடுப்பு, மிகச்சிறந்த திருப்பணி என்றே சொல்லவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism