Published:Updated:

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 4 | சிவபூஜையே பிரதானம்... உலகுக்குணர்த்திய இம்மையில் நன்மைதரும் இறைவன்!

இம்மையில் நன்மை தருவார் கோயில் ( எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி )

பசியோடு இருப்பவனுக்கு போதனைகளில் எப்படி மனம் செல்லாதோ அதேபோன்று பிரச்னைகளோடு இருப்பவர்களால் இறைவழியில் செல்வதும் இயலாது. அதனால்தான் இறைவன் கருணாமூர்த்தியாக விளங்கி விதியையும் மாற்றி அருள்செய்யும் தயாளனாக விளங்குகிறார்.

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 4 | சிவபூஜையே பிரதானம்... உலகுக்குணர்த்திய இம்மையில் நன்மைதரும் இறைவன்!

பசியோடு இருப்பவனுக்கு போதனைகளில் எப்படி மனம் செல்லாதோ அதேபோன்று பிரச்னைகளோடு இருப்பவர்களால் இறைவழியில் செல்வதும் இயலாது. அதனால்தான் இறைவன் கருணாமூர்த்தியாக விளங்கி விதியையும் மாற்றி அருள்செய்யும் தயாளனாக விளங்குகிறார்.

Published:Updated:
இம்மையில் நன்மை தருவார் கோயில் ( எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி )

கோயில் நகரம் என்றால் அது மதுரைதான். திரும்பும் திசை எங்கும் கோயில்கள். அனைத்துமே வரலாறும் புராணமும் கலையும் கொட்டிக்கிடக்கும் பாரம்பர்யப் பொக்கிஷங்கள். மதுரைக்குச் செல்பவர்கள் தவறாமல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அருகிலேயே இருக்கும் சில முக்கியமான தலங்கள் குறித்த தகவல்கள் அறியாமல் தவறவிட்டுவிட நேரிடும். அப்படி மதுரையில் அமைந்திருக்கும் புராண முக்கியத் துவம் கொண்ட பழைமை வாய்ந்த கோயில்களைப் பட்டியல் இட்டால் அதில் முதலில் வருவது, 'இம்மையில் நன்மை தருவார் கோயில்.'

புத்தருக்கு முன்பாக போதனை கேட்கப் பலரும் அமர்ந்திருந்தார்களாம். அவர்களில் ஏழை ஒருவனும் பசியோடு அமர்ந்திருந்தான். அவனின் முகவாட்டத்தைக் கண்ட புத்தர் கேட்டபோது பசிப்பிணி தன்னை வாட்டுவதைச் சொன்னானாம். உடனே புத்தர் முதலில் அவனுக்கு உணவளிக்குமாறு அறிவுறுத்தி அதுவே முதல் போதனை என்றாராம்.

சங்காபிஷேகம்
சங்காபிஷேகம்

எப்படிப் பசியோடு இருப்பவனுக்கு போதனைகளில் மனம் செல்லாதோ அதேபோன்று பிரச்னைகளோடு இருப்பவர்களால் இறைவழியில் செல்வது இயலாது. அதனால்தான் இறைவன் கருணாமூர்த்தியாக விளங்கி விதியையும் மாற்றி அருள்செய்யும் தயாளனாக விளங்குகிறார். அப்படி இறைவன் அருளும் திருத்தலங்களில் ஒன்று இம்மையில் நன்மைதருவார் கோயில். பொதுவாக முன்வினைப்பயன்களையே இம்மையில் நாம் அனுபவிக்கிறோம் என்றும் இம்மையின் பயன்களை மறுபிறவியில் அடைவோம் என்றும் சொல்லப்படுவதுண்டு. கோடை என்றால் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றாலும் ஒரு பெருமழை அதன் உஷ்ணத்தைத் தணித்துக் குளிர் அளிக்கும் அல்லவா... அந்தப் பெருமழைபோல அருள்பாலிக்கிறார் இறைவன். நம் முன்வினைப் பயன்களைப் போக்குவதோடு இம்மையிலேயே நமக்கு நன்மைகளை அருள்வார் இத்தலத்து ஈசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கு ஈசன் இம்மையில் நன்மை தருவார் என்ற திருநாமத்தோடே அருள்பாலிக்கிறார். அன்னைக்கு மத்தியபுரி நாயகி என்பது திருநாமம். நகரின் மத்தியில் இந்தத் தலம் அமைந்திருப்பதால் அன்னைக்கு இந்தப்பெயர் என்கிறார்கள் பக்தர்கள். இந்தத் தலம் உருவான காரணம் சுவாரஸ்யமானது. சொக்கநாதர் அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டார். மதுரை மாநகரை இருவரும் ஆட்சி செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அக்காலத்தில் மன்னர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறும் முன்பாக சிவபூஜை செய்வது வழக்கம்.

மூவுலகங்களின் தலைவனும் தலைவியும் ஆனபோதும் வழக்கத்தைக் கைவிட விரும்பவில்லை அம்மையும் அப்பனும். ஈசன், தன் ஆத்மாவையே இங்கு லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து அம்பிகையோடு வழிபாடு செய்தார். பின்பு பட்டாபிஷேகம் ஏற்றார் என்கிறது தலபுராணம். எனவேதான் இங்கு ஈசன் லிங்கத்துக்கு பூஜை செய்யும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் பட்டாபிஷேக உற்சவத்தின்போது சொக்கநாதப் பெருமானும் மீனாட்சி அம்மையும் இத்தலத்துக்கு எழுந்தருள்வர். மூலவருக்கு நேராக வைக்கப்பட்டு மூலவருக்கும் சொக்கநாதர் மீனாட்சி உற்சவர்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை செய்யப்படும். இந்த பூஜையை சிவபெருமானே செய்வதாக ஐதிகம். இத்தகை சிறப்புடைய இந்தத் திருக்கோயில் மதுரை மேலமாசிவீதியில் அமைந்துள்ளது.

இம்மையில் நன்மை தருவார் கோயில்
இம்மையில் நன்மை தருவார் கோயில்

இங்குள்ள லிங்கத்துக்கு நித்திய அபிஷேகமும் சுவாமிக்கு வருடத்துக்கு 54 நாள்களுக்கு மட்டும் தைலாபிஷேகமும் நடைபெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி மற்றும் மார்கழி மாதத்தின் 30 நாள்களும் இந்த அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இங்கு அருளும் அம்பிகைக்கு மாங்கல்ய வரப்பிரசாதினி என்ற திருநாமமும் உண்டு. இந்த அம்பிகையைத் திருமண வரம் வேண்டும் பெண்கள் வேண்டிக்கொண்டால் உடனே திருமண வரம் அருள்வாளாம். இந்த அன்னை தாமரை மலர்மீது நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அங்கு கல்லால் ஆன ஶ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த சந்நிதியில் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் யாவுமே நிறைவேறுகின்றன என்கிறார்கள் அடியவர்கள்.

அன்னையின் சந்நிதிக்குப் பின்புறம் அரசமரத்தின் கீழ் லிங்கோத்பவரின் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ள சண்டிகேஸ்வரருக்குப் பரிந்துரைக்கும் சண்டிக்கேஸ்வரர் என்பது திருநாமம். தீராத பிரச்னை உள்ளவர்கள் இந்த சண்டிகேஸ்வரரை வேண்டிக்கொண்டால் அவை தீரும் என்பது ஐதிகம். இங்கு சுவாமிக்கு மாலை அணிவித்து வேண்டிக்கொண்டு அந்த மாலையைக் கொண்டுவந்து சண்டிகேஸ்வரருக்கு சாத்தி வழிபட்டால் அவர் நம் பிரச்னையைத் தீர்க்குமாறு ஈசனிடம் பரிந்துரை செய்வார் என்பது நம்பிக்கை.

இம்மையில் நன்மை தருவார் கோயில்
இம்மையில் நன்மை தருவார் கோயில்

கல்வி வரம் தரும் வல்லபச் சித்தர்

சிவபெருமான் சித்தர் உருவம் தாங்கிவந்து கல்யானைக்குக் கரும்பூட்டிய திருவிளையாடல் நடந்த தலம் மதுரை. வல்லபச் சித்தராக அவதரித்த சிவபெருமான் இந்தத் தலத்தில் கோயில்கொண்டுள்ளார். பத்மாசனத்தில் அமர்ந்து தன் வலக்கையால் ஆகாயம் காட்டி இடக்கையில் குங்கிலியம் சாம்பிராணி தாங்கி நின்று அருட்காட்சி தருகிறர். ஈசனின் இந்த ஞான குருவடிவத்துக்குத் திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினத்தில் சாம்பிராணி பதங்கக் காப்பிட்டுப் பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கிறார்கள். இவ்வாறு வேண்டிக்கொண்டால் கல்விகற்பதில் இருக்கும் குறைபாடுகள் நீங்கும் என்றும் சகலவிதமான ஞானமும் கைகூடும் என்றும் நம்புகிறார்கள் பக்தர்கள்.

வீடுகட்டும் யோகம் அருளும்பஞ்சபூதத்தலம்

மதுரையில் உள்ள ஐந்து திருக்கோயில்களைப் பஞ்சபூதத்தலங்கள் என்று சொல்கிறார்கள்.

செல்லூர் திருவாப்புடையார் கோயில் - நீர்த்தலம்

சிம்மக்கல் - சொக்கநாதர் திருக்கோயில் - ஆகாயத்தலம்

மேலமாசிவீதி தென் திருவாலவாயர் கோயில் - நெருப்புத்தலம்

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் - காற்றுத்தலம்

இம்மையில் நன்மை தருவார் கோயில் - மண்தலம்

மண் தலமாக விளங்கும் இந்தத்தலத்தில் வந்து வேண்டிக்கொண்டால் மண் தொடர்பான பிரச்னைகள் நீங்கும். வீடுகட்டத் தொடங்குபவர்கள் பிடி மண் கொண்டுவந்து சுவாமி சந்நிதியில் வைத்து வேண்டி எடுத்துக்கொண்டு அதை தாங்கள் வீடுகட்டப் பயன்படுத்தும் மண்ணோடு கலந்து பயன்படுத்தினால் தடைகள் இன்றிக் கட்டட வேலைகள் தொடரும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. இங்கு நடைபெறும் மகாசிவராத்தித் திருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால் வீடு மனை வாங்கும் யோகம் அமையும் என்று சொல்கிறார்கள். அதனால் சுற்றியிருக்கும் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்து அந்நாளில் ஈசனை தரிசிப்பார்கள். அன்றைய தின மதியம் சுவாமிக்கு சங்காபிஷேகம் நடைபெறும்.

இம்மையில் நன்மை தருவார் கோயில்
இம்மையில் நன்மை தருவார் கோயில்

காசி விஸ்வநாதர்

இங்குள்ள முன்மண்டபத்தில் காசி விஸ்வநாதர் சந்நிதி உள்ளது. ராமபிரான் தன் தோஷம் நீங்க காசி விஸ்வநாதரை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்துவழிபட்டார். அதை நினைவுகூரும் வகையில் காசிவிஸ்வநாதரை வெண்ணிற லிங்கமாகவும் கோதண்ட ராமரையும் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர்.

வைகாசி விசாகத்துக்கு மறுநாள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு வேண்டிக்கொண்டு பக்தர்கள் பூக்குழி இறங்கும் சடங்கும் இங்கு மிகவும் பிரசித்தம்.

இங்கு சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் செய்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்கிறார்கள்.

இத்தலத்தில் ஜுரதேவர் சந்நிதி உள்ளது. ஜுரதேவர் தன் மனைவியான ஜுரசக்தியுடன் அருள்பாலிக்கிறார். உடல் நலக்குறைவுள்ளவர்கள் இந்த இறைவனை வேண்டிக்கொண்டு ஆரோக்கியம் பெற்றதும் சுவாமிக்கு மிளகு சாதம், மிளகு ரசம் ஆகிய பிரசாதங்கள் செய்து நிவேதனம் செய்கிறார்கள்.

இம்மையில் நன்மை தருவார் கோயில்
இம்மையில் நன்மை தருவார் கோயில்

இங்குள்ள பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்போது 1 பங்கு அரிசிக்கு மூன்றுபங்கு மிளகாய் வத்தல் சேர்த்து மிகவும் காரமான புளியோதரை செய்து நிவேதனம் செய்கிறார்கள். இவ்வாறு செய்து வேண்டிக்கொண்டால் எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.