Published:Updated:

வடலுாரில் தைப்பூச ஜோதி தரிசனம்... இன்றும் நாளையும் காணலாம்!

வடலூர்
வடலூர்

பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் அருள்வர்.

தைப்பூசம் தமிழர் பாரம்பர்யத் திருநாள்களில் முக்கியமானது. தைப்பூசத் திருநாளில்தான் வள்ளலார் ஜோதி வடிவாகிப் பரம்பொருளோடு கலந்தார் என்பது நம்பிக்கை. இந்த நாள் வடலூர் சத்திய ஞான சபையில் மிக விசேஷமாகக் கொண்டாடப்படும்.

வடலூர்
வடலூர்

`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ எனப் பாடிய ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.

தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் அருள்வர். நேற்று தைப்பூசத்தையொட்டி காலை 6 மணிக்கு திரைகள் நீக்கி முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

வடலூர் ஜோதி
வடலூர் ஜோதி

தொடர்ந்து 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி ஆகிய நேரங்களிலும் ஜோதி தரிசனம் காட்டப்பட்டன. இன்றும் (9.2.2020) நாளையும் (10.2.2020) அதே போன்று ஆறு காலமும் 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஜோதி தரிசனத்தையொட்டி, கடலுார் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மது மற்றும் மாமிசக் கடைகள் மூடப்பட்டிருந்தன. 

திருவிழாவுக்கு நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பமாக வந்து மகிழ்ச்சியுடன் ஜோதி தரிசனம் கண்டு செல்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு