Published:Updated:

ஞான ஒளி தரும் மாவிளக்கு!

தைப்பூச தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பூச தரிசனம்

தைப்பூச தரிசனம்

முருகனின் திருநாமத்தைச் சொல்லும்போது தனிப்பெரும் அன்போடும் பக்தியோடும் ‘சுவாமி’ என்று சேர்த்துச் சொல்லும் வழக்கம் நாடு முழுவதும் இருக்கிறது. வடஇந்தியாவில் சுப்பிரமணிய சுவாமி என்றும், தமிழகத்தில் குமாரசுவாமி என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றிக்கொண்டாடுகிறோம் அந்த முருகனை.

முருகு என்றால் அழகு. அழகுக் குழந்தையாகக் காட்சி தருபவனும் அவனே; ஞான தண்டாயுதபாணியாக, தகப்பன் சுவாமியாகக் காட்சியருள்பவனும் அவனே. தொன்றுதொட்டுத் தமிழ் மண்ணில் குன்றுதோறும் நின்றருளும் முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களுள் முக்கியமானது தைப்பூசம்.

தமிழ் மானுடவியல் ஆய்வாளர்கள், ஆண்டாள் மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கிய பாவை நோன்பு தை பௌர்ணமியில் நிறைவுற்றது என்றும், அதனால் தை பௌர்ணமி அன்று கொண்டாடப் படும் தைப்பூசமே தமிழர்களின் பிரதானத் திருநாள் என்றும் சொல்வார்கள். தமிழ்க் கடவுளாம் முருகனை வழிபடும் தைப்பூசம் தமிழர்களின் முக்கியமான திருநாளாக அமைந்ததில் வியப்பில்லை.

தைப்பூசத் திருவிழா தொடங்கியதுமே கிராமங்களில் கொண்டாட் டம் களைகட்டிவிடும். முருகனுக்கு விரதமிருப்பவர்கள் மஞ்சள் ஆடையும் ஜப மாலைகளும் அணிந்துகொள்வர். விதவிதமான காவடிகள், பால்குடங்கள் முதலியன சுமந்தபடி முருகன் அருளும் தலத்துக்குப் பாத யாத்திரை கிளம்பிவிடுவார்கள் பக்தர்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

குமரிக் கரையிலிருந்து பழநிக்கு நடந்தே செல்லும் பக்தர்களும் உண்டு. வீடுகளில், ஓரிரு நாள்கள் முன்னதாகவே விரதமிருந்து வழிபட்டு, மாவிளக்குப் போடத் தேவையானவற்றை தயார்செய்து, தைப்பூசத்தன்று முருகன் சந்நிதியில் மாவிளக்கு இட்டு வழிபடுவார்கள்.

மாவிளக்கு என்றால் மாவால் செய்யப்படும் விளக்கு என்று மட்டும் பொருள் இல்லை. ‘மா’விளக்கு என்றால் பெரிய விளக்கு என்றும் பொருள். இறைவனின் அருளை வேறெந்த விளக்கையும்விட அதிகமாகப் பெற்றுத்தரும் விளக்கு, மாவிளக்கு. இன்று நாம் அனைத்து தெய்வங்களுக்கும் மாவிளக்குப் போட்டு வழிபடுகிறோம்.

தைப்பூச தரிசனம்
தைப்பூச தரிசனம்

ஆனால், அந்தக் காலத்தில் அப்படியில்லை. மாவிளக்கு என்றால் அது முருகனுக்கே உரியது மட்டுமே. முருகன், மலையும் மலை சார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வம். அங்கு திணையே பிரதானம். அந்தத் திணையை மாவாக்கி அதில் காட்டுத் தேனை விட்டுப் பிசைந்து முருகனுக்கு நிவேதனம் செய்வது வழக்கம். பிற்காலத்தில் அதில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் உருவானது. மாவிளக்கிட்டு முருகனை வணங்க, அவர் ஞான விளக்கை நம்முள் ஏற்றுவார் என்பது ஐதிகம்.

தற்காலத்தில் அரிசி, வெல்லம், நெய் கொண்டு தயாரித்து மாவிளக்கு ஏற்றுகிறோம். குறிப்பாக, தைப்பூசத்தன்று மாவிளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. ஆனால், இந்த வழக்கமெல்லாம் வரும் தலைமுறைக்குக் கடத்தப்படுமா என்கிற சந்தேகம் நம் அனைவர் மனத்திலும் இல்லாமல் இல்லை. நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு இந்த விழாவின் சிறப்பை எடுத்துரைத்து, அதைக் கொண்டாடும் முறையையும் கற்பிக்க வேண்டியது நம் கடமை. அப்படி ஒரு முயற்சியைத்தான் கோவை ரத்தினபுரி என்னும் பகுதியில் உள்ள முத்துக்குமரன் நகர் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். பொதுவாகப் பொங்கல் விழாவையே சமூக விழாவாகக் கொண்டாடும் வழக்கம் உள்ளது. ஆனால், இந்தப் பகுதி மக்கள் தைப்பூசத்தை, வீதிவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தைப்பூசத்தன்று மாவிளக்கு எடுத்து, கும்மிக்கொட்டி, முருகனை வழிபடுவதோடு குழந்தைகளுக்கு நம் பாரம்பர்ய விளையாட்டு களையும், கலைகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம், இதை முன்னெடுப்பவர்களில் பிரதானமானவர்கள் பெண்கள். அவர்களில் ஒருவரான சாந்தியிடம் பேசினோம்...

“எனக்குச் சொந்த ஊர் திருப்பூர் பக்கம். அங்கே தைப்பூசத்தை ரொம்ப சிறப்பா கொண்டாடுவோம். கோவைக்கு வந்தபிறகு அதை மிஸ் பண்ணினேன். ஒருநாள் என் தோழி சுகன்யாவைச் சந்தித்தபோது, தைப்பூசம் பற்றி பேச்சு வந்தது. ‘ஊர்ல தைப்பூசம்னா மாவிளக்குப் போட்டு கும்மியடிச்சு ரொம்ப சந்தோஷமா சாமி கும்பிடுவோம். நம்ம கிராமத்துல செய்த மாதிரி இங்கேயும் செய்தா நல்லா இருக்கும்’னு பேசிக்கிட்டோம்.

இதைத் தனியா நாங்க மட்டும் செய்யாம, எங்க தெருவுல இருக்கிற எல்லோரும் சேர்ந்து செய்தா நல்லாயிருக்கும்னு முடிவு பண்ணினோம். எங்க யோசனை பிடிச்சிருக்கவே, எல்லோருமா கூடி செய்ய ஆரம்பிச்சோம்.

இது பக்தியோடு, நம்ம மரபு சார்ந்த கலை மற்றும் விளையாட்டுகளையும் நம்ம குழந்தை களுக்கு அறிமுகப்படுத்துறதா இருக்கணும்னு நெனைச்சோம். அந்த மாதிரி விளையாட்டுப் போட்டிகளைக் குழந்தைகளுக்கு நடத்தினோம். அதேபோல், குழந்தைகளுக்குச் சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், பறையாட்டம், காவடி யாட்டம், பாம்பாட்டம் மாதிரியான கிராமியக் கலைகளை சொல்லிக்கொடுத்து அவங்களோட கலைநிகழ்ச்சிகளையும் நடத்துவது வழக்கம்.

ஒரு பெரிய பானையில் பொதுவா பொங்கல் வெச்சு சாமிக்குப் படைப்போம். கூடவே பெண்கள் எல்லோரும் சேர்ந்து மாவிளக்கு ஏற்றி கும்மியடிச்சு முருகனை வழிபடுவோம்.

ஆரம்பத்துல மத்தவங்க கலந்துக்கத் தயங்கு னாங்க. ஆனா, அடுத்தடுத்த வருஷத்துல எல்லோரும் ஆர்வமா கலந்துக்க ஆரம்பிச்சுட்டாங்க. சில இளம்பெண்கள், கிராமங்களுக்குப் போய் இதுக்காக கும்மிப் பாடல்கள் எல்லாம் கத்துக்கிட்டு வந்து பாடுறாங்க.” என்கிறார் நெகிழ்வோடு.

ஞான ஒளி தரும் மாவிளக்கு!

கலைநிகழ்ச்சிகளின் முடிவில், வந்திருக்கும் அனைவருக்கும் இரவு உணவும் வழங்குகிறார்கள். இதற்கான வேலைகளை அந்த தெருப் பெண்களே பகிர்ந்து கொள்கிறார்கள். அருகில் இருக்கும் தெருவாசிகளையும் அழைத்து அவர்களுக்கும் விருந்து வைக்கிறார்கள்.

இந்த ஆண்டும் தைப்பூச விழாவுக்கு முத்துக்குமரன் நகர் வாழ் மக்கள் தயாராகி வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன்பாகவே குழந்தைகளுக்கான பயிற்சிகள் தொடங்கிவிட்டனவாம்!

இவ்வூரில், தைப்பூசம் பக்தி குறை யாமலும் பாரம்பர்யம் மாறாமலும் கொண்டாடப்படுவதைக் காணும் மக்கள் அனை வரும் இவர்களை வாழ்த்துகிறார்கள்.

நாமும் வாழ்த்தி மகிழ்வோம்!

மாவிளக்கு செய்வது எப்படி?

ச்சரிசியைக் கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு வெள்ளைத் துணியில் பரவலாகப் போட்டு அரிசியை உலரவைக்கவும். நன்கு காய்ந்து உலர்ந்தவுடன் அதை

மிக்ஸி அல்லது உரலில் இட்டுப் பொடியாக்கிக் கொள்ளவும். அந்த மாவை நன்கு சலித்துக் கொள்ளவும். தேவையான சுக்கு, ஏலக்காய், நெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தையும் நன்கு பொடித்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

முதலில் வெல்லத்தையும் மாவையும் கலந்து பிசைய வேண்டும். பிசைந்துகொள்ள வசதியாகத் தேவையான அளவு நெய்விட்டுக்கொள்ளலாம். வெல்லம் கெட்டியாக இல்லாதபடி அதை சேர்த்துப் பிசைந்து, அதில் ஏலக்காய், சுக்கு சேர்க்கவும். பின்பு, விளக்கு செய்யத் தேவையான அளவில் மாவை உருட்டிவைத்து அதில் விளக்கேற்றலாம். இப்படி, மாவிளக்கேற்றி வைத்து வழிபட்டால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.

- விஜயா, கோவை