Published:Updated:

`ஜாதகம் சமர்ப்பித்தால் கல்யாணம் கைகூடும்!'

தாளகிரீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
தாளகிரீஸ்வரர்

பனைமலை தாளகிரீஸ்வரர் தரிசனம்!

`வாட்ஸ் ஆப்களில் பெரும்பாலும் உபயோகமற்ற தகவல்களும் படங்களுமே வந்து குவியும். ‘இதை நூறு பேருக்கு ஃபார்வேடு செய்தால் நல்ல செய்தி வரும்’ என்று வரும் தொல்லைகள்தான் ஏராளம்.

மனத்தைக் குப்பையாக்கும் இந்தச் செய்திக் குவியல்களோடு எப்போதாவதுதான் நம் கண்ணையும் கருத்தையும் கவரும் இறைச் சிந்தனைகளும் இறைவனின் திருவுருவப் படங்களும் வந்து சேர்கின்றன. அப்படி ஒரு வாட்ஸ் ஆப் பகிர்வு கடந்த வாரம் வந்தது.


அது ஒரு மலைத்தலம். ஈசனின் லிங்கத்திருமேனி, குகைபோன்ற பாறை இடுக்குகளில் அருளும் அம்மன், பழைமை மாறாத ஆலயம் எனக் கண்ட கணத்திலிருந்தே அவற்றை தரிசிக்கும் ஆர்வம் அதிகரித்தவண்ணம் இருந்தது. அந்தத் தலம் பனைமலை என்றும் விழுப்புரம் - செஞ்சி சாலையில் உள்ளது என்றும் சொன்னார்கள் நண்பர்கள். தாமதிக்கக்கூடாது என்று மறுநாள் காலையிலேயே அந்தத் தலம் நோக்கிப் புறப்பட்டோம்.

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்த பச்சை கம்பளி போன்ற வயல்வெளி. நெல்நடவு செய்யப்பட்டிருந்தது. தூரத்தில் மலைத் தொடர் காட்சிகளும், அங்கிருந்து வீசும் குளிர்காற்றும் நம்மை வரவேற்றன. பனி பொழியும் காலமாக இருந்ததால், நடவுகளில் பனி ஒரு மகுடம் போல ஒட்டிக்கொண்டிருந்த காட்சி, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே நம்மைக் கொண்டு சென்றது.

`ஜாதகம் சமர்ப்பித்தால் கல்யாணம் கைகூடும்!'

விழுப்புரம் - செஞ்சி சாலையில், மாத்தூர் வழியே உட்புறமாகச் சென்றது ஒரு சாலை. அதில் சுமார் 9 கி.மீ கடந்து சென்றதும் பனைமலை மேல் உள்ள ஆலய தரிசனம் கிடைத்தது.

குன்றின் அடிவாரத்தில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் சந்நிதி உள்ளது. அவரை வணங்கி வழிபட்டு, அருகிலிருக்கும் படிகளின் மீது ஏறத் தொடங்கினோம். பாறைகளைச் செதுக்கி படிகள் அமைத்திருந்தனர். மலையேறும் வழியில் ஆங்காங்கே சிறு சிறு சுனைகள்.

குன்றின் கிழக்கு திசையில் விவசாயநிலங்கள், வடகிழக்கு திசையில் பிரமாண்ட ஏரி. அதன் பின்புலத்தில் மலைத் தொடர்கள் என இயற்கை அங்கு கண்ணுக்கு விருந்து படைத்தது. இத்தகைய எழிலார்ந்த சூழலில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் மற்றும் கயிலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்ம பல்லவனே இந்த ஆலயத்தையும் எழுப்பியிருக்கிறான். இந்த ஆலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஆலயத்தின் பழைமை தெரியாமல் இன்றும் கம்பீரமாய்க் காட்சி தருகிறது ஆலயம்.

ஆலயத்தின் வாயில் கிழக்கு நோக்கி அமைந்திருந்தது. ஆலயத்தின் பிரமாண்டமான மகா மண்டபத்தில் 108 தூண்கள். அவை வெறும் தூண்கள் அல்ல. கலைப் பொக்கிஷங்கள். அனைத்துத் தூண்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு காண்பவர் கவனத்தைக் கவர்கின்றன.

ஆலயத்தின் வடக்கு திசையில் இரண்டு லிங்கங்களும், தெற்கு திசையில் இரண்டு லிங்கங்களும், முருகன் சந்நிதிக்கு அருகில் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த லிங்கத் திருமேனிகள் 16 பட்டைகள் கொண்ட தாரா லிங்கங்களாகக் காட்சி தருகின்றன. இத்தகைய தாரா லிங்கங்களை தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்கிறார்கள் அடியார்கள். மேலும் சற்று சிதிலமடைந்த நிலையில், வழக்கமான வடிவில் ஒரு லிங்கமும் இங்கு உள்ளது.

முழுக்க முழுக்க கருங்கற்களால் எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் சதுர வடிவக் கருவறையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார், அருள்மிகு தாளகிரீஸ்வரர்.

முற்காலங்களில் இப்பகுதி பனைமரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும். `தாளம்' என்றால் பனை. பனை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு மலைமீது குடி கோயில்கொண்டுள்ள இறைவன் என்பதால், இவருக்கு தாளகிரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள் பக்தர்கள். கோயில் மகாமண்டபத்தின் இடப்புறத்தில் கிழக்கு சந்நிதியில் முருகப்பெருமானும் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு அன்னை ‘அஸ்த தாளாம்பிகை’ என்றும் ‘தாள கிரீஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறாள். மேல்கரங்களில் அங்குச பாசம் ஏந்தியும், கீழ் வலது கரத்தில் வரமருளும் முத்திரையையும், கீழ் இடது கரத்தில் அபய முத்திரை காட்டிய படியும் புன்னகை ததும்ப எழில்கோலம் தருகிறாள் அன்னை.

மகா மண்டபத்தின் வாயிலில் விநாயகரும், ஆறுமுகனும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். இங்கு பைரவர், சனிபகவான், சூரிய பகவான், சந்திரபகவான் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர். தனியாக ஒரு நவகிரக சந்நிதியும் இங்கு உள்ளது.

குகை துர்கை சந்நிதி
ஆலய தரிசனம் முடிந்து கீழே இறங்கி வருகையில், வலப் புறமாகச் செல்லும் படிகளின் வழி இறங்கினால் சிறுகுகை போன்ற அமைப்பை அடையலாம். குகைக்கு முன்பு பலிபீடமும் சூலம் காணப்படுகின்றன. அதற்கு நேரே துர்கை அம்மனின் சந்நிதி அமைந்துள்ளது.

இந்த அன்னை, தன் வலது காலைத் தரையில் ஊன்றியும், இடது காலை சிம்மத்தின் மீது வைத்தும், எட்டு கரங்களுடன் வீராவேசமாகக் காட்சிகொடுக்கிறாள். வழக்கமாக துர்கை சூலம் ஏந்தியிருப்பாள். ஆனால் இங்கோ அன்னையின் ஒரு கரத்தில் தண்டமே காணப்படுகிறது. அன்னையின் திருமுகத்தில் வெற்றிப்புன்னகை தவழ்கிறது. இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் நம் துன்பங்கள் எல்லாம் பறந்துஓடும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ராகுகாலத்தில் மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ராகுகால பூஜையில் கலந்துகொண்டு மூன்று வகையான எண்ணெய் கலந்து 11 விளக்குகள் ஏற்றி அன்னையை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இங்கு வந்து தரிசனம் செய்யும் மக்களின் நம்பிக்கை.

கல்வெட்டுகள் சொல்லும் செய்தி...

இங்கு பிரதான ஆலயத்திலும் துர்கை யின் சந்நிதியிலும் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இதுகுறித்துக் கல்வெட்டு ஆய்வாளர் ரமேஷ் என்பவரிடம் கேட்டோம்.

“இந்தக் கோயிலில் காணக்கிடைக்கும் கல்வெட்டுகளின் மூலம் இந்த ஆலயம் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறியமுடிகிறது. இயற்கையாக அமைந்த குகையில், துர்கையின் சிற்பத்தைத் தனி பலகையில் வடித்து உள்ளே பிரதிஷ்டை செய்துள்ளனர். துர்கையின் சிற்பம் தாய் பாறையில் வடிக்கப்படவில்லை.

இங்குள்ள கல்வெட்டில் இரண்டாம் நரசிம்ம பல்லவனுடைய இயற்பெயர்களான ராஜசிம்மன், ரணஜயன், சித்திரக்கார்முகன், சிவனைத் தன் தலையில் சூடியவன் ஆகியவை பல்லவர்கால கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வடிவம் தெளிவாகவும், பறவைகளை போன்ற வடிவிலும் பொறிக்கப் பட்டுள்ளன. இங்குள்ள விநாயகர் சிற்பம் மட்டும் பிற்காலத்தைச் சேர்ந்தது.

தாளகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்கால கிரந்த எழுத்து வடிவிலும், சம்ஸ்கிருத மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன. ‘பரத்வாஜர், அஸ்வத்தாமன் வழிவந்த வம்சாவழியினர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள தாரா லிங்கங்கள் ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயர்ந்த ரக கறுப்புக் கற்களினால் செய்யப்பட்டவை” என்றார் ரமேஷ்.

அதைத்தொடர்ந்து ஆலயத்தின் காசி சிவாசார் யரிடம் பேசினோம்.

“தற்போது இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடந்து வருகிறது. சிவராத்திரியன்று மட்டும் நாலு கால பூஜை நடைபெறும். இவை தவிர்த்து மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியன சிறப்பாக நடைபெறும்.

காணும் பொங்கலன்று இங்கு நடைபெறும் பாரிவாட்டம் விசேஷமானது. இந்த விழாவின்போது பனைமலை பேட்டை, துத்திப்பட்டு, சித்திரசூர், அனந்தபுரம், காந்தி நகர் எனச் சுற்றியுள்ள 6 ஊர்களுக்கும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளித் திரும்புவர்.

திருமணமாகாதவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து தங்களின் ஜாதகத்தினை அம்பாள் முன்வைத்து வழிபட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. தாளகிரீஸ்வரரை வேண்டிக்கொண்டால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும், நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு உரிய தீர்வும் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள் அடியார்கள்.

பக்தர்கள் பலரும் ‘ஓம் நமசிவாய’ என 108 துண்டு சீட்டுகளில் எழுதி அதை மாலையாகத் தொடுத்து ஈசனுக்கு சாத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும், இங்குள்ள துர்கை சந்நிதியில் வழிபட்டு குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகளுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்பதும் கண்கூடு” என்றார் சிவாசார்யர்.

வாய்ப்புக்கிடைக்கும்போது, நீங்களும் பனைமலை சென்று வாருங்கள். அருள்மிகு தாளகிரீஸ்வரரின் திருவருள் ஸித்திக்கும்; அம்பிகையின் அருளால் உங்களின் எதிர்காலம் சிறக்கும்.

எப்படிச் செல்வது?: விழுப்புரம் - செஞ்சி சாலையில், மாத்தூர் வழியே 9 கி.மீ பயணித்தால் பனமலை தாளகிரீஸ்வரர் கோயிலை அடையலாம். பேருந்து வசதிகள் உண்டு (தொடர்புக்கு: காசி சிவாசார்யர் - 80568 63301).

`ஜாதகம் சமர்ப்பித்தால் கல்யாணம் கைகூடும்!'

ஏழாம் நூற்றாண்டு சுவர் ஓவியம்!

ந்த ஆலயத்தின் புராதனப் பெருமைகளில் ஒன்று, இங்கு காணப் படும் 1,300 ஆண்டுகாலப் பழைமை வாய்ந்த ஓவியம். ஆலயத்தின் வடமேற்கில் காணப்படும் அழகும் நுட்பமும் வாய்ந்த இந்த ஓவியத்தில் எழில்மிகு சோமாஸ்கந்தர் காட்சிகொடுக்கிறார்.

காலத்தின் தொன்மை காரணமாக ஓவியம் சற்று அழிந்திருந்தபோதிலும் அதன் அழகும் கலையும் நம்மைக் கவர்கின்றன. சிவபெருமான் நடனமாட, பார்வதிதேவி அதைக் காண்பதுபோல ஓவியத்தில் காணப்படுகிறது. இந்த ஓவியம் நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை போன்ற வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்லவர்காலச் சுவர் ஓவியம் என்பது மிகவும் அரிதான ஒன்று. அதனால்தான் இந்திய தொல்லியல்துறை இதை தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.