Published:Updated:

மாநாடு... நீதிமன்றத்தில் வழக்கு... விஸ்வரூபமெடுக்கும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விவகாரம்!

தமிழ்நாட்டில் இந்து சிவநெறி, திருமால் நெறி மற்றும் குலத் தெய்வக் கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

பெரியகோயில் குடமுழுக்கு
பெரியகோயில் குடமுழுக்கு

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இக்கோயிலுக்குத் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்தி, தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழு ஏற்பாட்டில் தஞ்சையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழின உணர்வாளர்கள், சிவனடியார்கள், சித்தர் வழி அமைப்பினர், இந்துமத அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டார்கள்.

தமிழில் குடமுழுக்கு எனும் கோரிக்கையை வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என்றும், மக்களைத் திரட்டி, ஜனவரி 23-ம் தேதி தஞ்சாவூரில் மாநாடு நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

பெரியகோயில்
பெரியகோயில்

கூட்டத்தின் முடிவுகள் தொடர்பாக நம்மிடம் பேசிய தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், ``தஞ்சைப் பெரிய கோயில், இந்து மதத்தின் சிவநெறிப் பிரிவைச் சேர்ந்த தனித்துவமான வகையறா. தமிழ்ச் சைவ கோயில்களில் எவ்வாறு அர்ச்சனை, வழிபாடு, குடமுழுக்கு நடத்த வேண்டும் எனத் தமிழ் ஆகமங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்து சிவநெறி, திருமால் நெறி மற்றும் குலத் தெய்வக் கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணை பிறப்பித்துள்ளது. இக்கோயில் தமிழ் மண்ணில், தமிழ் மன்னனால் கட்டப்பட்ட தமிழ் சைவ நெறி கோயில். எனவே, தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்துவதுதான் பொருத்தமானதாக இருக்கும்” என்றார்.