Published:Updated:

மறைத்து வைக்கப்பட்டுள்ள மாமன்னன் ராஜராஜன், உலகமாதேவி சிலைகள்! - ஆதங்கத்தில் தஞ்சை மக்கள்

தஞ்சாவூர் பெரியகோயில்
தஞ்சாவூர் பெரியகோயில் ( ம.அரவிந்த் )

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, அதுவும் ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைகளைத் தரிசிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வத்தோடும் பக்தியோடும் வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தஞ்சைப் பெரிய கோயிலில், தற்போது மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034-ம் ஆண்டு சதயவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. அலங்கார விளக்குகளாலும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தாலும் ஒட்டுமொத்த கோயிலும் களைகட்டியுள்ளது. ஆனால், விழா நாயகனான மாமன்னன் ராஜராஜ சோழன்-பட்டத்தரசி உலகமாதேவி சிலைகளை அவ்வளவு எளிதில் தரிசித்துவிட முடியாது. இது, தஞ்சை மக்களையும் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் பெரும் ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜராஜன், உலமாதேவி சிலைகள்
ராஜராஜன், உலமாதேவி சிலைகள்

மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டியெழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலைக் கண்டு உலகமே வியந்து போற்றுகிறது. கட்டடக் கலையில் இது, பெரும் சாதனையாகப் புகழப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, எப்படி ராஜராஜனால் இப்படி ஒரு சாதனையைப் படைக்க முடிந்தது எனப் பலரும் வியக்கிறார்கள். கட்டடக்கலையில் மட்டுமல்ல, ஆட்சி, நிர்வாகம், ஆன்மிகம், வேளாண்மை, நீர் மேலாண்மை, போர்த்திறன் என அனைத்திலும் சிறந்து விளங்கியதால், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இவரது பெருமைகள் போற்றப்படுகின்றன.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் சதய நட்சத்திரத்தின்போது, ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா, சதயவிழா என்ற பெயரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்விழா நடைபெறும்போது, கோயில் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அமைச்சர்கள், அதிகாரிகள், ஆய்வாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பல தரப்பினரும் பங்கு பெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், விழா நாயகனான ராஜராஜ சோழனுக்கு, கோயிலின் உள்ளே அனுமதி இல்லை என்ற நிலை இருந்து வந்தது. 1970-களில் தமிழக அரசால் நிறுவப்பட்ட மாமன்னன் ராஜராஜ சோழன் திருவுருவச் சிலை, பெரிய கோயிலுக்கு வெளியில் ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் முடக்கப்பட்டது. கோயிலின் உள்ளே அச்சிலையை வைக்க, தொல்லியல்துறை இன்றளவும் மறுத்து வருகிறது.

பெரியகோயிலில் சதயவிழா
பெரியகோயிலில் சதயவிழா
படம்:ம.அரவிந்த்

இது ஒருபுறமிருக்க, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு, தஞ்சைப் பெரியகோயிலில் வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகள் இங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டு, குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்பது தஞ்சை மக்களின் நீண்டகாலக் கனவாக இருந்துவந்தது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலின் கடும் முயற்சியாலும் தொடர் நடவடிக்கைகளாலும் ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகள், கடந்த ஆண்டு மீட்கப்பட்டு, தஞ்சைப் பெரியகோயிலுக்குள் வைக்கப்பட்டன. இதனால் தஞ்சை மக்களும் உலகம் முழுவதும் உள்ள தமிழின உணர்வாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், இப்போது இந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான, அதுவும் ராஜராஜ சோழன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைகளைத் தரிசிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வத்தோடும் பக்தியோடும் வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. காரணம், ராஜராஜன்- உலகமாதேவி சிலைகள், மக்கள் பார்வையில் படும்படியாக வைக்கப்படவில்லை. நீண்ட நேரம் தேடினால்தான் இவற்றைக் கண்டுபிடிக்கவே முடியும். ஒரு மூலையில், இருள் சூழ்ந்த பகுதியில், சிறு மாடத்தின் உள்ளே மாமன்னன் ராஜராஜனும் -உலகமாதேவியும் வைக்கப்பட்டுள்ளார்கள். இதுதான் அந்தச் சிலைகளோ என யூகிக்கவேண்டியுள்ளது.

Vikatan

இந்தச் சிலைகள் குறித்த எந்த ஒரு குறிப்பும் இங்கு வைக்கப்படவில்லை. மற்ற நாள்களில்தான் இப்படியென்றால், சதய விழாவின்போதாவது மக்கள் பார்வையில் படும்படியாக வைக்கப்படும் என தஞ்சை மக்களும் பெரியகோயில் பக்தர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இப்போதும் அதே மறைவான இடத்தில்தான் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சதய விழாவின் சிறப்புச் சலுகை போல், அலங்காரம் மட்டும் சற்று கூடுதலாகச் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் இதேநிலை நீடிக்கக்கூடாது என மக்கள் கொந்தளிக்கிறார்கள். தமிழக அரசு, இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு