Published:Updated:

கூரையின்றி சாமுண்டியோடு அருளும் பூலூர் அம்மன் - அருப்புக்கோட்டையில் ஒர் அதிசய ஆலயம்!

பூலூர் அம்மன்

1987-ம் வருடம் பூலூர் அம்மனுக்கு அருப்புக்கோட்டையில் கோயில் எடுக்க முடிவு செய்து பூர்வீகக் கோயில் இருந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கே அம்மனை நிலை நிறுத்தினார்கள்.

கூரையின்றி சாமுண்டியோடு அருளும் பூலூர் அம்மன் - அருப்புக்கோட்டையில் ஒர் அதிசய ஆலயம்!

1987-ம் வருடம் பூலூர் அம்மனுக்கு அருப்புக்கோட்டையில் கோயில் எடுக்க முடிவு செய்து பூர்வீகக் கோயில் இருந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கே அம்மனை நிலை நிறுத்தினார்கள்.

Published:Updated:
பூலூர் அம்மன்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் 1987-முதல் தனிக்கோயிலில் சாமுண்டியுடன் மேற்கூரை இல்லாத தனி சந்நிதியில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் பூலூர் அம்மன்.

திருமலை நாயக்கர் காலத்தில்தான் மதுரை அரசின் கீழ் பல்வேறு இனமக்கள் மதுரையை நோக்கி வாழ்வாதாரம் தேடி வந்தனர். குறிப்பாக குஜராத்திலிருந்து பட்டு நூல்காரர்கள் என்று அழைக்கப்பட்ட சௌராஷ்ட்டிர மொழி பேசும் மக்கள் அநேகர் குடியேறினார்கள். அதேபோன்று மைசூர் பக்கத்திலிருந்தும் குறிப்பிட்ட இனமக்கள், தமிழ்நாட்டில் பல நகரங்களில் குடியேறினர். அப்படி அவர்கள் குடியேறியபோது அவர்களின் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியும் தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டாள்.

பூலூர் அம்மன்
பூலூர் அம்மன்

அவ்வாறு ஆடை நெய்து கொடுக்கும் கன்னட மொழி பேசும் இடத்தவர் இங்கு குடியேறினர்.

புராணப்படி தேவல மகரிஷி சிவபெருமானால் படைக்கப்பட்டவர். மனுவுக்குப் பின்னாடி தேவர்களுக்கு ஆடை நெய்ய யாருமில்லாததால் தேவர்களும், மக்களும் இலைகளையும், தழைகளையும் மரவுரியையும் அணிந்து வந்தார்கள். அதனாலே தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் போய் முறையிட்டார்கள். அப்போது சிவபெருமான் இதயத்திலேருந்து ஒரு பெரிய ஒளி புறப்பட்டு ஒரு மனிதனாக மாறியது. அதுவே தேவல மகரிஷி. சிவபெருமான் அவரிடம் திருமாலிடம் சென்று அவரின் உந்திக்கமலத்தில் உள்ள நூலைப் பெற்று ஆடைகளை நெய்து அனைவருக்கும் அளிக்குமாறு என்று அருளி மறைந்தார்.

பூலூர் அம்மன் ஆலயம்
பூலூர் அம்மன் ஆலயம்

பின்பு தேவலர் பராசக்தியை அணுகி அவர் அருளை வேண்டி நின்றார். அம்மையும், “நீ மேற்கொண்டுள்ள அரும்பணிக்குப் பல இடர்கள் வரும். அப்போது என்னை நினைத்தால் நான் உன் முன்னால் தோன்றி உன் இடர்களைக் களைவேன்” என்று ஆசி கூறி அனுப்பினார். தேவலர் பின்பு பாற்கடல் சென்று திருமாலை வேண்ட அவர் தன்னுடைய உந்திக் கமல நூலைக் கொடுத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். தேவல முனிவர் திரும்பி வரும் வழியில் ஒரு ஆசிரமத்தில் அரக்கர்கள் தவசிகள் வேடத்தில் இருப்பது தெரியாமல் அன்றிரவு அங்கே தங்கினார். இரவு வந்ததும் அரக்கர்கள் அவரிடமிருந்து நூலை அபகரிக்க முயன்றனர். உடனே முனிவர் அம்மனை நினைத்துத் துதிக்கவும் பராசக்தி அங்கே பிரத்யட்சம் ஆனாள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அம்மனுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்தது. அம்மன் கையிலிருந்த சூலாயுதத்தால் அரக்கர்கள் கூட்டம் மடிந்தது. அசுரர்களின் குருதியில் முனிவன் தன்னிடமிருந்த நூலைத் தோய்க்க, அந்நூல் ஐந்து நிறங்களைப் பெற்றது. அம்மன் தேவல முனிவருக்கு வரமளித்தாள்.

“இன்று அமாவாசை. இந்த நாளில் நானும் உன்னைக் காத்தேன். நான் உனக்குப் பிரத்யட்சமான நாளே என்னுடைய பிறந்த நாள். இனி அமாவாசை நாள்களில் என்னைத் தியானித்து வழிபாடு செய்தால் நீயும், உன் குலத்தாரும் நலம் பெறுவர்” என்றாள்.

பின்பு தேவல முனிவர், ஆமோதநகரின் மன்னராக முடிசூட்டி ஆட்சிசெய்தார். அப்போது விதவிதமான அழகான ஆடைகள் நெய்து மும்மூர்த்திகளுக்கும், அனைத்து தேவர்களுக்கும் வழங்கினார். அதனால் மகிழ்ந்த நான்முகன் மானி, அபிமானி என்ற இரண்டு பெண்களை பூமியிலே பருத்திச் செடியாக முளைக்க வைத்தார். அதிலிருந்து வரும் பருத்தியை நூலாக்கி ஆடைகளை நெய்து அவருடைய சந்ததியர் அனைவருக்கும் வழங்கினர்.

கன்னிமூலை கணபதி
கன்னிமூலை கணபதி

சிவபெருமான் சூரிய பகவானிடம் தேவல முனிவரின் தங்கை தேவதத்தையை மணம் செய்துத் தர பணித்தார். சூரியனும் சம்மதித்து தேவதத்தையை திருமணம் செய்து ஏராளமான சீர்வரிசைகளுடன் அனுப்பி வைத்தார்.

தேவல முனிவரும் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பி வந்து மக்கள் எல்லோருக்கும் ஆடைகள் நெய்து அளித்தார். அவர் குலமும் பெருகி நாடு முழுசும் பரவி செழித்து ஓங்கியது. அவர்கள், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிஷா, வங்காளம் போன்ற நிறைய இடங்களில் சௌடாம்பிக்கை அம்மனுக்குக் கோயில் கட்டி வணங்கி வசிக்கிறார்கள்.

இவர்களில் துப்பிலாரு வம்சத்தைச் சேர்ந்தவர்களின் குலதெய்வம் பூலூர் அம்மன். பூலூர் அம்மன் சௌடம்மனுக்கு அக்கா முறை. அவளுக்கு ஜனனம், மரணம் இல்லை. ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் சிவகாசி பக்கம் விளாம்பட்டி அருகே பூலூர் ஊருணிக்கு வடக்கே கோயில் கொண்டிருந்தாள். அங்கே சுற்றியிருந்த 18 பட்டிகளுக்கும் அவளே தெய்வமாகத் திகழ்ந்தாள். காலப்போக்கில் கோயில் இருப்பதே தெரியாமல் காடு வளர்ந்து கோயிலை மூடி விட்டது. பின்பு பல வருடங்களுக்குப் பின்பு கரிச்சான்குருவி மூலம் அம்மன் தன் இடத்தைக் காண்பித்துக் கொடுத்தாள்.

ஸ்ரீகல்யாண முருகன்
ஸ்ரீகல்யாண முருகன்

1987-ம் வருடம் பூலூர் அம்மனுக்கு அருப்புக் கோட்டையில் கோயில் எடுக்க முடிவு செய்து பூர்வீகக் கோயில் இருந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கே அம்மனை நிலை நிறுத்தினார்கள். இப்போதும் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று எந்த மூலையில் இருந்தாலும் துப்பிலாரு வம்ச ஆண்களும், பெண்களும் தவறாமல் இங்கு நடக்கும் பூஜைக்கு வந்துவிடுவது வழக்கம். பூலூர் அம்மன் கோயிலில் ஸ்ரீசங்கரேஸ்வரர் நந்தியுடன் வீற்றிருக்க, கன்னிமூலை கணபதியும், ஸ்ரீ கல்யாண முருகன் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளியிருக்கிறார்.

- மோகனா சுகதேவ், சென்னை